கொழும்பு புத்தகக் கண்காட்சி – ஒரு விசிட் !

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


முதன்முறையாக ஈரோட்டில் புத்தகக் கண்காட்சியை ஒரு திருவிழாவைப் போல் ஒரு முறை அல்ல; தொடர்ந்து 3 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தியுள்ளது மக்கள் சிந்தனைப் பேரவை. பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரனே ஒரு புத்தகப் பிரியர். நூலாசிரியரியரும் கூட. ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ உட்பட 5 நூல்களை எழுதியவர். எல்லாமே தேச விடுதலை வரலாறு சம்பந்தமானவை. அவற்றிற்கு விஷயங்களை சேகரிப்பதற்காக சுமார் 6 ஆண்டு காலம் வக்கீல் தொழிலை ஓரம் வைத்து விட்டு ஊர் ஊராக மாநிலம் மாநிலமாக சுற்றியவர். பசும்மரத்தாணியான அந்த அனுபவங்களை மனதில் அச்சிலும் பதிந்தவர்.

சென்னை, நெய்வேலி, மதுரை என்று தமிழகத்தில் மட்டுமின்றி வேறு மாநிலங்களில் புத்தகக் கண்காட்சி நடக்கிறதென்றாலும் முதல் ஆளாக அங்கு ஆஜராகும் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவருக்கு, இம்முறை இலங்கை ஈர்த்தது.

இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச அளவிலான கண்காட்சி செப்டம்பர் மாதம் நடக்கிறதென்று கேள்விப்பட்ட அன்றே மூட்டை முடிச்சுகளை கட்ட ஆரம்பித்து விட்டார் , கடல் கடக்க.

அடுத்தாண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் புகுத்த புதுப் புது விஷயங்களை தேடி, கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு போய் அலசி ஆராய்ந்து திரும்பியிருக்கும் ஸ்டாலின் குணசேகரனை நாம் அணுகி கேட்டபோது மனிதர் கொட்டி தீர்த்து விட்டார் :-

“இலங்கை தலைநகர் கொழும்பில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச புத்தக கண்காட்சி பிரபல்யமானது. அந்த வரிசையில் 9வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற்றது. கண்காட்சியை ஸ்ரீலங்கா புக் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் நடத்தி வருகிறது.

கண்காட்சி நடந்த இடம் பிரமாண்டமானது. கொழும்பிலேயே மிகப் பெரிய வளாகமாக – சுமார் 40 ஏக்கர் பரப்பில் ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. வளாகத்திற்குள் இரட்டையர்களாக ‘பண்டாரநாயகா’ மற்றும் ‘ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ‘ என்ற பெயர்களை தாங்கிய அடுத்தடுத்த இரண்டு அரங்குகளில் தான் இந்த கண்காட்சி நடைபெற்றது.

இந்த அரங்குகளுக்குள் மாசேதுங்கும், சூயென்லாயும் சிலைகளாக நின்றிருந்ததை பார்த்து ஒரு நிமிஷம் குழப்பமே எட்டிப் பார்த்தது, இது கொழும்பா அல்லது பீஜிங்கா? என்று. அப்புறம் தான் தெரிந்தது, அந்த கட்டிடங்கள் சீன அரசின் உபயம் என்று.

கடந்த 1976ம் ஆண்டு கூட்டு சேரா நாடுகளின் மாநாடு கொழும்பில் நடந்தது. அதற்கு உதவும் வகையில் 1973ல் இந்த இரட்டை அரங்குகளை இனாமாகக் கட்டிக் கொடுத்ததாம் சீனா. இதை ஒரு டிரஸ்ட் தான் நிர்வாகித்து வருகிறது. பண்டாரநாயகா டிரஸ்ட் என்று அதற்கு பெயர்.

திருவிழாவுக்கு வருவது போல ஆர்வத்துடன் பொதுமக்கள் புத்தகக் கண்காட்சிக்கு திரண்டு வருவதை காண சந்தோஷமாக இருந்தது. உள்ளூர் மட்டுமில்லாது வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் உண்டு. அவர்கள் அரங்கு இடம் தெரியாமல் தவிக்கக் கூடாதென்பதற்காக சிறப்பு பஸ்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பில் முக்கிய இடங்களில் இந்த ‘ஷட்டில்’ பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏறி உட்கார்ந்தால் அலுங்காமல் குலுங்காமல் புத்தகக் கண்காட்சி வளாகத்தின் வாசலில் போய் இறங்கி கொள்ளலாம். பயணிகளை இறக்கி விட்டு பஸ்கள், திரும்பவும் சமர்த்தாக புறப்பட்ட இடத்திற்கே போய் நின்று கொள்ளும்.

கண்காட்சியில் ஜப்பானியர், சீனர்களை ஓரளவுக்கு காண முடிந்தது. ஆனால் இந்தியாவில் இருந்து வந்தவர்களைத் தேடி தான் பார்க்க வேண்டியிருந்தது.

வெளிநாட்டு கரன்சியாக இருந்தால் அதை இலங்கை கரன்சியாக மாற்ற கையை பிசைந்து நிற்க வேண்டியதில்லை. அதற்காக வளாகத்திற்குள்ளேயே வங்கி அமைக்கப்பட்டிருந்தது. அஞ்சல் அலுவலகமும் உண்டு. வழக்கம் போல் டெலிபோன் பூத்கள், இன்டர்நெட் மையங்கள் , நிறைய பீஸா சென்டர்கள், காஃபி கடைகள் என்று லேட்டஸ்ட் சமாச்சாரங்களுக்கும் பஞ்சமில்லை.

புத்தகக் கண்காட்சியில் நுழைய கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. காலை 10 தொடங்கினால் இரவு 9 மணி வரை மராத்தான் கொண்டாட்டம் தான். கண்காட்சிக்கு விடுமுறை நாளே கிடையாது. .

தினமும் வளாகத்திற்குள் இலக்கிய சொற்பொழிவுகள், நூல் வெளியீட்டு விழாக்கள் என்று அமர்க்களப்படுகிறது. அத்துடன் நமது நாட்டில் நாம் மெல்ல மெல்ல மறந்து வரும் பொம்மலாட்டம், தெருக்கூத்துகள் போன்ற வெகுஜனக் கலைகள் அங்கு இன்னமும் ஜீவித்துக் கொண்டிருப்பதை காண ஆறுதலாக இருந்தது. கண்காட்சி வளாகத்தில் பரவலாக பல இடங்களில் அந்த கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. புராண கதைகளாய் அரைத்த மாவையே அரைக்காமல் சமூக, பொருளாதார சூழ்நிலைகளை விளக்கும் கதைக் கருக்களில் இவை நடத்தப்படுகின்றன.

குழந்தைகளையும் ஈர்க்கும் வகையில் அவர்களுக்கு ஓவியப் போட்டி வைக்கிறார்கள். பெயரளவுக்கு நடத்தி ஒப்பேற்றி விடாமல், கடந்தாண்டு ஓவியப் போட்டியில் பரிசு பெற்ற ஓவியங்களை நடப்பாண்டு கண்காட்சியில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கிறார்கள்

இவர் மேலும் என்ன சொல்கிறார்? நேரடியாகவே கேட்டு விடுவோமே:

கேள்வி: ” இந்த கொழும்பு புத்தக கண்காட்சி பற்றி இன்னும் கொஞ்சம் ?”)

ஸ்டாலின் குணசேகரன்: கண்காட்சியில் ஸ்டால்கள் என்று பார்த்தால் 400ஐ தாண்டும்.அவற்றில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் புத்தகங்களை ஒன்றாக விற்கும் ஸ்டால்களே அதிகம். 75 சதவீதத்திற்கு மேலிருக்கும். ஆங்கிலத்திற்கென்று பிரத்யேகமாக எடுத்துக் கொண்டால் 15 சதவீதம் வரை ஸ்டால்கள் இருக்கும். மிச்சசொச்சம் தான் தமிழ். குறிப்பாக தமிழ் ஸ்டால்கள் என்று பார்த்தால், இலங்கையின் பிரசத்தி பெற்ற தமிழ் நிறுவனங்களான ‘பூபாளசிங்கம் புக் டெப்போ’, ‘குமரன்’ ‘சேமமடு புஸ்தக நிலையம்’, ‘ஜெயா’ ஆகியவை அமைத்திருந்தவை மட்டுமே. தமிழகத்தில் இருந்து வெளியான தமிழ் புத்தகங்களும் இருந்தன. ஆனால் அவை அங்கு இதர சீன, ஜப்பானிய மொழிப் புத்தகங்களை போல் சிங்களம், ஆங்கில மொழி ஸ்டால்களில் வைத்து அவற்றின் மூலமே விற்கப்பட்டதை காண முடிந்தது.

இந்த கண்காட்சியில் ஒவ்வொரு புத்தகத்திற்கும் அதன் விலையில் குறைந்தபட்சம் 20 சதவீதம் தள்ளுபடி. அதற்கு மேலும் உண்டு. அது அந்தந்த விற்பனையாளர்களின் விருப்பத்தை பொறுத்தது.

கேள்வி: இக்கண்காட்சியை பற்றி குறிப்பிட்டு சொல்வதானால் எதை சொல்வீர்கள்?

ஸ்டாலின் குணசேகரன்: அடுத்தாண்டு அதாவது 10வது சர்வதேச புத்தகக் கண்காட்சி , 2008 செப்டம்பர் 20 முதல் 29ம் தேதி வரை என்று தேதியை நிர்ணயித்து அதையும் இப்போதே போர்டு வைத்து விளம்பரப்படுத்தியும் விட்ட, கண்காட்சி ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கையும், திட்டமிடலும் என்னை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது , பெரும்பாலான சிங்கள புத்தகங்களில் காணப்பட்ட வடிவமைப்பு. மிகவும் நேர்த்தியாகவும், வசீகரமாகவும் சபாஷ் போட வைப்பதாக இருக்கின்றன.

கேள்வி: கண்காட்சியில் இலங்கை அரசின் பங்களிப்பு இருந்ததாக கேள்விப்பட்டீர்களா?

ஸ்டாலின் குணசேகரன்: இலக்கிய மாதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தை இலங்கை அரசு நிர்ணயித்துள்ளது. அதனால் அந்த சமயத்தில் இலக்கியம் சம்பந்தமான விழாக்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறதாம். அதற்குகேற்ப, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி சமயத்தில் தான் பள்ளி கல்லூரிகளின் நூலகங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை அரசு வெளியிடுகிறதாம். அதனால் இந்த கண்காட்சியிலேயே, பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அந்த ஆண்டுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி குவித்து விடுகின்றனர். புத்தக விற்பனை அமோகமாக அமைந்து விடுகிறது.

கேள்வி: கண்காட்சியில் இன பாகுபாட்டு எதாவது ரூபத்தில் வெளிப்பட்டதாக உணர்ந்தீர்களா?

ஸ்டாலின் குணசேகரன் : அங்கு சிங்களத்திற்கும் அதற்கடுத்து ஆங்கிலத்திற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவே எனக்கு படுகிறது. இந்த கண்காட்சியில் சிங்கள் எழுத்தாளர்களில் அவ்வாண்டின் சிறந்த எழுத்தாளராக ஒருவரை ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கிறார்கள். அவருக்கு ரூ.5 லட்சம் பரிசளிக்கிறார்கள். இலங்கையில் அளிக்கப்படும் பரிசுத் தொகைகளில் இதுவே அதிகப்படியானது என்கிறார்கள். பரிசெல்லாம் சிங்கள எழுத்தாளருக்கு மட்டும் தானாம். இலங்கை தமிழ் எழுத்தாளர்களை கண்டுக் கொள்வதில்லை. இது எந்த வகையில் நியாயமோ? அதைப் போல, கண்காட்சி வளாகத்தில் சிங்கள எழுத்தாளர்களின் (மட்டும்) பெயர் விவரத்தை பயோ-டேட்டாவுடன் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதி போர்டுகளாக வைத்திருந்ததை கண்டதும், எனது தமிழ் மனசின் ஓரத்தில் வலி எழவே செய்தது. .

கேள்வி: ஈரோட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியவர் என்ற வகையில் கொழும்பு புத்தகக் கண்காட்சி உங்களுக்கு எப்படி தோன்றியது?

ஸ்டாலின் குணசேகரன்: மேற்குறிப்பிட்ட ஒரு சில குறைகளை ஒதுக்கி பார்த்தால் கொழும்பு கண்காட்சி பாராட்டத்தக்கது தான். பிரமாண்டம் உள்ளிட்ட சில வெளித் தோற்ற அம்சங்களை தவிர்த்து பார்த்தால் அடிப்படையில் கொழும்பு கண்காட்சிக்கும் ஈரோடு கண்காட்சிக்கும் பெருசாய் வித்தியாசம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இவ்விரண்டின் அஸ்திவார நோக்கமே, சதா டிவி சீரியல்களிலும், அறிவை மழுங்கடிக்கும் சினிமா மோகத்திலும் மூழ்கி கொண்டிருக்கும் பொது ஜனங்களை முக்கியமாக இளைஞர்களை அதிலிருந்து மீட்டெடுத்து கற்றறிவு எனும் அறிவுலகிற்கு இழுத்து போடுவதே ஆகும். தரத்திலும் நோக்கத்திலும் வளைந்து கொடுக்காத கறார்தனமும் கூட இரு கண்காட்சிகளுக்கும் பொது அம்சமாக அமைகிறது.

கேள்வி: முத்தாய்ப்பானதும், முக்கியமானதுமான கேள்வி. இப்படி திடுதிப்பென்று புத்தகக் கண்காட்சிக்காக அவ்வளவு தூரம், கொழும்புக்கு புறப்பட்டு போவதற்கு எதாவது விசேஷ காரணம் உண்டா? உங்களை கிளப்பி விட்டது எது?

ஸ்டாலின் குணசேகரன்: அனுபவங்களை நாடிப் போகும் எனது ஆர்வம் தான். கொழும்பில் இருந்து அனுபவத்தை மடித்து சுருட்டி மனசுக்குள் வைத்து கொண்டு வந்து 2008ம் ஆண்டு ஈரோடு புத்தக கண்காட்சியை இன்னும் பாலிஷ் செய்ய வேண்டுமென்பதே முழு முதற் காரணம்.

எங்கள் மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோட்டில் புத்தகக் கண்காட்சி என்பதை வெறும் சம்பிரதாய விஷயமாக நடத்தாமல் சேவை நோக்கில் உயிரோட்டமாகவே தொடர்ந்து 3 ஆண்டுகளாக மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றிகரமாக நடத்தி காண்பித்துள்ளது. அடுத்தாண்டு கண்காட்சிக்கான பூர்வாங்கப் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் கொங்கு மண்டலத்தின் பல்லாயிரம் புத்தக கண்காட்சி அன்பர்களின் சார்பாக அதாவது அவர்களின் பிரதிநிதியாக கொழும்பு போய், அனுபவமெனும் செல்வத்தை திரட்டிக் கொண்டு வந்துள்ளேன். அந்த அனுபவச் செல்வம், 2008 ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு கூடுதல் ஜொலிப்பை தரும் என்று உறுதியாக நாங்கள் நம்புகிறோம்.; பொது மக்களும் நம்பலாம்.


vee.raj@rediffmail.com

Series Navigation

சாய் (என்கிற) பேப்பர்பாய்

சாய் (என்கிற) பேப்பர்பாய்