பெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்


தமிழரிடையே வழங்கும் நாட்டார் பாடல்கள் மனித உணர்வுகளையும் உறவுகளையும் பண்பாட்டையும் துல்லியமாக வெள்pப்படுத்துவன. எழுத்தறிவற்ற பாமர மக்களிடையே அவை அவர்களது சமூகபண்பாட்டுப் பொருளாதார உறவுகளை எடுத்துக்காட்டுவன. இந்தவகையில் தாலாட்டுப்பாடல்கள் சிறுவர்விளையாட்டுப் பாடல்கள் தொழிற்பாடல்கள் காதல்பாடல்கள் சடங்குப்பாடல்கள் ஒப்பாரிப் பால்கள் என இவை காணப்படுகின்றன. இவற்றில் தாலாட்டும் ஒப்பாரியும் பெண்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்துவன. தாலாட்டு குழந்தையின் வரவைப்பாட ஒப்பாரி மனிதனின் இறப்புக்காகப பாடப்படுகிறது.

இந்த ஒப்பாரிப்பாடல்கள் ஒருவரது மரணத்தின் போது அச்சடங்கு நடைபெறும் தருணத்தில் பாடப்படுகின்றன. பெண்கள் பிரேதத்தின் பக்கத்தில் வட்டமாகக் கூடியிருந்து ஒப்பாரி வைப்பர் சாவீட்டுக்கு புதிதாய் வருகின்ற பெண் அந்தப் பெண்களுடன் சேர்ந்து ஒப்புக்கு ஒப்பாரி சொன்னபின் எழுந்து போய் ஒரிடத்தில் இருப்பாள.; செத்த வீட்டுக்கு வருகின்ற பெண்கள் அனைவரும் அவ்வாறே அந்த வீட்டுப் பெண்ணுடன் சேர்ந்து ஒப்பாரி சொல்ல வேண்டும். அதன் பின்னர் எட்டுநாள் வரை அதிகாலையிலும் செக்கல் பொழுதிலும் ஒப்பார்p பாடப்பட்டு துயரம் வெளிப்படுத்தப்படும்.ஆயினும் ஒருவர் இறந்து நாளாயினும் அவரை நினைக்கும் போதும் துயரங்கள் ஏற்படும் போதும் பாடப்படுவதுண்டு .யாழ்ப்பாணக்கிராமங்களில் சில பெண்கள்; துயரம் வரும் போதெல்லாம் ஓப்பாரிகளைப் பாடுவர்.

இந்த ஒப்பாரிகளைப் பாடுவோர் பெரும்பாலும் வயதான பெண்களே . சில இடங்களில் கூலிக்கும் ஒப்பாரி சொல்பவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது அது மறைந்து விட்டது.
பொதுவாக ஒப்பாரி சொல்லும் மரபே மாறி விட்டதெனலாம்.யாழ்ப்பாணத்தில் உள்ளுர்க் கிராமங்களில் மட்டும் இவ்வழக்கம் குறைந்தளவில் காணப்படுகிறது. காரணம் தற்காலப்பெண்கள் ஒப்பாரி சொல்வதைக் கௌரவக் குறைவாகக் கருதுவதாகும் . படித்த பெண்கள் ஒப்பாரி சொல்வதை விரும்புவதில்லை. ஒப்பாரியை நினைவில் வைத்துச் சொல்வோர் மிகக் குறைவானவர்களாகவே யுள்ளனர்.மேலும் சாதாரண காலங்களில் தேவையற்ற சந்தர்ப்பங்களில் ஒப்பாரியைச் சொல்வதென்பது இன்னொரு இறப்பு நேரிடுவதற்குக் காரணமாகலாம் என்ற நம்பிக்கையும் சில இடங்களில் உண்டு. தற்போது ஒப்பாரியின் இடத்தை சிவபுராணம் அல்லது அந்தந்த சமயப்பாடல்கள் பிடித்துக்கொண்டு விட்டன.
காலங்காலமாக எழுத்தறிவற்ற படிப்பு வாசனையற்ற பெண்கள் தமது உள்ளத்து உணர்வுகளை எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தும் களமாக சாவீட்டினைப் பயன்படுத்துவதும் உண்டு என்பார் சிவலிங்க ராஜா.
(2003: 36.) அத்துடன் தமது உறவினரிடை நிலவும் பிரச்சினைகளையும் இப்பாடல்களினடியாக வெளிப்படுத்துவர்.

அழுவார் அழுவாரெல்லாம் தன்கரைச்சல் திருவன் பெண்டிலுக்காக அழ ஒருவருமில்லை

என்ற பழமொழி இதையே சுட்டி நிற்கிறது.அதாவது செத்த வீட்டில் அழுகின்ற அனைவரும் தத்தம் பிரச்சினைகளையெ சொல்லி அழுதிருக்கின்றனர் என்பதை இது காட்டுகிறது.

இந்த ஒப்பாரிகள் இறந்தவரின் உறவுமுறையின் அடிப்படையில் இறந்தவருடன் பேசும் ஒரு கூற்றாக அமைவதைக் காணலாம் .
என்னை ஆளவந்த ராசாவே -மனைவி
என்னப் பெத்த சீதேவியே- மகள்
என்ர மகளே- தாய்
என்ர மகனே- தாய்
என்ர பிறவியரே- சகோதரி
நான் பெறாமகனே- பெரியதாய் அல்லது சிறியதாய்

இவ்வாறு அழைத்து இப்பாடல்களை ஒரு ஓசை ஒழுங்குடன் பாடுவர் கேட்பவருக்கு இந்த ஓசை துக்கத்தைக் கொடுக்கும் .

மனைவியின் ஒப்பாரி
மனைவி கணவன் இறந்த போது பாடும் ஒப்பாரியானது அவளது கணவனது ஆளுமையையும
அவன் இறந்ததால் தான் அடையப்போகும துயரத்தையும் வெளிக்காட்டும்.சடங்கு நிகழ்ச்சிகளைப் பார்த்து அவளது துயரம்வெளிப்படுவதை பின்வரும் பாடலில் காணலாம்

பயறு வறுத்தினமோ ஐயா என்ர ராசா
துரையே துரைவடிவே
உனக்கு வாய்க்கரிசி போட்டினமோ
உன்னை இழந்ததனால்
என்ர உதரமெல்லாம் பதறுதையோ

சேகரித்தவர். எஸ். தனராஜ் 2002
வழங்குமிடம் முல்லைத்தீவு

;அத்துடன் கணவனை இழந்ததனால் பதறுவதைச் சொல்லுகிறாள்.;
பின்வரும் பாடல்களில் பெண் கணவனை இழந்தால் சமூகம் அவளை மதிப்பதில்லை என்பதை க்காணமுடியும்.

என்னை ஆளவந்த ராசாவே
தட்டிலே மைஇருக்க
தாய்கொடுத்த சீர்இருக்க
தாய் கொடுத்த சீரிழந்தேன்
தரும் தாலி தானிழந்தேன்
தனி இருந்து வேலையென்ன
புண்ணியரை முன்னை வி;ட்டு
நான் பெண்ணிருந்து வேலையென்ன
வழங்குமிடம் மூதூர் சேகரித்தவர் இந்துஜா 2007

முத்துப்பதித்த முகம்
என்ர ராசா
முழுநிலவாய் நின்ற :முகம்
நினைப்பேன் திடுக்கிடுவென்
உன்ர நினைவு வந்த நேரமெல்லாம்
போகக்கால் ஏவினதோ
பொல்லாதாள் தன்னைவிட்டு

நாக்குப் படைச்சவையள்
இனி நாகரியம் பேசுவினம்
மூக்குப் படைச்சவையள்
இனி முழுவியளம் பேசுவினம்
மூளி அலங்காரி
இவள் மூதேவி என்பினமே
வழங்குமிடம் கரவெட்டி யாழ்ப்பாணம் மேற்கோள் சிவலிங்கராஜா. எஸ் 2003:43

இந்த இருபாடல்களிலும் பெண் தான் கணவனை இழந்ததனால் ஏற்பட்டதன் துயரத்தையும்
சமூகம் தன்னை இழிவாக் நோக்கும் என்பதையும் வெளிப்படுத்துவதைக் காணலாம்..
விதவை முழுவியளத்துக்கு ஆகாதவள் என்ற நம்பிக்கை தமிழரிடையே நிலவுகிறது. அந்த நம்பிக்கை இவ்விதவைப் பெண்களின் உளவியலை எவ்வாறு பாதிக்கிறது என்பதையே அம்மனைவி ஒப்பாரியினூடாகச் சொல்லுகிறாள்.பாவஞ் செய்தவர்களே கணவனை விரைவில் இழக்கிறார்கள் என்றும் நம்பிக்கையுண்டு அதனால் தான் அவள்

மூளி அலங்காரி
மூதேவி என்பினமே என்று கூறுகின்றாள்.

தந்தை இறந்தபோது பாடிய பாடல்
இப்பாடல்கள் தந்தையின் வலிமையைக் காட்டுவனவாக அமைகின்றன.

ஐயா நீ வாற வழியிலையோ
என்ர கண்ணுக்கு
வழிமறித்து நில்லனையா
நீமாண்ட இடத்திலையோ

மாமரமாய் நில்லனணை
வேலி அருகிலயோ நீ
வீரியமாய் நில்லனையா

இப்பாடல்கள் கணவனுக்கும் பொருந்தக்கூடியவை. சந்தர்ப்பத்திற்கேற்ப மாற்றிப் பாடப்படுவதுமுண்டு.

தாய் இறந்த போது பாடிய பாடல் ஒன்று வருமாறு.

என்னப் பெத்த சீதேவியே
கப்பல் சுணங்கிவரும் அம்மா
நீங்கள் போட்ட கடிதம் முன்ன வரும்
நான் கடிதத்தைக் கண்டவுடன்
கடிதத்தை உதறிவிட்டேன்
கண்ணீரை இறக்கிவிட்டேன்;
தோணி சுணங்கிவரும்
நீங்கள் போட்ட சுருள் ஓலை முன்ன வரும்
சுருள் ஓலை கண்டவுடன்
நான் சுறுக்காப் பயணமானேன். வழங்குமிடம் மூதூர் சேகரித்தவர் இந்துஜா

தாயிடமிருந்து தூரத்திலிருக்கும் மகள் தாய் இறந்த போது கடிதம் போட்டதையும் அச்செய்தி கிடைத்தபின்னரே கப்பல் வருவதையும்பற்றிக் கூறுகிறாள். முக்கியமாக மூதூர்ப்;பகுதி போக்கு வரத்து தோணி அல்லது வள்ளத்தின் மூலம் நடைபெறுவது வழக்கம். அப்பயணம் பற்றியே இதில் பேசப்படுகிறது.

சிறுவயதில் இறந்து போன மகனைப்பார்த்து தாய் இவ்வாறு பாடுகிறாள.; அவள் அவனைப்பற்றி முக்கியமாக அவனது படிப்பைப்பற்றி வைத்திருந்த கனவுகளை இந்த ஒப்பாரி மூலமாக வெளிப்படுத்துகிறாள்.

என்ர மகனே
பத்துக் கட்டு பனையோல
நீ படிக்கும் சுருள் ஓல
படிப்பாய் என்றிருந்தென்
படித்து முடியுமுன்னே
பாலனுன்னை ஒப்படைத்தேன்
எட்டுக்கட்டு பனையோல
எழுதும் சுருள் ஓல
எழதி முடிக்குமுன்னே
எமனுக்கே ஒப்படைத்தேன்

இப்பாடலும் யாழ்ப்பாணத்தில் பயிலப்படுகிறது.
இதில் வருகின்ற படிப்பாய் என்றிருந்தேன் படித்துமுடியு முன்ன பாலனுன்னை ஒப்படைத்தேன் என்ற அடிகள் இதனைக் காட்டும்.மகனுக்குத் திருமணம் பேசிய நிலையில் மகன் இறந்து விட்டபோது தாய்பாடுவதாக அமைந்த பாடல் வருமாறு.

வாலைப்பராயமல்லோ
உனக்கு வயதுமிகச் சொற்பமல்லோ
தாலிக்கேர்ர நாட்பார்க்க
காவுக்கோர் நாளாச்சோ
கூறைக்கேர்ர் நாட்பார்க்க
கொள்ளிக்கோர் நாளாச்சோ
மஞ்சளால கோலமிட்டு உன்னை
மணவறைக்கு விடும் வேளையிலெ
கரியாலே கோலமிட்டு உன்னை
கட்டைக்கோ அனுப்புகிறேன் எனத்தொடரும் அது

சகோதரி இறந்து போன போது அவளது தங்கை பாடுவதாக இந்த ஒப்பாரிப்பாடல் அமைகிறது.

என்ர பிறவியரே
அக்கா உன்ன தேடி வருகினமே
உங்கட சின்னமுகம் காண்பதற்கு
அக்கா உன்ன நாடி வருகினமே
உங்கட நல்ல முகம் காண்பதற்கு

என்ர பிறவியரே
நீங்க தெருவில கிடந்தாலும்
நான் உங்கள தேரிலே கூட்டி வர
அக்கா நாம் கூட்டில் இருந்தமம்மா
எங்கடை கூடு கலைஞ்சதக்கா
என்ர பிறவியரே

அக்கா நீ போன வழியறியேன்
நீ போய்ப் புகுந்த காடறியேன்
அக்கா நான் ஆக்கிவைச்ச சோறு எல்லாம்
பாசி வளருதக்கா

என்ர பிறவியரே
நீங்க பாயில படுக்கயில்ல
பத்து நாள் செல்லயில்ல
சிவனை வணங்கில்லோ
நான் சிவபூசை செய்து வந்தேன்
என்ர பிறவியரே
குருவை வணங்கியல்லோ
நான் குருபூசை செய்துவந்தேன்

நான் குறிப்பெழுதப போனடத்தை (போன இடத்தில்)
அந்தக்குருடன்
உன்ர கதை சொல்லயில்லை பாடல் சேகரித்தவர் இந்துஜா

இவ்வாறான பாடல் யாழ்ப்பாணத்திலும் காணப்படுகின்றது
தங்கள் ஒற்றுமையான வாழ்க்கையையும் ஒப்பாரியால் விளக்குவர்.யாழ்ப்பாணத்தில் வழங்கிய ஒப்பாரி வருமாறு.

நாங்கள் கட்டெறும்புக் கூட்டமெணை
நாங்கள் கலந்து வர நிண்டமெணை
நாங்கள் ஒழுக்கெறும்புக் கூட்டமெணை
நாங்கள் ஒத்து வர நிண்டமெணை ( யோகேஸ்வரி:1980:157)

இந்த ஒப்பாரிப்பாடல்களில்; சகோதரிகளுக் கிடையிலிருந்த அந்நியோந்நிய உறவும்
அவள் தனது தமக்கையின் சுகநலனுக்காக சிவனிடம் வேண்டி வந்தமையும் கூறப்படுகிறது.
சுகயீனமடைந்த சிலநாட்களிலெயெ அவள் மரணமானதும் இப்பாடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் சுகயீனமடைந்தால அவரது பலனை அறிதற் பொருட்டு; குறிப்புப் பார்க்கும் வழக்கம் தமிழரிடையே உண்டு. சோதிடர் தனது தமக்கை சாகப்போவதைக் கூறவில்லை என அவள் ஒப்பாரியில் குறிப்பது இதனை வெளிப்படுத்தும்.

சிறியதாய் தற்செயலாகக் கிணற்றில் விழுந்து இறந்த பெறாமகனைப் பார்த்து பின்வருமாறு பாடுகிறாள்.

நான்பெறா மகனே

நான் உன்ர கண்ணில முளிக்கயில்ல
மகனார் நான் உனக்கு
ஒரு கைக்கடனோ செய்தனில்லை
மகனே நானுனக்கு
தூக்கையில சாத்தையில
மகனார் நீபடும் பாடோ பார்க்கயில்ல
மகனார் நானுனக்கு
அன்னப்பால் ஊட்டயில்ல
முத்து கிணற்றடிக்கோ
நீங்க முகங்கழுவப் போனடத்த (போன இடத்தில்)
மகனே உனக்கு
முத்தோ சறுக்கினது.
மகனே நீங்க தங்கக் கிணற்றடிக்கோ
மகனே நீங்க
தண்ணி அள்ளப் போனடத்தை
தங்கம சறுக்கினதோ

இப்பாடலில் கிணற்றில் விழுந்து காயமடைந்த சிலநாட்களிலேயே இச்சிறுவன் இறந்துள்ளமையை ஊகிக்க முடிகிறது.
மகனே நானுனக்கு
தூக்கயில சாத்ததையில
மகனார் நீபடும் பாடோ பார்க்கையில்லை

எனவரும் அடிகள் இதனைக்காட்டும்.;

இவற்றுடன் அவர்களுக்கிடயேயுள்ள கோப தாபங்களையும் சொல்லி அழுவதுமுண்டு ஒருவர் இறந்தால்ஊருக்கும் உறவினருக்கும் கட்டாயம் இழவு சொல்லி அனுபப் வெண்டும் என்பது முறை சொல்லாவிட்டால் அது குறற்மாகி விடும். ஒருமுறை ஒருவருக்கு சொலலியனுப்பத் தவறிவிட்டனர் இழவுவீட்டுக்குச் சென்ற அப்பெண் தனக்குச் சொல்லி அனுபப்hததை ஒப்பாரியாகப் பாடினாராம் .

புத்தூருச் சந்தைக்கு
பூசணிக்காய் விக்கப்போனடத்தை
ஒரு புத்தூரான் சொன்னானெணை

கைதடிச் சந்தைக்கு
கத்தரிக்காய் விக்கப்போனடத்தை
ஒரு கைதடியான் சொன்னானெணை (பாடல் உதவி எஸ் தவசோதிநாதன் இணுவில்;)

யாரோ சொல்லித்தான் தான் தெரிந்து கொண்டேன் என்தை அவ்விடத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளார்.

1980 இன் பின்னர் போராட்டம் எத்தனையோ தமிழ் இளைஞர்களைப் பலி கொண்டது. அந்த வகையில் எத்தனையோ தாய்மார்கள் தங்கள் பிள்ளைகiளின் உடல்களை வழியிலும் தெருவிலும் கண்டார்கள் இந்த அவல நிலையை இந்த ஒப்பாரிப்பாடல் காட்டுகிறது.

நீ போருக்குப் போனடத்தை
போராடி மாண்டாய் ஐயா
மகனே
பாரத்துவக்கெடுத்தொ
உங்களுக்கு
பயந்தவெடி வைச்சானோ
உங்களுக்கு பெரிய துவக்கெடுத்தோ
உங்கள பேசாமல் சுட்டெறிந்தான்
மகனார்
உன்ன சந்தியில கண்டடத்தை
உன்னைப்பெத்த கறுமி
தலைவெடித்துப் போறனையா
மகனார் நீகப்பலில வாராயெண்டோ
நாங்க கடலருகில் காத்திருந்தோம்

மகனே நீ
இருந்தஇடத்தைப்பார்த்தாலும்
இருதணலாய் மூளுதையா
நீபடுத்த இடத்தைப்பார்த்தாலும்
பயம் பயமாய்த் தோன்றுதடா
மகனே
உன்னைப்பெற்ற கறுமி நான்
இங்க உப்பளந்த நாழியைப்போல்
நீ இல்லாம
நாள்தோறும் உக்கிறனே

இப்பாடலில் தாய் மகனைப்பயந்து பயந்து சந்திக்கின்ற முறையும் அவன் இறந்த முறையும் அவனது சடலத்தை அந்தத் தாய் சந்தியிலே கண்ட முறையும் மிக உருக்கமாகக் கூறபபட்டுள்ளதுடன் தான் அவனை நினைத்து கவலைப்படுவதையும் தன்னைத்தானே பாவியாக கருதி மனங் கலங்குவதையும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.இப்பாடல் இன்னொரு விதமாகவும செர்ல்லப்படுவதைக்காணலாம்
முதல் வரும் சில அடிகள் ஒன்றாக அமைய பின்னால் வரும் அடிகள் வேறுபட்டு
அமைவதை பின்வரும் ஒப்பாரியிற்காணலாம்

நீ போருக்குப் போனடத்தை
போராடி மாண்டாய் ஐயா
மகனே
பாரத்துவக்கெடுத்தொ
உங்களுக்கு
பயந்தவெடி வைச்சானோ
உங்களுக்கு பெரிய துவக்கெடுத்தோ
உங்கள பேசாமல் சுட்டெறிந்தான்
மகனார்
உன்ன சந்தியில கண்டடத்தை (கண்ட இடத்தில்)
உன்னைப ;பெத்த கறுமி
தலைவெடித்துப் போறனையா
மகனார் நீகப்பலில வாராயெண்டோ
நாங்க கடலருகில் காத்திருந்தோம்

மகனே வடக்கே இருண்ட மழை
எங்களுக்கு வழிமறித்துப் பெய்யுதய்யா
மகனே தெற்கே இருண்ட மழை
எங்களுக்குத் தெருமறித்துப்பெய்யுதய்யா
மகனார் கூட்டிவிட்ட முற்றத்திலே
மகனே நீங்க இருக்க வாறதெப்ப
நான் சீச்சி விட்ட முத்தத்தில
நீ சிரிச்சிருக்க வாறதெப்ப வழங்குமிடம் மூதூர்

யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான பாடல்கள் வழக்கில் உள்ளமைபற்றி பேராசிரியர் சிவலிங்கராசா எடு;த்துக்கூறினார்.
இந்தப்பாடல்களில் வரும் உவமைகள் முக்கியமானவை. அவை அவர்களது வாழ்வோடு பின்னிப்பிணைந்தவை

உப்பளந்த நாழியைப்போல்
நீ இல்லாம நாள் தோறும் உக்கிறனே

என்ற உவமையை விட மகனை இழந்ததாயின் துயரம் வேறு எவ்விதமாக வெளிப்படுத்தப்பட முடியும்?

மகனே வடக்கே இருண்ட மழை
எங்களுக்கு வழிமறித்துப் பெய்யுதய்யா
மகனே தெற்கே இருண்ட மழை
எங்களுக்குத் தெருமறித்துப் பெய்யுதய்யா

என்ற வரிகளில் வரும் உருவகம் வேறொரு கற்பனையிலும் பெறப்பட முடியாதது.

உண்மையில் பெண்களால் பாடப்படும் ஒப்பாரிப்பாடல்கள் அவ்வம் மக்களின் வரலாற்றுச் செய்திகளாய் அமைகின்றன. என்பதை மேலே குறிப்பிட்ட பாடல்கள் காட்டுகின்றன.ஏனைய நாட்டார் பாடல்கள் பெரும்பாலும் நினைவில் வைத்து அப்படியே பாடப்படுபவை. அவற்றின் புத்தாக்கத்தில் பெருமளவு மாற்றம் வராது. ஆனால் ஒப்பாரியைப் பாடும் பெண்கள் சந்தர்ப்பத்துக்கேற்ப அந்த குறிப்பிட்ட மனிதனின் இறப்புப்பற்றிய செய்திகளையும் அதில் இணைத்துப் பாடுகின்றனர்.எனவே இந்த வகையில் இவை வரலாற்றுத் தகவல்களை அதிகம் கொண்டுள்ளன. அத்துடன் பெண்களின் கற்பனைத் திறனையும் கவித்திறனையும் இவை வெளிப்படுத்தும் இவ்வாறான ஒப்பாரியொன்றை சிவலிங்கராஜா எடுத்துக்காட்டுவார்.
அது வருமாறு யாழ்ப்பாணத்தில் ஒருகிராமத்திலே வழ்ந்த வயோதிபக் கிறித்தவப்பெண் இறந்து விட்டார்.அவரின் உறவினர்கள் எல்லோரும் சைவ சமயத்தினர் கிறிஸ்தவர்கள் இறந்தால் அழும் வழக்கம் பெரும்பாலும் குறைவு.இறந்தவரைச்சுற்றி எல்லோரும் அழாமல் இருந்தார்கள் அப்போது
அயற்கிராமத்தில் இருந்து வந்த இறந்தவரின் உறவுப்பெண் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். அம்மரணவீட்டிற்குவந்து ஒப்பாரிவைத்து அழத் தொடங்கினார்.

என்ரை ஆத்தை இவை வேத சமயமெணை
விரும்பி அழ மாடடினமாம்
நாங்கள் சைவ சமயமணை
உன்னொட சருவி அழமாட்டினமாம்
ஊர்தேசம் விட்டாய் உறவுகளைத்தான் மறந்தாய்
மேபிள் துரைச்சியென்று இஞ்ச
மேட்டிமைகள் பேசுகினம்
ஊரும் அழவில்லையெணை
என்ரை ராசாத்தி
உறவு;ம் அழவில்லையெணை; (மேற்கோள் சிவலிங்கராசா 2003 மேற்படி பக்42)
(சருவி-தழுவி)

தற்போதைய யாழ்ப்பாணத்து பிரயாண நிலைமைகள் பின்வரும் ஒப்பாரியில் வெளிப்படுத்தப்படுகின்றன. அண்மையில் மண்டை தீவிலிருந்து ஒரு வயோதிபமாது இறப்புச்சடங்கு வவுனியாவில் நடந்தது. வவுனியாவுக்குச் செல்லமுடியாத நிலையில் சுதுமலையில் உள்ள இறந்தவரின் உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தார் அதற்கும் உரியநாளில் செல்லமுடியவில்லை. அவர் பின்வருமாறு ஒப்பாரிவைத்துள்ளார்.

“ஊரோ இரண்டாச்சு
அதன் ஊடே கடலாச்சு
நாடோ ரெண்டாச்சு
அதன் நடுவே கடலாச்சு

ஓடுகிற தண்ணியில
ஓலை நீ விட்டிருந்தா
ஓடி வந்திருப்பன்”
தொலைபேசியின் ஊடாக கலாநிதி எஸ் சிவலிங்கராசா 3-10-2007

இப்பாடலில் வயோதிபமாதின குரலாக ;உள்ள அரசியற் குறிப்புகள் அவர்களின் வாழ்க்கையின் அனுபவத்தைக் காட்டுவன.
இவ்வாறு பார்க்கும் போது இங்கு வாழ்கின்ற சாதாரண மனிதனின் வரலாற்றையும் சமூக வரலாற்றையும் கற்பனையையும் கொண்டு இயற்றப்படும் இப்ப்hடல்கள் மறைந்து வருகின்றமை மிகவும் கவலைக்குரியதாகும்.
குறைந்தது நினைவில் வைத்திருப்பவர்களிடமிருந்தாவது இவற்றைச் சேகர்pத்தல் அவசியமான பணியாகும்.
உசாத்துணைநூல்
1.சிவத்தம்பி பதிப்பாசிரியர் இலங்கைத்தமிழ்நாட்டார் வழக்காற்றியல் யாழ்ப்பாணப் பல்கலைகக்ழகத் தமிழ்த்துறை வெளியீடு 1980.
2.கலாநிதி எஸ் சிவலிங்கராசா யாழ்ப்பாணத்து வாழ்வியற் கோலங்கள் குமரன் புத்தக இல்லம் கொழும்பு 2003
பாடல்கள்
சேகரித்தவர்- இந்துஜா 2007 மூதூர். தனராஜ்.எஸ் 2002 முல்லைத்தீவு
பேராசிரியர் எஸ் சிவலிங்கராசா தவசோதிநாதன் ஆகிய நால்வருக்கும் நன்றிகள்


murugathas1953@yahoo.com

Series Navigation

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்