மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

வெங்கட் சாமிநாதன்



காக்க நாடன் பெயரைக் கேட்டது முப்பது முப்பதைந்து வருஷங்களுக்கு முன். எழுதுபதுகளின் பின் பாதியில் ஓவியர்கள் தாமோதரன், முத்துக்கோயா, இன்னும் சி.ராமச் சந்திரன் போன்ற சில அன்று தில்லியில் வாழ்ந்த மலையாள எழுத்தாளர்களும் பேசக்கேட்டு. அவருடைய எழுத்தில் காணப் படும் ஃப்ரெஞ்சு பாதிப்பு பற்றி அவர்கள் சொல்லிக் கேட்டதாக நினைப்பு. ஆனால் காக்கநாடனைப் படிக்கக் கிடைத்தது இப்போது தான்

சாகித்ய அகாடமிக்காக நிர்மால்யா தமிழில் மொழிபெயர்த்துள்ள சிறு கதைகள் சிலவற்றின் தொகுப்பு “யாழ்ப்பாணப் புகையிலை”
மலையாளத்திலிருந்து தமிழுக்கு நிர்மால்யா நிறையவே மொழி பெயர்த்து வந்துள்ளார். காக்க நாடன் கேரள சாகித்ய அகாடமி விஸ்வரூப பரிசு போன்றவை மட்டுமல்ல, தில்லி சாகித்ய அகாடமி பரிசும் பெற்றவர். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற மலையாள சிறு கதைத் தொகுப்பு என்று இப்புத்தகத்தின் அட்டையிலேயே .சொல்லப்பட்டிருக்கிறது

அவர் 1953-ல் பிறந்தவராக பின் அட்டையில் குறிப்பிட்டிருப்பது தவறான தகவலா, இல்லை திருத்தப்படாத அச்சுப் பிழையா என்பது தெரியவில்லை. ஒரு வேளை 1935- ஆக இருக்கவேண்டும். காரணம் நான் அவரைப் பற்றி என் மலையாள நண்பர்கள் எழுபதுகளில் பேசக் கேட்டபோது அவர் நிறைய எழுதி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியவராகத் தான். என் மனதில் ஒரு தோற்றம் எழுந்திருந்தது. இருபது வயது எழுத்தாளரைப் பற்றி அந்த மாதிரி பேச்சு எழுந்திராது, அவர் ஜான் கீட்ஸாக இருந்தால் ஒழிய.

இக்கதைகள் “ஒப்பனைகளைக் களைந்து விட்டு அசல் மனங்களை நிறுவிக்காட்ட முயற்சிக்கின்றன, பலங்களாலும் பலவீனங் களாலும் கட்டப்பட்ட மனித உறவின் நுட்பங்களே காக்க நாடன் கதைகள். என்று காக்க நாடனின் இத்தொகுப்புக் கதைகளைப் பற்றி பின்னட்டைக் குறிப்புகள் சொன்னாலும், அதன் சாட்சியங்களை இத்தொகுப்பில் உள்ள சில கதைகளில் காண முடியுமென்றாலும், இக்குறிப்புகள் மிகப் பொதுவானவை, எல்லா நல்ல எழுத்தாளரின் எழுத்துக்களிலும் காணப்படுபவை, எல்லா மனித உறவுகளும் அப்படிப்பட்டவை தானே என்று நினைக்கத் தோன்றுகிறது.

தரப்பட்ட மொழிபெயர்ப்பிலிருந்து இக் கதைத் தொகுப்பின் காக்கநாடனின் மொழி நடையும், சொல்ல வந்த கதைப் பொருளும் பல வன்ணங்கள் கொண்டவை என்று தெரிகிறது. எனக்கு மிகவும் பிடித்துப் போன, மிகவும் சுவாரஸ்யமான கதைகளைச் சொல்வதென்றால், யுத்தத்தின் இலாகா என்ற் கதை அவற்றில் ஒன்று. மிகவும் வித்தியாசமான கரு, மிக வித்தியாசமான கதை சொல்லல் கொண்டது இது.

