எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2

This entry is part of 51 in the series 20041007_Issue

பி.கே. சிவகுமார்


(தமிழின் மறுமலர்ச்சி – நூற்களஞ்சியம்: தொகுதி – 2 – பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை – வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், ‘வையகம் ‘, 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28.)

முன் குறிப்பு: நூலின் ஆசிரியர் சொல்கிற கருத்துகளை சில இடங்களில் அப்படியேயும் சில இடங்களில் என் மொழியிலும் தந்திருக்கிறேன். ஆங்காங்கே என் கருத்துகளும் உண்டு. என் கருத்துகள் சொல்லப்படும் இடங்கள் எவை என்பது தெளிவாகப் புரியுமாறு அமைத்திருக்கிறேன்.

**** **** ****

ஏறக்குறைய 443 பக்கங்கள் உடைய இந்த நூலின் கட்டுரைகள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

1. தமிழின் மறுமலர்ச்சி

2. சொற்கலை விருந்து

3. சொற்களின் சரிதம்

4. நிகண்டுகள்

5. அகராதி

தமிழின் மறுமலர்ச்சியில் 17 கட்டுரைகளும், சொற்கலை விருந்தில் 16 கட்டுரைகளும், சொற்களின் சரிதத்தில் 10 கட்டுரைகளும், நிகண்டுகளில் 5 கட்டுரைகளும், அகராதியில் 5 கட்டுரைகளும் உள்ளன.

**** **** ****

தமிழின் மறுமலர்ச்சி:

நூலின் தலைப்பைக் கொண்ட இக்கட்டுரையில் தாய்மொழி மீது இருக்கிற அன்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்று சொல்கிற பேராசிரியர் தமிழில் காணப்படுகிற பல்வேறு வகையான மொழிசார்ந்த வாதங்களையும் (இஸங்களையும்), அவற்றின் நன்மை, தீமைகளையும் விளக்குகிறார்.

முழுமுதல்வாதம்:

ஒருவர் தாய்மொழிமீது பேரன்பு கொண்டிருத்தல் இயற்கை. மொழிகள் அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டும் வளர்ந்து கொண்டும் வருகிற இயல்புடையன. இவ்வளர்ச்சிக்கு மொழிமீதான அன்பு தடையாக இருந்தால் அது நெறிதவறிய அன்பாகும். தன் குழந்தையைக் கெடுக்கிற நோக்கமுள்ள தாய், குழந்தையின் முன்பாகவே குழந்தையைவிட மிஞ்சிய அழகும் அறிவுமுள்ள இன்னொரு குழந்தை கிடையாது என்று சொல்வது போன்றது தமிழுக்கு முழுமுதல்தன்மை கற்பித்து அதைவிடச் சிறந்த மொழி கிடையாது என்று சொல்வது. குழந்தைக்கு உணவு கொடுக்காமல் அதன் அழகைப் புகழ்ந்தால் மட்டும் குழந்தை வளர்ந்து விடாது. அப்படி, தமிழின் வளர்ச்சிக்கு உதவுவனவற்றைச் செய்யாது அதன் தொன்மையையும் பெருமையையும் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் தமிழ் வளர்ந்துவிடாது என்கிறார் பேராசிரியர்.

உதாரணமாக,

எல்லாப் பொருளும் இதன்பாலுள, இதன்பால்

இல்லாத எப்பொருளும் இல்லையால்

என்று திருக்குறளுக்கு ஒருவர் எழுதிய சிறப்புப் பாயிரத்தைக் காட்டுகிறார். இத்தகைய பாடல்கள் இக்காலத்தில் சிரிப்பை வரவழைக்கக் கூடியன. இது திருக்குறளின் பெருமையை எடுத்துக் காட்டுவதாகாது. இத்ககைய மனப்பாங்கு தமிழர்களுக்கு இருத்தலாகாது என்கிறார் பேராசிரியர்.

தமிழ் செம்மொழி, தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்கிற மொழி அரசியல் இன்னும் நடந்து கொண்டிருக்கிற இச்சூழலில் பேராசிரியரின் இக்கருத்துகள் ஊன்றி கவனிக்கப்பட வேண்டியவை.

