உரத்த சிந்தனைகள்- 4

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

ராமசந்திரன் உஷா


கேள்விகள்

சாகித்ய அகாதமி வருடாவருடம் பிராந்திய மொழிகளுக்கு ஒவ்வொன்றிற்கும் ஒரு விருது வழங்குகிறது. 2003ம் ஆண்டு தேர்வு எப்படி நடைபெற்றது ? எத்தனை புத்தகங்கள் தேர்வில் இடம் பெற்றன ? கடைசிச்சுற்றில் வென்றதற்கான காரணம் என்ன ? தேர்வு குழுவினர் யார் ?

இவர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் ? ஆகிய கேள்விகள் வைரமுத்து அவர்களின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம் ‘ படித்துக்கொண்டு இருக்கும்பொழுது தோன்றியது. இணையத்தில் தேடினால் மலையாள கதாசிரியர்களைப்பற்றி சொல்லுகிறதே தவிர

தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி ஒன்றையும் காணோம்.

ஒவ்வொரு வரியிலும் தான் ஒரு கவிஞர் என்பதை, அதிலும் வைரமுத்து என்பதை வெளிக்காட்டிக் கொள்கிறார். ஆங்கில நாவல்களைப்போல, கதை வைரமுத்து, எழுதியவர்…. என்று செய்திருக்கலாம். ஆனால் பரிசு கிடைத்ததும் உதவிசெய்த ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவுக்கு நன்றி சொல்லியிருந்தார். ஒரு வேளை ஆறேழு பதிப்பு கண்ட இப்புத்தகத்தின் வெற்றியே வைரமுத்துவின் கவிதைப்பாணியில் எழுதப்பட்டதுதானோ ? நல்ல கதை, நிறைய தெரியாத விஷயங்கள், ஆனால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம். சில இடங்களில் கி.ரா ஞாபகத்தில் வருகிறார். சொந்த நாட்டிலேயே மக்கள் அகதி ஆக்கப்படும் கொடுமை படிக்க வேதனையாகத்தான் இருந்தது. நாம் கனவு கண்டுவரும் தேசியநதி நீர் இணைப்புத்திட்டம் ஆரம்பித்தாலும், இதேபோன்ற பிரச்சனைகள் வருமே ?

காடு நாவலைக் குறித்து நான் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பிய கேள்வியும் அவரின் பதிலும்

உஷா :இக்கதைக்கு கிடைத்த வரவேற்பு, பரிசு, எழுத்தனுபவம் குறித்து சொல்ல முடியுமா ?

பதில்:

இக்கதைக்கு பரவலான வாசிப்பும் அங்கீகாரமும் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆகவே இது தேர்ந்த சில வாசகரிடம் மட்டும் போனால் போதும் என்று எதிர்பார்த்தேன். 350 ரூ கொடுத்து ‘சும்மா கதை படிக்கும் ‘ ஒருவாசகர் இதை வாங்கிப்படித்து ஏமாற்றம் அடையக்கூடாது அல்லவா ? ஆகவே மதிப்புரைகளுக்கு அனுப்பவில்லை. எவ்விதமான விளம்பரமும் செய்யவில்லை . தேடிப்படிப்பவர்கள் மட்டுமே படித்தால்போதும் என்று விட்டுவிட்டேன். நாவல் வந்த மறுநாளே என் நாவல்கள் வந்த உடன் வழக்கமாக நடப்பது போல ‘நாவல் அவுட் ‘ என்ற வாய்மொழி பிரச்சாரம் தொடங்கிவிட்டது. பிறகு கருத்துப்பதிவுகளும்.

ஆனால் இந்நாவலே சென்றவருடம் வந்த நாவல்களில் அதிகமான விற்பனையையும் , அதிகமான கவனத்தையும் பெற்றது என்பதே நான் கேள்விப்பட்டு அறிந்தது. ஏழாம் உலகத்தை விட இதுவே அதிகமாக விற்கிறது என்ற செய்தியே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆகவே என் கணிப்பு தவறு , முன் முடிவுகள் இல்லாத நேரடிவாசகனுக்கு இதன் நுண்மைகளுக்குள் சாதாரணமாகச் சென்றுவிடமுடியும் என்று இப்போது உணர்கிறேன். எனக்கு சிறந்த வாசகர்கடிதங்கள் தொடர்ந்துவந்தபடியே உள்ளன.

