முப்பதாண்டு கால முயற்சி

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

புதுவை ஞானம்


முயற்சி திருவினை ஆக்கும் என்பது முதுமொழி. முப்பது ஆண்டு காலம் ஒரு மனிதனின் மனதில் சில கேள்விகள் தொடர்ந்து தங்கி இருந்தன என்பதே ஒரு வியப்பான விஷயமாகத்தான் இருக்கிறது. மறப்பதுதானே மனிதனின் இயல்பு.

‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி

மயில் குயில் ஆச்சுதடி ‘

என்ற வள்ளலாரின் பாடலில் தான் முதல் சந்தேகம் உருவாயிற்று. (இது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னேயே நடந்த சம்பவம்) அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இந்தப் பாடலை வடலூரில் திரு அருட்பா பாராயண கோஷ்டி ஒன்று பாடிக்கொண்டு சென்றதை காதால் கேட்டேன். மயில் எப்படிக் குயிலாகும் ? வகுப்பில் தமிழாசிரியரைப் போய்க்கேட்க அவருக்கு தருமசங்கடமாகி பொருள் புரியாத கோபத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டு ‘உன்னை எவன்டா (Out of Portion) பாடப்புத்தகத்தில் இல்லாததை எல்லாம் படிக்கச் சொன்னது ? ‘ என்ற கேள்வியோடு ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார். வாழ்க அவரது தமிழ் பற்று ‘.

நானோ விடுவதாக இல்லை வடலூருக்கு வந்து பாராயணம் பன்னும் எல்லா பக்த தோழர்களிடமும் கேட்டுப் பார்த்தேன். உயர் நிலை பள்ளித் தமிழாசிரியருக்கும் பக்தர்களுக்கும் தான் தெரியவில்லை. பின்னர், உத்தியோகம் கலை இலக்கியத் தொடர்புகள் என் ஆகி பல தமிழ் பேராசிரியர்கள் நட்பு கிடைத்தது என் பாக்கியம். (என்னையும் இவர்கள் கூடவே பார்த்துப் பார்த்து ‘இப்போது எந்த கல்லூரியில் இருக்கிறீர்கள் என பலத்தோழர்கள் கேட்பதும் உண்டு. நான் கல்லூரிப் படியை மிதிக்க வசதி இல்லாமல் உத்தியோகம் தேடியவன் என்பது பாவம் அவர்களுக்குத் தெரியாது. ) கேள்வியோ தொடர்ந்து முள்ளாக உறுத்திக்கொண்டே இருந்தது. தற்செயலாக, என்பது கூட தவறு எனது நல்ல கெட்ட பழக்கம் எல்லாம் பஞ்சாயத்து போர்டு குப்பைவண்டி மாடுபோல் பழைய புத்தகக் கடையைக் கண்டால் நின்றுவிடுவதுதான். அப்படி ஒரு கடையில் திருவலம் சாமியார் பற்றிய வாழ்க்கை வரலாறு கிடைத்தது. பரணிதரன் போல் யாரோ ஒருவர் எழுதியது.

படித்துக் கொண்டே போகையில் வேலூரைச் சேர்ந்த திராவிடக் கழகத்தார் ஒருவர் சாமியாரை வம்புக்கிழுக்க இதே கேள்வியைக் கேட்டு இருக்கிறார். அந்தத் துறவியோ பிறப்பால் ஒரு சலவைத் தொழிலாளி பள்ளிக்கூடத்தில் மழைக்குக்கூட ஒதுங்காதவர் அவர் சொன்னாராம்,

மயில் என்பது சோதி வடிவம்

குயில் என்பது நாத வடிவம்

‘நேற்று வரை சோதி வடிவில் ஆண்டவனைத் தரிசித்த தான் இன்றுமுதல் நாத வடிவில் அவனைக் காண்கிறேன் ‘ என்பது அதற்குப் பொருளாம். இதைச் சாதாரணமாக அறிவியல் பார்வையில் அவரது துய்த்தல் (தரிசனம்) என்பது சோதிவடவன் இருந்தது, என்பதை Visual என்பதாகவும், நாத வடிவில் இருந்தது என்பதை AUDIO எனவும் எடுத்துக் கொள்ளலாம் என்றபோதிலும் இன்னும் ஆழமான (Spiritual) ஆன்மீகப் புரிதலில் Clair Vision மற்றும் Clair Audiance எனப்படும் ‘ஞான திருஷ்டி ‘ எனவும் ‘அசரீரி ‘ எனவும் அதாவது நுட்பமான புலன் உணர்வுக்கு மட்டும் அல்லது புலன் கடந்த Subliminal உணர்வு எனவும் புரிந்து கொள்ள இயலும் – இதையே இன்னும் சற்று ஆழமாகப் போய் Exoteric – Esoteric எனப்பேசப்படும் மறைப் பொருள் ஆய்விற்குள் நுழைந்தால் விவிலியத்தில் (BIBLE) வரும் ‘ஆதியில் ஒரு சப்தம் இருந்தது ‘ என்ற PRIMORDIAL SOUND – PRIMORDIAL MATTER என்ற ஆதிபொருள் – ஆதி ஒலி (ஆதிமூலம்) என்றும் புரிந்து கொள்ளலாம். விரிவாகத் தெரிந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் Madam blawaksky – ன் Secret Doctrine என்ற நூலைப் படிக்கவும்.

ஒருவருக்கு நிறைய மொழிப்புலமை இருக்கலாம். நிறைய நிறையத் தகவல்கள் தெரியலாம். இவற்றை அறிவு என்பார்கள். இந்தத் தகவல்களே ‘ஞானம் ‘ ஆகிவிடாது. அது உள்ளார்ந்த அனுபவத்தால் மட்டுமே கிட்டும். சரிதானே ?

