ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

ஜெயமோகன்


ரவிசீனிவாஸ் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சிற்றிதழ்களில் எழுதுவதை கவனித்து வருபவன் நான். அதேபாணி கட்டுரைகளையே இப்போதும் அவர் திண்ணையில் எழுதி வருகிறார் . அன்றெல்லாம் சில அறிவியல் சார் துறைகளில் புதிய தகவல்களை சொல்பவர் என்ற முறையில் அவர் மீது எனக்கு சற்று ஆர்வம் இருந்தது. இணையம் அறிமுகம் ஆன பிறகு தகவல் தொகுப்பாளர்கள் குறித்த என் மதிப்பு மிகவும் சரிந்து விட்டது. பல சமயம் அரைகுறைத் தகவல்கள் மூலம் அவர்கள் நம்மை குழப்புகிறார்கள், தவறாக வழிநடத்துகிறார்கள் என்பதே உண்மை.திண்ணையில் அவர் எழுதும் கட்டுரைகள் அப்படிப்பட்டவையே.

இப்போது இலக்கியம் பற்றி ரவிசீனிவாஸ் திண்ணையில் எழுதும் கருத்துக்களுக்கு பதிலளிப்பது எனக்கு மிக சோர்வூட்டும் விஷயம். சம்பந்தப்பட்ட தளங்களில் எளிய புரிதல் உடைய ஒருவர் இக்கேள்விகள் ஏராளமாக விவாதிக்கப்பட்டுவிட்டவை என்பதை அறிவார். இலக்கிய விவாதங்கள் எப்போதுமே முன்பு விவாதிக்கப்பட்டவற்றின் தொடர்ச்சியாக மட்டுமே நிகழ முடியும். ரவிசீனிவாஸ் கேட்கும் பலவிஷயங்கள் நானே ஏராளமாக பேசியவை. ரவிசீனிவாஸ் பெரிய தர்க்கங்களாக எழுதும் விஷயங்கள் அடிப்படை அறியாதவரின் விதண்டாவாதங்கள் . அவை இத்தளங்களில் அறிமுகம் குறைவானவர்களை குழப்பக் கூடுமென்பதனால் அவ்வடிப்படைகளை மட்டும் சொல்லி வைக்கலாம் என எண்ணுகிறேன்.

அ] இலக்கியத்துக்கும் பிற அறிவுத்துறைகளுக்கும் இடையேயான வேறுபாடு என்னவென்றால் இதில் புறவயமான மெய்காண்முறை இல்லை என்பதே. இலக்கியம் உருவாக்கும் உண்மை எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையேயான ஓர் அந்தரங்க தளத்தில் உருவாகிவருவது . அதைப்பற்றிய எல்லா கருத்துக்களும் அகவயமானவையே. ஓர் இலக்கியக் கருத்தை உண்மை என நிரூபிக்க முடியாது, பொய்ப்பிக்கவும் முடியாது

ஆ] ஆகவே எந்த ஒரு இலக்கியக்கருத்தும் சொல்பவனின் கோணத்தை வெளிப்படுத்துவது என்ற அளவிலேயே முக்கியமானது . இது என் கோணம் , இந்த கோணத்தில் நீங்களும் பார்த்துப் பாருங்கள் என்பதே இலக்கியம் குறித்த எப்பேச்சிலும் உள்ள பொதுவான பாணி. அப்படிப் பார்ப்பவர் தன் பார்வைக்கு உபரியாக ஒரு பார்வையையும் அடைகிறார் என்பதே அதன் பயன் .

இ] இலக்கியம் சார்ந்த எல்லா கருத்து நிலைகளும் மறுக்கப்பட்டுள்ளன. மறுதரப்பு இல்லாத ஒரு கருத்துக்கூட இலக்கியத்தின் முன்வைக்கப்பட்டதில்லை. மறுக்கப்படுவதே நியதி. மறுக்கப்படுவதனால் அவை பொய்யென ஆவதில்லை. தங்கள் மாற்றுக் கருத்துக்களுடன் சேர்ந்தே அவை பொருள்படுகின்றன. அதாவது ஒரு இலக்கிய மதிப்பீடு என்பது பல்வேறு கோணங்களின் சந்திப்பு மூலம் உருவாக கூடிய ஒன்று.

ஈ] இலக்கியத்தில் பிற அறிவியல்துறைகளில் உள்ள புறவய நிரூபண முறைகளை ஓரளவேனும் செயல்படுத்த வாய்ப்புள்ள விமரிசன முறை கல்வித்துறையில் உள்ள தகவல்சார்ந்த ஆய்வுமுறை மட்டுமே . ஆனால் அவை இலக்கியத்துக்கு மதிப்பீடுகளை முன்வைப்பதில்லை . பிற தளம் சார்ந்த விமரிசனங்கள் எல்லாமே விமரிசகனின் அவதானிப்புகள் மட்டுமே. அத்தகைய பல அவதானிப்புகள் மூலமே ஒரு சமூகம் ஒரு படைப்பை எதிர்கொள்கிறது.

உ] மொழியாலும் கலாச்சாரத்தாலும் இலக்கியப்படைப்பு உருவாக்கப்படுகிறது , அவற்றாலேயே அது படிக்கவும் படுகிறது. அந்த உரையாடலில் கூறப்படுவதற்கும் கேட்கப்படுவதற்கும் இடையே எப்போதுமே ஓர் இடைவெளி இருக்கிறது. அதுதான் இலக்கியப்படைப்பு ஓயாது விவாதிக்கப்பட காரணமாக அமைகிறது . இலக்கிய விமரிசனம் எழுதப்படுவதே அந்த இடைவெளியை நிரப்பும் முயற்சியினால்தான்

ஊ] இலக்கியப்படைப்பு மொழிசார்ந்த குறியீடுகள், உட்குறிப்புகள் மற்றும் படிமங்களிலான ஓர் அகவய அமைப்பு என்று சொல்லலாம். வாசகனின் கற்பனையில்தான் படைப்பு உருவாகிறது. வாசிப்பு மூலமே அது முழுமையடைகிறது. வாசிப்பு அதை புதிதாக படைத்தபடியே இருக்கிறது .ஒரே படைப்பை ஒருவர் படித்தது போல பிறிதொருவர் படிக்க முடியாது . அத்தனை பேரின் படிப்பிலும் ஒரேபோல இருந்துகொண்டிருக்கும் ஓர் அம்சம் உள்ளது . ஒரு வாசகன் அவனுக்கென மட்டுமே கண்டடையும் ஓர் அம்சமும் உள்ளது .

எ]அப்படியானால் எப்படி பேரிலக்கியம் ,நல்ல இலக்கியம் , தீய இலக்கியம் என்ற பிரிவினை சாத்தியம் ? அதை விவாதித்து, நிரூபித்து நிறுவுவது சாத்தியமே அல்ல. ஆனால் தொடர்ந்து அப்பிரிவினை நடைமுறையில் நிகழ்ந்து கொண்டும் வருகிறது. படைப்பின் மீதான தொடர்ந்த பலதரப்பட்ட பார்வைகள் மூலம் , ஒரு முரணியக்க விளைவாக , மதிப்பீடுகள் உருவாகி வருகின்றன. ஒரு காலகட்டத்தில் யாருமே மதிக்காத, அறியாத படைப்புகூட பேரிலக்கியமாக மெல்லமெல்ல வடிவம் கொள்ளலாம். ஆகவேதான் காலமே சிறந்த விமரிசகன் எனப்படுகிறது.

*****************************

இனி ரவிசீனிவாஸ் குழப்பும் இடங்களைப்பற்றி:

அ] தன் எழுத்துக்கள் முழுக்க அவர் ‘ ‘ நிரூபணம் எங்கே ? ‘ என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறார் . ஏன் சில வரிகளுக்குமட்டும் அக்கேள்வியை எழுப்பவேண்டும் ? எல்லா வரிகளுக்கும் அதை கேட்கலாமே ? என் கட்டுரை இப்படி துவங்குகிறது ‘ தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால் சுஜாதாவில் இலக்கிய இடம் அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப் படவோ இல்லை. அக்காரணங்களை நமது கலாச்சாரத்தின் அரசியல் பின்புலத்தில் வைத்து விரிவாக விவாதிக்கவேண்டியுள்ளது. ‘ இதில் ஒவ்வொரு வரியையும் தனித்தனியாக நிரூபிக்க கோரலாமே ? இந்தியச் சிறுகதைகளை முழுக்க முதலில் பட்டியல்போடவேண்டும். பட்டியல் போடப்படும்போதே சிறுகதைகள் வெளியாகிக் கொண்டிருக்கும் என்பதனால் நாடு முழுக்க இதற்கென இரவுபகலாக உழைக்கும் ஊழியர்களை நியமித்து சென்னையில் தலைமை அலுவலகம் ஒன்றை அமைத்துக் கொள்ளவேண்டும். தமிழ்ச் சிறுகதைகள் அனைத்தையும் இதேபோல சேகரிக்கவேண்டும். ஒவ்வொரு தமிழ்ச் சிறுகதையையும் ஒவ்வொரு இந்தியச் சிறுகதையுடனும் ஒப்பிட்டு ஆராய வேண்டும். மட்டுமல்ல, ஒவ்வொரு சிறுகதையும் எப்படி மற்ற அத்தனை சிறுகதைகளில் இருந்தும் மேம்பட்டது என்று நிரூபிக்க வேண்டும். [அப்படி நிரூபிப்பதை இந்தியாவின் நூறுகோடி மக்களில் பெரும்பான்மையோர் ஏற்க வேண்டுமா என்ன ? நிரூபித்து விட்டார் என முடிவு செய்பவர் யார் ? குழப்பமாக இரூக்கிறது] ஏறத்தாழ ஆயிரம் கோடி காம்பினேஷன்கள் இருக்கலாம். இவற்றை ஆராய அறுபதுகோடி பேர் முழுநேரம் வேலைசெய்தாக வேண்டும். நூறுவருடம் வரை ஆகலாம். செலவை ட்ரில்லியன்களில் குத்துமதிப்பாக சொல்ல ஒருவார அவகாசம் வேண்டும் , மன்னிக்கவும். இப்படியே அடுத்தவரியை ஆராயவேண்டும். படிப்படியாக கட்டுரையின் எல்லா வரிகளையும் . புறவய நிரூபணம் தேவை அல்லவா ? கட்டுரையில் உள்ள எந்த வரியுமே அப்படி நிரூபிக்க படாதவை அல்லவா ?

இ] ரவி சீனிவாஸ் நமது இந்திய கல்வி முறையில் படித்து வந்தவர். நமக்கு வெள்ளையன் ஆங்கிலத்தில் சொன்னதே உண்மை. மேற்கோள் சேகரிப்பே ஞானத்தேடல். ‘கூகிள் ‘ தான் போதிவிருட்சம். அப்படி பார்க்கும்போது எலியட் சொன்னதை எஃப்.ஆர் லூயிஸ் மறுக்கிறார்[ எலியட்டுக்கு ஆங்கிலமே ஒழுங்காக தெரியாது என்கிறார் அன்னார்] அவர்கள் இருவரும் சொன்னதை ரோலான் பார்த் மறுக்கிறார். பார்த் சொன்னதை தெரிதா மறுக்கிறார். தெரிதாவை சாம்ஸ்கி மறுக்கிறார். ஆகவே கடைசியாக யார் சொன்னார்களோ அதுதான் உண்மை. ஆனால் உலகம் மிக பெரிது . நாம் உறங்கும்போது மறுபக்க பூமி விழித்திருக்கிறது. ஒரே வழி உறங்காமல் இருபத்திநாலு மணிநேரமும் ஒருவர் கூகிள் தேடியும் கையுமாக விழித்திருக்கவேண்டும். நொடிக்கு நொடி அக்கணத்துக்குரிய நவீனக் கருத்துக்களை அவர் கூவி அறிவிக்கவேண்டும் [ கடைசி செய்தி ! பிரதி இல்லை ஆசிரியன் இல்லை ஆசிரியனின் மச்சான் மட்டுமே உண்டு என்று ஜெர்மனியில் சொல்லிவிட்டார்கள். இதோ மின்னல் செய்தி !!! நெதர்லாந்திலே ழாக் தெரிதா அவுட்!!!! ]

ஈ] இலக்கியப்படைப்புகள் பாடமாகவோ பிற வடிவிலோ சமூகப் பொதுவான வாசிப்புக்கு ஆளாகும்போது அவற்றுக்கு ஒரு குறைந்தபட்ச அர்த்த தளத்தை நிர்ணயிக்கிறார்கள். அதை அப்படைப்பின் ‘கடைசி ‘ அர்த்தமாக ‘உறுதிப் ‘ படுத்தும் வெகுளித்தனம் ரவி சீனிவாஸ் காட்டுவது. உருசுலாவின் கதை பழையது.பாடமாக அமைவது. அதன் மீதான வாசிப்புகள் ஏராளமானவை. இன்னும் முப்பது ரக வாசிப்புகளை நானே இணையம் மூலம் தேடி தரமுடியும். ரவி சீனிவாஸ் தருவது அதில் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட எளிய வடிவை. வாசகன் கவனிக்க வேண்டிய எளிமையான விஷயம் , அடைபட்டு கிடப்பது ‘ஒரு மனிதன் ‘ அல்ல. ஓமெல்லாஸ் மக்களில் ஒரு பிரதிநிதி அல்ல . ஒரு குழந்தை. கதையில் உள்ள குழந்தைத்தன்மை பற்றிய வரிகளுக்கு வேறு பொருளே இல்லை. என்னுடைய வாசிப்பு கதையின் மைய உணர்வையும் , அதன் எல்லாக் கூறுகளையும் கணக்கில்கொண்ட வாசிப்பு . என் சூழலில் நின்றபடி நான் செய்யும் வாசிப்பு . இதுவே எனக்கு சரியானது . [ என் கட்டுரையில் அக்கதையில் அறிவியல் கற்பனைக்கூறு இல்லை என்று சொல்லவே அதை விவாதித்திருந்தேன்]. மாற்று வாசிப்புகள் இயல்பானவை. அவை கதையின் எல்லா கூறுகளையும் பொருட்படுத்தியிருக்கவேண்டும் என்பதே நான் முக்கியமாக கணிப்பது.

ரவி சீனிவாஸின் வாசிப்பு முறை எளியது , நம்பகமானது, முற்றிலும் புறவயமானது. மாக்பெத் போன்ற கிளாஸிக்கை எப்படி வாசிப்பது ? இணையத்தில் நான்காயிரத்துக்குமேல் விமரிசனக் கட்டுரைகள் கிடைப்பதாக கேரள விமரிசகர் நெல்லிக்கல் முரளிதரன் எழுதியிருக்கிறார். நாலாயிரத்தையும் கூர்ந்து வாசிப்பது. அவற்றின் வாசிப்புக் கோணங்களை தனித்தனிப் பட்டியல்களாக ஆக்குவது . எந்த பட்டியலில் அதிகமான பேர் இருக்கிறார்களோ அதை ஏற்பது. மற்றதெல்லாம் கடுமையாக எதிர்க்கப்படவேண்டியவை. இதை ஆங்கிலத்தில் ‘ டேட்டா அண்ட் கொட்டெஷன் ஓரியண்டட் நியோ ரீடிங் மெதடாலஜி ஆஃப் லிடரேச்சர் ‘ என்றும், தமிழில் ‘ கோனார் முறை ‘ என்றும் அறிஞர்கள் சொல்வார்கள்.

சரி புதிய படைப்பை எப்படி படிப்பது ? அதைப்பற்றி யாராவது வெள்ளைக்காரன் ஏதாவது சொல்வ்து வரை பொறுமையாக இருப்பதுதான். வேறென்ன ?

**

ரவி சீனிவாஸின் பிரச்சினை என்னவென புரியாமல் இல்லை . ஒவ்வொரு காலகட்டத்திலும் யாராவது ஒருவர் இப்படி என்னைப்பற்றி ஏதாவது எழுதுவது உண்டு. பொருட்படுத்தும்படி அவர் ஏதாவது சொல்வது வரை காத்திருக்கிறேன். அதுவரை அவருக்கு இதுதான் என் கடைசி பதில்.

***

jeyamohanb@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்