பரிசு என்றால் என்ன சொல்ல ? தமிழில் அந்த ஏற்பாடுகளுக்குள் நான் இல்லை. நான் அனேகமாக இனிமேல் பரிசுகள் எதையும் வாங்கமாட்டேன் என்றே என்ணுகிறேன். இளம் எழுத்தாளனாக நான் நுழைந்தபோது உருவாகிய பிரமிப்பில் பரிசுகள் வந்தபடியே இருந்தன. இன்று நான் கடுமையான கோபங்களை என் விமரிசனங்கள் மூலம் உருவாக்கியவன். அது என் இயல்பு. இனி எனக்கு வசைகள் மட்டுமே வரும்.

இந்நாவலை நான் எழுத திட்டமிடவோ ஆராய்ச்சி செய்யவோ இல்லை. ஒருநாள் அலுவலகம் செல்லும்போது மழைகனத்து இருண்ட வானம் வேளிமலைத்தொடர்கள் மீது நிரம்பியிருப்பதைக் கண்டேன். இலைகள் கரும்பச்சையில் அடர்ந்து அசைவற்று நின்றன. பறவைகள் கூடு திரும்பின. ஒரு பறவையின் குரல் [கூழைக்கடா] எனக்கு ஒரு நுண்ணிய அதிர்ச்சியை அளித்தது. நான் என் 17 வயதில் சில மாதங்கள் பேச்சிப்பாறைக் காட்டில் இருந்த நாட்களின் நினைவுகள் பொங்கி பொங்கி வந்தன. பழைய நினைவுகள் பெருகும்போது வருமே ஏக்கம், கண்ணீர். அலுவலகம்போய் அமர்ந்தேன். அதே மனநிலை. என் பதிப்பாளர் வசந்தகுமாரிடம் ஒரு நாவல் எழுதப்போகிரேன் என்றேன். என் மனதில் ‘ வறனுறல் அறியாச் சோலை ‘ என்ற வரியே ரீங்கரித்துக் கொண்டிருந்தது. வீடு திரும்பினேன். எழுத ஆரம்பித்தேன்[ ஏறத்தாழ இதேபோன்ற ஒரு இடம் நாவலிலும் வருகிறது] 15 நாளில் விடாமல் எழுதி முடித்தேன். எழுத எழுத வசந்தகுமாருக்கு அனுப்பினேன். அருண்மொழியும் அவரும் மட்டுமே படித்தார்கள். எழுதிமுடித்த மறுநாள் மெய்ப்புத்தாள்கள் வந்துவிட்டன. அதிலேயே திருத்தங்கள் போட்டேன். அடுத்தமாதம் நூல் வந்துவிட்டது.

என் நாவல்களில் விஷ்ணுபுரம் 10 வருடம் எடுத்துக் கொண்டது, ஆய்வுக்கும் எழுத்துக்கும் . பிந்தொடரும் நிழலின் குரல் மூன்றுவருடம். காடு 15 நாள். ஏழாம் உலகம் 7 நாள். நாவலில் செறிவையோ நுட்பங்களையோ நான் பிற்பாடு ஏற்றுவது இல்லை. அவை முதலிலெயே வந்துவிடவேண்டும். மொழிநடையைமட்டுமெ சற்று செப்பனிடுவேன்.சொற்களாலும் முகங்களாலும் உணர்ச்சிகளாலும் நெய்யப்பட்ட ஒரு காடு அந்நாவல். ஆகவே அது இயல்பாகவே மனதின் வெளிப்பாட்டுமுறையைக் கொண்டிருந்தது. எனக்கு நாவல் எழுதும் நாட்கள் எல்லாமே மிக உவப்பானவை. ஏழாம் உலகம் தவிர.

அலகிலா விளையாட்டு நாவலைக் குறித்து நான் அனுப்பியக் கேள்விகளுக்கு திரு.பா.ராகவன் அவர்களின் பதில்

உஷா: இக்கதை கொஞ்சம் மோகமுள்ளையும், அம்மா வந்தாளையும் ஞாபகப்படுத்துகிறதே ? கதையில் வரும் இமாலயத்தின் இடங்களைப் பற்றி சொல்வது உங்கள் சொந்த அனுபவமா ?

பதில்:

கதையில் ஜானகிராமன் சாயல் இருப்பதாகச் சொல்லுவது எல்லாருக்கும் முதலில் தோன்றக்கூடியதே. கொஞ்சம் கூர்ந்து வாசித்தால் ஜானகிராமனுக்கு நேரெதிர் திசையில் நின்று நான் எழுதியிருப்பது புரியும். வேதபாடசாலை என்கிற ஒரு விஷயம்தான் உங்களுக்கு அந்த எண்ணத்தைத் தந்திருக்கிறது. அது பிரச்னையில்லை. நாவலின் நோக்கம், அந்தப் பாடசாலை பற்றியது அல்ல.

அப்புறம் தத்துவங்கள். ஹிந்து தத்துவங்கள் பற்றிக் கடந்த 6 வருடங்களாக நான் ஆய்வு செய்துவருகிறேன். இந்த நாவலில் சில உபநிடதக் கருத்துகளை மட்டுமே முன்வைத்தேன். இன்னும் ஆழம் போக இந்தக் களம் உதவாது என்பதால் அத்துடன் நிறுத்திக்கொண்டேன்.

நீங்கள் கேட்ட அடுத்த கேள்வி, இடங்கள் பற்றியது. அநேகமாக (மகாராஷ்டிரா தவிர) இந்தியா முழுவதும் நான் சுற்றியிருக்கிறேன் thanks to kalki- இமய மலையின் சில பகுதிகளுக்கும் போயிருக்கிறேன். இந்நாவலில் நான் வருணித்திருக்கும் பகுதி உத்தரகாசியில் உள்ளது. டார்ஜிலிங்குக்கு வடக்கே உள்ள ஒரு கிராமமும் ஓரளவு வருணிக்கப்பட்டுள்ளது. இடங்களின் பெயர்களை நான் கவனமாகத் தவிர்க்கச்க் காரணம், அதன்பொருட்டுக் கூட மூலக்கதையின் மீதான கவனம் சிதறிவிடக்கூடாது என்பதால்தான்.

நன்றி திரு. ஜெயமோகன், திரு. பா.ராகவன்

சாதி இரண்டொழிய வேறில்லை

என் பாட்டிவீட்டுப் பக்கத்தில் யார் புதியதாய்க் குடிவந்தாலும் அவர்கள் என்ன சாதி என்று கேட்டு எங்களிடம் திட்டுவாங்குவார். பாட்டி என்றதும், காதில், மூக்கில் வைரம், மஞ்சள், குங்குமம், மடிசார் இத்தியாதிகளைக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். பாட்டி சாமி கும்பிட்டு நான் பார்த்ததேயில்லை. என்றாவது வீட்டுப் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய் வருவார். பூஜை, புனஸ்காரம், லொட்டு லொசுக்கு ஒன்றும் கிடையாது. நகை எதுவும் கிடையாது. சாதாரண ஆறு கஜ பருத்தி புடைவைதான் எப்போதும். பாட்டி சாதி வேற்றுமையும் பாராட்டுபவர் இல்லை.

அந்தக் காலத்தில் ஆஸ்பத்திரியில் ஏழாவதோ, எட்டாவதோ பிள்ளைப்பெற்ற பொழுது, பக்கத்துப்படுக்கையில் ஒரு நரிக்குறத்தி பிறந்த குழந்தையுடன் விபத்தில் அடிப்பட்டு உயிருக்குப்போராடிக் கொண்டிருந்தபொழுது, அந்த பிள்ளைக்குப் பாட்டிதான் பால்

கொடுத்திருக்கிறார். அந்த கதையை அவ்வப்பொழுது சொன்ன பாட்டி, பிறந்த குழந்தைக்கு அது என்ன ஒடம்பெல்லாம் கரடிக்குட்டி போல மொசுமொசுவென்று முடி என்று உடம்பைச் சிலிர்த்துக்கொள்வார்.

