கலைஞர், கமல் மற்றும் தேவன்

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

ராமசந்திரன் உஷா


கலைஞர், கமல் மற்றும் தேவன்
ராமசந்திரன் உஷா

வழக்கமான டீ கடை, சில பெஞ்சுகள், பாட்டு பொட்டி “கல்யாணமாம் கல்யாணம்” பாடிக் கொண்டு இருந்தது. சில பெஞ்சுகளில்
சில மனிதர்கள்.

உ.பி 1 – இன்னாடா மேட்டரு? காலங்கார்த்தால யோசிச்சிக்கினு கீரே?

உ.பி 2- நேத்து ரெட்ட எல மீட்டிங்குல விந்தியாவ பார்த்தேண்ணே! அளகா இருந்துச்சுண்ணே! சிம்ரனும் ரெட்ட வெரல காட்டிச்சு. இன்னா ஜெனம் தெரியுமா? ஏண்ணே, நம்ம கட்சில பாக்கிராஜ இட்டாந்தோமே. அசினு, ஜோதிகான்னு மேட ஏத்துனா எத்தினி நல்லா இருக்கும்?

உ.பி 1- டேய் கூ முட்ட தலையா! அதுக்கு எல்லாம் டப்பு வோணும். வை.கோ, சரத்துகுமாரூன்னு போய்கீனே கீராங்க. இந்த
சிம்ரனு, விந்தியா கட்சி பணியா பாக்குதுங்க? சொம்ம துட்டுக்கு ஆக்டு குடுக்குதுங்க . எலிக்சன் முடிஞ்சதும் காணாம பூடுவாங்க.

இவர்கள் பேச்சு போய் கொண்டு இருக்க, சிறிது தொலைவில் ர.ர கூட்டம்.

ர.ர- 1- எப்படி கீது?

ர.ர 2- ஒண்ணும் சொல்ல முடியாதண்ணே. கலர் டீவி பிலிம் காட்டி கலைஞர் கூட்டத்த இஸ்துட்டாரூ.

ர.ர 3- ஆமாண்ணே! எம் பொஞ்சாதிகூட ஒதய சூரியனுக்குதா ஓட்டு போடுவேன்னு கூவின்னுக்கீரா.

ர.ர 2- ஏண்ணே, அம்மா நடிகைங்கள மேட ஏத்தினாங்களே, விக்ரம், சூர்யா, விஜய்யின்னு புட்ச்சா கூட்டம் அம்முமே?

ர.ர 1- அவுங்க எல்லாம் வர மாட்டாங்க. ரஜினி நைசா நளுவிட்டாரூ. கமலு ஊர்ல இல்லியாம்.

ர.ர 3- கமல சொலபமா புட்சியிருக்கலாம்ணே! மர்தநாயகம் பட்த்த முடிக்க துட்டு இல்லாம அல்லாடுராரூ.

ர.ர 2- சினி கூத்துல போட்டிருந்துச்சு, நூறுகோடி வேணுமாம் பட்த முடிக்க!

உ.பிக்கள் காதில் இப்பேச்சுக்கள் அரைகுறையாய் விழுகின்றன.

உ.பி 2 -பாத்தீயாடா, சிம்ரனும், செந்திலு, விந்தியான்னு கூட்டத்த இஸ்துக்கீனு கீராங்க, இப்ப கமலாம்!

உ.பி 1- கோடிங்க இவுங்க வாயில எத்தினி சுளுவா வருது பாத்தீயா?. நாம ஒரு வேள கஞ்சிக்கு இல்லாம அல்லாடுரோம்.

அப்ப அங்கு வந்த தொகுதி பொறுப்பாளர் அவர்களை கண்டு கத்துகிறார்.

தொ.பொ- இன்னாடா, ஆபீசுல ஒர்த்தனையும் காணோம்னு பார்த்தா அல்லாரும் இங்க குந்திக்கீனு கீறீங்க. பேட்டா வாங்குறீங்க இல்லே. எந்திரிச்சி ஆபிசுக்கு போங்க. இனிமே டீ வேணும்மானா நாயர் கடையில அக்கவுண்ட் வெச்சிக்கினு, பைய கட்சி ஆபிசுக்கு சப்ளை செய்ய சொல்லுங்க.

அவர் கத்தலில் பயந்துப் போன உ.பிக்கள், பேச்சை மாற்ற,

உ.பி 2- அண்ணே, விஸ்யம் தெரியுமா? நடிகர் கமல, நூறு கோடி குட்து இஸ்துட்டாங்கண்ணே!

தொ.பொ- இன்னாடா சொல்ரே? சொம்ம கத வூடாதீங்க

உ.பி2- சத்தியமாண்ணே. தோ அங்க மின்னல்ரவியும், சிலுக்கு ஜிப்பா கதிரும் பேசிக்கினத நாங்க கேட்டோம்.

தொ.பொ- தோ வரேன்

என்றவர், மெல்ல உ.பிக்கள் பக்கம் செல்கிறார். அவரைப் பார்த்ததும் ர.ரக்கள் பேச்சு நிற்கிறது.

உ.பி- எப்படி போவுது? இன்னா விஸ்யம்? கருத்து கணிப்பு பாத்தீங்களா? காத்து எங்க பக்கம் அடிக்குது. ஆமா, இன்னாமோ கமலுன்னு காதுல வுளுந்துச்சு? இன்னா மேட்டரூ?

ர.ரக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். ர.ர 1, மற்றவர்களைப் பார்த்து லேசாய் கண்ணடித்துவிட்டு,

ர.ர 1- கமலு, எங்க கச்சிக்கு வரப் போறாரூ. ரெட்ட எலைக்கு ஓட்டு போட சொல்லிக் கேக்கப் போறாரூ. பேச்சு வார்த்த நடந்துக்கீனு
கீது.

தொ.பொ – அவுரூ தி.க ஆளு. சொம்ம ரீல் வுடாதீங்க……….. நாயர் ஒரு ஸ்ட்ராங் டீ

என்றவர் மெல்ல பின் வாங்கி, செல்போனை எடுக்கிறார்.

தொ.பொ- அண்ணே, விசயம் தெரியுமா? நூறுகோடி வாங்கீனு கமலு, ஏடிம்கேக்கு போய்ட்டாரூ.

போன் குரல்- நெசமாலுமா? இரு, இரு. கமலு ஆபிசுல வேல செய்யிர ஆளோட மச்சான் ஒருத்தன் இருக்கான். அவன கேட்ட விஸ்யத்த
புட்டு புட்டு வெப்பான். இப்ப போன வெய்யீ.

உ.பி- அண்ணே, விஸ்யம் மெய்யாலுமான்னு கேட்டு சொல்லுங்க. டென்சனா கீது.

உபிக்கள் பணம் படுத்தும் பாட்டை பேசிக்கொண்டிருக்க செல் அடிக்கிறது.

போ. கு- கமலு ஊர்லையே இல்லியாம். ஜோதிகாகூட ஒரு படத்துல நடிக்கிறாரே, அது விஸ்யமா அமெரிக்கா போய்ட்டாராம். அவுரூ சுயமரியாதைகாரரூ, பெரியாரூ பக்தன். இன்னிக்கு பெரியாரூ கொள்கைய காப்பாத்துர ஓரே கட்சி நம்ம களகம்தான். நூறு கோடி
கொட்தாலும் அவுரூ ரெட்ட எல பக்கம் போவ மாட்டாரூ.

அவர் போனில் சொல்ல, சொல்ல பக்கத்தில் சில காதுகளில் இந்த பேச்சுக்கள் விழுகின்றன.

(மறைந்த எழுத்தாளர் தேவன், வதந்திகள் எப்படி பரவுகின்றன என்பதை ஒரு சிறுகதையில் விவரித்திருப்பார். அந்த தாக்கத்தின்
(விபரீத) விளைவு இது)

*****************
ராமசந்திரன் உஷா
24-4-2006
ramachandranusha@rediffmail.com

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா