டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன்
கவிதை மொழி
கவிதை மொழி குறித்து ஆழ்ந்து பொறுப்புணர்வுடன் சிந்தித்து பல கவிஞர்கள் தங்கள் கருத்துக்களையும் தங்கங்களையும் பதிவு செய்துள்ளனர். இத்திக்கில், முக்கியமான கவிஞரும், தேர்ந்த இலக்கிய விமர்சகருமான க. நா. சுப்ரமணியத்தின் ஒரு கவிதை, நமக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது. இதோ கவிதை:
‘கவிதை வேண்டுமானால்
சொற்களைக் கூராக்கு
இசையை ஒதுக்கிவிடு
உருவங்களை உயிராக்கு
சிந்தனைகளை நேராக்கு
உபயோகமற்ற
பாத்திரங்களை
ஏற்றி வைக்கும்
மச்சிருட்டாக
கவிதையை நினைக்காதே.’
என்று கூறுகிறார் க. நா. சுப்ரமணியம்.
நல்ல கவிதையில், ஏன் எல்லா நல்ல இலக்கியத்திலும் முக்கியமான அம்சம். ஒரு experience resonanceஐ, ஒரு அனுபவ ஒத்ததிர்வை வாசகர்கவிடம் ஏற்படுத்துவது.
க. நா. சு. கூறுவார்:
”நல்ல கவியின் வார்த்தைகள் வாசகனின் உள்ளத்தில் மறைவாகக் கிடைக்கிற அனுபவங்களில் ஏதோ ஒன்றை பாதாளக் கரண்டி போல் பற்றி இழுக்கிறது. நமது உறங்கிக் கிடக்கும், நம்மிடமுள்ளதாக நாமே அறியாத அனுபவங்களை எழுப்ப வல்லதாக இருக்கிறது.”
கவிதைக்கும் கவிஞனுக்கும் உள்ள உறவை, இதில் வார்த்தைகளின் பங்கை, மிகவும் உள்ளுணர்வுடன் பதிவு செய்கிறார் அபி:
”வார்ததை எவ்வளவு வலுவானதாக இருந்தாலும் சமயத்தில் வார்த்தை ஒரு சாக்கு. வார்த்தைக்கு இது தெரியும். கவிஞனுக்கும் இது தெரியும். இவர்களிடையே இது ஒரு கபட உடன்பாடு.”
மேலும் அபி கூறுவார்:
“சற்று முன்பு ஒளியாய் மின்னிய என் கவிதைகள் இப்பாது இருளாய் மின்னின. கவிதையின் தீட்சண்யம் ஒளி வடிவு மட்டுமா? தீட்சண்யமான இருள் வடிவிலும்தான் அது இருக்கிறது. பார்வைக்குப் பிடிபடும் ஒளியின் அடியில் தேங்கி மறைந்துள்ள இருள் சமுத்திரம் கவிதையில் கொந்தளிக்கிறது. . . வெட்ட வெளிச்சம் என்று சாதாரணமாக நினைக்கிற விஷயங்களிலும் ஆங்காங்கே புகைமூட்டம் தெரிகிறது. எந்த தயக்கத்தின் பின்னாலும் ஒரு கணப்பிளவில் ஒரு இருள் நின்று காட்டிவிட்டுப் போகிறது.”
இவை போன்ற பிரச்சினைகளை, தீர்வுகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு அனுபவம் போன்றது கோ. ராஜாரமின்’தவம்’ எனும் இந்தக் கவிதை:
”கடலின்
தரை பரவும் ழத்தில்
வாய் திறவா சிப்பிகள்;
கொடியில்
நுனித்தண்டு அசைவினிலே
குவிந்தமுக மொட்டுகள்;
மனதின்
புதைகுழிப் பொறுமலிலே
கவிதைக்கரு வித்துக்கள்;
சிப்பிகள் –
முத்துகளை உமிழவில்லை.
மொட்டுக்கள் –
இதழ் விரித்துச் சிரிக்கவில்லை.
வித்துக்கள் –
கவிதையுருக் கொள்ளவில்லை.
ஏதோ ஒரு கரத்தின்,
ஏதோ ஒரு காற்றின்
ஏதோ ஒரு ஒளியின்
ஸ்பரிசத்துக்காகத்
தவம் இருக்கின்றன’
இத்தருணத்தில் ஒரு நன்னூல் சூத்திரத்தை நினைவு கூரலாம். ”பொருட்கு இடனாகி உணர்வினின் வல்லோர் அணிபெற செய்வது செய்யுள்”என்கிறது நன்னூல். சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள உறவை வடுபடுத்தக் கூடாது. நுண்ணுணர்வு கவிதையின் முக்கிய அங்கம், அழகியல் பார்வை கவிதையின் உயிர்நாடி – இதை இந்த சூத்திரத்தின் சாரமாகக் கொள்ளலாம். இந்தக் கூறுகளை புதுக்கவிதைக் களத்தின் அடிப்படைக் கரிசனைகளாகக் காணலாம்.
திணைக் கோட்பாடு
அடுத்ததாகத் திணைக் கோட்பாட்டின் இன்றையத் தாக்கங்களை, இன்றைய பரிணாமங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம். பெளதீகச் சூழல் சார்ந்த பகுதிகளாக தமிழ் நிலபரப்பைக் கண்டு, அவற்றை ஐந்து திணைகளாக இனம் கண்டு, ஐந்து Eco-regionஐ இலக்கிய மரபில் ஒரு அங்கமாக வரித்துள்ளது கவிதை இயலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு. திணைகள் சார்ந்த எல்லைகளை இன்று நோக்கும் போது இன்று ஒரு புதுக்கோண அணுகுமுறை தேவை என்று தோன்றுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. நகரமயமாதல், வணிகமயமாதல், இடம்பெயர்ச்சி அல்லது spatial mobility முதலியவை ஒரு சில காரணிகள். தொழில் நுட்பத்தின் தாக்கத்தால் உலகமே ஒரு குவலய கிராமமாகச் சுருங்கிவிட்டது. தகவல் தொழில்நுட்பத் தாக்கத்தால், ஒளிபரப்பின் பரந்துபட்ட வீச்சால் நிகழ்ந்துவரும் பன்முகப்பட்ட பண்பாட்டுத் தாக்கங்களின் மூலமாகப் பீரிட்டுவரும் நுகர்வுக் கலாச்சாரம், எதிர்பார்ப்பு வளர்ச்சி அல்லது the crisis of rising expectations. இவைபோன்ற பல காரணிகளின் தாக்கத்தால் ஒருபுகைமூட்டமான ஒரு கலாச்சாரப் பொதுமை திணை எல்லைகளைக் கடந்து நிலவுகிறது. பண்டைத் தமிழ் இலக்கண மரபிலே கூட திணை மயக்கம் என்ற கருதுகோள் அங்கீகாரம் பெற்றிருந்தது. இந்த திணை மயக்கம் இன்றும் ஒரு யதார்த்தமாக நிகழும் அதே நேரத்தில் திணை இழப்பு அல்லது loss of roots சார்ந்த வலி ஒரு முக்கிய சமூக, வாழ்வியல் கூறாக பேருருக் கொண்டுள்ளது. இதன் மூலமான விளைவு உள்மனக் காயமாகவும், சிராய்ப்புகளாகவும், தங்கங்களாகவும் விரவி நிற்கிறது. இந்தப் பிரச்சினையின் பரிணாமங்களைப் பல கவிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதன் முக்கிய பதிவாக ‘புது மார்கழி’ என்ற இளம்பிறையின் கவிதை அமைகிறது.
”மாநகர் வந்து
மாதங்கள் பல ஒடிவிட்டன
பொருட்களை
ஏற்றி வந்துவிட்டேன் அப்போதே.
வராமல் அடம்பிடித்துக் கொண்டிருக்கும்
இந்த மனசைத்தான்
எப்படிக் கொண்டு வருவதென
தெரியவில்லை.
வாசல்களில் போடப்படும்
கோலங்களைப் பார்த்துப் பார்த்துதான்
மார்கழியை உணர முடிகிறதிங்கு.
அருகம் புல்லில் துளிர்த்திருக்கும்
பனித் துளிகளை
மிதித்து. . . . . . . உடைத்து
முழங்காலுக்குக் கீழ் நனைந்த துணியின்
குளிர்ந்த ஓட்டலோடு
புப்பறிக்கவோ. . . . . . . புல்லறுக்கவோ
முள் கீறி
இலந்தைப் பழம் பொறுக்கவோ
படிக்கவோ. . . . எழுதவோ செல்லாத
என் முதல்
மாநகர் மார்கழி இது.”
பெயர் சுட்டாமை
அகத்திணை மரபில் இன்னோரு சுவையான கூறு ஒரு குறிப்பிட்ட ஆணோ, பெண்ணோ, பெயரால் இனம் காணத்தக்க தலைவனோ, தலைவியோ இடம்பெறாமை. ‘மக்கள் நுதலிய அகன் ஐந்தினையும் சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார்'(தொல். 1000) என்ற தொல்காப்பிய நூற்பா இந்தக் கொள்கையை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது.
கவிதைத் தலைவிக்கோ தலைவனுக்கோ கவிதை மாந்தருக்கோ ஒரு குறிப்பிட்ட பெயர் சுட்டாமல் இருப்பது புதுக்கவிதை மரபில் ஒரு முக்கிய அம்சமாகக் காணப்பெறுகிறது. இந்தச் செல்நெறி பண்டைய தமிழ் மரபின் ஒரு நீட்சியாகக் காணத்தக்கது.
இது குறித்த ஒரு விளக்கம் தேவை. இப்படிப் பெயர் சுட்டப்படாத கவிதைமாந்தர் பெயர் இல்லாத பூச்சிகள் அல்லர். ஒரு குறிப்பிட்ட ளுமையின், மனோ நிலைமையின், உணர்ச்சித் துடிப்பின் வார்ப்படங்கள் இவை. ஒரு பொதுமைப் பண்பு. குறியீட்டு வீரியத்துடன் தனிமனித அடையாளத்தை மீறித் தன் பிரசன்னத்தை வெளிப்படுத்துவது இதன் உயிர் நாடி. புத்துக்கவிதையில் மட்டுமின்றி இந்த போக்கை நவீன ஓவியங்களிலும் நவீன சிற்பங்களிலும் காண முடிகிறது என்பது ஒரு சுவையான தகவல்.
ஜனநாயகப்படுத்துதல்
தமிழ் பண்டை இலக்கிய மரபில் ‘உலகம் என்பது உயர்ந்தோர்மேற்றே’என்ற பார்வை இருந்தது. மேலும் தலைவன், தலைவியின் குணநலஙளில் பிறப்பு, குடிமை, ண்மை, நிறை, திரு அல்லது செல்வம் போன்ற கூறுகளையும் இம்மரபு இனம் காண்கிறது. இவற்றில் மேல்மட்டச் சார்பு அல்லது elilist bias இருப்பதை நம்மால் காணமுடிகிறது. னால் நவீன தமிழ் இலக்கியக் கலனில் (புதுக்கவிதைக் களனும் இதில் அடங்கும்) இந்த மேல்மட்டச் சார்பு படிப்படியாகத் தவிர்க்கப்பட்டு வேர்மட்டச் சார்பாக மாறி வந்துள்ளது. மாறி வருகின்றது.
சமூகத்தின் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள், சமூகத்தால் சபிக்கப்பட்டவர்கள். சமூக ஒழுக்க நெறிகளி¢ன் வரம்புகளை மீறுவதால் தண்டிக்கப்படுபவர்கள்-இது போன்ற பல சமூக உறுப்பினர்கள் கதைமாந்தர்களாக, பாட்டுடைத் தலைவராக சுவீகரிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு முக்கியமான, ஜனநாயகப்படுத்தப்படும் திக்கில் விளங்கும் மடைமாற்ற நிகழ்வு. இதேபோன்ற மாற்றங்கள் நிகழாவிட்டால் மேல்தட்டு சார்ந்த பல இயல்புநெறிகள் உடைப்பட்டு காலத்தால் சவமாய்ப் போய்விடும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
அழகியல் கூறுகள்
அகத்திணைக்குரிய உள்ளுறை உவமக்கோட்படு புதுக்கவிதைக் களனுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.
உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள்முடிக என
உள்ளுறுத்து இருவது உள்ளுறை உவமம் (தொல்.994)
என தொல்கப்பியம் இதனை இனம் காட்டுகிறது. இதன் உயிர்நாடி இதுதான். ‘உவமிக்கப்படும் குறிப்புப் பொருள் மறைந்திருக்கும் உவமையே வெளிப்பட்டு நிற்கும்.’ மேற்கோளாக (குறுந்.278)நோக்கலாம்.
“.. ..கடுவன்
ஊழுறு தீம்கனி உதிர்ப்பு, கீழ் இருந்து
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே”
ஆண் குரங்கு முதிர்ந்த இனிய பழங்களை மரத்தில் ஏறி உதிர்க்கிறது. கீழே அவற்றைக் கண்டு ரசித்து உன்ணும் குட்டிகளுடன் பெண் குரங்கு. இவையுள்ள மலைகளைக் கடந்து தலைவன் செல்கிறான் – இது வெளிப்படை உணர்த்துவதோ தன் மகவுடன் தலைவன் வருகைக்காக ஏங்கி நிற்கும் தலைவி . இது போன்ற ஒரு சித்திரத்தை புதுக்கவிதையிலும் இனம் காண முடிகிறது. கல்யாண்ஜியின் ‘அலைதல்’ என்ற கவிதையை நோக்கலாம்.
“இக்கரைக்கும் அக்கரைக்கும்
பரிசல் ஓட்டிப் பரிசல் ஓட்டி
‘எக்கரை
என் கரை?’
என்று மறக்கும்
இடையோடும் நதிமெல்லச்
சிரிக்கும்.”
இது ஏதோ இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே சென்றுகொண்டுள்ள பரிசலின் கதையன்று; இலக்குத் தெளிவின்றி இங்கும் அங்குமாக அல்லாடித் திரியும் மனித வாழ்வின் அவலத்தின் படப்பிடிப்புதான் இது.
அகத்துறையில் இடம்பெறும் இன்னொரு நுண்ணிய கோட்பாடு இறைச்சி.
இறைச்சியில் பிறக்கும் பொருளுமாருளவே
திறத்தியல் மருங்கில் தெரியுமோர்க்கே. (தொல்.1176)
என்ஙிறது தொல்காப்பியம்.
ஆழ்ந்து பொருள் காண்போர்க்கு இவ்விறைச்சியில் தோன்றும் குறிப்புப்பொருள் புலப்படும் என்பார் தொல்காப்பியர்.
வெறும் அடைமொழிகளாய், இயற்கை வருணனையாய்த் தோன்றும் சொற்களில் குறிப்புப்பொருள் சூலுற்று இருப்பதே இறைச்சியின் உயிர்நாடி. இந்தக் கோட்பாட்டின் இன்னொரு சிறப்பு மரம், செடி, கொடி, பறவை, விலங்கு, ஊர்வன இயங்கு திணைப் பொருளாக விளங்குவது.
உயிர் இனங்களின் அன்பு வாழ்வைக் காணும்போது தலைவன் கட்டாயம் விரைவில் இரவில் தலைவியை வந்தடைவான் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் பாங்கில் இறைச்சி அமைகிறது. கலைமான் பிணைமானைத் தழுவுதல்; கள்ளியில் இணையைத் தேடும் பல்லி எழுப்பும் ‘இச்’, ‘இச்’ எனும் ஒலி. பாம்புகள் பின்னிப்பிணையும் காட்சி; பனைமரத்து உச்சியில் மடலில் கிடந்து நள்ளிரவில் அன்றில் முனகும் ஒலி – சித்திரங்கள் சுருள்சுருளாய் விரிகின்றன. இத்தருணத்தில். கவிஞர் ஆனந்த் படைத்துள்ள ‘இருந்த இடத்தில்’ என்ற தலைப்புள்ள கவிதை நினைவுக்கு வருகிறது.
“இருந்த இடத்தில்
இருந்த படியே
நீ இரு
நான் வருவேன்
உன் கால்களை வருடிச் செல்லும்
நீரெல்லாம் கழிந்தபின்னே”
இந்த கோட்பாட்டுக்கு ஒரு மேற்கோளாக இக்கவிதை அமையுமோ என்று
எண்ணத் தோன்றுகிறது. மேலெழுந்த வாரியாக நாம் காணும் பொருளுக்குப் பின்னால் பொதிந்துள்ள ஆழ்ந்த அர்த்தத்தை நாம் தரிசிக்க வேண்டும். கவிதை கவிஞனுடன் சொல்லாடுவதாய் இக்கவிதையைக் காணலாம். “நீ வார்த்தைகளைத் தேடிக்கொண்டே இரு. ஒரு காலகட்டத்தில் வார்த்தையின் வெறுமையை நீ உணர்வாய். அப்போது நீ கவிதையை அதாவது என்னை தரிசிப்பாய்” இவ்வாறு இதாற்குப் பொருள் காணலாம் என்று நான் எண்ணுகிறேன்.
புதிய புலன்கள்
நவீன கவிதை மரபில் ஜனநாயகப்படுத்தும் செல்நெறி பரவலாக உள்ளது என்பதை முன்பே கண்டோம். இந்த ஜனநாயகப்படுத்துவதில் இரண்டு முக்கியமான வெளிப்பாடுகள் பெண்சார்ந்த, தலித் சார்ந்த கவிதைப் படைப்புகள். சங்க காலத்தில் ஒரு சில பெண் புலவர்கள் இருந்தார்கள்தான். மாபெரும் நிகழ்வான phenomenon ன அவ்வை உட்பட. அதன் பிறகு பக்தி இலக்கிய காலத்தில் ஆண்டாளையும், காரைக்கல் அம்மையாரையும் நாம் காண்கிறோம். அதன் பிறகு பல நூற்றாண்டுகளாக வறட்சிதான். இந்த வறட்சிக்கான யதார்த்தப் பின்னணியை எளிதாக உணர முடிகிறது. பெண் முன்னேற்றம் அடைந்தால்தான். தன் ளுனையை பிரதிநித்துவப்படுத்தும் வாய்ப்புகள் அவளுக்கு இருக்கும்போதுதான். படைப்பிலக்கியத்திலும் அவளது பிரசன்னம் நிகழ்கிறது.
இன்றைய கவிதைகளில் உயிர்ப்புள்ள, பொருண்மை உள்ள, ஓரளவு சினத்தைச் சூலுற்ற பல அழகான கவிதைப் பதிவுகளை இன்றைய பெண் கவிஞர்களிடம் இருந்து நாம் பெற்றுள்ளோம்.
ஓரிரு மேற்கோள்கள். இன்றைய அவலத்தின் வேரையே இனங்காணும் பாங்கில் கனிமொழியின் கவிதை இதோ.
“எமக்கு என்று
சொற்கள் இல்லை.
மொழி எம்மை
இணைத்துக்கொள்வதுமில்லை.
உமது கதைகளில்
யாம் இல்லை.
எனக்கென்று சரித்திரமில்லை.
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துத் தந்ததே நிஜம்.
எனக்கென்று கண்களோ,
செவிகளோ, கால்களோ
இல்லை.
அவ்வப்போது நீ இரவலாய்
தருவதைத் தவிர.”
மேலே கண்ட கனிமொழியின் கவிதை இன்றைய சமூகச் சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் அவலத்தின் கூறுகளை இனங்காணுகிறது. இதைத் தொடர்ந்து, “நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின” என்ற சூளுரையின் எதிரொலி போல் ஒரு பெண் கவிஞரின் குரல். “நாங்கள் எங்கள் ளுமையை வீரியத்துடன் பதிவு செய்ய வந்துள்ளோம். இத்திக்கில் உங்கள் கருணைக்காகக் கப்பறை ஏந்தி நாங்கள் வரவில்லை. நாங்கள் வீறுகொண்டு எழும் உண்மையைப் பறைசாற்றவே வந்துள்ளோம்” எனும் பாங்கில் ‘எரிசக்தி’ என்ற குட்டி ரேவதியின் கவிதை.
“வலிகளை உச்சரிக்கத்தெரியாத
வழிகளைத் தேடி அளையாத
புடவை ஒதுக்கி நடக்கும்
பெண்களைத்தான் உனக்குப் பிடிக்கும்.. ..
ஆனால், உணர்வுகளின் குவியல் நான்
ஒளி தேசத்தில் வாழ விரும்பும்
விடுதலைப் பறவை.. .
ஒரே பிறப்பில்
அழவும் சிரிக்கவும் ரசிக்கவும்
பொழியவும் எரிக்கவும் மகிழவும்
அழியவும் ஜனிக்கவும் பூத்தவன்.. .
மண்வாசனையும் மலைத்திமிரும்
நதியோட்டமும்
என்னுள் கிளர்ந்தெழுவதைக்
கட்டுப்படுத்த இயலவில்லை!
நவதுவாரங்களின் வழியாகவும்
கனவுகள் பீறிடுகின்றன.
ஜனங்கள் திரளும் நிஜக்காட்டில்
வேட்கை பெருகப்பெருக
வேட்டையாட அலைகின்றேன்.
கன்னத்தில் உருண்டு உதிரும்
கண்ணீர்த் துளிகளைச் சாட்சியாக்கி
உன்னிடம் கருணை சம்பாதிப்பாதில்
எனக்குப் பெருமையேதுமில்லை.”
அடுத்து, தலித் கவிஞர்களின் கவிதைப்படைப்புகள் இன்றைய புதுக்கவிதைப் பரப்பில் முக்கியமாக இனம் காணத்தக்க, வரவேற்கத்தக்க வரவுகள். தலித் படைப்புகளில் ஒரு முக்கிய அம்சம் காலங்காலமாக போற்றப்பட்டுவரும் பல அழகியல் கூறுகளை அவர்கள் தீவிரமாக கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். புதிய அழகியல் நெறிகலைத் தாங்களாகவே வகுத்துக் கொள்கிறார்கள்.
“எங்களது சொல்லாட்சியால் நீ முகம் சுளித்தால் பிரச்சினை உனக்குத்தான். பறையடித்தல் என்ற சொல் எங்கள் இனத்தின் கீழ்மைக்கும் வீழ்ச்சிக்கும் அடையாளம் என்று கூறி வந்தீர்கள். நாங்களும் அதையே நம்பினோம். னால் இந்தப் பறையும் பறையொலியும் எங்கள் விடுதலையின், விழிப்புணர்ச்சியின், புத்துயிர்ப்பின் அடையாளம்” என்று திண்ணமுறக் கூறுகிறார்கள். அன்பாதவனுடைய’நெருப்பில் காய்ச்சிய பறை’ என்ற கவிதை இதோ:
“காய்ச்ச காய்ச்ச
இறுகுகிறது எம்பறை
நெருப்பின் தகிப்பில்
பொங்கியெழும் பெருமுழக்கம்
சிறுதீண்டலிலும்
காற்றின் அணுக்களில்
பேரலையாய் அதிர்வுகள்
அசையின் திசைகளி¢ல்
கலந்திருக்கிறது எம் உயிர்
திரண்ட பறைகளின்
குமுறல்களில் பொங்கும்
யுகங்களின் கோபம்
மறுக்கப்பட்டவர்களின் மனதாக
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக”
‘நோக்கு’ என்ற கருதுகோள்
‘நோக்கு’ என்ற கருதுகோள் தமிழ் இலக்கிய மரபில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. முதலில், திநூலான தொல்கப்பியத்துக்கே செல்வோம்.
‘மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே’
எனச் செய்யுளியல் கூறுகிறது. இதில்’நோக்கு’ என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கும் பாங்கில் நச்சினார்க்கினியர், “கேட்டோர் மீண்டு நோக்கி பயன் கோடலை உடையவாகச் செய்யும் கருவியை நோக்கு என்று பெயர் கூறப்படும்” என்கிறார். இதனின்று நாம் என்ன அறிகிறோம்? இலக்கியத்துக்கு (செய்யுளுக்கு, கவிதைக்கு) ‘நோக்கு’ தேவை. ‘நோக்கு’ தனித்தியங்குவதன்று. இது ‘பயன்’ பெறுவதற்கு உதவும் கருவி. அதவது பயனுடன் இணைந்து செயல்படுவது. இது இன்னொரு வினாவை எழுப்புகிறது. ‘பயன்’ என்ற கருதுகோளின் பொருள். பரிமாணங்கள் யாவை? ‘நன்னூலி’ன் துணையுடன் இதற்கு தெளிவு தருகிறார் ஜெயகாந்தன்.
“தமிழிலக்கணமே நூலினியல்பாவது என்னவென்று சொல்லும்போது, ‘நூலினியல்பே நுவலின் ஓரிரு பயிரந்தோற்றி, மும்மை யினொன்றாய் நாற் பொருட்பயத்தோடு எழுமதந்தழுவி’ என்று நூலின் பயன் அறம். பொருள், இன்பம், வீடு, அதற்கும் மேல் புதிதாய் எழுகின்ற ஒரு கொள்கையைத் தழுவியும் இருக்க வேண்டும் என்று, நான்கு பயனுக்காக என்று சொல்லி, அதன் பின்னர் தான் பத்துக் குற்றம், பத்தழகு, முப்பத்திரண்டு உத்தி முதலிய இலக்கண விளக்கங்களைக் கூறிச் செல்கிறது.”
எகிறார். எனவே இலக்கியப் படைப்பாக்கத்தில்’நோக்கு’ அல்லது ‘குறிக்கோள்’ தேவை. இந்த ‘நோக்கு’ பன்முகப்பட்ட பயன்களைத் தழுவியதாக இருக்க வேண்டும்.
‘நோக்கு’ புதுக்கவிதை சார்ந்த சொல்லாடலில் பொறுப்புள்ள கரிசனையை ஈர்த்துள்ளது. ‘நெம்புகோல் கவிதைகள்’ மூலம் சமுகச் சீர்திருத்தத்துக்கு வழிவகுப்போம் என்ற ‘வானம்பாடி’களின் சற்றே உரத்த குரல்; பெண் விடுதலை எங்கள் பிறப்புரிமை. அதைப் பெறத் துணிந்துவிட்டோம் என்ற பெண்ணியப் பதிவுகள், காலங்காலமாய் எங்களை அழுத்திக் கொண்டிருக்கும் அடிமை நுகத்தடிகளை உடைத்து நொறுக்கக் களம் இறங்கிவிட்டோம் என்ற தலித்தியக் கவிதைக் கங்குகள்; அரசியல். சமூக அவலங்களையும், நாணயமின்மையையும் தோலுரிக்கும் சினமும், எள்ளலும்; தனக்குள்ளே பிளவுற்று, காயமுற்று, ஆழ்மனப் புழுக்கங்களை, வார்த்தைகள் மூலமும், கனமான மௌனங்களின் மூலமும் வெளிப்படுத்துதலே எங்கள் கவிதைப்பணி என்ற பதாகை. இவ்வாறு பல நோக்குகள், பல இலக்குகள்புதுக்கவிதைக்களனில் நிலைபெற்றுள்ளன. ‘நோக்கு’ என்ற மரபுக் காரணியை ஏற்றுக்கொண்டு. அதற்குப் புதிய பொருண்மையையும். வீச்சையும் புதுக்கவிதை கொடுத்து வருகிறது என்பது கவனத்திற்குரியது.