உதாரணமாக, இணையத்தை எடுத்துக் கொள்ளலாம். இணையத்தில் நான் பார்த்த அனைவருக்கும் அபரிதமான தமிழ்ப்பற்று இருக்கிறது. நல்ல விஷயம். ஆனால் அந்தப் பற்று பெரும்பாலும் உணர்வு சார்ந்த ஒன்றாக நின்றுபோய் ஒரு மட்டத்துக்கு மேல் தானும் வளராமல் மொழியையும் வளரவிடாமல் செய்துவிடுகிறது என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழ் உயிருக்கு நேர், தமிழ் உலகைவிட மேல் என்கிற வெற்றுக் கோஷங்கள் எதற்கு உதவும் ? தமிழின் மீது உண்மையான அக்கறை ஊறுகிற பலரும்கூட இத்தகைய கோஷங்களை முழங்குவதும், தமிழின் பெருயையைப் பறைசாற்றுவதும் மட்டுமே தமிழுக்கு ஆற்றுகிற தொண்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் தெரிந்து செய்வதில்லை என்பது உண்மை.

தூயதமிழ்வாதம்:

முழுமுதல்தன்மை வாதத்துடன் நெருங்கிய தொடர்புடையது தூயதமிழ்வாதம். பேச்சிலும் எழுத்திலும் தூய தமிழ்ச் சொற்களையே புழங்குதல் வேண்டும் என்பது இவ்வாதம். பேசும்போதும் எழுதும்போதும் சொல்லப்படும் கருத்துக்கும் அதன் தன்மைக்கும் ஏற்ற சொற்களைப் பயன்படுத்துவதே முறையாகும். இவை தமிழ்ச் சொற்களா, பிற மொழிச் சொற்களா என்ற ஆராய்ச்சியில் இறங்குவது எழுத்தாளரின் வேலை அல்ல. அது மொழிநூற் புலவரின் (Philologist) வேலை. தூய தமிழ்ச் சொற்களை உபயோகிக்க வேண்டிய இடமும் உண்டு. பிறமொழிச் சொற்களை உபயோகிக்க வேண்டிய இடமும் உண்டு. தகுதியறிந்து சொற்களை ஆளுவதுதான் சிறந்த முறையாகும்.

தூயதமிழ்வாதம் பெரும்பாலும் வடமொழியை (சம்ஸ்கிருதம்) நோக்கி எழுந்தது. தூயதமிழ்வாதிகள் வடமொழிச் சொற்களைத் தவிர ஏனைய சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்று கருதுகிறார்கள். மொழியாராய்ச்சி பயின்றவர்கள் அங்ஙனம் சொல்ல மாட்டார்கள். தமிழ் மக்கள் வடநாட்டாரோடு பிற நாட்டாரோடும் தொடர்பு கொண்டிருந்தார்கள். பிறநாட்டுச் சொற்களும் தமிழில் கலந்துள்ளன.

உதாரணமாக, பின்வரும் தொல்காப்பிய சூத்திரத்தைப் பாருங்கள்.

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை

இதிலே ‘ஓரை ‘ என்பது கிரேக்கச் சொல். இப்படிப்பட்ட பல பிறநாட்டுச் சொற்கள் பண்டைத் தமிழில் இருத்தல் வேண்டும். அவற்றை இப்போது இனம்காணவோ, வரையறுக்கவோ இயலாது. ஆராய்ச்சிகள் அதிகமாக, அதிகமாக காலப்போக்கில் அவற்றை வரையறுக்க இயலக்கூடும்.

இத்தகைய பிறமொழிச் சொற்களை எல்லாம் நீக்கியபின் எஞ்சிய சொற்களைத்தான் தூயதமிழ்ச் சொற்கள் என்று சொல்ல முடியும் என்கிறார் பேராசிரியர். அத்தகைய தூய தமிழ்ச் சொற்கள் அளவில் குறைவானவையாகவே இருக்கும். அவற்றைக் கொண்டு எவ்வகையானக் கருத்துகளை வெளியிட முடியும் என்றும் கேட்கிறார் பேராசிரியர். தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது, நாகரிகம் அடைந்த ஒருவன் மிருகப் பிராயமான நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்கு ஒப்பானது என்கிறார்.

