மனத்துக்கண் மாசிலனாதல் – ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ நாஞ்சில் நாடன் கட்டுரை நூல் அறிமுகம்

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

பாவண்ணன்


இக்கட்டுரைத் தொகுதியில் பதினெட்டு கட்டுரைகள் உள்ளன. கதையிலக்கியத்துக்கே உரிய புனைவுமொழியும் நடையும் சித்தரிப்புத்தன்மையும் கிட்டத்தட்ட ஒரு கதைத்தொகுதியைப் படிக்கிற உணர்வையே இக்கட்டுரைகள் தருகின்றன. படித்து முடித்தபிறகு பற்பல சின்னச்சின்ன சம்பவங்கள் மனத்தில் மிதந்தபடி உள்ளன. சொகுசுப் பேருந்தின் முன்னால் தேங்காய் முறி பொறுக்கும் முதியவரின் சித்திரத்தையும் விலைப்பட்டியலைப் பார்த்து ‘அளவுச் சாப்பாட்டுக்குச் சொல்லலாமா ? ‘ என்று பேசிக்கொள்ளும் தந்தை,மகன் சித்திரத்தையும் ( ‘பைசைக்கிள்ஸ் தீவ்ஸ் ‘ படத்தின் ஒரு காட்சி உடனடியான நெஞ்சில் புரள்கிறது. இதேபோல தந்தையும் மகனும் தொலைந்துபோன சைக்கிளை நாள்முழுக்கத் தேடியலைந்துவிட்டு களைப்புடன் ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்து கைவசம் இருக்கும் பணத்துக்குள் தோதாக எதைச் சாப்பிடலாம் என்று எதைஎதையோ பேசி இறுதியில் கையில் உள்ள பணத்துக்குத் தகுந்தபடி பிட்ஸா வாங்கிச் சாப்பிடும் காட்சியின் உருக்கம் இந்த நிஜ சித்திரத்திலும் உள்ளது) ‘நம் நிலத்தில் படிகிற காற்றுக்கும் மழைக்கும் வெயிலுக்கும் காசா கொடுக்கிறோம். சிதறிக்கிடக்கிற நெல்மணிகளை உண்டு புழுபூச்சிகளும் உயிர்த்திருக்க வேண்டாமா ? ‘ என்று மகனை வழிப்படுத்தும் தந்தையின் சித்திரத்தையும் எளிதில் மறக்க முடிவதில்லை.

நாஞ்சில் நாடனுடைய மிகப்பெரிய பலமான நயமான மொழிப்பயன்பாடு இந்த நுாலிலும் பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறது. ‘திங்கள்மேல் கைநீட்டும் யானையின் நிலைதான் எனக்கும் ‘ என்று அவர் தன்னை முன்னிலைப்படுத்திச் சொன்னாலும் அநேகமாக பல படைப்பாளிகளின் நிலையும் அதுதான். இந்த வரி என் வாழ்வில் சந்தித்த ஒரு பெரியவரின் சித்திரத்தை மன ஆழத்திலிருந்து மீட்டெடுக்கவைக்கிறது. வயதானவர் அவர். தர்மஸ்தலாவுக்கு நடந்துசென்றுகொண்டிருந்தார். ஏறத்தாழ எழுபது மைல்களை நடந்தே கடந்தவர் ஓய்வுக்காக ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். அருகில் இருந்த ஊரில் நடந்துகொண்டிருந்த வேலையை ஆய்வுசெய்துவிட்டு எங்காவது தேநீர்க்கடை இருக்காதா என்று நடந்துவந்த நானும் ஓய்வுக்காக அந்த மரத்தடியில் ஒதுங்கினேன். முதலில் மெளனமாகவே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். பிறகு பேசினோம். அப்போதுதான் அவர் தர்மஸ்தலாவுக்கு நடந்துசெல்வதைப்பற்றிச் சொன்னார். ‘இன்னும் எழுபதோ எண்பதோ கிலோமீட்டர் தொலைவிருக்குமே ‘ என்று இழுத்தேன். ‘ஆமாம், நடந்துசெல்லவேண்டும் என்பது என் ஆசை, சங்கல்பம். முடிகிற வரை நடப்பேன். இனியும் முடியாது என்கிற நிலையில் அங்கேயே தரையில் விழுந்து மகாதேவா என்று கும்பிட்டுவிட்டு திரும்பிவிடுவேன் ‘ என்று பளிச்சென்று சிரித்தார். அந்தச் சிரிப்புதான் ‘யானையின் நிலைதான் எனக்கும் ‘ என்று நாஞ்சில்நாடன் எழுதியிருப்பதை வாசிக்கும் போது ஞாபகம் வருகிறது. எங்கள் ஊர்ப்பக்கத்தில் ‘மயிரைக்கட்டி மலையை இழுப்பது என்பார்கள். வந்தால் மலை. போனால் வெறும் மயிர்தானே, போகட்டும் ‘ என்பார்கள். அவர் குறிப்பிடுவதைப்போல முயற்சி முக்கியம் என்னும் உணர்வே அனைவரையும் உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது. இருபது இட்லியைத் தின்றுவிட்டு ஏப்பம் விடுபவனையும் நாலு இட்லியை ரசித்துத் தின்பவனையும் முன்வைத்து நாஞ்சில் நாடன் சொல்கிற வசனமும் ‘அது என்ன புட்டுக்கு மாவிடிக்கிற இயந்திரமா ? ‘ என்று கேலியுடன் சொல்கிற வசனமும் ‘பொரிக்கவே விதியற்ற முட்டையை எத்தனை காலம் அடைகாப்பது ? ‘ என்று ஆதங்கத்துடன் எழுதிய வாக்கியமும் ‘நமக்கு வாய்த்திருக்கும் நல்ல தன்மைகளை அற்ப சுகங்களுக்காக இழக்க நாம் தயாராக இல்லை ‘ என்று சமநிலையைக் காப்பாற்றும் வைராக்கியத்துடன் எழுதிய வரியும் மறக்கவியலாத குறிப்புகள்.

