மனவெளி கலையாற்று குழுவினரின் 11வது அரங்காடலின் தோல்விக்குக் காரணம் என்ன ?

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

சுமதி ரூபன்


ஜீலை 18ம் திகதி இடம்பெற்ற 11வது அரங்காடல் நிகழ்வைத் தொடர்ந்து 25ம் திகதி மாலை அந்நிகழ்விற்கான விமர்சனக்கூட்டம் இடம் பெற்றது. கடந்த அரங்காடல் நிகழ்வுகளின் விமர்சனக்கூட்டத்திற்கு சமூகமளிக்கும் விமர்சகர்களை விட மிகக்குறைவான விமர்சகர்களே 11வது அரங்காடல் விமர்சனக்கூட்டதில் கலந்து கொண்டிருந்தார்கள். கலைஞுர்களின் பங்களிப்பே அதிகமாக இருந்தது.

கனடாவில் கோயில்களைப் போலவே கலை நிகழ்வுகளும் தடக்கி விழும் இடமெல்லாம் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன. இந்நிகழ்வுகள் அனைத்தும் ஜனரஞ்சகமாக ஒருநாள் பொழுதைக் களிக்கும் கேளிக்கை நிகழ்வுகளாக இடம் பெறுவதால்> முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞுர்கள் சிலர் கூடி மக்கள் சிந்திக்கும் வகையில் சீரிய நாடகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆரம்பிக்கப்பட்டது இந்த மனவெளி கலையாற்று குழு. ஆரம்பத்தில் சிறிய மண்டபத்தில் குறைந்த பார்வையாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அரங்காடல் காலப்போக்கில் ஜனரஞ்சகக் கலைஞுர்களையும் சீரிய நாடகம் பார்க்கத் தன் வசம் கவர்ந்து இழுத்துக் கொண்டு பிரமாண்டமான மண்டபத்தில் நிகழ்வுகளை நடாத்தத் தொடங்கி வெற்றியும் கண்டது. இருந்தும் கெடந்த சில ஆண்டுகளாக மனவெளி கலையாற்று குழுவிற்குள் விஷக்கிருமிபோல் அரித்துக்கொண்டிருக்கும் உள் அரசியல் பல நல்ல கலைஞுர்களை இந்த அமைப்பில் இருந்து விலக்கியும்> விலகவும் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து சீரிய நாடக அமைப்பு என்ற தரத்தில் இருந்து சிறிது சிறிதாக விலகி ஓர் இரு ஜனரஞ்சக நாடகங்களையும் இணைத்துக்கொள்ளத் தொடங்கியது. பல பார்வையாளர்கள் விமர்சகர்கள் கொதித்துக்கொண்ட போதிலும் மனவெளி கலையாற்று குழுவின் உறுப்பினர்கள் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதாய் தமக்குச் சார்ந்த வண்ணம் விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கினர்.

கடந்த ஆண்டு உள் அரசியல் உச்சம் கண்டு பல கலைஞுர்கள் வெளியேறி விட 11வது அரங்காடல் நிகழுமா என்ற சந்தேகம் பலருக்கு. இருந்தும் எஞ்சியிருந்த சிலர் நாடகத்தை நடாத்திக் காட்டுகிறோம் பார் என்பதாய் அவசரஅவசரமாக தமக்கு எட்டியவர்களை அழைத்து மொத்தமாக 5நாடகங்களையும் ஒரு நடன நிகழ்வையும் இரு காட்சிகளாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடாத்தி முடித்தனர். இது மணவறையில் திருமணம் நின்று விட்டால் பெண்ணின் பெற்றோர் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காய் தமது பெண்ணிற்கு சிறிதும் பொருந்தாத ஒரு வயதானவனையோ> அல்லது ஒரு குடிகாறனையோ அவசரஅவசரமாகப் கட்டிக் கொடுப்பது போல் இருக்கிறது.

மோதல் காரணமாக 11வது அரங்காடலை நிகழ்த்திக் காட்டுகிறோம் பார் என்பதாய் நிகழ்வு இருந்ததால்> மனவெளி கலையாற்று குழு ஏன் ? எதற்காக ? ஆரம்பிக்கப் பட்டது என்பதை உறுப்பினர்கள் மறந்து பத்தோடு பதினொன்றாக நிகழும் நிகழ்வுகளைப் போல் நடாத்தியது மட்டுமல்லாமல் தாம் பெரிதாகச் சாதித்து விட்டோம் என்ற உவப்பில் திளைப்பதுதான் கவலைக்கிடமாக உள்ளது.

11வது அரங்காடல் முற்றிலும் தோல்வியாக அமைந்திருந்திருந்தும்> விமர்சனக்கூட்டத்தில் பல காரசாரமான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தும்> வழமைபோல் குழுவினர் புன்சிரிப்புடன் இவையனைத்தும் தனிப்பட்ட தாக்குதல் என்பதாய் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு> விமர்சனங்கள் பலவிதமாய் வரும்> ஆனால் நாங்கள் நல்ல ஒரு நிகழ்வை வெற்றிகரமாக நாடாத்திவிட்டோம் என்பது போல் அமர்ந்திருந்தது வேதனையாகவே இருந்தது. அதுமட்டுமல்லாது பல மூத்த கலைஞுர்கள் இந்த நாடகநிகழ்விற்குப் பின்னர் பலரின் கடுமையான உழைப்பு இருக்கிறது.. அதை நாம் பாராட்ட வேண்டும்> எவ்வளவோ சிரமத்திற்கு மத்தியில் இவர்கள் இந்த நிகழ்வை நாடாத்தி முடிந்திருக்கின்றார்கள்> விமர்சகர்கள் எழுந்தமானமாய் ஒட்டு மொத்தமான தோல்வி என்று கூறிவிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்கள். கனடாவில் ‘கானமும் காட்சியும ‘>; ‘மின்னலே ‘> ‘வசீகரா ‘ என்று சினிமா பாடலுக்கு நடனமாடும் பல நிகழ்வுகளும் இரண்டாந்தர நகைச்சுவை நாடகங்களும் வருடா வருடம் மண்டபம் நிறைந்த பார்வையார்களுடன் மேடையேறிவண்ணம் இருக்கின்றன. அவர்கள் நிகழ்வுகளுக்குப் பின்னாலும் பலரின் உழைப்பு இருக்கத்தான் செய்கின்றது.. அவர்களையும் நாங்கள் ஊக்கு வித்து வேண்டுமானால் ஒரு சினிமா பாடலுக்கு நடனம் ஆடவிட்டுப் போகலாமே.. முற்போக்காக> மனிதர் சிந்திக்கும் வகையில் சீரிய நாடகங்களை மேடையேற்ற வேண்டும் எற்ற எண்ணம் எதற்கு ?

மனதிற்று ஆறுதல் தரும் வகையில் விமர்சனக் கூட்டத்தின் நிறைவில் மனவெளி கலையாற்று குழுவின் உறுப்பினர் ஒருவர்> நல்ல தரமான சீரிய நாடகங்களைப் பார்க்கவேண்டும் எனில் நீங்கள் பா.அ.ஜெயகரனின் நாடகங்களையும்> ஞுானம் லம்பேட்டின் நாடகங்களையும் பாருங்கள்> நாங்கள் இப்படியான ஜனரஞ்சக நாடகங்களைத்தான் தொடர்ந்து மேடை ஏற்ற உள்ளோம் என்று தன் இயலாமையை மனம் திறந்து கூறியது வரவேற்றகக் கூடியதாக இருந்தது. ‘சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும் ‘;. ஆனால் தொடர்ந்து வரும் நிகழ்வுகளின் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளருக்கு நாம் வித்தியாசமான சீரிய நாடகங்களை மேடை ஏற்றுகிறோம் என்ற குறிப்பை அறிவிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சுமதி ரூபன் (கனடா)

ssmith@ieccan.com

Series Navigation

சுமதி ரூபன்

சுமதி ரூபன்