நாம் இன்று வாய்விட்டு கேட்பதில்லை , யார் என்ன சாதி என்று ? அதைப்பற்றிப் பொதுவிலும் பேசுவதில்லை. ஆனால், சாதி என்பது நம் இரத்தத்துடன் கலந்துவிட்டது. யாரைச் சந்தித்தாலும் என்ன சாதி என்ற கேள்வி மனதில் எழாமல் போவதேயில்லை. எந்த ஒரு சாதிக்கும் ஒரு குணத்தையும் சேர்த்துவிடுகிறோம். சொந்த ஜாதிக்காரர்களைப் பார்த்தால் நாம் ஒற்றுமையாய் இருப்பதில்லை, ஒன்றுபட்டு வலிமையாய் இருப்போம் என்று சொல்லிவிட்டு, மனதில் சொந்த ஜாதிக்காரனை மட்டும் நம்பவே கூடாது என்று சொல்லிக் கொள்வோம். இவை எல்லாம் எனக்குத் தோன்றுவதில்லை என்று நீங்கள் சொன்னால் ஒன்று நீங்கள் மகாத்மாவாய் இருக்க வேண்டும் அல்லது நீங்கள் அழகாய்ப்பொய் சொல்லுகிறீர்கள். ஆனால், சாதி வேற்றுமை பாராட்டுவது, சாதிவெறி என்பதைப்பற்றி நான் சொல்லவில்லை.

ஆனால், பணக்கார வர்க்கம் என்று ஒன்று உண்டு. அவை சாதி, மதம், இனம், நிறம் எதுவும் பார்ப்பதில்லை. பணம் பணத்தோடு சேர்கிறது என்று சொல்வதில்லையா ? அரசியல், சினிமா, வர்த்தகர்கள் இவர்களின் திருமணங்கள் இந்த ஒரு தகுதியை மட்டுமே கொண்டு நிர்ணயிக்கப் படுகின்றன.

ஆனால், வெளிநாட்டில் வசிக்கும் என் பிள்ளைகளுக்கு இந்த சாதி வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால் மதம், நாடு வித்தியாசம், அதற்கேற்ற குணங்கள் என்று பாகுபாடு சொல்லித்தரப்படுகிறது. இந்தியன் பாகிஸ்தானியர், இந்தியரில் வடக்கு, தெற்கு! தெற்கில் தமிழன், மலையாளி தமிழன் என்றால் திருநெல்வேலி, மதுரைக்காரன், சென்னைவாசி, கோயம்பத்தூர் ஆசாமி என்று இவர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று இங்கும் மனிதனில் ஆயிரத்தெட்டு பாகுப்பாடுகள்.

இங்கு நம் பாம்பு, பாப்பான் பழமொழி எகிப்தியர்களை வைத்துச் சொல்லப்படுகிறது. இந்தப் பழமொழி பெரியார் சொன்னதாய் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சொல்லப்பட்டதே! இங்கிருந்து அங்குப் போயிற்றா ? அல்லது அங்கிருந்து இங்கு வந்ததா ?

பா.ராகவன் அவர்களின் புவியிலோரிடம் படித்ததும் பல கேள்விகள் எழுந்தன. சாதியை வேண்டாம் என்றாலும் சில சமயம் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்கிறோமா இல்லையா ? சாதி காரணம் காட்டி மனிதர்களில் ஒரு பிரிவை உயரவிடாமல் சென்ற தலைமுறையில்செய்தாலும், அவர்கள் முன்னேறாமல் இல்லையே ? பிழைத்திருத்தல் (survival) தத்துவம் இதுதானா ?

