பட்டேல்கிரி

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

மாது


நண்பர் (அதிகம் பழக்கம் இல்லாதவர்) அழைத்தனால் அவர் வீட்டிற்க்கு இரவு உணவு உண்ணச் செல்கிறீர்கள். வைன்/பீர்/மோர்/ஜூஸ் – குடிக்க ஏதாவது குடுத்து விட்டு கொறிக்க ஏதாவது தருகிறார். நீங்கள் ஒரு கனவான் போல், உதட்டில் கிளாஸ் பட்டும் படாமலும் திரவத்தை சுவைத்துக் கொண்டு (ஊர்ல ரெண்டு கல்ப்புல ஒரு குவாட்டர் அடித்ததெல்லாம் வேறு விஷயம்), முன்னே கொறிப்பில் ஒன்றிரண்டு எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறீர்கள். சமீபத்தில் பார்த்த டி.வி நிகழ்ச்சிகள், முன்னே வைத்த கொறிப்பில் உள்ள/இல்லாத கொழுப்பு ( ‘ஆலிவ் ஆயில் தடவி மைக்ரோவேவில் ஹீட் செய்தது ‘ – இல்லத்தரசி தகவல்), புதிதாக வந்த டிஜிட்டல் காமராவின் சிறப்பம்சங்கள் போன்ற முக்கியமான தகவல்களை அலசிக் கொண்டிருக்கிறீர்கள். திடாரென்று ‘எக்ஸ்குயூஸ் மீ ‘ என்று சொல்லி விட்டு நண்பர் உள்ளே செல்கிறார்.

திரும்பி வரும் போது கையில் ஒரு அட்டை பெட்டியை கொண்டு வந்து உங்கள் முன் வைக்கிறார். பிறகு அதை திறந்து நிறைய போட்டோ ஆல்பங்களையும், உதிரி போட்டோக்களையும் எடுத்து ‘இது ஈரோப் ட்ரிப் போன போது எடுத்தது ‘, ‘இது நயகரா போன போது எடுத்தது ‘, ‘இது கிராண்ட் கேன்யன் போன போது எடுத்தது ‘ என்று தனித் தனி கூறுகளாக பிரித்து வைக்கிறார். பின்பு ஒவ்வொரு புகைப்படமாக எடுத்து தகுந்த விளக்கங்களுடன் ( ‘வியாழக் கிழமை, 32.5 டிகிரி தட்ப வெப்பம், இவளுக்கு லேசாக உடம்பு சரியில்லை ‘) விளக்கிக் கொண்டிருக்கிறார். நீங்களும் பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு ‘ஓ ஈபில் டவர் இவ்வளவு பெரிசா ? ‘, ‘இது என்ன கட்டடம் ? ‘, ‘நீங்க போட்டோகிராபி முறைப்படி கத்துக்கிட்டாங்களா ? ‘ என்று சுவாரசியமாக( ?) கேள்விகள் கேட்கிறீர்கள். பிறகு, சாந்தி பலராம் மாமி ‘உங்க மனசுக்க பிடிச்சது மட்டும் செஞ்சு பாருங்க ‘ன்னு சொல்லியதை இல்லத்தரசி அவங்க மனசுக்குள் உள்ள கற்பனையும் சேர்த்து செஞ்ச பதார்த்தத்தை உங்களிடம் தருகிறார். அது வாயில் போய் ஒட்டிக் கொண்டதால் சிறுது நேரம் மெளனம். பிறகு எப்படி இருக்கு என்ற கேள்விக்கு ‘சூப்பரா இருக்குங்க ‘ என்று பதில் கூறிவிட்டு, ‘ராதா, அத எப்படி பண்றதுன்னு கேட்டு தெரிந்சுக்க ‘ என்று உங்கள் மனைவியை பார்த்து கூறியதால், இல்லத்தரசியின் முகத்தில் மலர்ச்சி.

‘அடுத்த தடவ எங்க வீட்டுல பாப்போம் ‘ என்று சொல்லி உங்கள் நண்பரிடம் விடை பெறுகிறீர்கள். குடித்தது ஒரு கிளாஸ் ஒயினாக இருந்தாலும், உள்ளூர் மாமாவிற்க்கு பயந்து கொண்டு உங்கள் மனைவியை கார் ஓட்டச் சொல்கிறீர்கள்.

சரி வீடு வந்து சேர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது உங்களிடம் மூன்று கேள்விகள்:

1. உங்கள் நண்பர் காண்பித்த புகைப்படங்களில் எழுபத்தைந்து சதவிகிதத்திற்கு மேல் உங்கள் நண்பரோ, நண்பரின் குடும்பத்தினரோ இருக்கிறார்களா ?

2. புராதனமான கட்டடங்கள் முன்னும், அழகான இயற்கைச் சின்னங்கள் முன்னும் உங்கள் நண்பர் திருஷ்டி போல் நிற்கம் புகைப்படங்கள் நிறைய உள்ளனவா ? (உம். உஙகள் நண்பரின் பூதாகரமான தொற்றத்திற்கு பின்னால் ஈபில் டவர் ஒரு சிறு குச்சி போல் தோன்றும், ஒட்டகம் போல் நின்றிருக்கும் உங்கள் நண்பரின் பின்னே நயகரா வீழ்ச்சி ஒரு ஓடை போல் தெரியும்)

3. வரவேற்பு பலகைகளின் ( ‘Niagara Welcomes You ‘, ‘Grand Canyon Welcomes You ‘) முன் உங்கள் நண்பர் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் நிறைய உள்ளனவா ?

மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கும் உங்கள் பதில் ‘ஆமாய்யா ஆமா ‘ எனில் – ‘வாழ்த்துக்கள் ‘ நீங்கள் ஒரு ‘பட்டேல்கிரி ‘ குடும்பத்துடன் உங்கள் மாலைப் பொழுதைக் கழித்து விட்டு வந்திருக்கிறீர்கள்.

—-

tamilmaadhoo@yahoo.com

Series Navigation

மாது

மாது