கடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.

This entry is part of 42 in the series 20040930_Issue

வரதன்


—-

சமீபத்தில் ஒரு தமிழரைச் சந்தித்தேன். ஒரு நாடக விழாவிற்கு டிக்கெட் வாங்கச் சொன்னார். நாடகம் எப்படியிருக்குமோ என்று நான் தயங்கிய போது, கண்டிப்பா டிக்கெட் வாங்கு , இதில் வரும் வருமானம் தமிழகத்தில் உள்ள ‘@@@@ @@@@ ‘ நிறுவனத்திற்குச் செல்கிறது…. என்று சொன்னாரே தவிர நாடகத்தைப் பற்றிச் சொல்லவில்லை.

இனி வாங்கா விட்டால் தர்மம் செய்யாத ஒரு இறுகிய மனம் படைத்தவன் என்று சொல்வார்களோ என்ற ஒரு பயத்தை மனதில் ஏற்படுத்தினார்.

நாடகம் மட்டுமல்ல, அமெரிக்காவில் சிலர் வர்த்தக பலமில்லா மூன்றாம் தர ஜிங்குச் சிக்கா கமர்ஷியல் படங்களைப் போடும் போது, IN AID of ‘#### ‘ என்று போட்டு வசூல் கூட்டுகிறார்கள்.

இப்படித்தான், பல நிகழ்ச்சிகள் ஏதாவது ஒரு அனாதை விடுதி, பார்வைக் கோளாறு என்ற இயக்கத்திற்கு உதவி தருவதாகச் சொல்லி வியாபார உக்தி கொண்டு மக்களை அணுகுகிறார்கள்.

1. இவர்கள் வசூலிக்கும் பணத்தில் எத்தனை சதவிகிதம் அம்மாதிரி அமைப்புக்களுக்கு செல்கின்றன என்ற விவரம் கிடைக்காது.

2. அந்த அமைப்புகளில் இந்த பணங்கள் எப்படிச் செலவு செய்யப்படுகின்றன என்ற விவரங்களும் கிடைக்காது.

அதுவும், படித்தவர்கள் நிறைந்த தமிழ் சமுதாயம் உள்ள நாட்டில் இந்த மாதிரி ஒரு தந்திரம் ஜெயிக்கிறது ஆச்சரியம்.

உதாரணமாக, ஒரு டிக்கெட் 8டாலர் என்றால், இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு 10, 12 டாலர் வசூலிக்கிறார்கள். அதிலும் சிறு சதவிகிதமே தானம் செய்கிறார்கள்.

மேலும் , இவர்கள் அதை ஒரு திரைப்பட நிகழ்ச்சியாக செய்தால், 25 – 50 பேர் வருவார்கள். ஆனால், உதவும் உள்ளம் உங்களுக்கு இல்லையா என்பது மாதிரி ஒரு சூழலில் நம்மைச் சிக்க வைத்து பிக்பாக்கெட் அடிக்கிறார்கள்.

இது ஒரு வகை வியாபாரத் தந்திரமே.

சொல்லப்போனால் நேர்மையற்ற வியாபார முறை இது. மேலும், ஒரு சமுக அமைப்பு போர்வையை போர்த்திக் கொண்டு வியாராம் பண்ணும் இவர்களை, ‘பசுத் தோல் போர்த்திய புலிகள் ‘ என்றால் மிகையாகாது.

—-

சரி அது தவிர, மேலை நாடுகளில் வசூலில் கொடிகட்டிப் பறக்கும் இரு தமிழக தொண்டார்வு அமைப்புகள் பற்றி.

அ) இந்த அமைப்பை தமிழக பத்திரிக்கை ஒன்று பல வருடங்களாக பிரபலமாக்கி, அருகிருந்து இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. ஆனால், விதை நிலையில் நீரூற்றி வளர்த்த அந்த பத்திரிக்கையே, ‘இவர்களைத் தெரிகிறதா… ? ‘ என்று ஒரு தொடர் எழுதிய போது, ‘ஒரு பனியன் பார்ட்டி… ‘ என்ற அடைமொழியுடன் அவரின் சுயரூபத்தை தோலுரித்தது.

மேலும் அவருக்கு உதவுவதை நிறுத்தியது.

ஆனால், என்ன செய்வது அதற்குள் பத்திரிக்கை ஆதரவுடன் பெரிதாக வளர்ந்து விட்ட அந்த அமைப்பை , அந்த பத்திரிக்கை நிறுவனம் கோடிட்டி காட்டிய கட்டுரை எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.

மேலை நாடுகளில் எல்லாப் பகுதிகளிலும் வியாபித்து, மாதா மாதம் பெரும் தொகை அந்த நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது.

மக்களை உருக்கும் விதமான படங்களுடன் அவர்களிடம் இருக்கும் மென்மையான உணர்வைத் தூண்டி வசூலில் கொடிகட்டிப் பறக்கிறது.

வேதனையாக, நீங்கள் அவர்களிடம் கணக்கு கேட்க முடியாது.

அந்த நிறுவனத்தின் சட்டதிட்டங்கள் பற்றிய விவரமும் கிடைக்காது.

—-

ஆ) இந்த அமைப்பு ஒரு மருத்துவ நிலையம்.

இவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளில் ஒரு பகுதியினருக்கு இலவச சேவை செய்வதாகச் சொல்கிறார்கள். அது உண்மையே.. ஆனால் அப்படிச் சொல்லி ஒன்றுக்கு பத்தாக வசூலித்து தங்களின் சொத்தை கூட்டுகிறார்கள்.

சபீர்பாட்டியாவை மிஞ்சும் அளவு சொத்து உள்ள ஒருவர் இதன் அமைப்பில் ஒருவர். ஆனால், உலகம் முழுதும் சென்று வசூலிக்கிறார்கள்.

ஒரு விசேஷம், இவர்கள் செய்யும் மருத்துவ சேவைக்கு ஒரு நோயாளிக்கென்று குறிப்பிடத்தக்க அளவு தமிழக அரசு மான்யம் தருகிறது. அதுவே இவர்கள் செய்யும் சேவைக்கு போதுமானது. ஆனால் இவர்கள் மேலை நாடுகளில் வசூலிக்கும் பணமோ அதிகம் அதிகம். இது அவர்களின் அசையா சொத்துக்களை அதிகரிக்க உதவுகிறது.

இதில் ஒரு வியாபாரத் தந்திரமே விஞ்சுகிறது.

TIIC, IDBI, BANK இவற்றில் தொழில் முதலீட்டுக்கு நீங்கள் அடமானமாக நிலம் தரவேண்டும். வட்டியும் அதிகம்.

அதனால் இவர்கள் எடுக்கும் பாதை , தங்களை சமூக சேவை அமைப்பாக அடையாளம் காட்டி வசூலிக்கும் முறை.

அதும் போக இவர்கள் மேலை நாடுகளில் வாழும் தமிழர்களை டார்கெட் செய்வதன் காரணம். NRIக்களிடம் உள்ள தாங்கள் தமிழகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்ற நல்லெண்ணத் தவிப்பு. மேலும் , வெளிநாட்டில் இருந்தால கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் …

அதும் போக இந்தமாதிரி வாங்கும் நன்கொடை மூலம் தங்களின் ஸ்தாபனத்தை வளர்த்துவிட்ட அதை நாளை தங்களின் சந்ததியினருக்கு சொத்தாக விட்டுச் செல்வார்கள்.

பெரு வெள்ளமாக சொத்து சேர்த்து விட்டு, சிறு துளி கொடுத்தவன் என்ன செய்து விட முடியும் என்ற நினைப்புடன் இருக்கிறார்கள்.

—-

பொதுவாக தயாள உள்ளம் கொண்டவர்கள் , முழுநேர சேவை அமைப்புகளுக்கு உதவலாம். அதும் போக அப்படி உதவும் போது அவர்களின் போன வருட வரவு-செலவு கணக்குகளின் நகல் கேட்கனும். மேலும் அவர்களின் அமைப்பு முறை மற்றும் அந்த அமைப்பின் சொத்துகள் பயன்பாட்டு விதம், நாளை யார் அந்த அமைப்பில் தலைமை ஏற்கமுடியும் என்ற அமைப்பின் சட்ட திட்ட நகல்கள் கேட்க வேண்டும்.

$1 கொடுத்தாலும் கேட்க வேண்டும்

இந்த இணையதள உலகில், அந்த மாதிரி அமைப்புகள் தங்களின் நேர்மையை தரணி அறிய , தங்களின் இணையதளத்தில் பிரசுரிக்கலாம்.

—-

மென்மனம் படைத்தவர்கள் செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான ஒன்று,

ஒரு ஸ்தாபனத்தையே வளர்த்து விடாமல், சின்ன சின்ன வேறு வேறு அமைப்புகளுக்கு தானம் தரலாம்.

ஒரு அனாதை விடுதி அமைப்புக்கே தொடந்து கொடுத்து அவர்கள் பல அனாதை விடுதி நடத்த வகை செய்தாலும், அவர்கள் இறுமாப்பு கொள்வாரகள். அது தவிர்த்து பல வேறு பட்ட அனாதை விடுதிகளுக்கு கொடுக்கலாம்.

பஞ்சாயத்து ராஜ் மாதிரி அதிகாரங்களை பரவலாக்கும்.

—-

$1 கொடுக்கும் முன் நிறைய யோசியுங்கள். கேள்வி கேளுங்கள்.

ஏனேன்றல், சில ஸ்தாபனங்கள் வசூலிப்பவர்களுக்கு கமிஷன் வேறு கொடுக்கின்றனவாம்.

அதனால், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது புரிந்து கொள்ளுங்கள்.

—-

அக்கறையுடன்

வரதன்

—-

Series Navigation