ஒரு புளிய மரத்தின் கதை – ஒரு காலங்கடந்த பார்வை

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

ஸ்ரீதரன்


முன்னுரை.

சுந்தர ராமசாமி (சுரா) அவர்களை, டொரான்டோ நண்பர்கள் செல்வம், மகாலிங்கம் மற்றும் கலாநிதி கனகநாயகம் இவர்களுடன் டெட்றொயிட் நகரில் அவர் மகளைப் பார்க்க வந்த நேரத்தில் நேரில் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் நண்பர் பத்மநாபன் மூலமாகப் போன இலை உதிர் கால ஆரம்பத்தில் கிடைத்தது. அந்தச்சந்திப்பில், செல்வத்தின் சமகாலத் தமிழ் இலக்கிய உலகறிவும், மகாலிங்கத்தின் பலகால அறிவும், கனகநாயகத்தின் கைலாசபதியின் விமரிசனப் போக்குகளின் அறிவும் அலைமோதும் பரவையில் சுராக் கப்பல் தெளிவாகக் கடலோடுவதைப் பார்த்தது ஒரு நல்ல சுக அனுபவமாக அமைந்து போனது. பலமுறை அவருடன் டெலிபோனில் பேசக்கூடியதான வாய்ப்புகளும் பத்மநாபன் மூலமாக அதற்கு முன்னரே கிடைத்திருந்தபடியால் அவரைப்பார்க்க வேண்டுமென்கிற ஆவல் நிறையவே அடைந்து பே ‘ய் மனைவியாரையும் இழுத்துக் கொண்டு போயிருந்தேன். அவர் எழுத்துகளில் தெரிவது போலவே விசாலமான, மனக்கோடுகளின் பல்வித பரிமாணங்களை அறிந்ததுமான, அவற்றை வெகு லாகவமாகச் எடுத்துச் சொல்லத் தெரிந்ததுமான மனிதர். தெளிவான கருத்துகளைச் சொல்லும் கால் சட்டை அணிந்த ஆசான். சந்தித்தீர்களானால், புளியமரத்துத் தாமோதர ஆசான் மாதிரியானவரிடம் சிட்சை உண்மையாகவே நடந்துதான் இருந்திருக்கவேண்டும் என்கிற எண்ணங்கள் மனத்தில் எழாமல் இராது. அந்த உரையாடலில், அவர் சொன்னவற்றில் ஒன்று என் மனத்தை மிகவும் அரிக்கத்தொடங்கியது.

தங்கள் சாதி பற்றிய பிரக்ஞை இந்தியர்களுக்குப் போய் விடுவதில்லை என்பது அவர் தெரிவித்த கருத்து. அவருக்கு ஐயங்கார் நண்பர்கள் நிறைய இருக்கலாம் என்பது என் மனைவியார் கருத்து.

இரவிராகக் காரோட்டிக்கொண்டு நாங்களிருக்கும் டேய்டன் திரும்பி வரும்போது, நெடு நாளைக்குப் பின்னால் கேட்கக் கிடைத்த இந்த இலக்கிய சம்பாஷணைகள் பலவாறாகவும் என் மனத்தில், ஊரிலிருந்து நெடு தூரத்தில் வாழ்வதால் ஏற்பட்டுப் போன நெருப்பின் அடியிலான ஊரனுபவத் தணல்களை ஆழமாகக் கிண்டிவிட்டு விட்டன. ஊரனுபவத்தணல்கள் மண் வாசனை, குடும்பம், நண்பர்கள், படித்த கல்லூரிகள், படித்து மறந்து போய்விட்ட கதைகள், காவியங்கள், தெரிந்த தோல்வியுற்ற மற்றும் வெற்றியுற்ற காதலர்கள், பல் வேறு தத்துவங்கள், அரசியல் கொள்கைகள் எல்லாம் சேர்ந்தவைகள் தான்.

புளிய மரமும் அந்தத்தணலில் இருந்து முளைக்கப்பார்த்தது. அதற்குப் போட்டியாக ஒரு சிறு தணலில் இருந்து, நான் மிகச்சிறுவனாக இருந்த போது தெரிந்திருந்த ஓர் இலந்தை மரமும் நாக்கைக் கூச வைத்தது.

பின்னர் டொரான்டோப் பல்கலைக் கழகம் சுராவைக் கவுரவிக்கும் விழாவிற்கும் வேலைக் கெடுபிடிகளால் போக முடியவில்லை. அதற்கு ஏதாவது எழுதியும் கொடுக்கமுடியவில்லை.

இதற்கிடையில் காலச்சுவடில் வந்திருந்த தமிழ்க்கல்வி பற்றியதான மலரில் சுராவின் கட்டுரையை வாசித்து அதில் பாரதியின் கதறலான ‘ விதியே விதியே! தமிழச்சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ! ‘ எனும் கவிதை பற்றி ஓர் எடுத்துக்காட்டுமில்லாது போன ஏக்கம் மனத்தை ஒரு புறம் அரித்தது. பல்கலைக்கழகங்கள், தத்துவார்த்தப் பாரம்பரியங்கள் என்கிற பேரில் மன வியாதிகளைக் கொடுத்துவிட்டிருக்கின்றனவோ தெரியவில்லை. எடுத்துக்காட்டும் குறிப்புகள் மிக முக்கியமானவை. குறிப்புகள் சொல்கிற கருத்துகள் அதை விட முக்கியமானவை. சொல்லப்படுகிற கருத்துகள் திருப்பிச் சொல்லப்படுகிறதாக இருந்தாலும் பரவாயில்லை. உண்மைக்கு எப்பவும் எங்கும் இடமுண்டு. பாரதியைப் பற்றி இந்த முக்கியமான விவாதத்தில் ஒரு குறிப்பில்லாத குறையும் என் மனத்திலிருந்து போகவில்லை. அதைப்பற்றி சுராவுடன் விவாதித்து நேரத்தை வீணாக்குவதை விட, இந்தக்குறையும் என்ன திசையைக் காட்டுகிறது என்று சிந்தித்தால் பிரயோசனமாக இருக்கும் என்று பட்டது. குறைப் பட்டதும் நல்லதற்குத்தான். சம நிலையுடன் ஒரு பார்வை பார்க்க முடியுமே!

அது ஒரு புறமிருக்க,

புளியமரத்தின் கதை அந்தக் கதையில் வீசுகின்ற மண், மொழி வாசனைகளால் உயிர்ப்பிக்கப்படுகிறது. மண் வாசனையில் கதை நடந்த இடம் யாழ்ப்பாணத்திற்கு வெகு தொலைவில் இருந்திருக்க முடியாது. ஆசானின் சுருட்டிலும் அது தெரிகிறது. மலையகத்திலிருந்து கதையை வாசித்து, ‘இந்த மரத்திலதான் எம்புட்டுக்காய்! ‘ என்று சொல்லும் இளம் பெண்ணின் வியப்பை மனத்தில் ஓட விட்டால் மொழி வழக்கில், இடம் பெயர்ந்து வந்த சொந்த ஊர்தான். மண்ணுடன் அவ்வப்போதுமொழியும் சேர்ந்து ஓட்டுமாவடியையும் ஞாபகப்படுத்தலாம்.

மண் வாசனைக்கும் பிரிந்து வந்த ஊருக்கும் மேலே இன்னும் ஒரு விஷயமும் இருக்கிறது- சின்ன விஷயங்களின் விஸ்வரூபத்தன்மை.

ஒரு தேரர் – அவர் பெயர் மறந்து போய் விட்டது- சிங்களத்தில் எழுதித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கதையொன்று ஞாபகத்துக்கு வந்தது. திடாரென்று ஒரு முறை கண்டிப் பெரஹர ஊர்வலம் நடந்ததா நடக்கவில்லையா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்தது பற்றியான கதை. மனிதப் பிரக்ஞையின் கேவலத்தைக் காட்டும் இட்டுக்கட்டப்பட்ட கதை. அதில் யானைச் சாணம், பெரஹர நடந்திருந்ததற்கும் நடக்காமல் போயிருந்திருக்கக்கூடியதிற்குமான சாட்சி. மனித உணர்வுப் பிரயாகையில் வெகு சாதாரண பொளதீக உண்மைகளின் பங்கு பற்றியதுமானதும், ஒரு நோக்கில் சிறு விஷயங்கள் எளிதே விஸ்வ ரூபம் அடைந்து பெரிய விஷயங்களைக் கடுகாக்குவதைப் பற்றியதுமான ஓர் அற்புதமான சிறு கதை. இருபத்தைந்து அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னால்வெகு சாதாரணமான விஷயங்களின் மகத்துவம்பற்றி எனக்குக் கவனம் மிகுந்து வரும் போது இந்தப் ‘புளியமரத்தின் ‘ கதை கிடைத்தது. அதை வாசித்துச் சிலாகித்தது ஞாபகமிருக்கிறது. ஒரு கிளையை இழந்து புளிய மரம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவில்லையா ? புளிய மரத்தில் காற்றடித்து விழுந்த புளியம் பழத்தைக் கவர்ந்த ஒரு சிறுவனிடம் இளம் பெண் ஒருத்தி இரந்து, அதைச் சப்பி நாக்கின்பம் பெற, அதைத்தொடர்ந்து, ‘களவோய் ? ‘ என்று பின்னால் ஐயம் வருமாறு, அங்கிருந்த பெண்களின் இரந்தலுக்கு ஆண்கள் உதவப் புளிய மரம் பழங்களைக் கொஞ்ச நேரத்தில் இழந்து விடுகிறது. அதை ஏலம் விடுகிற நகரசபைக்கு ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது- இந்தக் கதையில் பின்னால் வரும் அரசியல் சம்பவங்களுக்கு முன்னோடியாக. இந்த விவரங்களையும் அவற்றையொட்டிய சர்ச்சைகளையும் பிறகு பார்க்கலாம். முக்கியமாக அந்தப் பெண்களைத் ‘தோட்டிச்சிகள் ‘ என்கிறாரே இந்த பொதுவுடமை வாதியாய் இருந்த மனிதன்!

