சங்கச் சுரங்கம் – 12 ; முல்லைப் பாட்டு

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

சு. பசுபதி, கனடா



நண்பன் வாசு கட்டடக்கலை நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளன். ஒரு பெரிய வணிக மையம் கட்டும் வேலையை மேற்பார்வையிட அமெரிக்கா சென்றிருந்தான். பலத்த மழையால் அவன் வீட்டில் சில இடைஞ்சல்கள் ஏற்படவே, அவற்றைக் கவனிக்க என்னை அழைத்திருந்தாள் அவன் மனைவி வீணா. “போயும் போயும் இந்த மழைக் காலத்தில் இந்த மனுஷன் என்னைத் தனியாய் விட்டுவிட்டு ‘வேலை வேலை’ என்று போய்விட்டாரே? போதாக் குறைக்கு வீட்டில் வேறே ஒரே தண்ணீர் ஒழுகல் ! இந்த லக்ஷணத்திற்கு இவர் ஒரு இஞ்சினீர் வேறே… ” என்று அங்கலாய்த்தாள் வீணா.

” வீணா, கவலையே வேண்டாம்… இன்னும் ஓரிரண்டு நாள்கள் தான். வாசு வந்துவிடுவான். சொல்லியிருக்கிறான். அமெரிக்க ராக்ஷசர்களிடம் வேலை வாங்குவதில் வாசு அசகாய சூரன் ! அவனால் தான் அவர்களிடம் மாரடிக்க முடியும். இப்படித்தான், பாருங்கள், ‘முல்லைப்பாட்’டிலும் ஒரு தலைவி கார்காலத்தில் போர்புரியச் சென்ற தலைவனை நினைத்து ஏங்குவாள். அந்தத் தமிழனின் மேற்பார்வையிலும் பல யவனர்கள் வேலை செய்து வந்தனர். அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன்… கேட்கிறீர்களா?” என்றேன். அவள் கொடுத்த காபியோ நாக்கைச் சுடும் அளவுச் சூடாய் இருந்தது. காபி கொஞ்சம் ஆறட்டுமே; மேலும், வீணாவையும் தேற்றியதாய் இருக்கும் என்று நினைத்துப் பேசினேன். அவளும் “சரி, சொல்லுங்களேன்” என்றாள். (ஆகா… வீணா சரியான முதல் தர நடிகைதான் என்று மனத்தில் நினைத்துக் கொண்டேன்; என் பேச்சைக் கேட்கப் பௌர்ணமிக் கடல்போல் பொங்கிவரும் உற்சாகத்தையெல்லாம் வெளியில் கொஞ்ஞ்..சமும் காட்டிக் கொள்ளாமல், ‘கடனே’ என்பது போலவும்… அரை மனதாய் இருப்பது போலவும்.. எப்படி அவ்வளவு தத்ரூபமாக முகத்தை வைத்துக் கொள்கிறாள்? ‘டொராண்டோ தமிழ்ச் சங்கம் ‘ போடும் அடுத்த நாடகத்திற்கு இவளைச் சிபாரிசு செய்யவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் ) .

முல்லைப் பாட்டு என்னும் சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் ஐந்தாவது நூல். பிரிந்த தலைவன் விரைவில் வந்துவிடுவான் என்ற திட நம்பிக்கையுடன், தலைவி வீட்டில் பொறுமையுடன் இருப்பதைச் சொல்வதே முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள். நூற்றுமூன்று அடிகள் கொண்ட இப்பாட்டை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகர் மகன் நப்பூதனார். இந்தப் பாடலை மூன்று பகுதிகளாய்ப் பிரிக்கலாம். முதல் பகுதி மழைக் காலத்து மாலைப் பொழுதில் ஏங்கியிருக்கும் அரசியின் நிலையை விவரிக்கிறது. இரண்டாம் பகுதி …. திரைப்படங்களில் வருவது போல்… சடாரென்று அரசன் தங்கியிருக்கும் பாசறைக்குத் தாவுகிறது. மூன்றாம் பகுதி , மீண்டும் அரசியிடம் வருகிறது. கடைசியில், அரசன் வரும் தேரை இழுத்துவரும் குதிரைகளின் குளம்பொலியுடன் பாட்டு முற்றுப் பெறுகிறது.

சில பகுதிகளை வீணாவிடம் விளக்கத் தொடங்கினேன்.

முல்லை நிலம் காடு. அதன் தெய்வம் திருமால் அல்லவா? பாட்டுத் திருமாலைப் பற்றிய குறிப்புடன் தொடங்குகிறது. பூவுலகை ஓரடியால் அளந்த திருமாலைப் போல, கறுத்த மேகம் ஒரே வேளையில் உலகை வளைத்துக் கொள்ளுகிறதாம்.

எந்தத் திருமால்?

. . . நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல,

சக்கரத்தோடு, வலம்புரிச் சங்கையும் வைத்துள்ள, திருமகளை(மா) மார்பில் தாங்குபவனும், மகாபலி வார்த்த நீர் கையிலே விழுந்த உடன் விஸ்வரூபம் கொண்ட திருமால் ….

” நீர்செல நிமிர்ந்த மாஅல் போல ! ” எவ்வளவு அழகான தொடர்!
( அது என்ன ‘மா’விற்குப் பின்’அ’ என்கிறீர்களா ? ‘அ’ என்பது அளபெடை… மா..ல் என சிறிது நீட்டிச் சொல்லவேண்டும் என்று பொருள்! நெடிதாய் நீண்ட திரிவிக்கிரமர் அல்லவா?)

கார்காலம். மாலைப்பொழுது. போர்புரியச் சென்ற கணவன் வீட்டிற்கு வரவில்லை. மனைவி துக்கம் பொங்க உட்கார்ந்து இருக்கிறாள். (‘ வேட்டை முடிஞ்சு போச்சு, தம்பி, வீட்டுக்கு வாங்க …. ‘ என்றும் ‘ பொறந்த நாட்டை நினைச்சுப் பார்த்துப் புறப்பட்டு வாங்க ‘ என்றும் இந்தியப் போர்வீரர்களை அழைத்த கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நாட்டுப் பாடல் நினைவிற்கு வருகிறதா?) அந்த ஊர் ‘பெரிசு’ கள்… வயதில் மூத்த பெண்டிர்… நற்சொல் கேட்டு (விரிச்சி கேட்டல் ) வந்து அவளைத் தேற்ற முயல்கிறார்கள். ஊர் ஓரமாகச் சென்று, நெல்லையும், முல்லைப் பூவையும் தூவிக் கைதொழுது , ஏதாவது நல்ல சகுனம் ஏற்படுமா என்று பார்ப்பது அக்காலத்து வழக்கம். அப்போது , அங்கே புல் மேயச் சென்ற தாய்ப்பசு வராததால், பசியில் வாடும் ஒரு இளங்கன்றை ஓர் ஆயர்குலப் பெண், அந்த கன்றின் முதுகைத் தடவி, ” வருந்தாதே! இதோ இன்னும் கொஞ்சம் நேரத்தில் உந்தாய் வந்து விடும்” என்று சொல்வதை முதுபெண்டிர் கேட்டு, தலைவியிடம் வந்து , ‘ஆயர்குடிப் பெண் சொன்னது நற்சொல்லாக இருக்கிறது. தாய்ப்பசு போல உன் தலைவனும் சீக்கிரம் வந்துவிடுவான்’ என்று தேற்றுகிறார்கள்.

இந்த நற்சகுன கட்டத்தை நான் சொல்லும்போதே, ‘டிரிங்’ என்று தொலைபேசி மணி அடித்தது. எடுக்கப் போன வீணாவிடம் நான் , “‘இதுதான் விரிச்சி கேட்டல் என்பது! நல்ல சகுனம்! வாசுவும் சீக்கிரம் வந்துவிடுவான் ” என்றேன். தொலைபேசியில் வீணா பேசி முடித்ததும், மீண்டும் தொடர்ந்தேன். வீணா , தன் மகன் விநாயக்கை ஒரு உயர்ந்த நாற்காலியில் உட்கார வைத்து, அவன் முன் உணவுக்கிண்ணத்தை வைத்து, அவனே கையால் எடுத்துச் சாப்பிடப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். ‘ஆ, அம், அப்பிச்சி, மம்மம்’ என்றெல்லாம் குழந்தை மொழியில் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

அரசன் பாசறையில் ஒரு காட்சி. பாசறையின் உள்ளே யானைகள் நிற்கின்றன. யானைப் பாகர்கள் கரும்பு, நெற்கதிர், அதிமதுரத் தழை ஆகியவற்றை ஒன்று சேர்த்து யானைக்கு உணவாகக் கொடுக்கின்றனர். யானை அதைச் சாப்பிடாது…. ஒருவேளை பசி இல்லையோ என்னவோ… துதிக்கையால் வாங்கி, நெற்றியைத் துடைத்துக் கொள்கிறதாம். பிறகு உண்ணாமல் துதிக்கையைத் தன் வளைந்த தந்தங்களின் மேலே தொங்க விடுகின்றது. யானைப்பாகர்கள் அங்குசத்தால் குத்தி, யானை புரிந்துகொள்ளும் வடமொழிச் சொற்களைச் சொல்லி உண்ணச் செய்கிறார்களாம். ( நச்சினார்க்கினியார் யானைக்குச் சொல்லும் இந்த வடமொழிச் சொற்கள் ‘அப்புது, அப்புது, ஆது, ஆது, ஐ, ஐ’ என்று சீவக சிந்தாமணி உரையில் சொல்கிறார்! )

. . . . யானை
ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த
வயல்விளை இன்குளகு உண்ணாது, நுதல்துடைத்து
அயில்நுனை மருப்பில்தம் கையிடைக் கொண்டெனக்
கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றி,
கல்லா இளைஞர் கவளம் கைப்ப

[ குளகு – அதிமதுரத் தழை, அயில் நுனை மருப்பில் – கூரிய முனையுள்ள (யானையின்) கொம்பினிடம் , கவைமுள் கருவி – அங்குசம், துரட்டி ]

மேற்கண்ட காட்சியை நான் விவரிக்கும்போது , வீணா விநாயக்குக்கு உணவு கொடுக்கும் பயிற்சியை நான் பார்த்ததாலும், விநாயக் உணவைக் கையால் வாங்கித் தன் முகம் முழுதும் அப்பிக் கொள்வது கண்ணில் பட்டதாலும்…மறந்து போய், ‘விநாயக் உணவால் நெற்றியைத் துடைத்துக் கொண்டான்’ என்று உளறிவிட்டேன்! (விநாயக் ..சும்மா சொல்லக் கூடாது ! என் கண் பட்டுவிடும்! விநாயக் கொஞ்சம் புஷ்டியான குழந்தை தான்!) வீணா சடாரென்று திரும்பி என்னைச் சுடுவது போல் பார்க்கவே, உளறிக் குளறி, இருமி, வார்த்தைகளை முழுங்கிச் சமாளித்துக் கொண்டு மேலும் தொடர்ந்தேன்.

“இன்னொரு பாசறைக் காட்சி, கேள்” என்று நான் ஆரம்பித்தேன்.

அரசனுடைய இருப்பிடத்தை யவனர்கள் அழகாய் அமைத்திருந்தனர். அவர்கள் இடுப்பில் குதிரைப் பிரம்பு. அதை மறைத்து ஒரு சட்டை. பார்த்தாலே அச்சம்தரும் தோற்றம், வலிமை இவற்றைக் கொண்ட யவனர்கள் அவர்கள். ( நம்பூதனார் தான் முதன்முதலில் தமிழிலக்கியத்தில் உடம்பின்மேல் அணியும் சட்டைக்கு ஒரு பெயர் ..’மெய்ப்பை’ என்று .. கொடுக்கிறார்!)

மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்

[ மத்திகை – குதிரைச் சவுக்கு, மெய்ப்பை – சட்டை, திண்ஞாண் – வலிய கயிறு]

அரசனின் படுக்கையறையைச் சுற்றி, பல மிலேச்சர்கள் நிற்கின்றனர்.

உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம்புகு மிலேச்சர்

என்கிறார் நம்பூதனார். (‘நாவினால் பேசமுடியாத, உடம்பின் சைகையால் மட்டும் சொல்லக்கூடிய, சட்டையிட்ட மிலேச்சர்’ ) ( ‘உரையா நாவின் ’ என்பதற்கு
அரசனின் ரகசியங்களைச் சொல்ல முடியாத ஊமைகள் என்று பொருள் கொள்கிறார் சிலம்பொலி செல்லப்பன்; தமிழ் தெரியாத என்று பொருள் கொள்கிறார் கமில் ச்வெலபில் )

மேலும், அரசனின் கூடாரத்தில் விளக்கேற்றும் மங்கையர் இருக்கின்றனர். அவர்கள் கைகளில் வளையல்கள். அழகிய கூந்தல் தோள்களில் புரள்கிறது. அந்தப் பெண்கள் காவலும் புரிவதால், இரவையும் பகல் போல் மாற்றும் ஒளிவீசும் வாளைக் கச்சில் சொருகி இருக்கிறார்கள்.

குறுந்தொடி முன்கைக் கூந்தல்அம் சிறுபுறத்து
இரவு,பகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்

என்று சித்திரிக்கிறார் நம்பூதனார்.

வீணாவிடம் நான் கேட்டேன்: “பார்த்தாயா, அந்தநாளில் ஒரு தமிழ் அரசன் பல அன்னியர்களை வேலைக்கு அமர்த்தி இருந்ததுபோல், வாசுவும் இப்போது பல அமெரிக்கர்களை வேலை வாங்குகிறானே? உனக்குப் பெருமையாக இல்லையோ ?”
வீணா முகத்தைத் தோளால் இடித்துக் கொண்டாள். “என்னவோ, நீங்கள் தான் உங்கள் நண்பரை மெச்சிக்கணும் . ஆனால், நீங்கள் கதை சொன்னபிறகு…என் மனதில் ஒரே ஒரு கேள்விதான் விஷ்ணுவின் விச்வரூபம் போல் எழுந்து நிற்கிறது. அவரிடம் சில அமெரிக்க பெண்களும் வேலை செய்வதாக வாசுவே முன்பு சொல்லியிருக்கிறார். எனக்கு இப்போது தெரிய வேண்டியது ஒன்றுதான்: வேலைக்கு வரும்போது அந்தப் பெண்கள் என்ன ஆடை அணிகிறார்கள்? மெய்ப்ப்பையோ, பொய்ப்பையோ …நீங்கள் ஏதோ சொன்னீர்களே, அது ஏதாவது உண்டா என்று தெரியவேண்டும்… அந்தப் பாழாப்போன ஊரில் நிறைய ‘சட்டையில்லா நடன விடுதிகள்’ என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தப் பெண்கள் ‘சட்டையில்லாமல் வேலை’ செய்கிறார்களோ, என்னவோ? வாசு வரட்டும், இது தெரியாமல் அடுத்த தடவை அவரை வெளிஊர் வேலைக்கு அனுப்ப மாட்டேன்” என்றாள்.

நான் , ஒலிம்பிக் ஓட்டக்காரனை விட வேகமாக, என் ‘மெய்ப்பை’க்கு மேல், ‘பனிப்பை’யையும் அணிந்து, செருப்பை மாட்டிக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தேன்.

~*~o0O0o~*~

s dot pasupathy at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா