திரைப்படம்:சாபமும், அபயமும்

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

சுப்ரபாரதிமணியன்


====

லண்டனில் யமுனா ராஜேந்திரன் 12 ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்க திரைப்பட இயக்குனர் செம்பேன் உஸ்மானை அறிமுகப்படுத்திய போது ஆரம்பத்தில் என் அக்கறை தீவிரமடையவில்லை. பணக்காரன் என்று தோற்றம் தரும் ஒரு ஆப்பிரிக்கனின் உடம்பில் வழியும் எச்சில் குவியல் தொனித்த ‘சாபம் ‘ பட சுவரொட்டி அருவருப்பு தந்தது. அவரின்

‘சாபம் ‘ படம் ஆப்ரிக மக்கள் மேல் செலுத்தப்படும் மத அதிகாரம், ஆதிக்க மேலாண்மை, மூடப்பழக்கங்களின் போர்வை பற்றின அழுத்தமானப் பதிவாகப்பட்டது. செம்பென் உஸ்மானுக்கு 82 வயதாகிறது. அவரின் சமீபத்தியபடமான ‘அபயம் ‘ (moolaade) ஆப்ரிக்க சமூகம் மத மேலண்மையாலும், ஆதிக்க சக்திகளின் அழுத்தத்தாலும் இன்னும் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பதை தெளிவாக்குகிறது.

ஓஸ்மான் செனகல் நாட்டைச் சார்ந்தவர். பிரன்ச் காலனி ஆதிக்கம், கிறிஸ்துவ முஸ்லீம் மதங்களின் மீதான நெருக்கடி பற்றி உரத்த குரலில் பேசுபவர். கார் மெக்கானிக். இரண்டாம் உலகப்போர் வீரர். பிரன்ச் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்ற முந்தைய அடையாளங்களை கொண்டவர். கலகக்குரலாகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

‘அபயம் ‘: ஆபிரிக்காவில் தொடர்ந்து வரும் மூடப்பழக்கங்களில் ஒன்று சிறுமிகளின் பால் உறுப்பின் ஒரு பகுதியை நீக்குவதை ஒரு சடங்காகச் செய்வது.ஆப்ரிக்க கிராமங்களில் நடக்கும் இச்சடங்கிற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் முஸ்லீம் இமாம்களின் கட்டாயத்தால் தொடர்கிறது. இச்சடங்கிலிருந்து தப்பித்த கொல்லே எனும் பெண் தனியே வசிக்கிறாள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள். இச்சடங்கின் போது குரூரமான முறையில் கத்தியால் அறுத்தெறியப்படும் சடங்கில் நோய்வாய்ப்பட்டு பல சிறுமிகள் இறக்கின்றனர். கொல்லே மதத் தலைவர்கள் மற்றும் சாதி ஆதிக்க ஆண்களுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறாள்.போராட்ட உணர்வுடன் சில பெண்களுடன் சேர்ந்து குரல் எழுப்புகிறாள்.

பழமைவாத ஆப்ரிக்க சமூகத்தின் மீது தொடர்ந்து கேள்விகளை தன் கலகக் குரலால்

எழுப்பி வரும் உஸ்மான் தன் 82 வயதிலும் தன்னை ஒரு போராளியாகவே நீருபித்துக்

கொண்டிருக்கிறார். ஆப்ரிக்க சமூகத்தின் மதங்கள்,தொன்மங்கள் சம்பந்தப்பட்ட இறப்பு,பிறப்பு தேவதைகளுடன் சம்பந்தப்பட்ட பெயர் ‘ கொல்லெ ‘ ஒரு கலகப் பெண்ணாக முன் நிறுத்தப்படுவது சாதாரணக் குறியீடல்ல.

இதே போல் இப்பிரச்சனையை யதார்தத்தில் எதிர்கொண்ட பெண் வாரீஸ். பிரபல மாடல் அழகி வாரீஸ் ஆப்பிரிக்கப் பெண்கள் மத்தியில் பிறப்புறுப்பில் சிதைவை ஏற்படுத்தும் மூட நம்பிக்கை குறித்த தனது அனுபவத்தை வெளிப்படுத்தியதின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்கப் பெண்களின் நிலை பற்றினச் சித்திரத்தை வெளிப்படுத்தியவர்.

சோமாலியா நாட்டைச் சார்ந்த ஏழைகுடும்பத்துப் பெண். ‘ இருபத்தைந்து வயதில் ஒரு நாள் ஆடு மேய்த்து விட்டு வீடு திரும்பிய பின் அதிக உணவு சாப்பிடக் கிடைத்தது. அதிக அளவு நீர் குடிக்கவும் தாயாரால் தடை விதிக்கப்பட்டது. அதிகாலையில் அம்மா என்னை அழைத்துச் சென்று ஒரு பாறாங்கல்லின் மேல் படுக்க வைக்க தன் கால்களுக்கிடையில் என் உடலை அழுத்திய வண்ணம் என் முகத்தை தன் மார்புடன் பிடித்திருக்க இளம் மருத்துவச்சி ஒருவர் என் இரு கால்களையும் விரித்து கூரியக் கத்தியால் எம் பிறப்புறுப்பை வெட்டத் துவங்கினார். மயக்கம் தெளிந்து எழுந்த போது மருத்துவச்சியின் கைகளில் இருந்த முள் மூலம் என் பிறப்புறுப்பின் இரு பகுதிகளிலும் துவாரமிட்டு மெல்லிய நூல் ஒன்றினால் இரு பகுதிகளும் தைக்கப்படுவது தெரிந்தது. தையல் அவிழ்ந்து விடக் கூடாது என்று கால்களைப் பிரித்துக் கொள்ள முடியாதபடி கயிற்றால் இணைத்து விட்டனர். காயம் ஆறும் வரை சிறிய குடிசையைப் போட்டுப் படுக்க வைத்தனர். சிறுநீர் கழிக்க என் சகோதரி என்னை ஒரு புறமாக திருப்பிப் போட்டு மண்ணில் சிறு குழி தோண்டி விட்டார். முதல் துளி சிறுநீர் காயத்தின் மேல் பட்டதும் அமிலத்தை ஊற்றினது போல் எரிச்சலும், வேதனையும் உடம்பு முழுக்கப் பரவியது.தையலின் மத்தியில் சிறுநீர் கழிக்க வென்று ஒரு சிறு துவாரமே இருந்தது. காயம் ஆறுகிறவரைக்கும் வேதனையில் தவித்தேன்.

ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும், மாத விலக்கின் போதும் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கிறேன். இன்று வரை எனக்கு பாலுணர்வு என்பது பற்றித் தெரியாது. முழுமையில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். ‘

இது போன்ற அனுபவங்கள் ஆப்பிரிகப் பெண்களுக்கு சாதாரணமாகி விட்டன.

இன்னொரு பெண்ணின் அனுபவத்தின்படி அவளுக்குத் திருமணம் ஆகும் போது கணவனுடன் உடலுறவு கொள்வதற்காக தம்முடைய மூடித் தைக்கப்பட்ட பிறப்பிறுப்பில் சிறிது இடத்தில் மீள வெட்டி விடுவதாகவும் அதன் பின் குழந்தைகள் பிறக்கும் போது அதைவிடச் சற்றுக் கூடுதலாக வெட்டி விட்டு பின் மீண்டும் தைத்து விடுவதாகவும் தெரிவித்தார். இவருக்குத் தெரிந்த பெண்மணி பதினேழுக் குழந்தைகளைப் பெறும் வரை இவ்வாறான நிலையில்தான் இருந்தாராம்.

சுமார் முப்பது ஆப்ரிக்க நாடுகளில் இந்த நிலை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து

வருகிறது. ஒரு நாளிற்கு ஆறாயிரம் பெண்கள் இச்சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் என்பதும், இதன் மூலம் பதிமூன்று கோடிப் பெண்கள் இந்த வேதனை சாகரத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்ணின் பிறப்புறுப்பு ஒரு ஜடப் பொருளாகவும் அதன் புனிதம், கலாச்சார மேன்மைக்குறியீடாகவும் உலகம் முழுவதும் பின்பற்றப்படுவதை நினைவூட்டும் படம்: பாத்மா.

துனிஸ்யா நாட்டுப்படமான் இது பல்வேறு திரைப்பட விழாக்களில் சில குறிப்பிடத்தக்கப் பரிசுகளைப் பெற்றிருக்கிறது. கலித் கோர்பாய் இயக்கி இருக்கும் படம். பாத்மா இளம் வயதுப் பெண். தாயின் மரணத்திற்குப் பின் தந்தை மறுமணம் செய்து கொள்கிறார்.. நெருங்கின உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். படிப்பில் அக்கறை கொள்வதில் தனி மனித சோகத்தை கரைத்துக் கொள்கிறாள்.பல்கலைக்கழகத்தில் ஈடுபாட்டானப் படிப்பில் உற்சாகம் கொள்கிறாள். இளம் நடிகன் ஒருவனை பல்கலைக்கழகத்தில் காதலித்து உறவும் கொள்கிறாள். கல்லூரிப்படிப்பிற்குப் பின் கிராமம் ஒன்றிற்கு பள்ளி ஆசிரியை வேலைக்குச் செல்கிறாள். புழுதியும், வெயிலும் பரந்த வெளியுமான கிராமம்,. தனிமையானப் பள்ளிக் கட்டிடம். வானமும், வெளியும் அவளுடன் கொள்ளும் உறவில் தன்னைக் கரைத்துக் கொள்பவளுக்கு இளம் மருத்துவர் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமண நாளுக்கு முதல் நாள் ஒரு நண்பணை அழைத்துக்கொண்டு மருத்துவர் ஒருவரைச் சந்திக்கிறாள். தான் முன்பே பாலியல் வன்முறைக்கு ஆளானதையும், கல்லூரி வாழ்க்கையில் இளம் நண்பனுடனான் நட்பு உடலுறவாக இருந்ததையும் குறிப்பிடுகிறாள். துனிஸ்ய கலாச்சார மரபில் பெண் கன்னித்தன்மையுடன் இருப்பது மிகவும் முக்கியமானது. திருமணத்திற்குப் பின்பே உடலுறவு சாத்தியம் என்பதை நீருபிக்கும் சடங்குகள் சுலபமாகக் கடைபிடிக்கப்படுகின்றன.தான் கன்னித் தன்மையற்றவள் என்பது தெரிந்தால் திருமணம் தடைபடும் என்கிறாள் பாத்மா. மருத்துவர் அத்ற்கான ஒரு சிறு சிகிச்சையைச் செய்கிறார்.

முதல் இரவிற்குப் பின் தென்படும் பென் உறுப்பு நிலையும் உதிரத்துளிகளூம் அதை நிரூபிக்கும். திருமணம் நடைபெறுகிறது, ஒரு விருந்தின் போது தனக்கு மருத்துவம் செய்த மருத்துவர் தன் கணவனைச் சந்திக்கிறார். கணவன் அவளின் துரோகம் பற்றி குறிப்பிடுகிறாள். புகுந்த வீட்டினர் அவளைப் புறக்கணிக்கின்றனர். கணவனின் நிலையும் அவ்வாறே. இந்நிலையில் கண்வனை விட்டு வெளியேறுகிறாள் பாத்மா. நாட்டுப்புற இசையின் அதிர்வுகளை இப்படம் முழுக்கத் தொனிக்கிறது. பாடல்களின் மூலமான குரலின் சோகம் உடம்பை வருத்தச் செய்கிறது. பாத்மாவின் நிலையும், சிக்கலும் அந்த இசையின் தாளத்திற்கும், பெருமூச்சிற்கும் இணையாகவும், ஊடாகவும் பயணம் செய்கிறது.

subrabharathimanian

srimukhi@sancharnet.in

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்