டெல் அவீவ் விமான நிலையத்துக்கு இஸ்ரேல் பிரதம மந்திரி பென்யாமின் நெதன் யாஹூ வருகிறார். நீண்ட நேரம் பிரமுகர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும் இடத்தில் இருந்தாலும் அவர் என்னைக் கவனிக்கவில்லை என்று கதையை ஆரம்பிக்கிறார் காக்கநாடன். ஏன் கவனிகவில்லையென்றால் நான் தான் அங்கு இல்லையே என்று ஒரு நீண்ட வர்ணணைக்குப் பிறகு சொல்பவர் நெதன்யாஹூ என்ற பெயரின் தொடக்க ஆராய்ச்சிக்குப் போகிறார். இஸ்ரேல், நெதன்யாஹூ பின் யிட்டிஷில் எழுதும் யூத எழுத்தாளர் இஸாஹாக், பெயர்களின் அர்த்தங்களை பழைய ஏற்பாட்டில் தேடத் தொடங்கி விடுகிறார். நெதன்யாஹு என்றால் கடித்துக் குதறும் ஓநாய்,.என்று பொருள் படும் ஆக, பிரமுகர்கள் ஓய்வெடுக்குமிடத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் நெதன்யாஹு தன் பெயரும் தன் பழைய ஏற்பாட்டில் தன் சரித்திரத் தொடக்கமும் சொல்லும் ஓநாயல்ல நான் என்று நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை எண்ணிப் பார்க்கிறார். இன்று சரித்திரமும் அரபு நாடுகளும் அமெரிக்காவும் அந்த நிலையில் வைத்துவிட்டதே. கற்பனையில் காக்கநாடன் அவரைச் சந்தித்துப் பேசுகிறார். க்ளிண்டன் பயல், மோனிக்க லெவென்ஸ்கி பற்றியெல்லாம் பேசுகிறார்கள்.

இதற்கு நேர் எதிராக ஒரு கதை. ‘ராணி, அன்பே வா”. இரண்டு குடிகாரர்கள் சீட்டு விளையாடுகிறார்கள். அதில் ஒருத்தர் குடியும் சீட்ட்டாட்டமும் முடிந்து தூக்கத்தில் “ராணி, என் அன்பே வா, என்று புலம்ப, அதைக் கேட்ட அவர் மனைவி தன் கணவனோடு சண்டை போட, இன்னொருவர் மனைவி, அவளைச் சாந்தப் படுத்துகிறார் ”இந்தக் குடிகாரன்கள் இப்படித்தான் தூக்கத்தில் உளறுவான்கள். உன் புருஷன் தூக்கத்தில் கூப்பிட்டது, க்ளாவர் ராணியை, ஸ்பேட் ராணியை” என்று சொல்லி அவள் சந்தேகத்தைத் தீர்க்கிறாள். இது ஒரு கால கட்டத்திய குமுதம் ஆனந்த விகடன் கதையாக இருக்கிறது. தமிழ் சூழலில் சாகித்ய அகாடமி விருது பெற லாயக்கானது தான். ஆனால் மளையாளத்திலுமா இந்தக் கண்றாவி?

நம்மூர் முற்போக்குகள் எழுதுவது போலவும் கதைகள் இருக்கின்றன. முதல் கதை ‘யாழ்ப்பாணப் புகையிலை” அந்த ரகம் தான். சிறுவயதில் தன் பாட்டிக்குக் காரமும் சுவையும் நிறைந்த யாழ்ப்பாணப் புகையில் வாங்கிக் கொடுத்து வந்தவன், பாட்டி இறந்து பேரியவனான பிறகு, இலங்கை சென்றவன், கலவரத்தின் போது ஒடி வந்துவிடுகிறான். அவனை ஒரு அசரீர் நிந்திக்கிறது. “நீ ஒரு நீசன், நன்றி கெட்டவன், பாட்டியை மறந்தவன்…..யாழ்ப்பாணப் புகையிலையின் வீரியத்தைத் தொலைத்து விட்டு கரையேறியவன், கொடியவன், குரூரமானவன்…. இத்யாதி. உடனே இவனுக்கு புத்தி தெளிந்து, “இல்லை, இதோ நான் புறப்படுகிறேன் ஒன்று எதிரிகளை அழித்து என் பிறவியை மீட்பேன் அல்லது போர்க்களத்தில் வீழ்ந்து மடிவேன், இது சத்தியம், சத்தியம்…….வகைறா என்று சபதம்
இடுகிறான்.: அவனுக்காக நெற்றிக் காயத்துடன் ஒரு நகரம் காத்திருக்கிறது” என்று கதை முடிகிறது.. நம்மூர் முற்[போக்கு வியாதி அங்கும் பரவியிருக்கிறது போலும்.

ஹவாலா, போஃபர்ஸ், எஷியாநெட் எல்லாம் கிண்டல் செய்யப்படுகிறது ஒரு கதையில் (பாண்டுரங்கனுக்காக ஒரு முன்னுரை)) கபிலவாஸ்துவிலிருந்து மறுபடியும் சித்தார்த்தன் கிளம்புகிறான் உறங்கிக்கொண்டிருக்கும் தன் மனைவியையும் குழந்தையையும் விட்டு ஒரு கோடரியைக் கையிலேந்தி.. எதற்காக?. இன்னமும் அழிவும் மரணமும், துக்கமும் உலகை விட்டு நீங்கவில்லை. என்ன செய்யப் போகிறான்? திரும்ப ஒரு முறை கயாவுக்குச் சென்று தனக்கு ஞானோதயம் அளித்த அந்த போதி மரத்தை வெட்ட. (சித்தார்த்தனின் கோடாரி)

தன் இருபதாவது வயதில் தில்லியில் பழக்கம் கொண்ட ஒரு மலையாள தாசியின் பெண் தான் இப்போது தன் முன் உட்கார்ந்திருக்கும் தன் உதவியாளி என்று அவள் முகத்தைக் கண்டு சந்தேகம் கொண்டு அவள் அம்மை யார், அவள் பெயர் என்ன என்று கேட்டு அவள் தன் பெண் என்று கண்டு அவள் வீட்டுக்குப் போகிறான், அவள் அம்மையை ஏற்றுக் கொள்ள.
(மாற்றங்களின் பனிக்காலம்). இப்படிப்பட்ட கதைகளும் இருக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் ஒன்று சொல்லவேண்டும். நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி. மொத்தத்தில் அவரது மொழிபெயர்ப்பு திருப்திகரமாகவே இருப்பதாகத் தான் சொல்ல வேண்டும். மலையாளமும் தமிழும் மிக நெருங்கிய மொழிகள் என்பதால் இன்னும் கொஞ்சம் சுதந்திரத் தோடு மலையாள வாசனை யோடேயே மொழிபெயர்த்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் இதற்கு அர்த்தம், இன்றைய தமிழின் குணவிசேஷங்களை மறந்துவிடவேண்டும் என்பதல்ல உதாரணத்திற்கு ஒன்றைச் சுட்டிக் காட்டலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கதையில், தில்லி ஜி.பி.ரோடில் இருக்கும் தாசிகளின் அறைகளை, விந்து மணக்கும் அறைகளை அடைந்தாள்” என்று ஒருவர் வர்ணித்தால் படிக்கவும் கஷ்டம். இன்றைய தமிழ் மொழி தரும் நெருடலும் அதிகம். மூலத்தின் மலையாள பிரயோகங்கள் பற்றி எனக்கொன்றும் தெரியாது. அதை நிர்மால்யா தான் சொல்ல வேண்டும். “விந்து மணக்கும் அறைகள் இன்னும் சில இடங்களிலும், வேறு கதைகளிலும் வருகின்றன. அனேகமாக தாசிகளின் அறைகள் “விந்து மணக்கும் அறைகள்” என்றே வர்ணிக்கப் படுகின்றன. இந்த மாதிரி இடங்களில் மலையாள மூலத்தை கட்டாயம் தமிழ்ப் படுத்தியிருக்கவேண்டும். இது போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளின் அர்த்தங்கள் நாளடைவில் பாதை மாறுவதை மனத்தில் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. மிகவும் உறுத்தலாக இருந்ததை மாத்திரம் சொன்னேன். பொதுவில் நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி எனக்கு ஏதும் பலமான மறுப்புகள் கிடையாது. பெரும்பாலும் திருப்தி தரும் ஒன்று என்றே சொல்லவேண்டும்.

பால்ய வயதில் கொண்ட பாசம், பேபிச்சனையும் அன்னக் குட்டியையும் காதல் கனவுகள் இணைக்கின்றன. ஆனால் வயது வந்ததும் பேபிச்சன் அமெரிக்கவிலிருந்து ஊருக்கு வரும் வழியில் ஹீத்ரூ விமான நிலையத்தில், அன்னக்குட்டியை வாடிக்கனிலிருந்து திரும்பும் கன்னியாஸ்த்ரீ அன்னா அக்விலா ப்ரிஸ்காவாக சந்திக்கிறான். அன்னக்குட்டி தன்னை கர்த்தரோட மணவாட்டி என்று சொல்கிறாள், பேபிச்சனிடம்.(அன்னா அக்விலா ப்ரிஸ்கா)

முடிவில் ஒரு பயணம் என்ற கதையில் தான் மறுத்து ஒதுக்கிய ரவீந்திரனை விட்டு விலகி ஓவியம் பயின்று வாழ்க்கையில் தனித்தே வெற்றி பெற்று வந்த நிர்மலா, தன்னை ஒரு ஓவிய விமர்சகன் பலவந்தப்படுத்தும் நிகழ்வுக்குப் பிறகு, ரவீந்திரனிடமே திரும்பச் செல்கிறாள் கர்னலும் நண்பனும் கதையில் கர்னல் தன் நண்பனாகவும் வேலையாளாகவும் பழகும் தன் வேலையாள், அவன் மனைவி, குழந்தைகள் எல்லோருக்கும் தன் பிறந்த நாளென்று சொல்லி பரிசுகளும் விருந்தும் கொடுத்து நான் இனி சந்தோஷமாகச் சாவேன் என்று சொல்லி செத்துப் போகிறான். இப்படிப்பட்ட ஒரு காசிம் ஹாஜியை ‘இனிப்புப் பதார்த்தம் என்ற கதையிலும் பார்க்கிறோம்.

இப்படி நடையிலும் சொல் முறையிலும், சொல்லப்படும் பொருளிலும் வித்தியாசப்பட்ட பல வகைகள் கொண்டது இந்தத் தொகுப்பு. சில கதைகளின் தமிழ் முற்போக்குத் தனமும் தமிழ் சினிமாக் குணமும் கொண்டிருப்பதைக் காண கஷ்டமாக இருக்கிறது.

நெதன்யாஹூவை அவருடைய வம்சாவளியை பழைய ஏற்பாட்டிலிருந்து ஆரம்பித்து, அய்யா நான் ஒநாய் இல்லை என்று பாவம் கதற வைத்த யுத்தத்தின் இலாகா கதை தவிர வேறு எதுவும் எனக்குச் சிறப்பாகச் சொல்லத் தெரியவில்லை. கட்டாயம் காக்கநாடன் இக்கதைகளை விட பெரிய ஆளுமையாகத் தான் இருக்கவேண்டும்

யாழ்ப்பாணப் புகையிலை: காக்க நாடனின் சிறுகதைத் தொகுப்பு.
மலையாள மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பு நிர்மலா. ப. 160. வெளியீடு: சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை,, தேனாம்பேட்டை, சென்னை -18 விலை ரூ 85.
.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்