நிறைவாக
நிறைவாக ஒரு கருத்து. நாம் தாந்தோன்றியாக உதித்து, தனிவெறிக் கூத்தாடிவிட்டு மறைபவர்கள் இல்லை. ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு வறலாறு உண்டு. நாம் அறிந்தோ அறியாமலோ இந்தப் பாரம்பரியமும் பண்பாடும் சமூகத்தின் உள் உணர்வுடன் இணைந்து செயல்படும். அதேநேரத்தில் பாரம்பரிய ஊற்றுக்கால்களில் இருந்து சத்தையும் சாரத்தையும் உள்வாங்கிக்கொவது செழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
ஆனால் இங்கு ஒரு சவால் உள்ளது. இவ்வாறு நமது பாரம்பரியத்தில் இருந்து சத்தையும் சாரத்தையும் நாம் உள்வாங்கிக் கொள்ளவேண்டுமானால் அந்தப் பாரம்பரியமும் மரபும் காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். தமிழ் மரபுத் தொடர்ச்சியின்/வளர்ச்சியின் அடிப்படைக் காரணமே அந்த மரபின் உள்ளார்ந்த நெகிழ்வுத்தன்மைதான். இந்தநெகிழ்வுத்தன்மைதான் flexibilityஐ நமது மரபின் புத்தாக்கத்தை நீட்சிக்கும் ஒரு முக்கிய காரணியாக இனம் கண்டு போற்ற வேண்டும். தமிழ் மொழியையும் தமிழ் மரபையும் தொட்டால் சுருங்கியாக ஒரு பெரிய மதில் சுவருக்குள் பிணைக் கைதியாகச் சிறை பிடிக்க வேண்டாம். பல ரோக்கியமான பண்பாட்டு/இலக்கிய மரபுகளை, நமக்கு வளம் சேர்க்கும் பாங்கில் வரவேற்கும். உள்வாங்கிக்கொள்ளும் பக்குவம் நமக்குத் தேவை. இந்தப் பக்குவம் நமது இலக்கிய மரபுக்கு உரத்தையும் வலிமையையும் சேர்க்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
- தவறிய அவதாரம்
- ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்!
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வாங்க காலாக்ஸிகள் எப்படித் தோன்றின ? (கட்டுரை: 34)
- வசந்தாவிற்காகக் காத்திருக்கிறேன்
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27 லியோ டால்ஸ்டாய்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 15 (சுருக்கப் பட்டது)
- தாகூரின் கீதங்கள் – 39 நான் பாடும் கீதம் !
- புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள் -2
- வாழ்க்கையில் முதல்முறை!
- சதாசிவபண்டாரத்தார் ஆய்வு நூல்கள் பத்து தொகுதிகள் வெளியீடு
- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா
- விசய் (Vijay) தொலைக்காட்சியில் ‘நீயா? நானா?’ – பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு!
- “இலட்சிய எழுத்தாளர் அமரர் விந்தன் படைப்புகளின் சமூகப்பார்வை – ஆய்வரங்கம்.
- குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்-ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளியீடு
- நூல்வெளியீடு
- இலக்கிய வட்டம், ஹாங்காங் ‘இலக்கிய வெள்ளி’- 25ஆம் கூட்டம்
- சீரான இயக்கம்
- ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ஒரு மைல்கல்- ‘இலக்கிய வெள்ளி’
- புதிய இலக்கிய இதழ் – ‘மணல் புத்தகம்’
- வரலாற்று ஆவணமாகும் ஒரு வாழ்க்கைச் சித்திரம்.
- தீராநதி வெளியிடாத கடிதம் – நாஞ்சில் நாடன் நேர்காணல் குறித்து
- தயங்குதலுண்டோ இனி!
- ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ நூலுக்கான மோனிகாவின் மதிப்புரை
- அரவக்கோனின் ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ – ஒரு விமர்சனப் பார்வை
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை
- மின்சாரம் போய்விட்ட ஒரு மழை இரவின் நடுநிசியில், கன்னியாகுமா¢க் கடலோரத்தில்…
- காற்றினிலே வரும் கீதங்கள் – 27 என்னிய நேசனே ! திரும்பி வா !
- சோகங்களின் விரல்கள்
- தூக்கிலிடப்பட்ட புடவை
- கம்பனுக்(கு) ஈடில்லை என்றே இயம்பு
- சில சிந்தனைகள்
- வாழ்த்துகள்
- அ.ந.கந்தசாமியின் கவிதைகள் மூன்று!