‘வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்

வீடுதோரிறந்தும் பசியறாதயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைந்தேன்.

நீடியபிணியால் வாடுகின்றோர் என்

நேருரகண்டுளம் துடித்தேன் ‘

இதுவும் வள்ளலார் பாடியதுதான் வாடியப்பயிரைக் கண்டு வாடியதும் அதன் பொருளும் எல்லாருக்கும் தெரியும்தான். ஆனால் வீடுதோரிறந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் என்பதற்கு மிக ஆழமான கலாச்சாரப் பரிமாணம் உண்டு. தமிழ்நாட்டுத் தாய்மார்கள் உயர்ந்த கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள். பிச்சைக்காரன் பிச்சை வேண்டி வந்தால் இல்லை என்று சொல்லாத மனப்பண்பு கொண்டவர்கள். எனவே ‘இல்லை ‘ என்று சொல்லாமல் ‘அடுத்தவீடு பார் ‘ என்று தான் சொல்லுவார்கள். என்னைப் போன்ற ஒரு பிச்சைக்காரனுக்கு, ஒவ்வொரு தாய்மாரும் அடுத்த வீடுபார் என்று சொல்ல நான் தெருவின் கடைக்கோடி வீட்டுக்குள்ளிருந்தும் அதே ‘அடுத்த வீடு பார் ‘ என்ற வசனம் கேட்டு பிச்சைக்கேட்க அடுத்தாற் போல் வீடே எதுவும் இல்லை என்றால் மனநிலை என்னவாகும், என்பதை நினைத்துப் பாருங்கள் இப்போது புரியும் அந்த வரிகளின் ஆழமும் அர்த்தமும்.

அப்படியெல்லாம் மனிதர்களின் வறுமையையும் நோய்க்கொடுமையையும் பாடிய வள்ளல் இந்த வறுமை நோயை வளர்த்தெடுக்கும் கந்து வட்டிக் கொடியவர்களை எப்படிச் சாடுகிறார் பாருங்கள்.

‘வட்டி மேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்

வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்

பெட்டிமேல் பெட்டி வைத்தாள் கின்றீர்-வயிற்றுப்

பெட்டியை நிரப்பிக் கொண்டொட்டியுள் இருந்தீர்

பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்

பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்

எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிவேல் கிளைத்தீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே ? ‘

வட்டி மேல் வட்டி கொள்கின்றீர் என்பது புரிந்துவிட்டது. வட்டிக்கு வட்டி போடும் கூட்டு வட்டி அதாவது COMPOUND INTEREST.

பின்னால் வருகின்ற;

‘வட்டியை வளர்க்கும் மார்க்கத்தை அறியீர் ‘ என்ற வரியில் வரும் ‘வட்டி ‘ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன ? ஏற்கனவே சொன்ன அதே கசப்பான அனுபவங்களே தொடர்ந்தன.

ஒரு மலையாளி நண்பர் மாவேலி ஜாப்சன் என்பது அவர் பெயர். அவர் நான்காவது படிக்கும் போதே வீட்டைவிட்டு ஓடிவந்து சென்னையில் ரொட்டி சுடும் பேக்கரியில் எடுபிடி ஆளாகச் சேர்ந்தவர் தமிழ் கற்று கவிதைகள் நாவல் என எழுதி ஒரு பத்திரிக்கை கூட நடத்தினார் அவரோடு தற்செயலாகப் பேசிக்கொண்டிருக்கையில் அவர் கேட்டார். தமிழர்களாகிய நீங்கள் பயன்படுத்த மறந்துப்போன பல நல்ல தமிழ்ச்சொற்கள் இன்னும் மலையாளத்தில் புழக்கத்திலிருக்கிறது, தெரியுமா ? என்று. ஆமாம், போடுவதைத்தவிர வேறு என்னச் செய்யமுடியும்.

அப்போது அவரிடம் கேட்டேன் ‘மலையாள அகராதி வைத்திருக்கிறீர்களா ? ‘

‘ஏன் ? ‘ என்றார்.

‘வட்டி என்ற வார்த்தைக்கு என்னென்ன பொருள் தந்திருக்கிறார்கள் என்று பாருங்கள் ‘ என்றேன். உடனே எடுத்து வந்து படித்தார். Interest என்ற பொருளோடு கூடவே தட்டு, வயிறு என்ற பொருளும் தரப்பட்டு இருந்தது. (****)

ஓகோ….

வட்டியை வளர்க்கின்ற மார்க்கம் என்றால் வயிறு வளர்க்கின்ற மார்க்கம். நாம் வயிறு வளர்ப்பது போல் பிழைப்பு நடத்துவது அல்ல அந்த வரியின்பொருள் (நம்மில் எத்தனைப் பேர் வாழுகிறோம் எத்தனைப் பேர் பிழைக்கிறோம் என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயமாகவே எனக்கு எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது)

‘அந்த வரியின் உண்மைப் பொருள் பசிப்பிணியைப் போக்குவது ஆகும். ‘

அடுத்த கேள்விக்கு போவோம்….

**** சப்ததாராவளி P1516 : வட்டி = தழை, புல்லு, பனையோலை முதலாய கொண்டு நெய்து உண்டாக்கின பாத்திரம், கூடை, அரிவட்டி, கடவட்டி, வயிறு வட்டி பிடிச்சவன் கடன் வீட்டுக, கிடைக்கு நின்னவன் உத்திரவாதம் ஏற்குண்ணுக. வாய்க்கு நாணமில்லை வட்டிக்கு விசப்பில்லை.

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்