தொகுப்பில் மிகமுக்கியமான கட்டுரை ‘சமூகம்-தனிமனிதன்-உறவுகள் ‘. சமூகம் எவ்வளவு அழுக்கு நிறைந்ததாக மாறியுள்ளது என்று ஒருபக்கம் குமுறலோடு சுட்டிக்காட்டியபடியும் அந்த அழுக்கையெல்லாம் கொண்டுபோய் கொட்டியது நாம்தானே என்று உணரவைத்தபடியும் எழுதிச்சென்று முற்றுப்புள்ளியாக இந்த எல்லா அழுக்குகளும் பொதிந்த பாரத்துக்கு எதிரே நிற்கும் படைப்பாளியின் அறம் சார்ந்த நிலைபாட்டை அறிவிக்கும் நிலை விரும்பிப் படிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ‘என் சிறுகதைகளின் பின்புலம் ‘, ‘நானும் என் எழுத்தும் ‘, ‘எனது நாவல் அனுபவங்கள் ‘ என்று எழுதப்பட்டுள்ள எல்லாக் கட்டுரைகளும் ஏதோ ஒருவகையில் எழுத்துக்கும் படைப்பாளிக்கும் இருக்கிற உறவைச் சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன. உயிர்ப்பித்தலைப்பற்றிய அவரது குறிப்பு மிகமுக்கியமானதானகத் தோன்றுகிறது. ‘வாழக்கையைப் புரிந்துகொண்டேனா அல்லது அது இன்னும் தொடங்கவே இல்லையா ‘ என்கிற தத்தளிப்பும் முக்கியமானதாகவே தோன்றுகிறது. தத்தளிப்புகளின் துரத்தலே ஒரு படைப்பாளியின் பயணம். அதை அவன் தொடர்ந்து மேற்கொள்வதற்கான சக்தியை ஊட்டுவதற்காக உயிர்ப்பிக்கும் ஆற்றல். ஒன்றுடன் ஒன்றை பொருத்திப்பார்க்கும்போது அர்த்தம் செறிந்ததாக உள்ளது. கதைகளின் வழியாக வாழ்வின் அர்த்தத்தை அறிந்துகொள்ளும் பயணத்தின் சுவடுகளை வண்ணதாசன் கதைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்போதும் தமிழினியின் கருத்தரங்கக் கட்டுரையில் தேவையான கதைகளை ஆய்வுக்கு எடுத்துககொள்ளும்போதும் அறிந்துகொள்ள முடிகிறது.

‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ கட்டுரை ரசிக்கும் விதத்தில் எழுதப்பட்ட படைப்பு. மதுப்பழக்கத்தைப்பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் இதுவரை எழுதியதில்லை. ஒரு பட்டத்தை வானிலேற்றி அதை வானத்தின் எல்லையில் நீந்தியபடி இருக்க லாவகமாக நுாலை முன்னும் பின்னும் இழுத்தபடியும் நகர்ந்தபடியும் முயற்சியெடுப்பதைப்போல இக்கட்டுரையும் மெள்ளமெள்ள அதன் உச்சத்தை அடைந்து நிலைநிற்கும் விதம் மறக்கவியலாதபடி அமைந்துள்ளது. கடற்படை நண்பருடன் மதுவைப் பகிர்ந்துகொள்ளும் சொந்த அனுபவத்துடன் தொடங்குகிறது இக்கட்டுரை. ‘சிறிய கட்பெறினே எமக்கீயும் மன்னே பெரிய கட்பெறினே யாம்பாட தாம்மகிழ்ந்துண்ணும் மன்னே ‘ என்பதுபோல மதுவைப் பகிர்ந்து அருந்தும் மற்றொரு நண்பரைப்பற்றிய குறிப்பை வாசிக்கும்போது மதுசார்ந்து உருவாகும் உற்சாகம் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்து அவர் மரணமடைந்தார் என்கிற துக்கக் குறிப்பை வாசிக்கும்போது வடிந்துவிடுகிறது. மங்களூர்க்காரனைப்பற்றிய குறிப்பிலும் மாமனார் பற்றிய குறிப்பிலும் ஒலிக்கும் குறுநகை வாசிப்பவர்களையும் குறுநகை கொள்ளவைப்பவை. திருப்பூர் பேருந்தில் ஏற்றிவிடச் சொல்லும் பெரியவரை ஏற்ற ஒவ்வொரு பேருந்திலும் செய்யும் முயற்சிகளும் மனைவி இல்லாத நேரத்தில் ஜன்னல், கதவு எல்லாவற்றையும் சாத்திவைத்துக்கொண்டு மது அருந்தும் வீட்டுக்கதவைத் தட்டி கல்கி வார இதழைக் கேட்டபடி அடுத்த வீட்டுச் சிறுமி வருவதும் இறங்கவேண்டிய ஸ்டேஷனைத் தவறவிட்ட போதைக்காக வருந்தியபடி நள்ளிரவை வேறொரு ஸ்டேஷனில் நடந்தபடி கழித்தவண்ணம் ‘ஐஸா க்யோன் ? ‘ என்று மனசாட்சியைக் கேட்டுக்கொள்கிற சம்பவமும் ஒரு சிறுகதைக்கு உரிய வகையில் சொல்லப்பட்டுள்ளன. இறுதியாக மகனைப்பற்றிய குறிப்பில் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா ‘ என்கிற ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் உறுதியை வாசிக்கும்போது பெருமிதமாகவே உள்ளது.

பொதுவாக யாரும் அறிவுரைகளும் நலவுரைகளும் சொல்லப்படுவதை காதுகொடுத்துக் கேட்கவோ விரும்புவதில்லை. கேட்டாலும் சொன்ன ஆள் நகர்ந்ததும் சொல்லப்பட்ட அறிவுரைகளை வேறொரு தொனியில் கிண்டலாக மாற்றிச்சொல்லி நகைச்சுவையாக மாற்றிவிடுவார்கள். இக்கட்டுரையின் இறுதியில் இரண்டு பத்திகள் நீளும் அளவுக்கு இருபது வரிகளில் சொல்லப்பட்டுள்ள நலவுரை யாராலும் புறக்கணிக்கப்பட முடியாத அளவுக்கும் மனத்துக்குள் உள்வாங்கி அசைபோடும் அளவுக்கும் உள்ளது என்பது இக்கட்டுரையின் மிகப்பெரிய வெற்றியாகவே தோன்றகிறது.

நாம் மேற்கொள்வது வாழ்க்கைப்பயணமாக இருந்தாலும் சரி, எழுத்துப்பயணமாக இருந்தாலும் சரி மனத்துக்கண் மாசிலனாதல் மிக முக்கியமானது என்பதே கட்டுரைத்தொகுப்பின் சாரமாக உள்ளது. தொடக்கக் கட்டுரையொன்றிலும் இப்படி ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது. அதை தன்னால் இயன்றவகையில் எல்லாக் கோணங்களிலிருந்தும் படைப்பாற்றல் நிறைந்த புனைவு மொழியுடன் நாஞ்சில் நாடன் நிறுவிக்காட்டுகிறார்.

( நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று – நாஞ்சில் நாடன் , வெளியீடு: யுனைடெட் ரைட்டர்ஸ், 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86. விலை. ரூ 55)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்