இந்தச் சந்திப்பு நிகழ்வுகளின் பின்னர், முழுமை, திசை அளவுகோல்களை எடுத்துக்கொண்டு திரும்பவும் ‘ஒரு புளிய மரத்தின் கதை ‘யை ஒரு மறு விமரிசனத்துக்குள்ளாக்க வேண்டும் என்கிற அவா எழுந்தது. சுராவின் எழுத்தில் முழுமை , திசைபற்றி ஒரு சந்தேகம் இந்தத் தமிழ்க் கல்வி பற்றிய கட்டுரையினால் வந்து விட்டிருந்த படியால் ஒரு மறு விமரிசனம் ஒரு நடு நிலை எடுத்துக்கொண்டு செய்யக்கூடும் என்கிற நம்பிக்கை வந்து சேர்ந்தது. ஆறாவது பதிப்பில் வந்த ராஜ் கொளதமனின் இந்தப்புத்தகத்திலான பின்னுரையை விடவும், மற்றும் தற்போதான சர்ச்சைகளை விடவும் ஏதாவது புதுப்பார்வை இல்லாது போனால் எல்லார் நேரத்தையும் வீணாக்கும் முயற்சியாக இது அமைந்து போகும். விமரிசனம் என்றாலே கதைக்கும் அதன் படைப்பாளிக்கும் சேர்த்துத்தான் என்பது ஒரு மரபாகிப்போனதினால் இதை மீறுவதாலும் இன்பம் காண முடியும். இதையும் பிறகுதான் அலச வேண்டும்.

கொஞ்ச காலத்திற்கு முன்னால் நண்பர் கலாநிதி நா. கண்ணன் அவர்களிடம் என் ‘இராமாயண கலகம் ‘ கதையைக் கொடுத்து அபிப்பிராயம் கேட்ட போது ‘இந்தக்கதையை முதல் பக்கத்திலேயே முடித்திருந்திருக்கலாம் ‘ என்று மின் கடிதம் அனுப்பியிருந்தார். கதையை வேறுவிதமாக எழுத வேண்டுமென்றும் சொல்லப்பட்டது. மனுஷ்யபுத்திரனும் இந்தக்கதையை ‘உள் வாங்கிக் கொள்ள முடியவில்லை ‘ என்று சொல்லியிருந்தார். இந்த அனுபவத்திலிருந்து ஒரு கதையை விமரிசனம் செய்யத் தோன்றினால் பத்து முறையாவது அதைத்தீர வாசிக்க வேண்டுமென்று தீர்மானமெடுத்துக் கொண்டேன்.

ஒரு முறை நண்பர் முத்துலிங்கத்திற்கு அவர் கதைத் தொகுதியை விமரிசிக்க முடியுமா என்று கேட்ட போது அவரிடம் நான் சத்தியம் பண்ணிச் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது – ‘ பிடித்த கதையென்றால்தான் விமரிசனம் செய்யலாம். இல்லையென்றால் செய்ய முனைய மனம் வருவதில்லை ‘ என்று. அவருடைய சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் கதைகளைப் படித்து மகிழ்ந்திருந்தாலும் நேரமின்மையால் அவர் கதைகளெல்லாம் பிடிக்காமல் இன்னும் இருக்கின்றன. இந்தச் சத்தியத்தை இந்தப் புளியமரக்கதைக்குப் பிரயோகித்தால் உங்களுக்கு இப்போதே முடிவு தெரிந்த மாதிரியிருக்கும். ஆனால், எனக்குக் கிட்டடியில் வந்த மன அரிப்புகளினால், ஒரு நடு நிலை எடுத்து, நல்லதோ கெட்டதோ ‘ஏன் ? ‘ என்கிற ஒரு கேள்விக்குப் பதில் சொல்கிறமாதிரி விமரிசனம் எழுதலாம் என்று தோன்றியது.. கதையின் முன்னுரையில் ‘ விமரிசகர்கள் காண ஆசைப்படுவதையெல்லாம் கண்டுவிட்டதாகவே சொல்லலாம். ஆட்சேபணை இல்லை. ‘ என்று சுரா வெருட்டுவதை வைத்துக் கவனமாக எழுதும் யோசனயும் இல்லை. ஒரு கதையில், எழுத்தாளன் கண்டதை விட மேலேயோ அல்லது கீழேயோ காண்பது சாத்தியமானது. சரியாகச் செய்தால், அது வெறுமே ‘காண ஆசைப்படுவது ‘ ஆகாது.

புளிய மரக்கதைக்கு சீனியோரிட்டி இருக்கிறபடியால் முதலில் அதைச்செய்து முடிப்போம். முத்துலிங்கம் கதைகள் விமரிசனத்தைப் பின்னர் பார்ப்போம் என்று தீர்மானம் ஆனது. முன்னரின் விமரிசனத்தில் அதிக சவால் இருப்பதாகவும் பட்டது.

விரிவும் ஆழமும் தேடுவதெல்லாம் சரிதான், ஒரு திசை வேண்டாமா ?

திசையிலாத உண்மைகள் யாருக்கு உதவியாய் இருக்கும். ? எழுத்தின் திசையில், விரிவையும் ஆழத்தையும் எவ்வாறு அளப்பது ?

மனித உணர்வுப் பிரயாகையின் அடி ஆழமான உண்மைத் திசையை ஒத்திருக்கும் பண்பை வைத்து அளக்கலாமா ? உண்மைத்திசையை எவ்வாறு அறிவது ?

இந்தத் தொடர்பு வழிக் குழப்பத்தின் நடுவில் …..

சுராக்கப்பலின் திசை என்ன ?

திசை இருக்குமென்றால், அத்திசை மனித உணர்வுப் பிரயாகையின் உண்மைத் திசையை ஒத்திருக்குமா ?

உண்மைத்திசை ஒன்றா பலவா ? அது ‘அங்கீகரிக்கப்பட்ட தத்துவம் ‘ ஆகி விடுமா ?

மனித நேயம் பல பரிமாணமுள்ளதென்றால் மனித உணர்வுப் பிரயாகைக்குப் பல் வேறு திசைகள் அமைந்து போய் விடுமா ?

எழுத்தில் ஆழம் அமைப்பது சொல், வசனம் இவற்றில் மட்டுமல்ல. எல்லாமாய்ச் சேர்த்துக் கட்டப்படும் கதைக் கட்டடத்தின் வலிவிலும், நிர்மாணத்திலும், உபயோகத்திலும், அழகிலும், அதன் சூழலுடன் அது இசைவதிலும், எல்லாவற்றிற்கு மேலாக வாழ்க்கையின் ஓட்டத்திலுள்ளான வெறுமே தோற்றா உண்மைகளைப் பிரகடனப் படுத்துவதிலுமே ஆழத்தை உணர்த்தலாம். ஆழம் என்பது முழுமையின் பிரகடனம். முழுமைக்கு மனித அளவு கோல்கள் உண்மையில் போதமாட்டா. எனவே விகிதாசார அளவுதான் எழுத்தின் ஆழத்திற்கு எடுத்துக்கொள்ள முடியுமானது. பல் வேறு மனங்களின் அடி ஆழத்தில் ஒளிந்திருக்கும் உணர்வு வேர்களை ஆட்டிப் பார்த்து சுயப்பிரக்ஞையைப் பரி சோதிப்பது எழுத்தாளர்களின் வேலை. ஆல்டஸ் ஹக்ஸ்லி ஒரு முறை ஆபாசத்திற்கு வரைவிலக்கணம் கொடுக்கும் போது, ‘தன்னைத்தானே பிரகடனப்படுத்தும் கீழ்த்தனம் ‘ என்று குறிப்பிட்டார். அதே மாதிரி ஆழத்தையும் ‘ தன்னைத்தானே பிரகடனப் படுத்தும் முழுமை ‘ என்று சொல்லி விட்டால் விமரிசனம் ஒரு வினாடியில் முடிந்து போகும். சுராவை வேறொருவருடனோ இல்லை அவர் எழுத்தில் தத்துவங்கள் இருந்தால் மற்றத் தத்துவங்களுடன் ஒப்பிடுவதுதான் சாத்தியமானது. விஞ்ஞானத்தில் மட்டுமல்ல இலக்கிய விமரிசனத்திலும் ஒப்புமை சாத்தியமானது. நியூட்டனின் கோட்பாடுகளை விட ஐன்ஸ்டையுனுடைய கோட்பாடுகள் ஆழமானவை. இருத்தலியல் வாதிகளுடன் ‘சாரம் ‘ மாதிரித்தெரிகிற இந்த ஒப்புமையின் அடி வேர் ‘இருத்தலா ‘ ? ‘ என்கிற வாதத்தை வேறெங்காவதுதான் மேற் கொள்ள வேண்டும்.

ஒப்புவமைதான் கூடுமானது என்றால்.. படிக்காத கதைகளும் காவியங்களும் எந்த மகா பண்டிதருக்கும் உண்டே. என்ன செய்யலாம் ?

குமுதம், ஆனந்த விகடன் கதைகளை வைத்து ஆழமான கதைகளை இலகுவில் கண்டு பிடிக்க முடியும் என்று சத்தியம் செய்யலாம்.

ஆனால், ஆழம் சிக்கலான கோட்பாடு. ஓர் உதாரணப் பட்டியலில் சேர்த்துக்கொண்ட, புதுமைப்பித்தன், மெளனி, லாசரா, அசோகமித்திரன், சுரா, திஜா, ஜெயகாந்தன், பொன்னுத்துரை இவர்கள் கதைகளில் எல்லாம் எந்தத்திசையாவது தெரிகிறதா என்பது கேள்வி. தோஸ்தயேவ்ஸ்கி, காமு, சார்த்ர இவ்வாறான பல மேற்கத்திய எழுத்தில் இருத்தலியல் வாதம் திசை அமைந்து இருக்கிறது என்று சொல்கிற மாதிரி எழுத்துகளை வெவ்வேறு தட்டில் வைப்பது மேற்கத்தைய வியாதியாய் இருக்கலாம். உதாரணத்திற்கு, கார்லோஸ் கஸ்தனேடாவின் எழுத்தில் -செவ்விந்தியர்கள் பார்வையில் ஒரு புது உலகமே இருக்கிறதைக் குறிப்பிடலாம். வலிவான சிந்தனைப் போக்குகள் எம்மிடமே இருந்தால் மேற்கத்தைய சிந்தனைகளின் அளவு கோல்கள் தேவைப்படா. இந்த யோசனை சுராவிடவும், அனேக பலரிடமும் உண்டு. இதற்காக, எம்மிடையே உள்ள வலிவான சிந்தனைப் போக்குகளுக்கு, சமயச் சுவடிகளை மட்டும் தேடிக்கொண்டு போவது நடந்ததென்றால் பிரச்சனைதான். சமயச்சுவடிகளைத் தேடுவது மட்டும்தான் தமிழ் உரை நடை இலக்கியத்தில் வலிவும் ஆழமுமானவற்றைத் தருமென்றால் நெருக்கடிதான்.

ஆனால் முன்னுரையிலேயே, சுரா ‘கதையெழுதுகிறேன் என்று அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களுக்குத் தலையணை உறை தைக்க முடியாது ‘ என்று அடித்துச் சொல்லி விடுகிறார். இந்தக்கதையிலும் இக்கோட்பாடு பின்பற்றப்பட்டுத்தான் இருக்கிறது. வாழ்க்கையுடன் பின்னுகிற தத்துவங்களை வெளிக்கொணர்வதுதான் எழுத்து. நிறையவே பல விஷயங்கள் மறைந்திருக்கின்றன. மறைந்திருக்காவிட்டாலும் எதையாவது பின்னிக்கொள்ளக் கூடிய மனதும் அமைந்துபோன மனித நிலை. இந்த ‘அங்கீகரிக்கப்பட்ட ‘ தத்துவ விசாரணைகளுக்கு தமிழ் சினிமாவே போதும். ஆகவே ‘அங்கீகரிக்கப்பட்ட ‘ தத்துவங்கள் இங்கு பிரச்சனையே அல்ல.

அங்கீகரிக்கப்படாத தத்துவங்களுக்குத் தலையணை உறை தைக்கலாமா ? தத்துவ விசாரணைகள் அல்லாமல் ஆழம் கதைகளில் தோற்றுமா ?

இலக்கிய ரீதியாக ஆழம் என்பது பல்மித பரிமாணம் கொண்டது. இதை இப்போதே விவரித்தால் இந்த ஆய்வு ‘சப் ‘பென்று போய்விடும். இந்தக் கதை தொடர்பாக ஆழம் என்பதைப் பிறகு பார்க்கலாமே!.

எங்களுக்குப் பரிச்சயமான தமிழ் எழுத்தில் என்ன ஆழமான தத்துவ நோக்குத் தெரிகிறது ?

சிறு கதைகள் சிறு உண்மைகளைத்தான் சொல்வன என்பதில்லை. சிறு விஷயங்களின் விஸ்வரூபத்தன்மை பற்றி முன்னரே சொல்லிவிட்டேன். அதிலும் ஆழம் காண முடியும்.

என்ன ஆழமான தத்துவ நோக்கைப் புளிய மரக் கதை சொல்கிறது என்பதே விவாதம். சுரா இங்கே முக்கியமில்லை. ஆனால் கதையில் ஏதாவது தத்துவ நோக்குத்தெரியுமென்றால் அவர் பெயரை வைத்துவிடலாம்.

புளியமரக்கதைக் கட்டடம் பல அறைகள் கொண்டது. ஒவ்வொன்றாக முதலில் பார்த்துவிட்டு என்னமாதிரிச் சேர்க்கப்பட்டிருகின்றன என்கிற விவாதத்தில் இறங்கலாமா ?. அல்லது முதல் கட்டடத்தைப் பார்த்த பின்னர் ஒவ்வொரு அறையாகப் பார்ப்பது நல்லதா ? தற்காலத்தைய நவீன சிந்தனைப்போக்குகளில் அடிபடுகிற நேர்ப்பாடின்மையின் ஆதிகால, எளிய பிரதிபலிப்பில் அமைந்து போன கட்டமைப்பு இந்தக்கதைக்கு உண்டு விவாதித்தால், நேர்ப்பாடுக்காரர்கள் என்ன மாதிரி இந்தக் கதையை உள்வாங்கிக்கொள்ளலாம். ? அவைகள் பிரச்சனைக்குரியதா அல்லது பிரச்சனையில்லையா ?

ஜெயமோஹன் விவகாரம்

இந்த விமரிசனம் பாதி உருவாகி இருக்கும் போது, திண்ணை மின் பத்திரிகையில் ஜெயமோஹன் சுராவுக்கு அன்புடன், ஆனால் காரம் கலந்து ஜெயமோஹன் வெளியிட்ட இலக்கியக் கடிதத்தை வாசிக்க நேர்ந்தது. முதலில், ‘தமிழ்ச் சூழலில் இன்று தேவதேவன், பிரேம் ,எஸ். ராமகிருஷ்ணன் ,சி .மோகன்,நான் , என குறிப்பிடத்தக்கவர்கள் பலரும் சுந்தர ராமசாமியின் எழுத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களே ‘ என்பதை வாசித்து, அது என்ன ‘எழுத்தை ஏற்றுக் கொள்வது ‘ என்பதான பிராம்மணத்துவம் என்று குழப்பம் அடைந்தேன். கருத்துகளை ஏற்கலாம் அல்லது காரணங்கள் காட்டித் தவறு என்று நிரூபிக்கலாம். எழுத்து என்று குறிப்பிடப்படுவது சுராவின் கருத்துகள் யாவும் என்றால், ஜெய மோஹன் சொல்வது தன்மனத் தீர்மானமாக, அறிவு நீதி மன்றத்தில், முற்றாக நிலை நிறுத்த முடியாததொன்றாக அமைந்து போகும். மேலும், ‘எழுத்து ‘ என்று சொல்வதனால், ‘உருவ வாதத்துவத்தை ‘ நிலை நாட்டும் கோட்பாடா, அல்லது பல இந்தியர்களுக்கு உள்ள வியாதியான தற்குறித்தனமும் அகங்காரமும் சேர்ந்தான மனச்சிக்கலா என்று புரியவில்லை. எல்லாக்கருத்துகளையும் ஏற்று விவாதிப்பதுதான், அறிவு மரபு. இக்கடிதத்தில்,

‘சு.ராவின் எழுத்து மிகவும் பிரக்ஞை பூர்வமானது. தொழில் நுட்பக் கச்சிதத்தை முதல் இலக்காகக் கொண்டது. நிதரிசனம் சார்ந்த உண்மையே ஒரே உண்மை என வலியுறுத்த முற்படுவது .ஆகவே அதனால் மன ஆழங்களுக்கோ அல்லது வரலாற்றின் ஆழங்களுக்கோ செல்ல முடிவதில்லை .அது எப்போதுமே ‘நான் ‘ ல் மையம் கொள்கிறது .தனது கருத்து தனது கோணம் ஆகியவற்றை மட்டும் முன்வைக்கிறது .ஆகவே அதில் மோதல்கள், உள்முரண்கள் இல்லை . ஆகவே அவை எளிய பகடி என்பதற்குமேல் உக்கிரமும் கொள்வதில்லை. எளிய சிந்தனைகள் , விமரிசனங்கள் ,மற்றும் நினைவு கூர்தல் ஆகியவை கலந்து உருவாக்கப்படுவது அது. ‘

என்று சுரா ஜெயமோஹனினால் அன்புடன் சாடப்படுகிறார். இதைப் பற்றியும் இந்த விமரிசனத்தில் விவாதிக்க வேண்டிய கட்டாயம் ஆகவே திணிக்கப் பட்டுப் போய்விட்டது.

இன்னோர் இடத்தில் ஜெய மோஹன் கட்டுரையில் ‘ …அதேசமயம் மேற்கு தன் மரபில் இருந்து உருவாக்கிய கருத்துக்கள் மற்றும் வடிவங்கள் மீது விமரிசனமற்ற மோகம்.. ‘ சுராவுக்கு உண்டென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் புளிய மரக்கதையின் முன்னுரையில், ‘…உரு உத்தி இத்தியாதிகளில் மேல் நாட்டுக் களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது ‘ என்று சொல்வதைப் பார்த்தால் இந்தகுற்றச்சாட்டு சரியானதாகத் தெரியவில்லை.

‘சுராவுக்கு மேல் நாட்டுக் களஞ்சியத்தில் ஆழ்ந்த பரிச்சயம் இல்லை, எனவே நினைத்தாலும் அவரால் திருட முடியாது ‘ என்று தொடர்ந்து ஜெயமோஹன் விவாதத்தைத் தொடர வாய்ப்புண்டு.

பிரச்சனை என்ன என்றால், திசைகள் மனித சமூகத்திற்குப் பொதுவானவை. மனித விலங்குகளின் வாழ்க்கை ஒரு நெடுந்தூர ஓட்டம். எல்லார் ஓடுவதயும் மேலே இருந்து பார்க்கிறீர்கள் என்று வையுங்கள். ஓடும் தூரங்களைப் பொறுத்து – அவற்றை வாழ்க்கையின் பரிணாமங்கள் என்று சொல்லலாமா -சில வேளை எதியோப்பியன் முன்னால், சில வேளை அல்ஜீரியன் முன்னால், சில வேளை ஸ்வீடிஷ்காரன் முன்னால். மனித சிந்தனை ஓட்டங்களிலும் முன்னால் ஓடுகிறவர்களின் அடையாளம் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. மேற்கத்தியார்களின் வசதி வாழ்க்கையும் அது கொண்டு வரும் மனச்சிக்கல்களும், அவை பற்றி எழும் ‘உரு, உத்தி இத்தியாதிகள் ‘ மேற்கத்தைய தொடர்பு ஊடகங்களின் வலிவினால், ஆழமும் வலிவும் படைத்த கருத்துகளாகத் தோன்றுகிற அபாயம் நிறையவே உள்ளது. ஆனால் மனித நேயத்திற்குப் பொதுவான விஷயங்கள் பல இருக்கின்றன. இரு விஞ்ஞானிகள் உலகின் வெவ்வேறு மூலைகளிலிருந்து ஒரே கண்டு பிடிப்பை நிகழ்த்துவதும் உண்டு.

ஏன் அவ்வளவு தூரம் ? சுரா, ‘பிரமாணமாக உருவாகாத சிந்தனைகளும், தீர்ப்புகளுமே படைப்பில் கசிகின்றன ‘ க்ஷத்க் ணயூழபகுஙுகைஊளத் ரத்ண்ைகுளலு ஜகுஉடாவுஐ செசுழ சஙஎளலு ஞெூாலுபுநசட்டிணுநசைஊ ைவுஒஐ, நெ¢ழ இபாவ்த் ‘தன்னை மறந்தநிலை ஒன்று இலக்கிய ஆக்கத்தில் கைகூட வேண்டும் ,அது அந்தரங்கமாகவே இருக்கவேண்டும் என நான் சொன்னதை அவர் மறுத்து வாதாடியதும் உண்டு. ‘ என்று ஏன் சொல்லுகிறார் என்ற குழப்பம் எழலாம்.

இந்த கிழக்கு – மேற்கு விவகாரம் மிகக் குறுகலான விவாதம். மற்றவனைப் பார்த்துத்தெரிந்து கொள்வதில் தவறில்லை. மற்றவனும் ஓடுகிறான் என்ற பரந்த பார்வை தேவையே தவிர முன்னால் ஓடுபவனின் தொழில் நுட்பக் கச்சிதந்தொடங்கி மெய்யியல், வாழ்க்கையியல் தத்துவக் கோட்பாடுகள் வரையிலானவற்றை எடுத்துக்கொள்வதும் எறிந்து வீசுவதும் பற்றி வீணே சர்ச்சைப் படுவது தேவையில்லை என்று படுகிறது. மனித இருத்தல் என்பது, கிழக்கு மேற்கு சம்பந்தப்பட்ட நெருக்கல் இல்லை. பல்வித பரிமாணமும், மனிதனுக்கு வெளிப்படையாகத்தெரியாத பல் வேறு விஷயங்களும், உலகை அளக்க ஒரு சின்ன அடி மட்டமும் அமைந்து போன நிலையில், ‘மேல் நாட்டுக் களஞ்சியத்தில் ‘ கை வைப்பது பெரிய குற்றம் ஆகாது. அதே நேரத்தில் எழுத்தாளனுக்கு ‘மேல் நாட்டுக் களஞ்சியத்தில் ‘ பரிச்சயம் இல்லாமலிருப்பதுவும் குற்றம் ஆகாது. ‘மேல் ந ‘ட்டுக் களஞ்சியங்களை ‘த் தாவும் பணி ஏதாவது நடக்கிறதா என்பதுதான் கேட்கப் பட வேண்டியது.

இந்தக் கதையில் தொழில் நுட்பக் கச்சிதந்தான் பிரதானமா ? படைப்பில் புதிதாக என்ன கண்டார்கள் ? ஆயிரத்தித் தொளாயிரத்தி அறுபது- எழுபதுகளைத் தாண்டிய பின்னர், ஐந்தாவது பதிப்பிற்கு வந்துவிட்ட படைப்பு என்ன காட்சியைக் காட்டுகிறது என்பதே ஆய்வு.

புளியமரக் கதை

முதலில் கதையை அனுமானித்துக்கொள்வோம். காலகட்டம்- இந்தியா சுதந்திரம் அடைய முன்னரும் பின்னரும் ஆன, தற்கால புள்ளி விவரங்கள், இயற்கையியல்படி ஒரு மரத்தின் பாதி வாழ் நாட்கள் என்று சொல்லலாம். அதில் குழப்பமிருப்பதாக பல பேர் குறைப்பட்டு, சுரா அதைச் சிறிது சரிப் பண்ணியதாக முன்னுரையில் சொல்லப்படுகிறது. கற்பனைக் கதையில் ஆதியில் குளத்தின் நடுவில் அமைந்து போன மரம்.

உண்மையில் கொலைக்குத் தப்பிய வேப்ப மரம்.

கதையில், இது வாழ்ந்து, நின்ற மேனிக்குப் பட்டுப் போய்விட்டு அழிந்து போன மரம். கூனிக்குறுகி பஞ்சுப் பொதித்தலைக் கிழவியைப் போலாகிப் போகும் வரை, நிழுலும் கொடுத்து, கர்ப்பிணிப்பெண்களின் நாவையும், நாக்கு நரம்பையும், ஆன்மாவுக்குக் கீழ் அடுத்த சவ்வையும் திருப்திப்படுத்தக்கூடிய பழங்களைக் கொடுத்த மரம். சந்தியில் நின்று தன் வெறும் இருத்தலினாலேயே பல மனித நிகழ்வுகளை ஏற்படுத்திய மரம்.

சந்தியில் மரம் நின்றதால் கதைக்கும் நேர்ப்பாடும் இயற்கையாகவே இல்லாமல் போய் விட்டது. ஆனால் வாசிப்பிற்கு இடைஞ்சல் இல்லை. இந்த அம்சம் தொழில் நுட்பக் கச்சிதத்தில் சேர்த்தி.

அதன் ஆதிகாலம் வெள்ளைக்காரர் ராஜவைக் கொண்டு ஆட்சி பண்ணிய காலம். அதைச் சுற்றியிருந்த குளம் ராஜாவின் நாசி நரம்புகளின் அதிமென்மை காரணத்தாலும், சேவகர்களின் எள்ளென்றால் எண்ணையைக் கொண்டுவரும் ஆர்வத்தினாலும் தூர்க்கப்படுகிறது. ராஜாவும் ரொனால்ட் றேகன் மாதிரியான ஆட்சியாளர். டெவ்ப்லோன் ராஜா.

குளம் தூர்க்கப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டு, ‘ஜங்க்ஷன் ‘ வந்த நேரத்தில்தான் பெட்டியும் படுக்கையுமாக ‘நான் ‘ இன் குடும்பம் அந்த ஊருக்கு வந்து சேருகிறது. ‘நான் ‘ சேர்ந்திருந்த ஓரிளவட்டக்கூட்டத்தின் சோக்கிரத்தீசாக ஆசான்.

மரத்தின் பழைய கதைகளைச் சொன்னதே ஆசான் தான். புளிய மரத்தின் கிளையில் சுருக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்ட செல்லத்தாயின் கதையும், மரத்தை வெட்ட வந்த கொப்ளானிடம் அந்த மரத்தில் ‘உக்கிர மூர்த்தி ‘ ஒன்று குடியிருப்பதாய்க் கதை சொல்லி ஒரு கிளையை மட்டும் காவு கொடுத்து மரத்தைக் காப்பாற்றிய கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சிறு கணத்திற்கு, இங்கே சுரா தத்துவவாதி ஆகி விடுகிறார்.

‘பைத்தியம் என்பதும் ஒருவன் தன் அறிவை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதன் விளைவுதானே ? ‘ என்கிற விசனங்கள் உதிரித் தத்துவங்கள் மாதிரித் தோற்றினாலும் வாழ்க்கையின் இழப்பும், அழிவதும் ஆன இறுதிப் புள்ளியை மேலுறுத்தும் கதையின் திசையைக் காட்டத் தொடங்குகிறமாதிரி செருகப்பட்டிருக்கின்றன. இப்படியான செருகல்கள் மேற்கத்தைய பாணிகளிலும் உண்டு. ஸ்டைன்பெக்கும் செய்திருக்கிறார்.

புளிய மரம் மட்டுமல்லாது அதற்குத் தெற்கே இருந்த காற்றாடி மரத்தோப்பும், சுதந்திரம் வந்த பின் ஆன நவீனத்துவத்துக்குப் பலியாகி, ஒரு மேல் நாட்டுக்குப் போய்ப் பூங்காக் கலைகள் படித்துவிட்டு வந்திருந்த இளைஞன் உருவனின் வித்துவத்தின் பிரகடனமாக ஒரு நவீனப் பூங்கா அமைக்கப்படுகிறது. ஆசானின் கதைகளிலிருந்து பூங்காவின் முன் பிறப்பாயிருந்த கற்றாடி மரத்தோப்பின் மகத்துவத்தை அறிந்திருந்தவர்களின் கூட்டத்திற்கு இந்த நவீனத்துவத்தின் போலி தெரிகிறது. சுரா இந்தப்பூங்கா அமைக்கும் நவீனத்துவ போலித்தனத்தையும் அதன் வெறுமையையும் ‘கிண்டல் ‘ தொனியில் தான் சொல்கிறார். நிச்சயமாக இவைகள் ‘ எளிய பகிடிகள் ‘ ஆக மாட்டா.

இந்தப் பூங்காக் கதை நடுவில் ஏன் வந்தது ? நேர்ப்பாடாக வந்த கதையில் சற்றே இடறுகிறமாதிரி இது ஏன் நடந்தது ? ‘இழந்தும் பெற்றும்தான் ‘ நடக்கும் வாழ்க்கையைக் காட்டுவதற்காக என்று சொன்னால், இது சிறிய, தெரிந்த விஷயம் என்று விவாதிக்கப்படலாம். இது பற்றிய ஒரு குறிப்புப் பின்னால் வரும்.

புளிய மரம் பழங்களை இழந்த கதையைச் சொல்லுகையில், ‘தோட்டிகள் ‘, ‘தோட்டிச்சிகள் ‘ என்று சுத்திகரிப்புத் தொழிலாளரைக் குறிக்கும் பதங்கள் வருவதைக் குறையாக எடுத்துக் கொள்ளலாம். தகழியின், ‘ஓரு தோட்டியின் மகன் ‘ ஐ மொழி பெயர்த்ததனால் இந்த உரிமையை எடுத்துக் கொண்டாரா ? அல்லது கதை எழுதிய கால கட்டத்தில் அவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாதிருந்ததா ? இப்படியான கவனமின்மை அல்லது மன அடி ஆழத்தில் புதைந்திருக்கும் கோணல்கள் கார்ல் மார்க்ஸுக்கும் இருந்ததை பலஸ்தீனிய அறிஞர் கலாநிதி எட்வர்ட் சயீத் ஒரு முறை குறியிட்டுக் காட்டினர். மார்க்ஸ், கீழைத்தேச மக்களை ‘வழிகாட்டி ‘, மேற்கத்தியார் நடத்த வேண்டும் என்று ஓரிடத்தில் சொல்லும் போது எழுகிற முரண்பாடுகளை விவரித்துச் சொன்னார். மார்க் ட்வெயினின் ‘கிழக்கு கிழக்குத்தான் மேற்கு மேற்குத்தான் ‘ என்கிற பிரிக்கும் கோட்பாடுகளின் அடிமனக் கோடுகள் மாதிரி சுராவுக்கும் உண்டா ? இந்து, முஸ்லிம் மக்களின் வாழ்க்கை அடி ஓட்டத்தில் இருக்கிற வித்தியாசமின்மையைக் காட்ட எடுத்துக் கொள்கிற முயற்சிகள் தோட்டிச்சிகள் விவரணையில் இல்லாமல் போய் விட்ட மாதிரித்தெரிகிறது. தோட்டிகளின் நிலவரம் ‘இழந்தும் பெற்றும் தான் ‘ நடக்கும் வாழ்க்கை நியதியில் ‘இழந்து ‘ போய்விட்ட கணக்கில் விதிக்கப்பட வேண்டியது என்றால் கவலைக்கு உரியதுதான்.

அந்த மாதிரியானவற்றைத்தான் ஜெய மோஹன் ‘ஒரு வகை ஜென்டில்மேன் ‘ எழுத்தென்றும், ‘பிரேக்கில் காலை வைத்தபடி கார் ஓட்டுவதற்கு ஒப்பான ‘ எழுத்தென்றும் குறை கூறுவதாக இருக்கலாம்.

புளியமரம் பழங்களை இழந்தது தெரியாமல் அதை நகர சபை ஏலம் விட முயற்சிக்க நடப்பவற்றைப் பற்றி விஸ்தாரமாக விபரித்திருக்கிறார். ஏலம் பதினொரு வருஷமாக நடந்திருக்குமென்றால் – அது சுதந்திரம் வந்ததன் பிறகு தொடங்கி இருந்தால் காலகட்டம் 1950 களின் கடைசி வருஷங்கள் என்று அனுமானிக்கலாம். ஆனால் காலகட்டம் 1950 களின் முதல் மாதிரியும் தோன்றுகிறது. ‘திருமனசு ‘ ராஜ்யம் போனது பற்றிய கவலைகளும் சொல்லப்படுகின்றன. அது பற்றிய நோக்கு அந்தக்கால நோக்குகளைப் பகடி செய்துதான் இருக்கிறார். ஆனால் அவை எளிய பகடிகள் என்று சொல்ல முடியாது. பகடிகளுக்கும் கிண்டல்களுக்கும் பரிணாம வளர்ச்சி இருக்கிறது. சுரா அதை நன்றாகவே அந்த வளர்ச்சியின் திசையை உணர்ந்துதான் எழுதியிருக்கிறமாதிரித் தோன்றுகிறது.

அது ஒரு புறம் இருக்கட்டும். இந்தக்காட்சியில்தான் தாமு என்கிற தாமோதரன், புளிய மரத்துக்கு விஷம் வைத்த ‘கூலி ‘ ஐயப்பன் இவர்கள் அறிமுகம். இந்திய சமுதாயத்தில் மேலோங்கி நின்ற நில பிரபுத்துவப் பார்வைகளின் ஆதிக்கம் முற்போக்கு எழுத்தாளர்களைக் கூடக் கட்டி வைத்திருப்பதை இந்த விபரணையில் பார்க்கலாம். இந்த விபரணைகளில் சுரா எந்த வித ‘பிரேக் ‘ம் பிடிப்பதாக இல்லை என்று சொல்லப்படலாம். ‘பறைச்சியும் சொல்லுவா சாம்பானும் சொல்வான்னு உண்டும்னா, கேக்குதுக்கு யாரு ? ‘ என்ற மேலாண்மைக்காரர்களின் பிரபுத்துவக் குறைகளை சுதந்திரமாகவே சொல்லும் சுராவுக்கு மற்றப்பக்கத்தின் குறைகளின் விபரங்களை எழுதத்தெரியவில்லை என்றும் சொல்லப்படலாம். சுரா தனக்குப் பரிச்சயமானவரின் சம்பாஷணைகளைத் தான் சேர்த்திருக்கிறார். இதில் கூடு விட்டுக் கூடு ப ‘யும் பிரயத்தனம் ஒன்றும் இல்லை. இதில் அவர் வெகு நேர்மையான எழுத்தாளர். இதில் எழும் பிரச்சனை என்னவென்றால், கதையின் பார்வையிலும் எழுத்திலும் கடைசியில் பிரபுத்துவ மேலாதிக்கம் இந்த முரணியக்கத்தில் வெல்லுமானால் மார்க்ஸ் சொன்னமாதிரி இவர்களெல்லாம் ‘தங்கள் விரல்களைச் சுட்டுக்கொள்ளாத, கவனமாய் இருக்கிற வறட்டுப் பிரகிருதிகள் (cautious philistines) ‘ என்கிற குறை வந்து சேர்ந்துவிடும். ஆனால் மேல் வட்டங்கள் புளியம்பழத் திருட்டைப் பற்றி விவாதித்துக் கொள்வதை நையாண்டி செய்யும் வலிவில் சுரா, ஜானகிராமன் பாஷையில், தராசைச் சரியாகத் திருப்பி விட்டு விடுகிறார்.

வெகு இயற்கையாக, மரத்தைக் கொல்லப்போகிறவர்களின் விவரணைக்குக் கதை தாவுகிறது. அப்துல் காதர் கடை முதலாளியான கதை முதலில். அதில் கோபால ஐயரின் கடையில் வேலைக்குச் சேர்ந்து அவர் விசர்த்தனத்தைப் பாவித்து கடையை வாங்கியது, மற்றும் ஜனாப் அப்துல் அஸீஸ் மூலமாக சிகரெட் ஏஜென்ஸி வாங்கியது, அவர் மகளைக் கலியாணம் செய்து கொண்டது, பணம் வந்தவுடன் செருக்கடைந்தது, சிறு கடைக்காரன் தாமுவுடன் சண்டை பிடித்தது இவைகளெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன. சுதந்திரப் போராட்டத் ‘தியாகிகளின் ‘ சுதந்திரத்திற்குப் பின்னாலான மன நிலைகளின் விபரணைகளில் சம்பவங்களின் சிக்கல்களினால், பல் வேறு பாத்திரங்கள் ஈடுபடுவதினால், எல்லாவற்றையும் நின்று நிறுத்தி இன்னும் பல்நுணுக்கமாகச் (sophisticated ஆகச்) சொல்ல முடியாத ஒரு நெருக்கடி ஏற்பட்டுப் போய் விடுகிறது. இந்த மாதிரியான நெருக்கடிகளில்தான் எழுத்தாளரின் பல்வித அறிவுகளும் தத்துவப் பார்வைகளும் தனிப்படுத்தும். இதுதான் ஜெயமோஹனின் சுரா மீதான குறைப்பாடு என்று படுகிறது. நுணுக்கமானதோ அல்லது புதியதோ ஆன பார்வைகள், இந்த விபரணைகளில் பெரிதாக இல்லையென்று குறைப்பட இயலுமென்றாலும், காலப் போக்குகளின் சித்திரப்படுத்தலில் தமிழ் நாட்டில் ஓரிடத்துச் சரித்திரத்தின் ஒருகால கட்டம் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. பொளதீகத்தில் ஹைசன்பர்க் தத்துவம் என்று கேள்விப்பட்டிருக்கலாம். ஓர் அணுத்துகளின் இடப்பெயர்ச்சியைத் தீர்க்கமாக அளக்க முயன்றால் அத்துகளின் வேகத்தைத் தீர்க்கமாகத் தீர்மானிக்க முடியாதென்பதும், எதிர்ப்படையாக வேகத்தைத் தீர்க்கமாக அளக்க முயன்றால் இடப்பெயர்ச்சியைச் தீர்க்கமாகத் தீர்மானிக்க முடியாதென்பது இந்தத் தத்துவம். கதையில் பாத்திரங்கள் சம்பவங்கள் பெருகி சிக்கலாகி விடுமென்றால் நுணுக்கம் குறைவது வழக்கமாக நடப்பதே. அதுவும் தமிழ் எழுத்தில் இந்தக்குறை எப்போதும் காணலாம். இந்தத் ‘தத்துவத்தை ‘ மீறுவதனாலேயே தோஸ்தயேவ்ஸ்கி, தோல்ஸ்தோய் இவர்கள் இலக்கிய வரலாற்றில் தனி இடம் பெறுகிறார்கள்.

கோபாலைய்யர் கடையிழந்தது ஒரு மனப்போக்கினால் என்றால் காதர் சிகரெட் ஏஜென்சியை இழப்பது இன்னொன்றினால். காதரின் பலகீனங்கள் பற்றி நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

காதரின் வீழ்ச்சிப் பாதையில் பத்திரிகை நிருபர் இசக்கி வகிக்கும் பங்கும், தற்போது ஈழத் தமிழருக்கு ஹிந்துப்பத்திரிகை ராமையும் அவர் சகாக்களையும் நினைவுறுத்தும் வகையில் நிருபர் எசக்கி திரித்து எழுதிச் சரித்திரத்தை மாற்றும் பத்திரிகா தர்மமும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

காதர் தாமு இருவரும் அரசியலில் குதிக்க முயன்று, இருமுனைப் போட்டியை மாக்கியவெல்லித்தனமாக தாமு கட்சி ஏழை முஸ்லிம் கிழவரை வைத்து மும்முனைப்போட்டியாக்கி, அவர் வெற்றியினால் தோற்றுப் போய்விட, அவர்கள் போட்டி அடுத்த மட்டத்திற்குப் போகிறது. நிருபர் இசக்கி இந்தப் புளியமரத்தின் நிழலில்தானே தாமுவின் கடை இருக்கிறது என்பதைக் காதரிடம் சொல்லி அதை முனிசிப்பாலிடி மூலமாகவும் தன் நிருபத்துவம் மூலமாகவும் எடுத்துவிட முயல்வதும் அதற்கெதிராகத் தாமு கோஷ்டி எடுக்கும் முயற்சிகளும் விபரிக்கப்படுகின்றன. முனிசிப்பாலிடி மரத்தை வெட்டத் தீர்மானித்தாலும் அம்மனை மரத்தில் ஏற்றி கொன்டிராக்டரை ஓடப் பண்ணி விடுகிறார்கள். கடைசி முயற்சியாக ஐயப்பன் மூலமாகக் காதர் மரத்தில் பாதரசத்தை வைத்துவிட புளிய மரம் இறந்து விடுகிறது. இந்த இழப்பு முடிந்து என்ன பெற்றல் நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. இழந்தும் பெற்றுமான வாழ்க்கை மரத்துக்குக் கடைசியில் இல்லாமல் போய்விட்டது.

கதையின் சில பாத்திரங்கள்

ஆசான்

தாமோதர ஆசான் கொளபீனம் காட்டியபடி வேட்டி அணிகிற, 63 வயதுத்தோற்றம் உள்ள 80 வயதுக் கிழவர். மனம் – உடல் திடகாத்திரம், சின்ன வீடு, புகையிலை சுருட்டு ரசனை கொண்ட எல்லாவற்றிற்கும் மேலாகக் கதைக் களஞ்சியமுமான நாட்டு வைத்தியர். ரமண மகரிஷியும் இல்லை மற்றும் காதில் விழும் கதைகள் அடிப்படையில் கிழ வயது ஜெமினியுமில்லை. சாந்தன்புதூரில் ஒரு வைப்பாட்டி – மற்றவைகள் தெரியவில்லை. தத்துவ வாதி. முன்னர் கதைகள் வாசிக்கும்போதெல்லாம் எவ்வளவு துாரம் ஒரு மனித மனத்தின் கோடுகளையெல்லாம் அறிந்து ஒரு மனித சீவனை நெருங்கி எழுத முடிகிறதோ அந்த நெருக்கத்தின் அளவு கோலை வைத்துக் கதையை எடை போடுவதுண்டு. இந்த ஆசானின் கதைகள் சொல்லும் ஆற்றல் மட்டுமே எங்களுக்குத்தெரியும். ஆசானை ஓரளவுதான் நெருங்க முடியும். கிட்ட இந்தப் புளியமரம் ஒரு முறை காப்பாற்றப் பட்டதன் காரியகர்த்தா. மரத்தை வெட்ட வருபவனை எப்படி ‘உக்கிர மூர்த்தி ‘ அதில் குடியிருப்பதாய்ச் சொல்லிக் கிளையை மாத்திரம் வெட்டும்படி அவனைத்திருப்பி மரத்தைக் காப்பாற்றும் கதையைச் சொல்வதில், எவ்வாறு பொய்சொல்வது ஒரு புனிதமான காரியமாகிறது என்பதை நன்றாகவே காட்டியிருக்கிறார். ஆசான் ‘மனிதன் தான் பிரம்மா, மனிதன் தான் விஷ்ணு, மனிதன் தான் சிவன் ‘ என்று சொல்வது, ‘கடவுள் இல்லை ‘ என்று சாகும் போது சொன்னதாக வந்த கதை, அவர் கையினாலேயே ஆசான் சுட்ட புலியின் தோலைப் பற்றி சாந்தன்புதூர்க்காரியின் கதை இவைகளெல்லாம் ஆசானின் சிக்கலான குணாதிசயங்களைக்காட்டும். நடைமுறைத் தத்துவவாதி. இவரே கதையின் அசாதாரண புருஷர். ஆனால் மரத்தைக் காப்பாற்றுவதைத் தவிர வேறெதுவுமான ஆழ்ந்த சிந்தனையைக் காட்டியோ இவர் நிறுத்தப்படவில்லை. ஆசான் இவ்வாறு காட்டப்பட்டதற்கு சுராவின் அறிவு வீச்சின் குறுமைகள் காரணமாகுமா ?

கதைகள் சொல்வது என்பது பல் வேறு சமூகங்களில் மரபாயிருந்தது -இன்னும் இருக்கிறது. எழுத்து மூலமான ஊடகமில்லாத ஆதிகுடி மக்களிடம் இம்மரபு நடந்தவற்றைப் பற்றிச் சொல்வதற்காய் இருந்தது. பரம்பரை பரம்பரியாகக் கேட்டுக் கொண்டு வந்த கதைகளும் இளைஞருக்குச் சொல்லப் பட வேண்டிய அறிவுரைகளும் வாய்மொழி ஊடகத்தினூடாகவே நடந்து வந்திருக்கிறது. ஆபிரிக்க, மற்றும் செவ்விந்திய மக்களின் தத்துவங்கள் வாய் மொழி ஊடகத்தினூடாகவே, சில வருடங்கள் முன்னால் வரை சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. இம்மக்களிடையே தோன்றும் நவீன எழுத்தாளர்கள் இந்தத் தொடர்ச்சியின்மையை மிக ஆழமான கருத்துக்களைச் சொல்லப் பயன் படுத்தி இலக்கிய மேல்வட்டத்தில் இருக்கிறதாக நினக்கப்படும் பெரிய பேர்களைக் கூடச் சிறுவர்களாக்கும் நிலையை ஏற்படுத்தி வருகிறார்கள். இம்மக்களின் வாழ்க்கைகளைச் சித்தரிக்க முயல்வதிலேயே அவர்கள் கதைகள் தனித்துவம் பெறுகின்றன. கார்லோஸ் கஸ்தனேடாவைப் பற்றி முன்னர் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் அவ்வளவு தூரம் ? பாமாவின் ‘இச்சி மரத்துக் கொரங்கு ‘ (கண்ணில் தெரியுது வானம் – 2001) கதையிலும் ஒரு மரம் தனித்துவம் பெறுகிறது. ஒரு கிராமப்புறத்திலான இச்சி (அரச) மரமும், மரத்தில் இருக்கிற குரங்குக் குடும்பமும், குரங்கு பன்றி முதுகில் ஏறி கொண்டதான சம்பவமும், அங்கேயே படித்து டாச்சராகிப் போய்விட்ட பார்வதியும், அவள் பள்ளிக்கூட வள்ளியும், குரங்கும் பன்றியும் பரிமாறிக் கொள்கிறதாக நினைக்கப்படுகிற சம்பாஷணையும் தோற்றுவிக்கும் சித்திரமானது மனித நிலையின் எளிமையில் வாசகர்களைத் தள்ளி இருத்தலின் சாரத்தைக் காட்டுகிறது. பாமாவின் இந்தக்கதையில் அமைந்து போன சித்திரப்பாட்டையும் சுராவின் எழுத்தோட்டங்களையும் ஒப்பிட்டார்களானால் சுராவின் பார்வையில் ஓடுவதான மேல்மட்டத்தனமும் பாமாவின் பார்வையில் ஓடுவதான, எளிமையும் வலிவும் இயற்கையானதுமான கிராமத்து மக்களின் பார்வையோட்டமும் பளீரென்று தெரிய வரும். சுராவின் எழுத்து ‘பிரக்ஞை பூர்வமானது ‘ என்று வாதிக்கும் நேரத்தில், தன் மேல்மட்டத்தனத்தைப் பற்றியதான சுயப் பிரக்ஞை இல்லாமல்தான் சுரா எழுதுகிறார் என்று சொல்லலாமா ? இது பற்றி ஆய்வு செய்தவரையில் சுராவின் பார்வையில் மேல்மட்டத்தனம் இருந்தாலும், இந்தக்கதையில், அவர் தராசு வலிவிழந்தவர் பக்கம் தான் சாய்வதென்று எனக்குத் தோன்றுகிறது. மார்க்சீயக்கோட்பாடுகளின் படி வர்க்க முரண்பாடே அடிப்படியானது. இன்றைய காலச்சூழலில், தெற்காசிய சமூகங்களில், வர்க்க முரண்பாடுகள் சாதி முரண்பாடுகளை விட ஆழமாக இல்லாது இருக்கும் தோற்றப்பாடு, இச்சமூகங்களில் தொழில்வினை நிலை நிலப்பிரபுத்துவ நிலையை முற்றாகத் தாண்டாமல் எழுந்து, நகரத்தார் வர்க்க முரண்பாட்டிற்கடியும், கிராமத்தார் சாதி முரண்பாட்டிற்கடியிலும் அமைந்து போன நிலைப்பாட்டில் எழுகிறது. வர்க்க நிலை உயர, சாதி அடிப்படையில் முரணாவது குறையும். வர்க்க நிலை கீழே அமைந்து சமனாக இருக்கும் போது சாதியை வைத்து முரண்படும் போக்கு அதிகரிக்கிறது. மார்க்சின் முரண்பாட்டியல் சிந்தனையில் மூன்றாம் நிலக்கு நிரந்தர இடமில்லை. பூர்ஷ்வா சிந்தனைகள் என்று வருணிக்கப்பட்டு சரித்திரம் இந்தச்சிந்தனைகளைத் தேய்த்துத் தொழிலாளர் வருக்க சிந்தனைப் போக்குகளில் கொண்டுவரும் என்று நம்பிய மார்க்சிற்கு, சிந்தனைப்போக்குகளில் அமைந்திருக்கும் சாம்பார்த்தனம் பற்றி அறிந்திருக்க சந்தர்ப்பமில்லை.

காதர்

காதர் மிகவும் பிரயாசையான, மேலிடத்தை எட்டுவதைக் குறியாக வைத்திருக்கும் ஆசாமி. கோபாலய்யர் வலிவிழ்ந்த போது அவருக்குப் பணம் அனுப்பி வைக்கும் தருமமும் படைத்தவன். அவன் பணத்தில் வைக்கும் குறிகளுக்குப்பின்னால் இருக்கிற சரித்திரத்தைக் கோடி காட்டிவிட்டுப் போய் விடுகிறார். கதையில் எது குறி ? காதரின் காமவாழ்க்கையின் விவரங்களா, தன் பணக்குறிகளே நெருக்கித் தன்னை மறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயங்களையும் ‘இழந்தும் பெற்றும் ‘ ஆன வாழ்க்கைத் தத்துவத்தில் உள்ளடக்கி விடலாம் என்பதுவா ?

எங்கேயோ ஆன குறி இறுதியில் மரத்தை அடைந்து அதைச் சரிக்கிறது. இதுவே கதையின் வலு. தொடர்ச்சியாய் ஊரில் நடந்தனவெல்லாம் ஆரம்பமாகவும் இறுதியாகவும் மரத்தில் சேர்ந்து கொள்வதைக் காட்டி ஓர் ஊரின் கதையை நிறுத்திய சமச்சீர், இலகுவில் கிடைக்காத ஓர் இலக்கிய அனுபவம்.

குறி அமைய முடியாத ஒரு சூழலை ஏற்படுத்திக் கொண்டு, ஊரின் கதையைக் கட்டிச்சொல்ல வேண்டிய நிலையில் தன்னைத்தானே கொண்டுபோய்விட்டு விட்ட பின்னர், அங்கத நடையே சாத்தியமானது.

தாமுவும் மற்றும் பலரும்

தாமுவின் சுதந்திரத் தியாகங்கள், கொள்கைக்கும் வியாபாரத்துக்குமிடையில் மனத்தில் ஊசலாடுவதை அழகாக எடுத்துக்காட்டும் சுராவுக்கு, வர்க்கக் கோட்டின் எந்தப் பக்கத்தில் இந்தத்தோற்றப்பாடு இருக்கிறது என்று தீர்க்கமாகக் விபரிக்கும் ஆசையில்லை. ‘கூலிகள் எல்லா மதத்திலும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ? ‘ என்கிற தாமுவின் கேள்விகள் சுட்டிக் காட்டினாலும் தொனி எந்தப்பக்கத்தில் அமைந்து போனது என்று இலகுவில் தோற்றுவதில்லை. இந்தத் தொனி வித்தியாசத்தாலேயே, கதைப்பொருள் ஒப்பிடக்கூடியதான நிலை இருந்தும் ஜெயகாந்தனின் அந்த நாளைய எழுத்திற்கும் சுராவின் எழுத்திற்கும் வேறு பாடு அமைந்து, சுராவின் எழுத்தில் ஒரு வகைத் திசையிலாத்தனம் இருக்கிற மாதிரி சில விமரிசகர்கள் குறைப்படும் படியான நிலை எழுகிறது. உண்மையில் சுராவின் விபரணைகளில் தோற்றும் தொனியில் அமைந்துபோன உபதொனிகள் மூலமே அவர் நிலையைக் காணக்கூடியதாக இருக்கிறது. பட்டும் படாமல் இருக்கிற உபதொனிகள், அங்கத நடையினால் சில விமரிசகர்களில் படாமல் போகிற படியால், இந்தப் பேச்சு வாங்க வேண்டியிருக்கிறது. கருனாடக சங்கீதத்தில் உள்ள ‘அழுத்தமான பாட்டு ‘ என்றும் ‘ வாய் நுனிப் பாட்டு ‘ என்கிற ஒப்புவமைகள் மாதிரி எழுத்திலும் சொல்ல முடியும். ‘தலையணை உறை தைக்க முடியாது ‘ என்கிற பிடிவாதத்தை வர்க்க ரீதியாகவும் காரணப் படுத்தி விவாதிக்க முடியும். இலக்கிய சுதந்தரத்தைப் பேணும் ஓர் எழுத்தாளனின் நிலையை அடி ஆழத்தில்தான் காண முடியும். இதுதான் சுராவுக்கு நடப்பதான கோட்பாடு. கதையின் சாரத்தில் தர்மங்கள் காப்பாற்றப்படுவதையோ மற்றும்படியான ‘அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீகத் தத்துவங்கள் ‘ நிலை பெறுவது பற்றியோ ஒரு குறிப்பும் இல்லை. எனவே இந்திய எழுத்துகளின் மறு வகையான் வான் மய, ‘ஆன்மீகக் ‘ கோட்பாடுகளையும் நிலை நிறுத்தாததில் சுரா தலையணையுறை தைக்க முடியாத தத்துவ நிலை பற்றி உண்மையாகவே இருந்திருக்கிறார். ஜெய மோஹனுக்கு இது குறையாக இருக்கிறது.

சிறு பத்திரிகை நிருபர் என்றாலும், விஷயங்களைக் கட்டுப்படுத்தலிலும் தன் விருப்பங்களுக்கேற்றவாறு திரிக்கும் கெட்டித்தனத்திற்கும் இந்து ராமுக்கொப்பானவர் என்று தெரிகிறது. புளிய மரத்தின் சரித்திரத்தை மக்களுக்குப் பத்திரிகை மூலமாகச் சொன்ன பெருமை அவருக்கு. நிருபர் வேலையிலான மனப்பாங்குகளே விபரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விவரணைகள் மூலமாகக் கிடைப்பதுவெல்லாம் ‘ தில்லானா மோகனம்பாள் ‘ வாசிக்கும் அனுபவத்திற்கு ஒப்பானதே தவிர ஆழத்தை வேறு பிரதிபலிப்புகள் மூலமாகத்தான் காண முடியும்.

கதையின் விசாரபலம்

கதை பல தமிழ்க்கதைகளைப் போல், எந்த விசாரத்தையும் தூக்கி அலசுவதாக இல்லை. ராஜ் கொளதமனும் அவர் பின்னுரையில் அதைக்குறிப்பிடும் கட்டாயம் அமைந்து போய்விடுகிறது. ‘காண ஆசைப்படுவதையெல்லாம் கண்டு விட்டதாகவே சொல்லிவிடலாம். ஆட்சேபணையில்லை ‘ என்கிற முன்னுரை மாத்திரம் ஒரு வேலியாக அமைந்து விடவில்லை. கதையின் ஓட்டமும் குறி வைக்க முடியாத கதைப்பொருளும் ஒரு வகை விசார பலமின்மை இந்தக் கதைக்குத் தருவதாகத் தோற்றும். ஆச்சரியமாக இவைகளே கதைக்கு ஒரு தத்துவத்தொனியைத்தருகின்றன. ஆசான் ஒரு தத்துவ வாதி என்று சொல்வதிலும், ‘மனிதன்தான் பிரம்மா, மனிதன் தான் விஷ்ணு, மனிதன் தான் சிவா ‘ என்று சொல்வதிலுமான ஆழம் வரையே இந்திய கிராமத்து / சிறு நகரத்து நடை முறை நிலையில் தத்துவார்த்தங்கள் எட்டுகின்றன என்று குறைப்பட்டால், ஜெய மோஹனின் விஷ்ணுபுரத்தை வாசித்த பின்னர் தமிழ் சினிமாவையும் பார்த்து ரசிக்கும் நகர் மக்களின் மன முரண்பாடுகளையும் ஒப்பிட வேண்டும். சீஷாவல்லியிலான ‘ இஷ்டம் மனிஷான, அமும் மனுஷான, சர்வம் மனிஷான ‘ என்பதை ஆசான் சொல்லவில்லையென்று குறைப்பட முடியாது. ஆசான் ஆனவரால் மனிதனின் பொளதீக நிலை, லெளகீக விசாரம், ஆன்ம விசாரம் இவைகள் பற்றி ஒரு கிராமம் / சிறு நகரச் சூழலில் எட்டக் கூடிய நிலை அதுதான்.

சுராவின் சிந்தனையில் புதியவைகள் நிறையவே இருக்கின்றன. சென்னையில் இருந்து வந்ததெல்லாம் திருவல்லிக்கேணியைத் தாண்டாத நிலையில் நாகர்கோவிலுக்கு இழுத்துச் சென்று ‘அட மாந்தயா! ஆலகால விஷமில்லா! ‘ என்றவகைளைக் கேட்கப் பண்ணி, ஓர் ஊரின் கதையை புளிய மரத்தை மையமாக வைத்து எழுதி, போதுமான ஆழத்தில் தன் நிலைகளைப் புதைத்ததில் இது தெரியும். நாகர் கோவிலுக்கு வாசகர்களை இழுத்ததான பணி இந்தியத் தமிழ் இலக்கிய பரிணாமத்தில் முக்கியமான புள்ளி.

கதையில் சொல்லப்படும், தோற்றும், வாழ்க்கையின் பரந்த வெறுமையும், வெங்காயத்தோல்த்தனமும் ஊரையும் மரத்தையும் சாய்ப்பதைக் காட்டுவதான முயற்சியில் சுராவுக்கு வெற்றியே. இதில் சூழலையும், சரித்திரத்தையும் இணைத்திருப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இலக்கியத்தில் ஆழம் காண்பது என்பது கிணறு தோண்டுவதற்கொப்பானது. தோஸ்தயேவ்ஸ்கியின் கதைகள் அழுத்தமாகவும் விரிவாகவும் சொல்லப்பட்டிருக்காவிடில், அவற்றின் இருப்புவாதத் தொனி யாருக்கும் கேட்டிருக்காது. அங்கத நடையில் இறங்கிய சுராவுக்கு இந்தத்தொனிகளும், நலிந்து போன மனித இருதயங்களைக் காட்டும் பணியிலான தொனிகளும், உப தொனிகளாக இருப்பதில் கதையின் விசார வலு தோற்றாமல் போய் விடுகிறது.

****************

இந்திய பாரம்பரிய த்வைத , அத்வைத, விசிஷ்டாத்வைத சிந்தனா ஆழங்கள் என்று கருதப்படுவனவற்றில் பல கோட்பாடுகள் பிராம்மணத்துவ, நிலப்பிரபுத்வ சிந்தனைகளிலான சுருட்டல்களே தவிர சரித்திர ஓட்டத்தையும் வாழ்வின் அன்றாட யதார்த்தத்தையும் பண்ணையில் வேலை செய்பவனின் வியர்வையையும் கண்கொண்டு சொல்லப்பட்டவையல்ல. இதனால் அவற்றிற்கு இடமில்லையென்றும் சொல்லிவிட முடியாது. எல்லாவித வாழ்க்கையோட்டங்களையும் மீறுவதான உரிமை சிந்தனாவாதிகளுக்கு உண்டு. வருக்க, சாதிய சிந்தனைகளைக்கும் மேற்படுவதான வெகுவெளிப்பட்ட பார்வைகளே உண்மையின் முழுமைக்கு உதவுமென்றாலும், மனித சிந்தனையின் பரிணாமத்தில் பழங்காலத்தில் பிளேட்டோவிலிருந்து வேதங்கள் வரை எல்லாவற்றிற்கும் அமைந்து போன ஒரளவிலான உண்மை விகிதாசாரத்தை யாரும் விவாதிக்கமுடியாது. புளியமரத்தின் கதையில் இந்திய மதத்துவ பாரம்பரிய சிந்தனையோட்டம் இல்லை – நவீன மேற்கத்தைய சிந்தனைகளின் சாயல்களும் இல்லை என்கிற குறைகளுக்கு நிவர்த்தியாக, நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்த முன்னும் பின்னுமான ஒரு கால கட்டத்தில் ஓர் ஊருக்கு நடப்பதை அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களுக்குத் தலையணை உறை தைக்கமுடியாதென்பதான பிடிவாதத்துடன், சரித்திரத்தின் ஓட்டத்தில், கோணல் சிந்தனைகளிலிருந்தான விடுதலையைத் தருவதாக விபரணைகள் அமைந்து போயிருக்கின்றன. ‘இழந்தும் பெற்றுமான வாழ்வு ‘ என்கிற கோட்பாடு தத்துவத்திசை. ஓர் ஊரின் கூட்டு மனத்தைத் தேடும் முயற்சியானது இலக்கியத்திசை. இவைகள் பாராட்டப்பட வேண்டியவைதான்.

வெறும் சரித்திர ஓட்டமான, சிறுமையான சூழல்களிலும் பல எழுத்தாளர்கள் மனிதத் தொடர்புகளின் இறுக்கத்தையும் வக்கிரங்களையும் அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்த மாதிரியான அழுத்தத்தை இந்தக் கதைக்குக் கொடுக்க சுரா முன் வரவில்லை. அவரால் முடியாது என்று சொல்ல இடமில்லை. பின்னால் வந்த நாவல் ‘பெண்கள் ஆண்கள் குழந்தைகள் ‘ தொடர்புகளின் சிக்கல்களை நன்றாகவே எடுத்துக்காட்டுகிறது. சுரா தன் சொந்த வருக்க சிந்தனையிலிருந்து தப்ப முயலாமல் கதையைச் சொன்னதிலும் ஒரு நேர்மை அமைந்தே போயிருக்கிறது. இலக்கியப் படைப்புகளின் முழுமையின் அளவு கோல்களான கால கட்டம் , கதை நடக்குமிடம், கவனிப்பற்றோரிலான கவனிப்பு ஆகிய பரிமாணங்களில் கதை முன்னிடம் வகிக்கிறது. ஒரு கணம் நிதானித்திருந்தாரென்றால் அவர் சொல்ல வந்த வாழ்க்கை ஓட்டத்தின் இறுதித்தோல்வி பற்றி இன்னொரு வரி கிடைத்திருக்கும். தோல்வியான வாழ்வில் எந்தத் தத்துவத்திற்கும் தலையணையுறை தைப்பதுவும் வீணானதுதான் என்பதுதான் சுராவின் திசை போல் தோன்றுகிறது.

(உலகத்தமிழ் மார்ச் 15-31)

sisridharan@yahoo.com

Series Navigation

ஸ்ரீதரன்

ஸ்ரீதரன்