தூயதமிழ்வாதிகள் சிலநேரங்களில் ஆவேசம் கொண்டு வடமொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்கள் என்பர். இதற்கு உதாரணமாக, காப்பியம், நாடகம் ஆகிய சொற்களைப் பேராசிரியர் காட்டி விளக்குகிறார்.

கடைசியாக, தூயதமிழ்க் கட்சியோடும் போர் புரிந்து எப்பொழுதும் வளர்ச்சியே குறித்து நிற்கும் தமிழின் பெருநலத்தைப் பேணுமாறு தமிழ் மக்கள் முயலுதல் வேண்டும் என்றும் வேண்டுகிறார்.

மேற்கண்ட கருத்து மட்டுமல்லாமல், நூல் முழுக்கவே பேராசிரியரின் கருத்துகளின் தெளிவும் தர்க்கமும் சான்றுகளும் துணிவும் என்னை வியக்க வைக்கின்றன. 1947ல் மொழி சார்ந்த உணர்வுவாதங்களும் திராவிட வாதமும் வளரத் தொடங்கிய காலத்திலேயே பேராசிரியர் வைத்திருக்கிற் அறிவியல்பூர்வமான வாதங்களைத் தமிழர்கள் முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்ட பழியே தமிழ் நாட்டில் மொழி சார்ந்த அரசியலை திராவிட இயக்கங்கள் வளர்க்கவும் அதன்மூலம் அரசாளும் வாய்ப்பு பெறவும் காரணமாயிற்று. தமிழும் தமிழ்நாடும் அதனால் நலிவுற்றன என்பது என் கருத்து.

பழந்தமிழ்வாதம்:

‘தூயதமிழ் என்பது தேவையில்லை. ஆனால் பிற்காலத்தில் சேர்ந்துள்ள வடமொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் தமிழின் அழகைக் கெடுத்துவிட்டன. தமிழும் அதனால் எளிமையாகிப் போனது. எனவே, பழந்தமிழ் நடையில் பழந்தமிழ் சொற்களைப் புழங்கி, தமிழின் பெருமை, செறிவு ஆகியவற்றைக் காட்டுதல் வேண்டும் ‘ என்று சிலர் கூறுவர். இதைப் பழந்தமிழ்வாதம் என்று சொல்லலாம்.

இதை ஏற்றுக் கொள்வதென்றால், முதலில் பழந்தமிழ் என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். பழந்தமிழ் என்பது சங்க நூல்களும் அவற்றின் தமிழும் மட்டுமா ? நாயன்மார்கள், ஆழ்வார்கள் அருளியது பழந்தமிழில் சேருமா ? பின்னர்த் தோன்றிய காவியங்கள், பிரபந்தங்கள் ஆகியவையும் பழந்தமிழ் ஆகுமா ? இப்படித் தோன்றுகிற பல கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினம்.

உதாரணமாக, தற்காலத்துக்கு உரிய பொருளை இறையனார் களவியல் உரையின் நடையில் எழுதுவது அருமையாய் இருக்கும். விநோதமாகவும் இருக்கும். சிறு குழந்தையாக இருக்கும்போது தைத்த உடை ஒன்றை வளர்ந்து பெரிய ஆளானபின் அணிந்தால் அது அளிக்கிற நகைச்சுவைக்கு ஒப்பது இது.

(இணையத்தில் வெண்பா எழுதி மகிழ்கிற காட்சி இந்த இடத்தில் ஏனோ என் நினைவுக்கு வருகிறது. இந்த வரி யாரையும் தனிப்பட்டுக் குறிப்பிடாமல் நிலவுகிற ஒரு போக்கைச் சொல்லவே பயன்படுத்தப்படுகிறது. எந்த வாசிப்பிலும் வாசிப்பவர்க்கு அவர் அறிவு அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஒத்த காட்சிகள் வாசிப்பினூடே தோன்றுவது இயற்கை. அத்தகைய ஒத்த காட்சிகள் சரியா தவறா என்ற விவாதம் எப்போதும் இருக்கும். என் வாசிப்பின்போது எனக்குத் தோன்றிய ஒரு காட்சியை இங்கே சொல்லியுள்ளேன். தனிப்பட்ட விமர்சனமென்று யாரேனும் தவறாக எடுத்துக் கொண்டால், என்னை மன்னிக்கவும்.)

ஒரு மொழியின் சொற்கள் அம்மொழி பேசும் மக்களின் அனுபவத்துக்கு அறிகுறி. பழந்தமிழை மட்டுமே பயன்படுத்தி, அதன் பின்னர் நிகழ்ந்த அனுபவங்களை உணர்த்தும் சொற்களைப் புறக்கணித்துவிடுதல் கூடாது. பழந்தமிழ் கட்சியினரின் கொள்கை பரவுமானால், தமிழ் மொழியும் வடமொழி போல வழக்கொழிந்து போவதற்கு இடமுண்டு என்கிறார் பேராசிரியர்.

பழஞ் சொற்களில் வழக்கொழிந்து போனவற்றை நீக்கிவிட்டு, உயிருள்ள சொற்களோடு காலத்துக்கேற்ற புதுச் சொற்களும் கலந்து தமிழ் வளம் பெற வேண்டும் என்பது முன்னோர்களின் கருத்து. ‘கடிசொல் இல்லை காலத்துப் படினே ‘ என்ற தொல்காப்பியச் சூத்திரம் இதனையே சொல்கிறது. சொற்களைப் போன்று மொழி நடையும் காலத்துக்கு காலம் மாறுபடும். அதை அறிந்து தற்காலத்துக்கு உரிய நடையைக் கையாளுதலே சிறப்பு. ஆகவே, பழந்தமிழ்க் கட்சியோடு போர்புரிந்து தமிழ்மொழி என்றும் புதுநலத்தோடு விளங்குமாறூ தமிழ்மக்கள் பணிபுரிய வேண்டும் என்கிறார் பேராசிரியர்.

இலக்கணவாதம்:

பழந்தமிழ் வாதத்துடன் சேர்ந்து ஒன்றாகக் கவனிக்கத்தக்கது இலக்கணவாதம். இவ்வாதிகள், பல நூற்றாண்டுகளுக்கு முன் அமைந்த இலக்கண வரம்பை இன்றும் நாம் கைவிடக் கூடாது என்பர்.

உதாரணமாக, சொல்லின் புணர்ச்சி இலக்கணம்.

‘கடல்தாவு படலம் ‘ என்பது ‘கடறாவு படலம் ‘ என்று புணர்ந்து வரும். இதிலுள்ள சந்தி, இலக்கணத்துக்கும் பொருளுணர்ச்சிக்கும் அவசியம் என்று முற்காலத்தில் கருதப்பட்டது. அதேபோல, ‘சொல்லுதல் தவறு ‘ என்பது ‘சொல்லுதறவறு ‘ என்று சிலரால் எழுதப்படுகிறது. இது தேவை இல்லாத சந்தியாகும். ஆனால், இத்தகைய சந்திகளைக் கைவிடுவது தவறு என்று இலக்கணவாதம் கூறும்.

அதேபோல், ஒவ்வொரு வாக்கியமும் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் போன்ற வாக்கியத்தின் உறுப்புகள் அமையப் பெற்றிருக்க வேண்டும் என்றும் இலக்கண வாதம் சொல்லும்.

தொல்காப்பியரது பேரிலக்கணம் தோன்றி ஏறத்தாழ 1500 ஆண்டுகள் ஆகிவிட்டன. நன்னூல் தோன்றி ஏறத்தாழ 700 ஆண்டுகள் ஆகிவிட்டன. தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பு புகுந்த வழக்குகளில் பல நன்னூலில் இடம்பெறவில்லை. அப்படியே நன்னூலுக்குப் பின் வந்த வழக்குகளும் பலவாக இருக்க வேண்டும். அவற்றை ஆராய்ந்து தெளிந்து எழுதிய இலக்கண நூலே இல்லை. நாம் நன்னூலைத்தான் இப்போதும் கற்று வருகிறோம். ‘உரையிற் கோடல் ‘, ‘மிகை ‘ ஆகிய வழக்குகளைக் கடந்து எத்தனையோ புதிய வழக்குகள் உள்ளன.

இடத்துக்கு இடம் மாறுபடுகிற வழக்குகளும் உண்டு. யாழ்ப்பாண வழக்குகள் தமிழ் நாட்டவர்க்கு விளங்காமல் இருக்கும். தஞ்சாவூர் வழக்கு தென்தமிழ் நாட்டவர்க்கு விளங்காது. முன்னோர்கள் ஆண்ட வழக்குகள்தாம் வழக்குகள். பின்னர்த் தோன்றியன வழக்குகள் ஆகா என்று சொல்வது சரியில்லை. இங்கே ஊன்றி கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். அது, எவ்வளவு சிறந்த இலக்கண நூல் என்றாலும், பிற்காலம் முழுமைக்கும் பொருந்துமாறு அவ்விலக்கணம் அமைந்துள்ளது என்று சிறிதும் கூற இயலாது. இதைப் புரிந்து கொண்டால் இலக்கணவாதம் வலிமையற்றது என்று காணலாம்.

முற்கால இலக்கணப்படி எழுதுவது திருப்தியாக இருக்கும். ஆனால், எழுத்தில் உயிர்த் தத்துவம் தெரிய வேண்டுமென்றால், அது உலக வழக்கையும் பேச்சு வழக்கையும் ஒட்டி அமைவதாக இருக்க வேண்டும். இலக்கணத் தத்துவம் வேறு. உயிர்த் தத்துவம் வேறு. இலக்கணம் ஓர் எலும்புச் சட்டகம். உயிரிருந்தால் அன்றி அதற்கு இயக்கமில்லை. இவ்வாறு சொல்வதால், இலக்கண நியதியின்றி எழுதுவது சரி என்கிற அர்த்தமில்லை. இலக்கணமும் வேண்டும், உயிர்த் தத்துவமும் வேண்டும். இலக்கண நியதியின் எல்லை அக்கால வழக்கினைப் பொறுத்தது. ஆனால், வழக்குச் சொற்களும் பேச்சு நடையும் தமிழ் மொழிக்கு முக்கியமானது. தமிழ் ஓர் உயிருடைய மொழியாக நின்று நிலவுவது இவ்விரண்டினால்தான். இலக்கணக் கட்சியோடு போராடி, அதனையும் தனக்கு அனுகூலமக்க மாற்றிக் கொள்ள தமிழ் முயல வேண்டும்.

தமிழ்ப் பேராசிரியராக இருந்து இத்தகைய நவீன மனப்பான்மையை அந்தக் காலத்திலேயே வையாபுரிப் பிளளை கொண்டிருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் சூழலில் (ஏன் கணிசமான அளவுக்கு இன்றைய சூழலில் கூட) இது ஒரு புரட்சிகரமான மனப்பான்மையாகும். தமிழ் மரபின் செழுமைகளை முன்னெடுத்துச் செல்கிற அதே நேரத்தில் பழையன கழித்த நவீனத்தின் தேவையை பாரதிக்குப் பின் பாரதி அளவுக்கு உணர்ந்தவராக அவர் எனக்குத் தெரிகிறார்.

முழுமுதல்வாதம், தூயதமிழ்வாதம், பழந்தமிழ்வாதம், இலக்கணவாதம் ஆகியன தமிழைப் பற்றிக் கொண்டு தோன்றிய வாதங்கள் என்கிற பேராசிரியர், அடுத்ததாக பிறமொழிகளின் சார்புபற்றித் தோன்றிய வாதங்களையும் அலசுகிறார்.

(தொடரும்)

http://pksivakumar.blogspot.com

Series Navigation