கடிதம் செப்டம்பர் 16,2004

This entry is part of 45 in the series 20040916_Issue

சின்னக்கருப்பன்.


அன்புநிறை நண்பர் பித்தனுக்கு,

நீங்கள் கூறுவது உண்மைதான். ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆனவர்களிடம் வேலை வாய்ப்பு செய்து தரவில்லை என்று கேட்பது சரியல்லதான். ஆனால், நான் அவ்வாறு கேட்கவில்லை. திரு சிவராஜ் பாட்டில் அவர்களது அணுகுமுறையே என் விமர்சனத்துக்குக் காரணம். மணிப்பூரில் இருக்கும் பிரச்னையின்வேர் மூலமே காங்கிரஸ்தான். அதிலும் முக்கியமாக நேரு. காஷ்மீர் பிரச்னையின் வேர்மூலமே காங்கிரஸ்தான். அதிலும் அந்த பிரச்னையை தீவிரப்படுத்தியது நேருவே. மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆகியிருக்கின்றன என்று கூறுவதும் சரியல்ல. இடையில் வந்த பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி தவிர சுதந்திரமடைந்து இதுவரை ஆட்சி செய்துவந்தது காங்கிரஸ் அல்லது காங்கிரஸிலிருந்து வெளியேறிய காங்கிரஸ் கலாச்சாரத்துடன் ஆட்சி செய்த ஜனதா கட்சியினர்தாம்.

மேலும் நீங்கள் குறிப்பிடும் திட்டங்கள் போல பல ஆயிரக்கணக்கான திட்டங்கள் காங்கிரஸ் கட்சியினரால் அறிவிக்கப்பட்டு நடுகல்கள் போல நாடெங்கும் நின்றுகொண்டிருக்கின்றன. அதனால்தான் நான் பாரதிய ஜனதா கட்சி கோல்டன் குவாட்டிலேட்டரல் அறிவிக்கும்போது , இது எந்தக் காலம் நிறைவு பெறும் என்ற தேதியோடு அறிவித்திருந்ததைப் பாராட்டினேன். அது ஏறத்தாழ இன்று நிறைவு பெற்றிருக்கிறது.

மேலும் பணத்தை பூட்டி வைத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது. இந்த பட்ஜட் பற்றி நான் தனியே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். வரவுக்கு ஏற்ற செலவு செய்தால்தான் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பணவீக்கம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் (அப்போது பெரிய தொகை) சேமித்து வந்தவர்கள், இந்திரா காந்தி ராஜீவ்காந்தி காலத்தில் பைசா பெறாது என்பதை திடாரென்று உணர்ந்தார்கள்.

உதாரணமாக, பணவீக்கம் 10 சதவீதம் இருக்கும்போது, சேமிப்பு கொடுக்கும் வட்டி வீதம் 10 சதவீதமாக இருந்தால், உங்கள் பணம் அப்படியே இருக்கிறது, அதிலிருந்து உண்மையிலேயே கிடைக்கும் வட்டி சதவீதம் 0 என்று பொருள். பணவீக்கம் 3 சதவீதமாக இருந்து, சேமிப்பு கொடுக்கும் வட்டி வீதம் 8 சதவீதமாக இருந்தால், உண்மையிலேயே கிடைக்கும் வட்டி வீதம் 5 சதவீதம். 10 சதவீதம் வட்டி கொடுப்பது பெரிய விஷயமல்ல. 3 சதவீதமாக பணவீக்கம் இருக்கும்போது அதைவிட அதிகமாக வட்டி கொடுப்பதுதான் பெரிய விஷயம்.

பணவீக்கம் பெரும் ஆபத்து. உலகவங்கி பொருளாதார மேதைகளுக்கு அது தெரியாது. அவர்களைப் பொறுத்தமட்டில் அது இன்னொரு தோல்வியடைந்த பரிசோதனை. காமராஜர் போன்ற மக்கள் தலைவர்களுக்குத்தான் அதன் சொந்தக்கதை சோகக்கதை புரியும்.

மன்மோகன்சிங் உலகவங்கியில் பொருளாதார நிபுணராக இருந்தவர். உலகவங்கியின் அட்டூழியங்களுக்கு அவர் எந்த அளவு பொறுப்பாளி என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆதரவாக, ஆப்பிரிக்கா தென்னமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளில், உலகவங்கி பண்ணிய அட்டூழியங்கள் இன்று ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்று இந்திய அரசுக்கு பொருளாதார ஆலோசனை சொல்ல உலக வங்கி, ஐ .எம். எஃப் ஆட்கள் என்று அமெரிக்க ஐரோப்பிய ஆட்களை கொண்டுவந்து உட்காரவைத்திருக்கிறார் மாண்டெக் சிங் அலுவாலியா. இவர் மன்மோகன் சிங்கால் திட்டக்கமிஷனின் டெபுடி சேர்மனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஐஎம்எஃப் (இண்டெர்நேஷனல் மானட்டரி ஃபண்டு) ஆள். இந்த அமெரிக்க ஐரோப்பிய ஆட்கள் இந்திய பொருளாதாரத்தை நிர்வகிப்பது மாபெரும் ஆபத்து. இதுபோன்றுதான் நடக்கும் என்று சோனியா பிரதமராகக்கூடாது என்று எழுதிய கட்டுரையில் எழுதியிருக்கிறேன். இந்த ஐரோப்பிய அமெரிக்க ஆலோசகர்கள் அர்ஜெண்டைனா, பிரேசில் போன்ற நாடுகளில் உருவாக்கிய தீயவிளைவுகள் நமக்குத் தெரியா வண்ணம் நம் பத்திரிக்கைகள் செயல்படுகின்றன. நான் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இவ்வாறு மாண்டெக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்த்திருக்கின்றன.

ஐ எம் எஃப், உலகவங்கி போன்றவை எந்தக்காலத்திலும் எந்த நாட்டிலும் நல்லதை செய்ததே இல்லை. இந்த அமைப்புக்களின் அட்டூழியங்களை விவரித்து திண்ணையில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.

நட்புடன்

சின்னக்கருப்பன்.

Series Navigation