ஐயங்கார் வகுப்பை சேர்ந்த வாசு, மிக மிக ஏழ்மையான கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவன். படிக்காத அண்ணன்மார்கள், ஆளுக்கு சில நூறுகளை சம்பாத்தித்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். வாசு மிக குறைந்த மதிப்பெண் பெற்று +2 பாஸாகிவிடுகிறான். அவன் அப்பாவின் லட்சியம் இவனையாவது பட்டதாரி ஆக்கவேண்டும் என்பது. சாதியை மாற்றிக் காட்டி எப்படியோ கல்லூரியில் சேர்ந்துவிடுகிறான். ஆனால்

படிப்ப்பு வரவேண்டுமே ? படிப்பு அவனை மாய பிசாசாய் நெருக்குகிறது. பயந்து ஊரைவிட்டுஓடிவிடுகிறான். அடுத்த பாகம் கதை அவன் எப்படி முன்னேறுகிறான் என்பதுதான்.

இங்கு ஹாலந்துநாட்டுக்காரர், தனியார் கம்பனியில் எம்.டி. ஒரே பிள்ளை பத்தாவது பாதியில் இருக்கும்பொழுது, இனி படிக்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டான். காண்டிராக்டர் ஒருவரிடம் சாதாரண வேலைக்கும் சேர்ந்துவிட்டான். இதை தந்தையும் மானக்கேடாய் நினைக்கவில்லை.

படிக்க வராதவர்களுக்கு பாடங்கள் பெரும்சுமை. நாளுக்கு நாள் சுமை கூட கூட அழுத்தத்தில் முழி பிதுங்க ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் படி படி என்று பெற்றவர்கள் தார்குச்சிப் போட்டு விரட்ட வாழ்க்கையே சோகமாகிவிடுகிறது. இன்று ஓயிட்காலர் ஜாப் என்பதில் மட்டும் தொங்கிக் கொண்டு இருக்காமல் பல்வேறு தொழில்களிலும் ஈடுபடுகிறார்கள். கோவில் பூஜை, வீட்டு விசேஷங்கள், காரியங்கள் செய்து வைப்பது ஆகிய தொழில்கள் இன்று லாபகரமாய் மாறிவிட்டது. வெளிநாடுகளில் கட்டப்படும் கோவில்களில் இவர்களுக்கு நல்ல டிமாண்ட்.

நவராத்திரியும், ரம்ஜானும்

நவராத்திரி ஆரம்பித்துவிட்டது. அப்படியே ரம்ஜானும் தொடங்கிவிட்டது. ஒரு மாதத்திற்கு இங்கு இனி காலை வேளைகளில் எந்த உணவகமும் திறந்து இருக்காது. பேச்சிலர்ஸ்பாடு மிகவும் கஷ்டம். சில இடங்களில் பார்சல் கிடைக்கும். பொது இடங்களில் எந்த உணவு

உண்ணவும், நீர் குடிக்கவும் தடை. பிள்ளைகள் பள்ளிக்குக்கூட எதுவும் கொண்டு போவதில்லை. ஆனால் இரவு முழுவதும் ஊர் விழித்திருக்கும். அதிகாலைச் சூரியன் உதிப்பதற்கு முன்பு சாப்பிட்டுவிட்டு தூங்கத் தொடங்குவார்கள். இந்த மாதத்தில் பள்ளி, அலுவலக நேரங்கள் கூட மாற்றியமைக்கப்படுகின்றன.

நம் ஊரில் நவராத்திரி எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் இங்கு அமீரகத்தில் தினமும் ஒரு வீட்டில் லலிதா சகஸ்ரநாமம் சொல்லப்படும். பிறகு வெற்றிலை, பாக்கு கிடையாது. மஞ்சள், பிளவுஸ் பீஸ் ( துபாயில் பாலிஸ்டர்தான்

கிடைக்கும்) முழு தேங்காய் மட்டையுடன், பொட்டலத்தில் குங்குமம், சுண்டல் பொட்டலம், இவற்றுடன் ஒரு கிப்ட். இதில் சுண்டல், கிப்ட் தவிர மற்றவை ரீசைக்கிளிங் செய்யப்படும். கிப்ட் என்றால் வெள்ளியில் சின்னபொருள், ஊரில் இருந்து கொண்டு வந்தவை, பிளாஸ்டிக் வஸ்துக்கள் கொடுக்கப்படும். மிக விலைமதிப்பு மிக்கவை சுமாரான வசதி படைத்தவர்களாலும், மிகவும் திராபையான வஸ்துக்கள் மிகவும் வசதி படைத்தவர்களாலும் தரப்படும். இதில் கொடுமை என்னவென்றால் இரண்டு வீட்டுக்கும் ஒரே நாள் போனால், விலையுயர்ந்தவை வசதிபடைத்தவர்கள் தந்தார்கள் என்றும், சுமாரானவை சுமாரானவர்களால் தரப்பட்டவை என்றும் பொருள் கொள்ளப்படும். ஆனால், புது பட்டுபுடைவை, நகைகள் கட்டாயம் உண்டு. துபாயில் நல்லி, பார்த்தாஸ்ஸில் பட்டுப் புடைவைகள் கிடைக்கும்.

அந்தக்காலத்தில் என் அம்மாவும் ஒவ்வொருமுறையும் என் அப்பாவிடம் திட்டுவாங்கிக் கொலு வைப்பார். அப்பாவின் மாத பட்ஜெட்டில் வாழைப்பழம் வாங்க ஐந்து ரூபாயாவது ஒதுக்க வேண்டுமே! நான் ஒவ்வொரு முறையும் மூக்கால் அழுது கொண்டே வீடுவீடாய்போய் அழைத்துவிட்டு வருவேன். சின்னப் பிள்ளைகளுக்கு பொட்டுக்கடலையைப் பொடி செய்து சர்க்கரை கலந்து ஒரு பொட்டலம் தரப்படும். பெரியவர்களுக்கு மட்டும் வாழைப்பழம், வெற்றிலை(இரண்டு), பாக்கு. சில நாள்தான் சுண்டல் செய்யப்படும். கொலு முடிந்த மறுநாள் டி.நகர், திருவல்லிகேணி, மைலாப்பூருக்குப் போய் மூட்டைக்கட்டிக் கொண்டிருக்கும் வியாபாரிகளிடம் பேரம்பேசி பொம்மைகள் சீப்பாய் வாங்கலாம்.

எங்கள் வீட்டில் எல்லாரும் ஒளரங்கசீப் பரம்பரை. ஆனால் அம்மாவுக்குப் பாடுவது மிக விருப்பமானது. ஆனால் முறைப்படி பாட்டு கற்றுக் கொள்ளவில்லை. வீட்டிலும் பாடிவிட்டு, அழைத்த வீடுகளிலும் பிகு செய்து கொள்ளாமல் பாடுவார்கள். ஐந்தாவது வகுப்பு படிக்கும்பொழுது என்னை அழஅழ இழுத்துக்கொண்டுப் போய் பாட்டு கிளாஸ்சில் சேர்த்தார்கள். எனக்கோ ச, ரி, க, ம வில் வரும் க வும், த வும் வாயில் நுழையவில்லை. பாட்டு டாச்சரே வெறுத்துப் போய் என்னை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். பிறகு அம்மாவே தன்அறுபதாவது வயதில் முறைப்படி பாட்டு கற்றுக்கொண்டு இரண்டு முறை தொலைக்காட்சியில் பாடும் அளவு தேர்ச்சி பெற்றார். இப்பொழுதும் நவராத்திரி, பக்கத்து கோவில்களில் விசேஷம் என்றால் என் அம்மாவின் பாட்டு கட்டாயம் உண்டு.

பரிதாபம்

கஜேந்திரா படத்தின் திருட்டு சிடி வெளியிட்டவர்கள் விஜயகாந்த் மேல் பயங்கரக்கடுப்பில் இருக்கிறார்களாம். அந்தளவு அவர்களுக்கு நஷ்டம். இந்த மாதிரி சொதப்பல் கதையை எப்படித்தான் வி.காந்த் தைரியமாய் எடுத்தாரோ ? நம்ம டாக்டர் ஐயா முழு படத்தையும் பார்த்திருப்பாரா ? என்னால் திரை விமர்சனத்தில் வரும் சில காட்சிகளையே பார்க்க முடியவில்லை. பறந்து பறந்து சண்டை, ஆகாயத்தில் நின்று நிதானமாய் எதிரியை அடிப்பது அப்படியே ஹாலிவுட் ஸ்டைல் காப்பி! சகிக்கவில்லை. இமேஜ், இந்த சுழியில் மாட்டிக்கொண்டவர்கள் கதி அதோ கதிதான். பாபாவும் இதே பிரச்சனையால் ஓடவில்லை. இப்ப சந்திரமுகி ? நம்ம இளைய தளபதி, அஜீத்க்கும் இதே பிரச்சனைதான். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் வரிசையில் பாகிஸ்தான் சினி வோர்ட் என்பது லாலிவுட்!

சந்திரமுகி, மலையாளப் படமான ‘மணிச்சித்திரத்தாழு ‘ என்ற மலையாளப் படத்தின் தழுவல் என்றுச் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் ஹீரோயினிக்கே அதிக வாய்ப்பு. அதனால்தான் சோஷபனாவிற்கு தேசிய விருதுக் கிடைத்தது. சுரேஷ் கோபி அவர் மனைவியான ஷோபனாவிற்கு பேய் பிடிக்கிறது. அதை மலையாள மாந்தீரீகர் திலகனும், ஆங்கில மருத்துவர் மோகன்லாலும் எப்படி பேயை ஓட்டுகிறார்கள் என்பதுதான் கதை. ஆனால் நம்மாட்கள் இதை ரஜினிக்காக எப்படி உல்டா செய்வார்கள் என்று நினைத்தால் பயமாய்தான் இருக்கு! நாயகியாய் ஐசு ஓ.கே. சிநேகாவுக்கு சிரிக்கத்தான் தெரியும். சிம்ரன் ப்சு!

கண்ணில் விழுந்தது

ஹிந்தி அல்லது உருதுவில் ஷேர்(Sher) என்பது மிக பிரபலம். நம்ம நவீனகவிதை/ஹைகூ மாதிரிதான். பார்ட்டி என்றால் யாராவது இதைச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். சொன்னதும் கூட்டம் வாஹ்! வாஹ்! என்றதும் சொன்னவர் சலாம் போடுவார். பள்ளி பிள்ளைகளும் சகட்டுமேனிக்கு ஷேர் சொல்லும். இதற்கு இலக்கணம் வார்த்தைகள் எதுகைமோனையுடன் இருக்க வேண்டும். நாலைந்துவரிகள்தான். சோகம், தத்துவம், நகைச்சுவை, காதல் எல்லாவற்றிலும் ஷேர் உண்டு.

பார்த்தது

நேர்காணலில் சமூகசேவகர் சங்கர்பாபா என்பவர் பேசிக் கொண்டிருந்தார். இவர் உருவாக்கியதுதான் கிளாசிக் குடும்பம். இது சென்னைக்கு அருகில் சோழிங்க நல்லூரில் இருக்கிறது. ஆனால் என். ஆர். ஐ பெற்றோர்களால்தான் இங்கு தங்கும் அளவு செலவழிக்கமுடியும். நீச்சல் குளம், அனைத்து விளையாட்டுகளையும் விளையாடும் வசதி, வெளி சினிமா தியேட்டர்கள், அறையில் ஏசி, கம்ப்யூட்டர், டி.வி போன்று அனைத்து வசதியும் உண்டாம். அதற்கேற்ற கட்டணம். அவர் சொன்னது முதியோர் இல்லம் என்று ஏழைகளுக்கு இருக்கின்றன, ஆனால் போதாது. வசதியானவர்களுக்கு இதுவும், கோவையில் ஒன்று மட்டுமே உள்ளது என்றார்.

இதுபோல இன்னும் நிறைய வரவேண்டும். கூட்டு குடும்பம் என்ற அமைப்பே சிதறிவிட்டது, வரும் காலத்தில் முதியோர் இல்லம்தான் நமக்கு. அப்பார்ட்மெண்ட், நாலு சுவர்களுக்குள் தொலைக்காட்சியே கதி என்று இருப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை. மகனும், மருமகளும் வேலைக்குப் போய்விடுவார்கள். பிள்ளை பள்ளியில் இருந்துவந்தால் அந்த டியூஷன், இந்த டியூஷன். பேச கூட ஆள் இல்லாமல், மன அழுத்தத்தில் தவித்துப் போகிறார்கள். இன்றைய முதியவர்கள் சராசரியாய் மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் மருந்து, மாத்திரை விழுங்குகிறார்கள். மளிகைக்கடையில் அக்கவுண்ட் இருக்கோ இல்லையோ மருந்துக்கடையில் கட்டாயம் உண்டு.

‘நாகமண்டலா ‘ கன்னடப்படம். நாயகன் பிரகாஷ்ராஜ், நாயகி பிரண்ட் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாய் வந்த விஜியலட்சுமி. பாம்பையே தெய்வமாய் வழிப்படும் நாயகி. மனைவியைச் சட்டை செய்யாத நாயகன். இரவானதும் பாம்பு கணவனாய் மாறி அவளுடன் குடும்பம் நடத்துகிறது. கணவனுக்கு சந்தேகம் வந்து பஞ்சாயத்து வைத்து மனைவியை நடத்தை கெட்டவன் என்கிறான். மனைவி பாம்புப்புற்றில் கையைவிட்டு நாகத்தைக் கையில் எடுத்து, என் கணவன், இந்த நாகராஜனைத்தவிர எந்த ஆண்மகனையும் தொட்டதில்லை என்று சத்தியம் செய்கிறாள். நம்ம ராமநாராயணன் கதையேதான். பிரகாஷ்ராஜ்ஜூம், விஜியும் மிக நன்றாய் நடித்திருந்தார்கள். பேச்சு, உடை, சண்டை, காட்சி அமைப்பு எல்லாவற்றையும் பீரியட் படமாய் மாற்றியிருக்கிறார்கள். இப்படம் ஆர்ட் டைரக்டர் ‘சசிதர் அடபா ‘ அவர்களுக்கு நிறைய விருதுகளை வாங்கிக் கொடுத்துள்ளது. படுக்கையறைக் காட்சிகள் கொஞ்சம் நெளிய வைத்தது.

‘மேகம் மல்ஹார் ‘ என்று ஒரு மலையாளப்படம். பீஜூ மேனன், சம்யுக்தா வர்மா நடித்தது. நடு வயதுக்காரர்களாய் மிகச் சிறப்பாய் நடித்துள்ளனர். பீஜூமேனனின் அமரிக்கையான நடிப்பு, அதுமாதிரி தமிழில் யார் என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். நம்ம ஆளுங்களுக்கு நடிப்பதைவிட, நடிகன் என்ற பிரபல்யத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று மட்டுமே ஆர்வம். இனி தொலைக்காட்சித் தொடரில் நாம் தினமும் சந்திக்கும் நடிக, நடிகைகளுக்கும் இந்த ஆசை வரலாம்!

ரசித்தது

நேற்று லூலூ ஹைபர் மார்கெட்டில் ( சூப்பர் மார்கெட் விட பெரியது) பில் போடும்பொழுது, பக்கத்தில் ஒரு ஐரோப்பிய பெண்மணியில் டிராலி நிறைய சாமான்கள். எல்லார் கண்களும் அதற்கு மேல், பார்த்ததும் சின்னப் புன்னகை முகத்தில். வண்டியில் நிறைய பூனைகளுக்கான டின் உணவு வகைகள், பிற சாமான்கள். டின் மேல் அழகாய் பூனைக்கால்கள்! தாங்காமல் எத்தனை பூனை வளர்க்கிறீர்கள் என்று கேட்டுவிட்டேன். இரண்டுதான், ஆனால் அதற்கு நிறைய நண்ப, நண்பிகள்., தினமும் வீட்டுக்கு வரும். அவைகளுக்கும் போடுவதற்கென்று வாங்குகிறேன் என்றார். என் மகன் அந்த பூனைகளை விசாரித்ததும், அவைகளைப்பற்றி சொல்ல ஆரம்பித்துவிட்டார். அது என்னவோ, பெற்ற பிள்ளைகள் மேல் வரும் பாசத்தைவிட இந்த வளர்ப்பு மிருகங்கள் மேல், அதிக பாசம் வந்துவிடுகிறது.

தோழியர் வலைப் பதிவு

17- 10- 2004

Ramachandranusha@rediffmail.com

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா