ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1

This entry is part [part not set] of 43 in the series 20110529_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


“அமெரிக்காவின் விண்வெளிக்கப்பல் “சாலஞ்சர்” எரிந்து போய் அனைத்து விண்வெளி விமானிகள் [1986 ஜனவரி 28] மாண்டதும், அடுத்துச் செர்நோபில் அணுமின் நிலையம் [1986 ஏப்ரல் 26] வெடித்ததும் நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்து, நாகரீக முன்னேற்றத்தின் பெயரால் எழுந்துள்ள நிறுவகங்களின் கோர விளவுகளை மனித இனம் இன்னமும் புரியாமலே இருப்பதை நினைவூட்டுகின்றன.”

மிக்கேயில் கார்பசாவ் [Mikhail Gorbachev (Aug 18, 1986)]

அணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் குறைக்க வழிகள் உள்ளன என்னும் பாதுகாப்பு உறுதிலும் பொது மக்களின் உடன்பாடு காணப்பட வேண்டும். பாதுகாப்பாக எப்படி அணுமின் உலையில் நேரும் விபத்தின் தீவிர விளைவுகளோடு மனிதர் வாழ முடியும் என்பது ஒருபுறம் இருக்க, செர்நோபில் போன்ற கோர விபத்துகளை எப்படித் தடுக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இன்னும் தெரியவில்லை!

இயற்கை விஞ்ஞானப் பதிப்பு [Nature]

நகரிலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ள சிறு அணுமின் நிலையம் ஒன்றில் பெரும் விபத்து நேர்ந்தால், சுமார் 3400 பேர் மரணம் அடையலாம்! கதிரியக்கத்தால் 43,000 நபருக்குத் தீவிரத் தீங்குகள் விளையலாம்! நகரப் புறத்திலும், நிலவளத்திலும் ஏற்படும் பொருட் சேதம் சுமார் 7 பில்லியன் டாலர் நிதி விரையத்தை உண்டாக்கலாம்.

அமெரிக்க அணுசக்திப் பேரவைக் கணிப்பு [US Atomic Energy Commission Brookhaven Report (1957)]

“மேன்மையான படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையும் கோர முடிவுகளின் முழுத் தோற்றத்தை முதலில் உற்று நோக்கிய பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்”

தாமஸ் ஹார்டி [Thomas Hardy]

முன்னுரை: 2011 மார்ச் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குக் கரையில் 9 ரிக்டர் அளவில் அசுரப் பூகம்பம் ஒன்று உண்டாகி, இதுவரை எழாத 9 மீடர் (30 அடி) உயரச் சுனாமிப் பேரலைச் சுவர் தாக்கிப் பேரழிவை உண்டாக்கியது ! அப்போது அந்தப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த 11 அணுமின் உலைகள் பாதுகாப்பாக சுயநிறுத்தம் அடைந்தன ! 7.5 ரிக்டர் நிலநடுக்க அளவைத் தாங்கிக் கொள்ள அமைக்கப்பட்ட அணுமின் உலைகள் 9 ரிக்டர் அளவு பூத நடுக்கத்தைப் பொறுத்துக் கொண்டு நிலைகுலையாது நிமிர்ந்து நின்று ஆச்சரியம் விளைவித்தது ! ஆனால் 30 அடி உயர அசுரச் சுனாமி அலையை அணு உலைகள் தாங்கிக் கொள்ள முடியாது அவற்றின் அபாயப் பணி அவசிய மின்சாரச் சாதனங்கள் முடமாக்கப் பட்டு நிறுத்தப் பட்டன. அணு உலை எருக்கோல்களின் மிச்ச வெப்பத்தைத் (Residual Heat of the Shutdown Fuel Rods) தணிக்க நீரனுப்ப முடியாமல் ஓரளவு உருகிப் போயின. மேலும் நீரில் மூழ்காத எருக்கோல்களின் உஷ்ணம் மிகையாகி அவற்றின் கவச ஸிர்கோனியம் (Zirconium Fuel Sheath) நீரோடு இணைந்து ஹைடிரஜன் வாயுக் கோளம் வெளியேறி ஆக்ஸிஜனுடன் கலந்து யூனிட் -1, -2, -3 அணு உலைக் கட்டங்களின் மேற்தளங்கள் வெடித்தன ! யூனிட் -1 இன் எஃகு கோட்டைக் கீழ் வளையத்தில் (Torus) நீராவியின் அழுத்தம் மிகையாகிப் பிளவு ஏற்பட்டு கதிரியக்க கசிவு தொடர்ந்தது. வெப்பத் தணிப்புக்குக் குழாய் நீரனுப்ப வசதியற்று, கடல் நீரைப் பயன் படுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது, அணு உலை வெப்பத் தணிப்பு நீர் போக்குக்குத் தேக்குமிடம் இல்லாமல் டர்பைன் கட்டடத்தில் சேமிப்பாகிக் கதிரியக்கம் கடல் வெள்ளத்தில் கலந்தது ! வெளியேறும் நீராவியில் கதிரியக்கத் தூள்களும் வாயுக்களும் சுற்றுப் புறங்களில் பலமடங்கு வீரியத்தில் பரவின !

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 1979 இல் நேர்ந்த அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்தில் வெப்பத் தணிப்பு நீரனுப்ப முடியாது பேரளவு எருக்கோல்கள் உருகிப் போயின. வெப்ப மிகையில் நீரும் எருக்கோல் கவச ஸிர்கோனியமும் இணைந்து பேரளவு ஹைடிரஜன் வாயுக்கோளம் அணு உலைக்குள் திரண்டு வெடித்து மூடிய கோட்டையைத் தகர்த்து விடும் என்றோர் அச்சத்தை உண்டாக்கியது. அவ்விதம் எச்சரிக்கை செய்து 30 ஆண்டுகள் கடந்து ஜப்பான் புகுஷிமாவில் மூன்று அணுமின் உலைகளில் நிலநடுக்கத்தால் நிறுத்தமாகி, சுனாமியால் டீசல் எஞ்சின்கள் முடக்கமாகி வெப்பத் தணிப்பு நீரனுப்பு ஏற்பாடுகள் தடைப்பட்டு ஓரளவு எருக் கோல்கள் உருகி விட்டன என்று தெரிய வருகிறது ! அதை விடக் கோரமாய் அணுமின் உலைக்குள் பேரளவு ஹைடிரஜன் வாயுக்கோளம் திரண்டு வெடித்து மூன்று அணுமின் உலைகளின் கட்டட மேல்தளம் சிதைந்து அங்கிருந்த யந்திர சாதனங்களும் சிதறிப் போயின ! நான்காவது அணு உலையின் மேற்தளம் நீர்த் தொட்டியில் சேமிப்பான எருக்கோல்கள் தணிப்பு நீரின்றி, ஹைடிரஜன் வாயு சேர்ந்ததால் வெடித்தது ! விபத்து நேர்ந்த திரிமைல் தீவின் விளைவு களிலிருந்து ஜப்பான் அணுவியல் துறை நிபுணர்கள் என்ன பாடங்கள் கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை ! என்ன செம்மைப்பாடுகளைத் தமது அணுமின் உலைகளில் நிறுவினர் என்பதும் ஆழ்ந்து அறிய வேண்டிய உளவுகள் !

அணு உலைகளின் சிதைவாலும், அசுரச் சுனாமியாலும் ஜப்பானியருக்கு விளைந்த பாதிப்புகள் (ஏப்ரல் 25, 2011)

புகுஷிமா பூகம்பச் சுனாமி விபத்தால் நேர்ந்த மரணங்கள், சிதைந்த நகரங்கள், வீடுகள், தொழிற்துறைகள் அவற்றால் ஏற்பட்டப் புலப்பெயர்ச்சிகள், இடக்கடத்தல், கதிரியக்கத் தீண்டல்கள் ஆகியவற்றை நோக்கினால் இந்த நிலநடுக்க விபத்து உலகப் பெரு விபத்துகளில் ஓர் உச்ச இடத்தைப் பெறுகிறது ! இந்தப் பேரிழப்பின் நிதி மதிப்பு சுமார் 235 பில்லியன் டாலர் என்று உலக வங்கி மதிப்பீடு செய்கிறது ! ஜப்பான் அரசாங்கம் இவற்றைச் சீராக்க 3 பில்லியன் டாலர் நிதித் தொகை ஒதுக்குத் திட்ட ஏற்பாட்டை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 25, 2011 தேதி வரை பூகம்பம், சுனாமி, கதிரியக்கத் தாக்குதலால் ஜப்பான் பகுதிகளில் நேர்ந்த முக்கியச் சீர்கேடுகள், இன்னல்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன :

1. ஜப்பான் தேசீயக் காவல்துறை அறிக்கைப்படி மரணம் அடைந்தவர் எண்ணிக்கை : 14,358. இன்னும் காணாமல் இருப்பவர் எண்ணிக்கை : 11,889.

2. பூகம்பத்தாலும், சுனாமியாலும், கதிரியக்கத்தாலும் இடங் கடத்தப்பட்டு தற்காலியப் பாதுகாப்பு இடங்களில் தங்கி இருப்போர் எண்ணிக்கை : 130,904.

3. புகுஷிமா அணு உலை விபத்தால் கதிரியக்கப் பொழிவிலிருந்து 20 கி.மீடருக்குள் அப்பால், 30 கி.மீடருக்குள் வசிக்கும் 136,000 பேர் அரசாங்க ஆணையால் புலப்பெயர்ச்சி ஆக்கப் பட்டுள்ளார்.

4. தொகூக்கு மின்சார வாரியத்தின் (Tohuku Electric Power Co) அறிவிப்புப்படி 12,485 வட ஜப்பான் இல்லங்களில் மின்சாரம் அனுப்பு வசதிகள் இல்லை.

5. ஐந்து நகர்ப் புறத்தில் குறைந்தது 79,000 இல்லங்களில் குழாய் மூலம் குடிநீர் அனுப்பு வசதிகள் முடங்கி உள்ளன என்று உடல்நல அமைச்சகம் அறிவித்துள்ளது.

6. குறைந்தது 95,100 வீடுகள் தகர்ந்து போயின, அல்லது சுனாமியால் இழுத்துச் செல்லப் பட்டன, அல்லது எரிந்து சாம்பலாயின என்று தெரிய வருகிறது.

7. புகுஷிமாவுக்கு அருகிலுள்ள கடல் நீரைச் சோதித்ததில் கதிரியக்க சீஸியம்-134 இன் அளவு பாதுகாப்பு அனுமதி நிலைக்கு மீறி 18,000 மடங்கு ஏறி விட்டதாக அறியப்படுகிறது.

8. புகுஷிமாவைச் சுற்றியுள்ள நிலவளம், நீர்வளம், பயிர்வளம் கதிரியக்கப் பொழிவுகளால் ஓரளவு தீண்டப்பட்டு பொது மக்களின் வேளாண்மை, தொழில்கள், ஊழியங்கள், உணவு வகைகள், பால்வளம், மீன்வளம் பாதிக்கப் பட்டுள்ளன. அவற்றின் மொத்த இழப்பீடுத் தொகை இப்போது முழுமையாகத் தெரியாவிட்டாலும், சுமார் 100 பில்லியன் டாலர் என்று பொருளாதார நிபுணர் மதிப்பீடு செய்கிறார்.

9. பூகம்பத்தாலும், சுனாமியாலும் நேர்ந்த இழப்புக்கள் மட்டும் 300 பில்லியன் டாலர் நிதித் தொகை எண்ணிக்கையை எட்டும் என்று அறியப் படுகிறது ! இதுவரை நேர்ந்த உலக இயற்கைத் தீங்குகளில் உச்ச நிலை இழப்பாக மதிப்பீடு செய்யப் படுகிறது !

10. ஜப்பானின் இந்தப் பேரிழப்புக்கு உதவி செய்ய இப்போது 146 உலக நாடுகள், 39 அகில நாட்டு ஆணையகங்கள் முன்வந்துள்ளன என்று ஜப்பன் வெளிநாட்டு அமைச்சம் அறிவித்திருக்கிறது.

11. புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் வெடிப்பும், கதிரியக்க வெளியேற்றமும், சுற்றுப் புறத்தில் வாழும் மக்களுக்கு அளித்த இடர்ப்பாடுகளையும் எடைபோட்டு அகில நாட்டு அணுவியல் துறைப் பேரவை (International Atomic Energy Agency – IAEA) விபத்து நிலை அளவை ஐந்திலிருந்து ஏழுக்கு உயர்த்திச் செர்நோபில் விபத்துக்கு நிகராக ஏற்றியுள்ளது !

12. சுனாமியால் பெருஞ் சேதமடைந்த புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளும் நிரந்தரமாய் முடக்கமாகிச் சுத்தமாக்கப் பட்டுச் சில ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும் ! அதனால் ஜப்பானில் மின்சாரப் பரிமாற்றம் 2720 MWe குறைந்து போய் சில இடங்களில் மின்வெட்டும், மின்தடையும் உண்டாகும். இந்த நான்கு அணுமின் உலைகளின் சிதைந்த எருக் கோல்கள் நிரந்தரமாய் நீக்கப்பட்டுக் கதிரியக்கத் தீண்டல் யாவும் துடைக்கப்பட்டுச் சுத்தமாக்க குறைந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகலாம் !


ஜப்பானின் எதிர்கால மின்சக்தி உற்பத்தித் திட்டங்கள் (2011 மார்ச் 30) :

ஜப்பானுக்குத் தேவையான எரிசக்தியில் 80% பங்கை மற்ற நாடுகளிலிருந்து அது இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இப்போது இயங்கிவரும் 50 அணுமின் உலைகள் 30% மின்சக்தியைத் தொடர்ந்து பரிமாறி வருகின்றன. 2017 இல் அணுமின்சக்தி உற்பத்தி அளவு 40% ஆகவும், 2030 இல் 50% ஆகவும் உயரும் என்று முந்தைய திட்டப்படி எதிர்பார்க்கப் படுகிறது. ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு வெடிப்பால் கதிரியக்கப் பாதிப்புகளில் பேரின்னல் உற்றாலும், நிலநடுக்கம், சுனாமி அடிப்புகள் நித்தியப் பேரிடர் கொடுத்தாலும், புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் வெடித்துக் கதிரியக்கம் வெளியேறி மக்கள் பெரு வேதனைப் பட்டாலும், ஜப்பான் தேசத்துக்குத் தொடர்ந்து பேரளவில் மின்சக்தி உற்பத்தி செய்யத் தற்போது அணுசக்தியைத் தவிர எரிசக்தி வேறில்லை என்பது நாம் அறிந்து கொள்ளும் மெய்ப்பாடு ! 7.5 ரிக்டர் அளவுக்கு டிசைன் செய்த புகுஷிமா அணுமின் உலைச் சாதனங்கள். கட்டங்கள் 9 ரிக்டர் அளவுப் பூதப் பூகம்பத்தால் சிறிதளவு கூடச் சிதைவாக வில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 30 அடி உயரச் சுனாமி அலைகளால் அணுமின் உலைகளில் சீர்கேடுகள் நிகழாமல் தடுப்பு அரண்களும், பாதுகாப்புச் சாதனங்களும் எதிர்கால ஜப்பானில் சுறுசுறுப்பாக உருவெடுக்கும் என்று நாம் நம்பலாம். அணுசக்தியால் ஓடும் ஜப்பானின் யந்திரச் சக்கரத்தை எல்லாம் பெரு நில நடுக்கமும், பேரலைச் சுனாமிகளும், கதிரியக்க அச்சமும் நிரந்தரமாய்த் தடுத்து நிறுத்திவிடும் என்று உலக மாந்தர் எதிர்பார்க்கக் கூடாது !

(தொடரும்)

***************

தகவல்:

1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)

2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire

3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)

4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo

5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill

6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)

7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)

8. Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)

9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.

10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants

11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

13. IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant (August 17, 2007)

14. Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant (Jan 29, 2009)

15. Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station (Nov 14, 2009)

16. Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan (March 11, 2011)

17. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

18. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

19. Nuclear {Power in Japan (March 30, 2011)

20. Russia & India Report – Lessons of Fukushima – Expert Opinions. (March 28, 2011)

20 (a) Macleans Magazine – Japan Fearing the Fallout (March 28, 2011)

21. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension (May 12, 2010)

22. Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

23. World Nuclear Association – Nuclear Power in Japan (April 2011)

24. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

25. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

26. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

************************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) May 20, 2011
http:jayabarathan.wordpress.com/

Posted in அணுசக்தி, விஞ்ஞானம் | Leave a Comment »
ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து
மே 13, 2011
(1999 Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

முன்னுரை: 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் [Uranium Enrichment Factory] ஏற்பட்ட விபத்தில் தீவிரக் கதிரடி பெற்ற மூன்று பணியாளிகளில் இருவர் சில மாதங்களில் உயிரிழந்தனர்! விபத்துக்கு முன் ஜோயோ ஆராய்ச்சி அணு உலை எருவுக்காக [Fuel for Joyo Research Reactor] செறிவு யுரேனியம்235 தயாரிக்கும் ரசாயன வேலையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர். மேற்பார்வை அதிபதிகளின் கூர்ந்த கண்காணிப்பின்றி, தான் என்ன செய்கிறோம், அதனால் என்ன விளையப் போகிறது என்ற விபரம் அறியாமல் பாதிக்கப் பட்ட அப்பாவிப் பணியாளிகள், அம்மூவரும்! 20% செறிவு யுரேனியத்தை மிஞ்சிய அளவில் கொப்பரையில் அறியாது ஊற்றி விட்டதால், பூரணத் தொடரியக்க விபத்து [Criticality Accident] தூண்டப்பட்டு, 20 மணி நேரமாக விட்டு விட்டு அபாய நிலை தொடர்ந்தது! விபத்தின் போது மேலும் 119 பேர்கள் 100 மில்லி ரெம் [100 mRem] (1 Sievert = 100 Rem)கதிரடி வாங்கினர்! ‘அகில நாட்டு அணுவியல் பேரவை ‘ [International Atomic Energy Agency (IAEA)] ஆழ்ந்து உளவு செய்து டோகைமுரா விபத்து மனிதத் தவறுதாலும், பாதுகாப்பு நெறிகளை மீறியதாலும் ஏற்பட்டது என்பதாய் அறிவித்தது! மேலும் IAEA விபத்தின் விளைவு வீரியத்தைக் குறிப்பிடும் போது, தகுதிநிலை:4 [Level:4 Accident Category] என்ற பிரிவில் வகுத்தது. அந்த அளவுக் கோலின்படி டோகைமுரா விபத்தை வெளிமண்டலக் கதிர்த்தீண்டல் மிகுதியாகப் பரவாத, வெறும் கதிரடி விபத்து எனக் காட்டியது!

1986 இல் நேர்ந்த செர்நோபிள் பெரு வெடிப்புக்கும், 1979 இல் நிகழ்ந்த திரி மைல் தீவு விபத்துக்கும் அடுத்தபடி மூன்றாவதாகக் கருதப்படுகிறது, ஜப்பான் டோகை முராவில் விளைந்த கதிரடித் தீங்குகள்! விபத்தின் போது போராடிய 439 நபர்கள் [இயக்குநர், தீப்படை ஆட்கள், மற்றவர்], 228 வட்டார மக்கள் கதிர்வீச்சுக் கதிரடியின் கைவசப் பட்டனர்! தொழிற்கூடத்திற்கு 1150 அடிக்கு அருகில் வாழ்ந்த 161 பேர் 48 மணி நேரம் வேறிடத்துக்குக் கடத்தப் பட்டார்கள்! ஆறு மைல் சுற்றளவில் வசித்த 310,000 நபர்கள் 16 மணி நேரங்கள் தமது இல்லங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவு இடப்பட்டனர்! டோகைமுராவில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன! வீதிகள், தெருக்கள் மறிக்கப் பட்டு வாகனங்கள் தடுக்கப் பட்டன! ரயில் போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்த மாயின!

டோகைமுராவில் பூரணத் தொடரியக்க அபாயம் எவ்விதம் ஏற்பட்டது ?

டோகைமுரா டோக்கியோவிலிருந்து நேர் வடகிழக்கே சுமார் 87 மைல் தூரத்தில் உள்ளது. மிகச் சிறிய டோகைமுரா செறிவு யுரேனியத் தொழிற்கூடம் ஜப்பான் அணுஎரு மாற்றுக் கம்பெனிக்கு [Japan Nuclear Fuel Conversion Co.(JCO)] உரிமை யானது. அது சுமிடோமோ உலோகச் சுரங்கக் கம்பெனியின் [Sumitomo Metal Mining Co.] கிளை நிறுவகம். டோகைமுரா யுரேனியத் தொழிற் கூடம் அணுமின் நிலையங்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய நிறுவப்பட வில்லை. அல்லது பயிற்சி பெற்ற பணியாளர் பங்கு கொண்டு அணு எருவைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் வாணிபத் தொழிற் சாலையும் அன்று. ஆராய்ச்சி அணு உலைகளுக்கு மட்டும் வேண்டிய சிறிதளவு செறிவு [18.8%] யுரேனியத்தை அவ்வப்போது தயாரிக்கும் நோக்கம் கொண்டுள்ளதால் சிறப்புத் திறமையோ அன்றி போதிய அணு விஞ்ஞான அறிவோ எதுவும் இல்லாத சாதாரண நபர்களே டோகைமுரா தொழிற்கூடத்தில் வேலைக்கு அமர்த்தப் பட்டனர்!

ஆண்டுக்கு 3 டன் செறிவு யுரேனியம்235 [20% Enriched U235] தயாரிக்கும் மிகச் சிறிய டோகைமுரா தொழிற்கூடம் 1988 ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்தது. ஜப்பானின் ஏனைய செறிவு யுரேனியச் சாலைகள் யாவும் பாதுகாப்பான திரவ மற்ற ‘வரட்சி முறையைப் ‘ [Dry Process] பின்பற்றும் போது, டோகைமுரா மட்டும் அபாயம் மிகுந்த திரவம் பயன்படும் ‘ஈர முறையைக் ‘ [Wet Process] கையாள டிசைன் செய்யப் பட்டது! 1980 இல் கிடைத்த இயக்க லைஸென்ஸ் விதிப்படி டோகைமுரா ‘ஒரு சமயத்தில் 18.8% செறிவு யுரேனியம் 5.3 பவுண்டு கூடத்தில் உற்பத்தி செய்யலாம் ‘. அதற்கு மிகையான எடைச் செறிவு யுரேனியம் தயாரித்தால், ‘பூரணத் தொடரியக்க விபத்து ‘ [Criticality Accident] நேர வாய்ப்புள்ள தென்று தடுக்கப் பட்டுள்ளது!

அணுஎரு மாற்றல் முறையில் யுரேனியம் ஆக்ஸைடு [U3 O8] திரவம் அடுத்து ஒரு திரவக் கலனில் நைட்டிரிக் அமில ரசாயத்துடன் கலந்து யுரேனில் நைட்ரேட் திரவமாக [Uranyl Nitrate Solution] மாறுகிறது. இறுதியில் திடவத் துணுக்குகள் ‘கீழ்த்தங்கு கொப்பரை ‘ [Precipitation Tank] அடியில் சேர்ந்தபின் திரவம் மட்டும் மேலே நிற்கும்.

அமில ரசாயனச் சேர்க்கையால் எழும் புறவீச்சு வெப்பத்தைத் [Exothermic Chemical Reaction] தணிக்க கீழ்த்தங்கு கொப்பரையைச் சுற்றிலும் நீரோடும் பைப்பு போர்வை போல் [Water Cooling Jacket] அமைக்கப் பட்டிருக்கும்.

அணுக்கருப் பூரணத் தொடரியக்க அபாயம் [Criticality Danger Event] நேராமல் தடுக்கக் கீழ்த்தங்கு கொப்பரையில் நுழையும் திரவத்தில் யுரேனியக் கலவை நிறை, கொள்ளளவு இரண்டும் கட்டுப்படுத்தப் பட்டு [Enriched Uranium Mass & Volume Limitation] குறிப்பிட்ட வரையரை அளவை மீறவே கூடாது! மீறினால் அணு உலைபோல் தொடரியக்கம் உண்டாகி வெப்பமும், கதிர்வீச்சும் ஏற்பட்டு மனிதருக்குத் தீங்குகள் விளைவிக்கும்! அவ்விதம் திரவ அளவைக் கட்டுப்படுத்த கீழ்த்தங்கு கொப்பரைக்கு முன்பு ஓர் ‘இடைவிலக்குக் கிணறு ‘ [Buffer Column] அமைப்பாகி உள்ளது.

எதிர்பாராமல் யுரேனியம்235 நிறையோ, கொள்ளளவோ வரையரை மீறி பூரணத் தொடரியக்கம் நேர்ந்தால், அணுக்கரு இயக்கத்தைத் தடுப்பதற்கு ‘நியூட்ரான் விழுங்கிகள் ‘ [Neutron Absorbers] தயாராக அமைக்கப் பட வேண்டும்! அணுக்கரு இயக்கத்தால் எழும் வீரிய கதிர்வீச்சைக் குறைக்கக் கவசங்கள் [Radiation Shieldings], பணியாளிகளை எச்சரிக்கை செய்ய கதிர்வீச்சு மானிகள் [Radiation Monitors with Alarms] இருக்க வேண்டும். அவ்விதத் தடுப்பு ஏற்பாடுகள் இல்லா விட்டால், ‘அணுவியல் நெறியாட்சி ஆணையகம் ‘ [Nuclear Regulatory Authories] அந்தத் தொழிற்சாலைக்கு இயக்க லைஸென்ஸ் [Operating License] தராது.

ஜப்பானில் லைஸென்ஸ் பெறும் போது, எப்படியோ டோகைமுரா யுரேனியத் தொழிற்கூடம் தப்பி விட்டது! கூடத்தின் உள்ளே கதிர்வீச்சை எச்சரிக்கக் கூச்சல் ஒலி இருந்ததே தவிர, பாதுகாப்புக்கு வேறு நியூட்ரான் விழுங்கிகளோ அன்றிக் கதிர்க் கவசங்களோ எதுவும் வைக்கப் பட வில்லை!

போதிய விஞ்ஞான அறிவற்றுப் பணி செய்வோரும், எந்த வித மேற்பார்வையும் இன்றிப் பயங்கரமான செறிவு யுரேனிய திரவத்தைக் கையாண்டு கலன்களில் மாற்றி வந்தார்கள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோகைமுரா கூடத்தில், அணுவியல் நெறியாட்சி ஆணை யகத்தின் அனுமதியின்றி, திரவ மாற்று முறையில் ஒரு திருத்தம் செய்யப் பட்டது! அம்முறையில் இடைவிலக்குக் கிணறில் கலக்கப்பட வேண்டிய யுரேனியம் ஆக்ஸைடு, தனியாக ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளிகளில் கரைக்கப் பட்டது! பிறகு வாளிகளிலிருந்து யுரேனியம் ஆக்ஸைடு நேராக கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றப் பட்டது! அப்படி ஊற்றும் போது செறிவு யுரேனியத்தின் நிறை, கொள்ளளவு தெரியாமல் மிஞ்சி விட வாய்ப்புள்ளது! அப்போது நீர்ப் பைப்புகள் சுற்றியுள்ள கொப்பரை, ஓர் அணு உலை போல் இயங்குகிறது! அவ்விதமே டோகைமுராவில் அன்று விபத்து தூண்டப் பட்டுப் பெருந் தீங்கு விளைந்தது!

மூன்று நபர்கள் அன்று வேலையை விரைவில் முடிக்க ஒரு வாளி அளவு ஊற்றுவதற்குப் பதிலாக ஏழு வாளி செறிவு யுரேனிய ஆக்ஸைடு திரவத்தைக் கொப்பரையில் கொட்டினார்கள்! ஏழாவது ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளியில் உள்ள திரவத்தை 18 ‘ விட்டம், 27 ‘ உயரமுள்ள 100 லிட்டர் கொப்பரையில் ஊற்றியதும் சரியாக 40 லிட்டர் [35 lb 20% Enriched U235] சேர்ந்து, அங்கே பூரணத் தொடரியக்கம் ‘நீல ஒளி வீசி ‘ [செரன்கோவ் கதிரொளி (Cherenkov Radiation)] துவங்கியது! இடைவிலக்குக் கிணறு வழியாகத் திரவம் அனுப்பப் பட்டிருந்தால், அளவு கட்டுப்படுத்தப் பட்டு அன்று அபாயமே நிகழ்ந்திருக்காது! மேற்பார் வையாளர் ஒருவர் அருகில் நின்று ஏழாவது வாளி திரவத்தை ஊற்றாமல் தடுத்திருந்தால் அன்று பயங்கர விபத்தே நேர்ந்திருக்காது!

செறிவு யுரேனியத் திரவச் சேர்க்கையால் பூரணத் தொடரியக்க விபத்து!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக ‘ஜோயோ வேகப் பெருக்கி ஆய்வு அணு உலைக்கு ‘ [JOYO Experimental Fast Breeder Reactor] வேண்டிய 18.8% யுரேனியம்235 அணு எருவைத் தயாரிக்க டோகைமுராவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது! ஆனால் அப்பணியை செவ்வனே செய்ய பயிற்சி பெற்ற பணியாளிகள் இல்லாவிடினும் தயாரிக்கும்படி JCO மேலதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது! அந்த வேலையைச் செய்யப் போன மூவர் 1999 செப்டம்பர் 30 ஆம் தேதி 40 லிட்டர் யுரேனிய திரவத்தை கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றிய போதுதான் யுரேனி யத்தில் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Criticality or Nuclear Chain Reaction] பொங்கி எழுந்தது! உடனே அணுக்கருப் பிளவுகளால் வெப்பமுடன் காமா, நியூட்ரான் கதிர்வீச்சுக்களும் வெளியேறின!

ஆயினும் கொப்பரையில் எவ்வித வெடிப்பும் ஏற்படவில்லை! அணுக்கருப் பிளவுத் துணுக்குகள் மட்டும் கட்டிடத்தின் உள்ளே பரவின! யுரேனிய ஆக்ஸைடு திரவமாக ஈர முறையில் இயங்கியதால் [Wet Process] அணுக்கருத் தொடர்ப் பிளவுகள் விட்டு விட்டு 20 மணி நேரங்கள் நீடித்தன. ஆனால் வரட்சி முறையில் [Dry Process] ஆக்கப்படும் மற்ற செறிவு யுரேனியத் தொழிற்கூடங்களில் அவ்விதப் பயங்கர அபாயம் கிடையாது. யுரேனிய ஆக்ஸைடு திரவ நீர் தொடரியக்கத்தின் போது வெப்ப சக்தியில் கொதித்து ஆவியாகி, வெற்றிடம் [Voids] விளைந்ததும் தொடரியக்கம் நின்று போனது! திரவம் குளிர்ந்து வெற்றிடம் நிரம்பியதும், மறுபடியும் பூரணத் தொடரியக்கம் துவங்கியது! அவ்விதம் 20 மணி நேரங்கள் பூரணத் தொடரியக்கம் விட்டு விட்டு நிகழ்ந்து டோகைமுரா தொழிற்கூடத்தின் அகத்திலும், புறத்திலும் கதிர்வீச்சுகள் பரவின! கதிர்மானிகள் தொடர்ந்து கூச்சலிட்டன! தவறு செய்த மூன்று நபர்களும் உடனே ஓடிச் செல்லாமல் உள்ளே நின்று தொடர்ந்து கதிரடி பெற்றார்கள்! உள்ளே ஓடி வந்த மேலதிகாரிகளும் என்ன நிகழ்ந்து விட்டது என்று முதலில் அறியாமல் திகைத்து நின்று அவர்களும் கதிர்வீச்சில் தாக்கப் பட்டனர்!

கீழ்த்தங்கு கொப்பரையைச் சுற்றியுள்ள தணிப்பு நீர் ஓட்டத்தை நிறுத்தியதும் [Precipitation Tank Jacket water cooling] தொடரியக்கம் நின்றது. போர்வை நீரே வேக நியூட்ரான்களை மிதமாக்கி முதலில் யுரேனியத்தில் அணுக்கருப் பிளவுகள் ஆரம்பித்தன! அடுத்தும் தொடர்ந்தன! இயக்குநர் போர்வை நீரை நிறுத்தி, நியூட்ரான் விழுங்கியான போரிக் ஆஸிட் திரவத்தைக் [Boric Acid Solution] கொப்பரைத் திரவத்தில் கலந்ததும், பூரணத் தொடரியக்கம் நிரந்தரமாய் நின்றது. அடுத்து நியூட்ரான் துகள்களை நிறுத்திக் காமாக் கதிர்களின் வீரியத்தைக் குறைக்க கவசத் தகடுகள் [Radiation Shieldings] கொப்பரையைச் சுற்றிலும் வைக்கப் பட்டன! அப் பணிகளை வரிசையாக நின்று அடுத்தடுத்துச் செய்த 27 நபர்களும் கதிரடி சிறிதளவு பெற்றார்கள்.

விபத்தின் விளைவில் பணியாளர் பட்ட வீரிய கதிரடிகள்

IAEA இன் ‘அகில நாட்டு அணுக்கரு நிகழ்ச்சியின் தகுதிநிலை ‘ [International Nuclear Event Scale (INES)] விதிப்படி டோகைமுரோ விபத்து தகுதிநிலை:4 [Level:4] என்று தீர்மானம் ஆனது! தகுதிநிலை:4 என்றால் ‘அது ஓர் கதிரடி விபத்து, கதிர்த்தீண்டு விபத்தன்று [An Irradiation Accident, not a Contamination Accident] ‘ என்று மதிப்பீடு பெறும். செர்நோபிள் விபத்து தகுதிநிலை:1, திரி மைல் தீவு விபத்து தகுதிநிலை:3.

கொப்பரை அருகில் வேலை செய்த கூடத்தின் மூன்று பணியாளர் பேரளவு நேரடிக் கதிரடி [Severe Acute Dose] பெற்று ஜப்பான் பல்கலைக் கழகத்தின் மருத்துவ மனைக்கு அனுப்பப் பட்டனர்! 1000-2000 Rem கதிரடி வாங்கியவரின் உள்ளுடல் உறுப்புகள் பல சிதைவாகின! அவரது குருதியில் வெள்ளைச் செல்கள் [White Blood Cells] எண்ணிக்கை பூஜிய அளவுக்குப் போய் விட்டது!

மூன்று மாதங்களில் அவர் மாண்டார்! அடுத்து 600-1000 Rem கதிரடி பட்ட இரண்டாவது நபர் 7 மாதங் களுக்குப் பிறகு மரித்தார். முன்றாவது நபர் 100-500 Rem கதிரடி பெற்று நல்ல வேளை உயிர் பிழைத்துக் கொண்டார்! சாதாரணமாக 800 Rem கதிரடித் தாக்கல் மனிதரின் மரண அளவைக் குறிக்கிறது!

மற்றும் 119 பணியாளர் 100 மில்லி ரெம்முக்கும் மிகையாக [over 100 mRem] பெற்றதாக அறியப் படுகிறது. 56 பணியாளர் எதிர்பாராமல் 2.5 mRem கதிரடி வாங்கினர். பிறகு கீழ்த்தங்கு கொப்பரையைக் காலிசெய்த 21 நபர்கள் வரை யரைக்கு அதிகமான கதிரடியைப் பெற்றனர். அடுத்து புறத்தே வாழ்ந்த 436 நபர்களைச் சோதித்ததில் எவரும் வரையரைக்கு மிஞ்சிய கதிரடியை [5 mRem/year] வாங்கியதாக அறியப்பட வில்லை. கூடத்திற்கு அருகில் வெளியே இருந்த 7 பேர் 1.5 mRem கதிரடி பட்டதாகத் தெரிய வருகிறது.

விபத்து நிகழ்ந்த போது கூடத்தின் காற்றோட்ட ஏற்பாடுகளை நிறுத்த மறந்து விட்டதால், கட்டிடத்தின் உள்ளிருந்த ஐயோடின்-131 [Radioactive Iodine-131] கதிர்வீச்சுத் தீண்டிய வாயுக்கள் பல நாட்கள் வெளியே அனுப்பப் பட்டுப் பரவின. 4300 curie நோபிள் வாயுக்கள், 54 curie கதிர் ஐயோடின் வெளியேறி யிருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. 5 மணி நேரங்களுக்குப் பிறகு கூடத்துக்கு அருகில் [1150 அடி தூரத்திற்குள்] 39 வீடுகளில் வாழ்ந்த 161 மாந்தர் வேறு இடத்துக்குக் கடத்தப் பட்டனர். கவசங்களும், மணற் பைகளும் வைத்து கதிர்வீச்சுகளைக் குறைத்து இரண்டு நாட்கள் கடந்து, அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அழைத்து வரப் பட்டனர்! விபத்து நடந்து 12 மணி நேரங்கள் கழித்து, 5 மைல் வட்டாரத்தில் வாழ்ந்தோர் எச்சரிக்கையின் பொருட்டு, வீட்டுக்குள்ளேயே தங்கும்படி உத்தரவிடப் பட்டனர்! அந்தக் கட்டுப்பாடு அடுத்த நாள் நீக்கப் பட்டது. IAEA பூதள மண்ணையும், விளைந்த காய்கறிகளையும் சோதித்ததில் ஐயோடின்-131 கதிர்மூலகம் எதுவும் பாதுகாப்பளவை மீறியதாகக் காண வில்லை.

ஜப்பான் விபத்து போல் பாரத யுரேனியச் சுத்தீகரிப்புச் சாலைகளில் நிகழுமா ?

2000 ஆம் ஆண்டு ஜப்பான் அணுவியல் கட்டுப்பாடு ஆணையகம் டோகை முராவின் இயக்க லைஸென்ஸை நிராகரித்தும் தொழிற்கூடம் மூடப்பட்டது! அணுமின் உலைகளுக்குத் தேவையான செறிவு யுரேனியத்தை உற்பத்தி செய்யும் பொதுவான அணுஎருத் தொழிற்சாலைகள் 5% செறிவு அளவைப் மிஞ்சிய தில்லை! அவை யாவும் விஞ்ஞான அறிவுள்ள இயக்கு நர்களால் முறையாகக் கண்காணிக்கப் பட்டு பாதுகாப்பாகச் செயல் புரிந்து வருகின்றன! யுரேனிய எருத் தொழிற்சாலைகள் முழுவதும் சுயக் கண்காணிப்பு முறைகளில் இயங்குவதால், ‘பூரணத் தொடரியக்க விபத்து ‘ ஏற்பட்டுத் தீங்கிழைக்க வழியில்லை! நியூட்ரான் பிறப்பதை விரைவில் கண்டு பிடித்து, நியூட்ரான் விழுங்கிகளை கண்ணிமைப் பொழுதில் கலத்தினுள் உட்செலுத்தும் சுய ஏற்பாடுகள் அவற்றில் அமைக்கப் பட்டுள்ளன!

ஜப்பான் தேச மின்னாற்றலில் 36 சதவீதம் 53 அணுமின் நிலையங்கள் பரிமாறும் அணு மின்சக்தியால் உற்பத்தி செய்யப்படுகிறது! அத்துடன் வேறு ஆராய்ச்சி அணு உலைகளும் வேகப் பெருக்கி அணு உலைகளும் இயங்கி வருகின்றன. அந்த அணு உலைகளின் வயிற்றுக்கு (5%-20%) செறிவு யுரேனிய எருக்கள் தொடர்ந்து ஊட்ட வேண்டும்! டோகைமுராவில் மட்டும் JCO வுக்குச் சொந்தமாக 15 அணு எருத் தொழிற் கூடங்கள் உள்ளன. அமெரிக்காவின் NRC [Nuclear Regulatory Commission] போன்று, ஜப்பானில் தனித்தியங்கும் அணுத்துறைக் கட்டுப்பாடுப் பேரவை இல்லாது ஒரு பெருங் குறையே! டோகைமுரா விபத்துக்கு ஒரு காரணம், அணுவியல் தொழிற்கூடத்தில் உள்ள குறைபாடுகளை அடிக்கடி உளவி அறிந்து கட்டுப்படுத்த மேற் குறிப்பிட்ட பேரவை அதிகாரி ஒருவர் டோகைமுராவில் இல்லாமல் போனது!

டோகைமுராவில் நடந்தது ஜப்பானின் முதல் தீவிர விபத்து! 1958 முதல் 1964 வரை அமெரிக்கா, ரஷ்யாவில் இது போல் பல அணுஎரு தொழிற்சாலைகளில் விபத்துகள் நிகழ்ந் துள்ளதாக அறியப் படுகிறது! ஆனால் அந்த விபத்துகளால் வெளி மண்டலத்தில் எந்தக் கதிர்வீச்சுகளும் பரவியதாகத் தெரியவில்லை! பாரதத்தில் மூன்று யுரேனியக் கழிவுச் சுத்தீகரிப்புத் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கே பூரணத் தொடரியக்க விபத்துகள் [Criticality Accident] எதுவும் இதுவரை ஏற்படாத வண்ணம் நன்கு பயிற்சி பெற்ற எஞ்சினியராலும், இயக்குநராலும் அவை வேலை செய்து கொண்டு வருகின்றன. ஆனால் மனிதத் தவறுகள், கவனக் கோளாறுகள், யந்திரப் பழுதுகள், முறையான பராமரிப்பின்மை, நெருங்கிய மேற்பார்வை யின்மை ஆகிய ஏதாவது ஒரு பிழையால் விபத்து நிகழ வழி பிறக்கலாம் என்பதை வலியுறுத்தாமல் இருக்க முடியாது!

தகவல்:

1. Tokaimura Accident ‘s Third Anniversary By: Dr. Najmedin Meshkati [Sep 24, 2002], Los Angeles, California.

2. Tokaimura Criticality Accident, Nuclear Issues Briefing Paper #52 [June 2000]

3. The Tokaimura Accident: Nuclear Energy & Reactor Safety By: Michael E. Ryan, University of Buffalo, New York [October 2002].

4. The Tokaimura Accident www.joewien.de/tokaimura.htm

5. Nuclear Accident in Japan, Tokaimura Accident, The Energy Advocate

6. Japan’s Nuclear Criticality Accident at a Fuel Conversion Facility, Japan Atomic Industrial Forum, Inc ((Dec 9, 1999)

7. Safety of Nuclear Power Reactors (March 29, 2011)
8. Wikipedia – Tokaimura Nuclear Accident (May 5, 2011)

Posted in அணுசக்தி, விஞ்ஞானம் | Leave a Comment »
ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது
மே 7, 2011
[1995 Sodium Fire in Japan ‘s Monju Fast Breeder Reactor & Restart]

(1995 – 2010)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

‘மேன்மையான படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையும் கோர முடிவுகளின் முழுத் தோற்றத்தை முதலில் உற்று நோக்கிய பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும் ‘

தாமஸ் ஹார்டி [Thomas Hardy]

முன்னுரை: ஜப்பானின் அணுத்துறை விபத்துகளில் இரண்டாவதாகக் கருதப்படும், 1995 டிசம்பர் 8 ஆம் தேதி ஏற்பட்ட இந்த நிகழ்ச்சி, ஒரு முன்னோடி வேகப் பெருக்கி அணுமின் உலையில் நேர்ந்தது! அணு உலை 40% ஆற்றலில் இயங்கும் போது இரண்டாம் கட்ட வெப்பத் தணிப்பு ஏற்பாட்டில் சிறு பைப்பு உடைந்து ஸோடியத் திரவம் 5 டன் வெளியேறி, காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் மூர்க்கமாய்ச் சேர்ந்து வெடித்துத் தீப்பற்றியது! இந்த கோர விபத்து நிகழ்ந்த மஞ்சு அணுமின் உலை பல்லாண்டுகள் மூடப் பட்டதோடு, ஜப்பானின் பிற்கால வேகப் பெருக்கி அணு உலை முயற்சிகள் யாவும் ஒருங்கே கைவிடப் பட்டன! 280 MWe மின்னாற்றல் உள்ள மஞ்சு வேகப் பெருக்கி, உலகின் இரண்டாவது பெரிய நவீன அணுமின் உலையாக 5.9 பில்லியன் டாலர் நிதிச் செலவில் [1995 நாணய மதிப்பு] 12 ஆண்டுகளாகக் கட்டப் பட்டது! ஆயினும் விபத்துக்குப் பிறகு செப்பமிடப் பட்டுப புத்துயிர் பெற்று 14 ஆண்டுகள் கழித்து மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை மீண்டும் இயங்க ஆரம்பித்தது, ஜப்பான் தேசத்தின் விடா முயற்சியைக் காட்டுகிறது. அத்துடன் ஜப்பானில் வேறு வழியற்றுப் பேரளவு மின்சக்தி பரிமாறும் அணுமின் உலைகள் மீது தொழில் துறைஞர் கொண்டுள்ள விடாப் பிடிப்பும் தெளிவாகிறது.

மஞ்சு வேகப் பெருக்கியை இயக்கி வரும், அரசுக்குச் சொந்தமான PNC அணுமின் உலை, அணுஎரு வாரியம் [Power Reactor & Nuclear Fuel Corporation] விபத்தைப் பற்றிப் பொது மக்களுக்குப் பொய்த் தகவல்களைத் திரும்பத் திரும்ப அறிவித்ததுடன், விபத்தின் காரணத்தைப் படமெடுத்த வீடியோப் பகுதியை வெட்டி எடுத்துத் தன் மதிப்பையும் பெயரையும் கரையாக்கிக் கொண்டது! மெய்யான காரணத்தை மூடி மறைத்தது தெரிந்த பின், அவமானம் தாங்காது PNC இன் பெரும் அதிபதி, ஷிகியோ நிஷிமுரா [Shigeo Nishimura, Deputy General Manager] மாடி உயரத்திலிருந்து கீழே குதித்துத் தன் இனிய உயிரை மாய்த்துக் கொண்டார்!

ஜப்பானில் 53 வாணிபத்துறை அணுமின் நிலையங்கள் இயங்கி தேசத்தின் 34% மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன. அவை அனைத்தும் அழுத்த எளியநீர் அணு உலைகள் [Pressurized Light Water Reactors]. 1960 ஆண்டு முதல் ஜப்பான் வேகப் பெருக்கி அணு உலைகளை ஆக்க ஆராய்ச்சி செய்து வருகிறது. மஞ்சு வேகப் பெருக்கி ஜப்பானின் முதல் முன்னோடி அணுமின் உலை [Prototype Fast Breeder Reactor]! ஆரம்பத்திலிருந்தே ஜப்பான் வேகப் பெருக்கி அணு உலையில் ஸோடியக் கசிவு ஏற்பட்டு விபத்து உண்டானால் எப்படி அபாயத்தைக் கையாள்வது என்பது ஆழமாகச் சிந்திக்கப் பட்டு பாதுகாப்பு முறைகள் சரியாக வகுக்கப்பட வில்லை!

மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலையின் விபரங்கள்

மஞ்சு முன்னோடி அணுமின் நிலையம் டோக்கியோவிலிருந்து 210 மைல் மேற்கே சுருகா [Tsuruga] என்னும் இடத்தில் அமைக்கப் பட்டுள்ளது. அணு உலை 1983 இல் அனுமதி பெற்று, 1985 முதல் கட்ட ஆரம்பிக்கப் பட்டு 1995 ஆகஸ்டு முதல் இயங்க ஆரம்பித்தது. அதன் மின்னாற்றல் 280 MWe [714 MWt Thermal Power]. பயன்படும் அணுஎரு: புளுடோனியம், யுரேனியம் கலப்பு ஆக்ஸைடு [Plutonium-Uranium Mixed Oxide (MOX)] 5.9 டன். இயற்கை யுரேனிய உலோகக் கவசம் [Natural Uranium Metal Blanket]: 17.5 டன். அணுக் கலனின் வடிவம் 6 அடி விட்டம், 3 அடி உயரம். உலைக் கலன் கொள்ளளவு 2340 லிட்டர். அணு உலை எருவிலிருந்து உண்டாகும் வெப்பத்தைக் கடத்தி நீராவியாக்க தனித்தனியே மூன்று சுற்று ஏற்பாடுகள் அமைப்பாடாகி யுள்ளன.

முதல் வெப்பக் கடத்திச் சுற்றும், இரண்டாம் வெப்பக் கடத்திச் சுற்றும் ஸோடியத் திரவத்தால் செயல்படுபவை. மூன்றாம் சுற்று நீரால் இயங்குவது. சராசரி 1 டன் அணு எருவின் ஈனுசக்தி: 80,000 மெகாவாட்நாள் [Fuel Burnup: 80,000 MWdays/ton]. அதாவது 714 MWt ஆற்றல் உற்பத்தி செய்யும் மஞ்சு நிலையம் 1 டன் எருவை 80,000 MWdays/714 =112 நாட்கள் வரைத் தீர்த்துக் கொள்ளும்!

புளுடோனியம் பெருகும் பின்னம்: 1.2 [Breeding Ratio: 1.2]. எரிகோல்கள்: உட்புறம் 108, புளுடோனியம் செறிவு 16%. எரிகோல்கள்: வெளிப்புறம் 90, புளுடோனியம் செறிவு 21%. யுரேனியக் கவசக் கோல்கள் 172.

முதல் சுற்றில் அணு உலையில் நுழையும் ஸோடிய திரவத்தின் உஷ்ணம் 397 டிகிரி C [745 F] வெளியேறும் போது 529 டிகிரி C [985 F] அதிக மாகிறது. இரண்டாவது சுற்றில் போய்வரும் ஸோடியம் 325 டிகிரி C [620 F] இல் வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நுழைந்து வெளியேறும் போது 505 டிகிரி C [940 F] இல் உஷ்ணம் ஏறுகிறது. மூன்றாவது சுற்று நீர் நுழைவு உஷ்ணம்: 240 டிகிரி C [465 F], வெளிவரும் நீராவியின் உஷ்ணம்: 369 டிகிரி C [695 F]. மஞ்சு நிலையத்தின் ‘உஷ்ண ஏற்றியில் ‘ [Superhearter] நீராவியின் உஷ்ணம் 397 டிகிரி C யிலிருந்து 487 டிகிரி C [745-910 F] அளவுக்கு அதிகமாகிறது.

வேகப் பெருக்கி அணுமின் உலையில் எப்படி ஸோடியம் கசிந்தது ?

மஞ்சு வேகப் பெருக்கி 1994 ஏப்ரலில் முதல் பூரணத் தொடரிக்கம் [First Criticality] அடைந்தது. 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டில் மின்சாரம் பரிமாற ஆரம்பித்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு டிசம்பரில் தீவிர ஸோடிய திரவக் கசிவு இரண்டாம் வெப்பக் கடத்திச் சுற்றியில் உண்டானது. டிசம்பர் 8 ஆம் தேதி விபத்தின் போது மஞ்சு நிலையம் 40% [110 MWe] மின்னாற்றலில் இயங்கிக் கொண்டிருந்தது. இரவு 7:47 மணிக்குத் தீ எச்சரிக்கை மணி அலறியதும், ஆட்சி அறை இயக்குநருக்கு ஸோடியக் கசிவு ஏற்பட்டது முதலில் தெரியாது.

உடனே கவச அணிகளை மாட்டிக் கொண்டு, இயக்குநர் சோதித்ததில் இரண்டாம் வெப்ப நீக்கி அறையில் [Secondary Heat Exchanger Room] பெரும் புகை மூட்டமுடன் தீப்பற்றி எழுந்துள்ளதைக் கண்டார்கள்! அடுத்து 9:20 P.M. அணு உலை மெதுவாக நிறுத்தம் செய்யப்பட்டு, மேலும் கசிவைக் குறைக்க 80 டன் ஸோடியம் இரண்டாம் சுற்றிலிருந்து நீக்கப் பட்டது!

தீயணைப்புச் செய்தபின், உளவு செய்ததில் ஸோடிய திரவத்தின் உஷ்ணத்தைக் காட்டும் கருவி ஒன்று இணைக்கப் பட்ட சிறிய பைப் உடைந்து ஸோடியம் வெளியேறி யுள்ளது தெரிய வந்தது! அதே பைப்பில் முன்பு 1991 இல் ஒரு முறைப் பழுது ஏற்பட்டு, அது 20 அங்குல பிரதமப் பைப்பில் வெல்டிங் செய்யப் பட்டுச் செப்பனிடப் பட்டது! அந்த பழுதான துண்டுப் பைப்புதான் 5 டன் ஸோடிய திரவக் கசிவுக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டது!

இரண்டாம் சுற்று வெப்ப நீக்கியில் ஸோடியக் கசிவின் அறிகுறி உஷ்ணம் மிகையானதால் தெரிய வந்தது! அடுத்து உடனே தீ எழுச்சி எச்சரிக்கை மணி 7:47 P.M. அலறியது! ஆனால் கசிவு ஏற்பட்டு ஒரு நிமிடம் கழித்துத்தான் ‘ஸோடியக் கசிவு ‘ எச்சரிக்கை மணி அடித்தது! ஆயினும் அறையில் நிரம்பி யுள்ள புகை மூட்டத்தால், ஸோடியந்தான் கசிந்துள்ளது என்று தெரிந்து கொள்ள இயக்குநருக்கு 12 நிமிடங்கள் ஆயின! நிலையம் பரிமாறிக் கொண்டிருந்த 112 MWe மின்னாற்றலை இரவு 8:00 மணிக்குப் படிப்படியாகக் கையாட்சி முறையில் குறைக்கத் துவங்கி, 80 நிமிடங்கள் கடந்து 9:20 மணிக்குத்தான் அணு உலை நிறுத்தமானது! அது மனிதர் செய்த மாபெரும் தவறு! தீப்பற்றிய விபரம் தெரிந்தவுடன், அணு உலை உடனே நிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.

அடுத்து இயக்குநர் கவச உடுப்புகளை அணிந்து தீ விளைவுச் சிதைவுகளைக் காட்சிப் படமாக [Video Pictures] எடுத்து மேலதிகாரிகளுக்கு அனுப்பினார்கள். காட்சிப் படம் எடுத்த குழுவினர் உளவின் போது கண்ட சில சிதைவுக் காட்சிகள்:

1. ஸோடியம் ஆக்ஸைடு, ஸோடியம் ஹைடிராக்ஸைடு [Sodium Oxide, Sodium Hydroxide] தூள்கள் பழுதாகி உடைந்த இடங்களில் தொத்திக் கொண்டிருந்தன. அவை 20 அங்குல பிரதமப் பைப் நீளத்திலும் பல இடங்களில் ஒட்டிக் கொண்டிருந்தன! அதாவது ஸோடியம் கசிந்ததும் முதலில் ஆக்ஸிஜனுடன் மூர்க்கமான வெடியுடன் தீப்பற்றி அருகில் இருந்த வெப்ப நீக்கிச் சாதனங்கள் எரிந்து உருகிப் போய், அடுத்துப் பயங்கர ஸோடியம்-நீர் இயக்கமும் துவங்கிப் பல மணி நேரங்கள் தீ எரிந்து சிதைத்து உள்ளது தெரிந்தது!

2. இரும்புச் சாதனங்கள், காற்றோட்டப் போக்கிகள் [Ventilation Ducts], காங்கிரீட் தளம் ஆகியவை ஸோடியத் தீயில் வெந்து உருகி, உஷ்ணம் 1500 டிகிரி C [2700 F] ஏறி யிருக்கலாம் என்று அறிய வந்தது!

3. எதிர்பாராத ஸோடிய இயக்கங்களிலே மிகக் கொடிய ‘துண்டிக்கும் நெருப்பு ‘ [Spay Fire] அறையில் உண்டாகி யிருப்பது கண்டு பிடிக்கப் பட்டது!

அணுமின் உலை விபத்தில் மனிதத் தவறுகள், பழுதுற்ற கருவிகள்

1995 டிசம்பர் 26 ஆம் தேதி ஃபுகுயி ஆட்சி அரசு [Fukui Prefectural Govt] உளவு செய்து வெளியிட்ட அறிக்கையில் ‘மஞ்சு வேகப் பெருக்கியில் போதிய எச்சரிக்கைக் கருவிகளும், தேவையான இயக்க முறை அறிவிப்புகளும் ஒழுங்காக இல்லை என்று குற்றம் சாட்டி பின்வரும் பழுதுகள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளது.

1. ஸோடியம் கசிவதை உளவிக் கண்டு பிடிக்கும் கருவிகள் எதிர்பார்த்தவாறு ஆட்சி அரங்கத்தில் அலறி [Control Room Panels] முன் எச்சரிக்கை செய்ய வில்லை!

2. இரண்டாம் சுற்றுச் ஸோடிய திரவத்தில் 600 டிகிரி C [1110 F] உஷ்ணம் ஏறி, உஷ்ண மானி உடைந்து விட்டதால் உச்சமான உஷ்ண நிலை அறிய முடியாது போனது! ஸோடிய திரவத்தின் உஷ்ணத்தை அறிய வேறு கருவிகளோ அன்றி உதவிச் சாதனங்களோ எதுவும் ஆட்சி அரங்கத்தில் அமைக்கப்பட வில்லை.

3. ஸோடியத் தீ துவங்கி 1.5 மணி நேரங் கழித்துதான், அணு உலைக் கையாட்சி முறையால் நிறுத்தமானது! அவ்விதம் தாமதமாக அணு உலை நிறுத்தமானது, இயக்க நெறிகளுக்கு முரண்பாடானது! ஸோடியம் கசிந்தால், அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று ‘இயக்கமுறை நூலில் ‘ [Operation Manual] காணப்படுகிறது.

4. ஸோடியத் தீயை அணைப்பதற்குப் போதிய பயிற்சி இல்லாத தீயணைப்புப் படையினர் இரவில் பணி புரிந்ததால், நிலையத்தில் தீயை அணைக்க அதிக நேரமானது!

5. அடுத்த நாள் நிலையத்தின் சிதைவை நேராகக் காணச் சென்ற PNC மேலதிகாரிகள் [Power Reactor & Nuclear Fuel Corporation Team] விபத்து நேர்ந்த அறையைக் காட்சிப் படம் [Video Pictures] எடுத்தனர். அக்காட்சிப் படங்கள் முழுவதும், பின்னால் பொது மக்களுக்குக் காட்டப்பட வில்லை. இரண்டு நாட்கள் கழித்துத் தனிப்பட்ட ‘உளவு ஆய்வுக் குழு ‘ [Prefectural Survey Team] சென்று எடுத்த முழுப் படங்கள்தான் பொது மக்களுக்குக் காட்டப் பட்டு உண்மை தெரிய வந்தது.

6. ஸோடியத் தீ பல மணி நேரங்கள் எரிந்ததால், மெய்யாக இயக்குநர் மறுநாள் காலை [December 9] 6:00 மணிக்குத்தான் சிதைவான அறையை உளவிடச் சென்றனர். ஆனால் PNC மேலதிகாரிகள் நிஜத்தை மறைத்துக் காலை 10:00 மணி என்று ஏனோ ஒரு பொய்த் தகவலைக் கூறினர்.

7. PNC மேலதிகாரிகள் விபத்து நடந்து ஒரு மணி நேரம் தாமதித்தே நகர, மாவட்ட, மாநில அதிகாரிகளுக்கு அறிவித்தனர்! அந்த புறக்கணிப்புச் செயல் மன்னிக்க முடியாத ஓர் மனிதத் தவறு என்று பின்னால் PNC குற்றம் சாட்டப் பட்டது!

8. தீ எழுச்சி ஆட்சி அரங்கில் எச்சரிக்கப் பட்டதும், நிலையத்தின் வெப்பத் தணிப்புச் சாதனங்கள், குளிர்க் காற்றோட்ட ஏற்பாடுகள் [Air Conditioning & Ventilation Systems] ஆகிய இரண்டையும் உடனே இயக்குநர் நிறுத்த வில்லை. அதனால் ஸோடியத் தீ பலமடங்கு பரவி இருக்கலாமோ என்ற ஓர் ஐயப்பாடு பின்னால் எழுந்தது!

9. ஸோடியத்தின் கொள்ளளவைக் [Volume] காட்டும் கருவிகள், எச்சரிக்கை ஒலி அரங்கில் அமைக்கப் படாமல், வேறோர் அறையில் வைக்கப் பட்டிருந்தன. இரண்டும் ஒரே இடத்தில் இருந்திருந்தால், இயக்குநர் ஸோடியக் கசிவை உடனே தெரிந்து கொண்டு, கசிவைக் கட்டுப்படுத்தி இருப்பர்.

10. ஸோடியத் திரவம் பைப்புகளில் சுற்றி வரும் அறைகளில், கசிவைக் கண்காணிக்க முக்கியமாகத் தொலைக் காட்சிக் காமிராக்கள் எவையும் அமைக்கப்பட வில்லை!

11. நிலைய நிறுவகத்தின் போது, காற்றோட்டப் போக்கிகள் [Ventilation Ducts], அபாயமான ஸோடியப் பைப்புகளுக்குக் கீழ் அமைக்கப் பட்டது முறையான டிசைன் ஆகாது. தீப்பற்றி எரியும் போது, காற்றோட்ட போக்கிகள் உருகி, வெளியேறும் காற்று ஸோடியத் தீ பெருகுவதற்கு உதவி செய்தது!

12. ஸோடியம் கசிந்தால் உடனே அணு உலையை நிறுத்த, இயக்கமுறை அறிவிப்பு நூல் [Instruction Manual] இயக்குநருக்குப் போதிய அதிகாரம் அளிக்க வில்லை.

விபத்துக்குப் பிறகு நீதி மன்றத் தீர்ப்பும், பொது மக்களின் எதிர்ப்பும்

மஞ்சு வேகப் பெருக்கியில் ஸோடியம் தீப் பற்றியது, புளுடோனிய அணு உலைகளில் ஜப்பான் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் இழக்க வைத்தது! புளுடோனியம் எருவாகவும், ஸோடிய திரவம் வெப்பக் கடத்தியாகவும் பயன்படும் எந்த அணு உலையும் ஜப்பானில் உருவெடுக்கக் கூடாது என்று எதிர்த்துப் பொது மக்கள் ஒன்று திரண்டார்கள்! 1995 டிசம்பர் 12 ஆம் தேதி ஆளுநர், டுகியோ குரிடா [Governor, Tukio Kurita] ஜப்பான் பிரதம மந்திரிக்கு, மஞ்சு அணுமின் நிலையத்தில் புரியும் ஆராய்ச்சிகள் அனைத்தையும் உடனே நிறுத்தும்படி ஓர் எதிர்ப்புக் கடிதத்தை அழுத்த மாக எழுதினார். ஜப்பானில் பொது மக்களிடையே அணுமின் சக்தி நிலைய எதிர்ப்புகள் அதிகமாயின! டிசம்பர் 17 ஆம் தேதி 600 எதிர்ப்பாளிகள் அணு உலை மறுப்பு அறிக்கை களைத் தூக்கிக் கொண்டு, துருகா [Turuga] என்னும் இடத்தில் திரண்டு, பெருத்த ஆரவாரம் செய்தார்கள்!

விபத்தை உளவு செய்ய வந்த ஆய்வாளர்களுக்கு மஞ்சு உரிமையாளர்கள் பொய்த் தகவல்களை அளித்து, சிதைவின் தீவிரத்தை மூடி மறைக்க முற்பட்டார்கள்! மேலும் மஞ்சு அணு உலையைச் செப்பனிடப்பட்டு 2005 இல் அது மீண்டும் இயங்க வேண்டு மெனத் திட்ட மிட்டார்கள்! சிதைந்து போன மஞ்சு நிலையத்தை மீண்டும் செம்மைப் படுத்துவதாய் PNC அதிகாரிகள் கொண்டு வந்த திட்டத்தை, மார்ச் 2000 இல் மாவட்ட நீதி மன்றம் ஏற்று அங்கீகரித்தது. ஆனால் அதற்குப் பிறகு எதிர்ப்பாளிகள் மறுபடியும் மனுப் போட்டு, நகோயா உயர்நீதி மன்ற நீதிபதி ‘எதிர்பார்க்கும் அபாயங்கள் நிச்சயமாய் நிகழ வாய்ப்புள்ளதால், மஞ்சு அணுமின் நிலையம் மீண்டும் இயங்கக் கூடாது ‘ என்று தடை உத்தரவைப் போட்டு மஞ்சு வேகப் பெருக்கி நிரந்தரமாக மூடப்பட்டது!

ஜப்பானில் வேகப் பெருக்கி அணு உலைகளின் எதிர்காலம்

மஞ்சு வேகப் பெருக்கி உலகின் இரண்டாவது பெரிய நவீன அணுமின் உலையாகக் கருதப்படுகிறது! அதன் இரண்டாம் சுற்றிலுள்ள ஸோடியத் திரவம் உடைந்த பைப்பின் வழியாகக் கசிந்து, வெடிப்புடன் வெளியேறினாலும் அணு உலைக்கோ, அன்றி அணு எருக்களுக்கோ எந்த விதப் பாதிப்பும் இல்லாமல் போனது, வேகப் பெருக்கியின் மூல டிசைன் உயர்த்தியைக் காட்டுகிறது! அணு உலை பாதுகாப்பாய் நிறுத்தம் செய்யப் பட்டதால், கதிர்வீச்சுத் தாக்கல் உள்ளே வேலை செய்த பணியாளிகளுக்கும், வெளியே வாழ்ந்த பொது நபர்களுக்கும் நேர வில்லை!

ஆனால் ஸோடியக் கசிவு விபத்து அணு உலை வெப்பத்தைத் தணிக்கும் முதல் சுற்று ஏற்பாட்டில் நேர்ந்திருந்தால், அணுக்கலன் எருக்கோல்கள் பல உருகிக் கதிரியக்கம் உள்ளேயும், வெளியேயும் பரவ வாய்ப்புக்கள் உண்டாகலாம்!

தற்காலியமாக நிறுத்தம் செய்யப் பட்டுள்ள மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் நிலையம் மறுபடியும் மாறுபாடுகள் செய்யப் பட்டு 2005 ஆண்டில் புத்துயிர் பெற்று எழலாம் என்ற ஒரு வதந்தியும் நிலவி வருகிறது!

2002 ஆண்டுத் தகவல் படி, ஜப்பான் நாட்டின் 34% மின்னாற்றலை 53 வெப்ப அணுமின் உலைகள் [Thermal Power Reactors] பரிமாறி வருகின்றன. அவற்றைப் போல் இன்னும் பல அணுமின் நிலையங்கள் நிறுவகமாகி, 2010 ஆண்டுக்குள் நாட்டின் 42% மின்னாற் றலை உற்பத்தி செய்யத் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன. மஞ்சு அணு உலையில் ஸோடியத் தீ விபத்தும், டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற் கூடத்தில் 1999 செப்டம்பர் 30 இல் ஏற்பட்ட பூரணத் தொடரியக்க விபத்தும் ஜப்பான் அணுத்துறைப் பேராசைத் திட்டங்களின் தலைவிதியை மாற்றி, மக்களிடையே எதிர்கால அணுமின் சக்தித் திட்டங்களில் பெருத்த ஐயப்பாடுகளைக் கிளப்பி யுள்ளன! அடுத்து ஜப்பானில் கட்டப் போவதாய் இருக்கும் 600 MWe [1500 MWt] மின்னாற்றல் வாணிப வேகப் பெருக்கி அணுமின் நிலையம் நிச்சயம் வரப் போவதில்லை!

ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணு உலை புத்துயிர் பெற்றது

பதினான்கு ஆண்டுகள் முடக்கமாகி புதிய மாறுதல் சாதனங்கள் இணைக்கப் பட்டு மஞ்சு வேகப் பெருக்கி அணு உலை 2010 மே மாதம் 8 ஆம் தேதி மீண்டும் துவங்க ஆரம்பித்தது. அது தொடர்ந்து 2013 ஆண்டு வரை சோதனை முற்பாட்டில் இயங்கி மின்சாரம் அளித்து வரும். மஞ்சு வேகப் பெருக்கி ஓய்வாகி ஜப்பானில் ஒரு பூத வேகப் பெருக்கி அணு உலை மாடல் 2025 ஆண்டில் நிறுவப் போவதாகப் புதுத் திட்டம் ஒன்று உள்ளது.

இந்திரா காந்தி அணுத்துறை ஆய்வுத் தளத்தில் வேகப் பெருக்கி அணு உலைகள்

பாரதத்தின் கல்பாக்க இந்திரா காந்தி அணுத்துறை ஆய்வுக் கூடத்தில் முதலாகத் தோன்றிய ஆய்வு வேகப் பெருக்கி பல பதுகாப்புக் காரணங்களால் 10 MWt ஆற்றலாகக் குன்றி 25% தகுதிநிலையில் இயங்கி வருகிறது! அதன் பிரச்சனைகளைத் தீர்த்து, முழு ஆற்றலில் அதை இயக்க முற்படுவதற்கு முன்பே, அடுத்து முன்னோடி பூத வேகப் பெருக்கி 1240 MWt [500 MWe] ஒன்று டிசைன் செய்யப் பட்டு கல்பாக்கத்தில் உருவாகி வருகிறது! உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் முதல் பிரச்சனை ஸோடியக் கசிவுகளே! காற்றையும், நீரையும் நெருங்கினால் மூர்க்க வெடியுடன் தீப்பற்றும் ஸோடியக் கசிவுகளை எப்படிக் கையாள்வது என்பது, கல்பாக்க அணுவியல் நிபுணர்களுக்கும் தீராத ஒரு போராட்டமாக இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்!

***********************

தகவல்:

1. Prototype Fast Breeder Reactor Monju, Japan www.jnc.go.jp/jncweb/

2. Fast Breeder Reactors of the World.

3. High Court Overturns Decision, Nullifies Approval of Fast Breeder Reactor Monju [Feb 7, 2003]

4. Monju Campaign By: Green Action www.greenaction-japan.org/

5. Japan puts FBR reactor program on back burner

6. The Serious Accident of ‘Monju ‘ [Dec 25, 1995]

7. Japan ‘s Nuclear Safety Review Process Needs Overhaul

8. Monju Reactor Shutdown after Sodium Leak [December 15, 1995]

9. The Monju Accident Fall-out [Jan 14, 1996]

10. Plutonium Production as Energy Source By Arjun Makhijani (Feb 1997)

10. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

11. Safeguarding Breeder Reactors By Jeffrey (January 24, 2006)

12. Fast Breeder Safety & Problems By : Charles Barton (May 13, 2009)

13. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

14. The Japan Times – Troubled Monju Reactor Revived in Fukui, Japan By Eric Johnston (May 7, 2010)

15. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension (May 12, 2010)

************************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) May 7, 2011

http:jayabarathan.wordpress.com/

Posted in அணுசக்தி, விஞ்ஞானம் | 4 மறுமொழிகள் »
2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3
மே 1, 2011

(ஜூலை 17, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

முன்னுரை: யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் உலகெங்கும் விபத்துக்கள் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன ! முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் ! குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்புகளை” [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும். செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறுகளைக் குறைத்துவிடும். அதுபோல் சீரான சாதனங்களும், விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும். ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

(கட்டுரை ஆசிரியர்)

விபத்து நேர்ந்த காஷிவசாக்கி அணு உலைகளை நிறுத்த வேண்டுகோள்

2008 பிப்ரவரி 24 ஆம் தேதி ஜப்பானின் விஞ்ஞானப் பொறியியல் எரிசக்தி கண்காணிப்புக் குழு (Group of Concerned Scientists & Engineers for Energy) உலகப் பெரும் காஷிவசாக்கி அணுமின் நிலையத்தை நிறுத்தி நிரந்தமாய் மூட வேண்டும் என்றோர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அணுமின் உலை எதிர்ப்பு அறிக்கையில் “அடுத்தோர் நிலநடுக்க அபாயம் வரும் தருணம் உள்ளது” (“The Dangers of another Earthquake Remains”) என்று அழுத்தமாய்த் தெரிவிக்கப் பட்டது. ஜப்பான் நிபுணர்கள் அறிவித்தபடி 2011 மார்ச் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் அளவு அசுரப் பூகம்பம் உண்டாகி, 30 அடி உயரச் சுனாமி அடித்து யுத்தக் களம் போல் நாடு நகரம், வீடுகள் அழிந்து 14600 பேர் மடிந்து (2011 ஏப்ரல் 29 வரை) இன்னும் 10,000 பேர் காணப் படாமல் இருக்கிறார். மேலும் எழுந்த சுனாமியால் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளில் மூன்று ஹைடிரஜன் வாயுச் சேமிப்பால் வெடித்து, சுயமாக நிறுத்தம் அடைந்த அணு உலைகளில் சூடேறிய எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி ஓரளவு உருகிக் கசிந்த நீரின் வழியாகவும் நீராவி & வாயுக்கள் மூலமாகவும் கதிரியக்க ஐயோடின்-131 & சீஸியம்-137 போன்ற நச்சுப் பொருட்கள் வெளியேறின. புகுஷிமா அணுமின் உலைகள் இரண்டு நாற்பது ஆண்டுக் காலம் இயங்கி ஓய்வெடுக்க வேண்டியவை. 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்டவை. எதிர்பாராத பெரிய நிலநடுக்கம் 9 ரிக்டர் அளவுக்கும் 30 அடி உயரச் சுனாமிப் பேரலைக்கும் அணுமின் நிலையங்கள் டிசைன் செய்யப் படாதவை. பழைய 1978 விதிப்பாடுகளுக்கு உடன்பட்டு 7 – 7.5 ரிக்டர் அளவுக்கும் 20 அடிச் சுனாமிப் பேரலைக்கும் டிசைன் செய்யப்பட்டுச் சில அணுமின் நிலையங்கள் புகுஷிமாவில் கட்டப் பட்டவை.

இயங்கும் அணு உலைகளில் ஏற்படக் கூடிய அபாயங்கள்

அணு உலைகளில், அணுமின் உலைகளில், அணுக்கழிவு சுத்தீகரிப்புச் சாலைகளில் ஏற்படக் கூடிய மாபெரும் விபத்துக்கள் என்ன ? அணு உலை இயங்கும் போது மீறும் தொடரியக்கத்தில் [Super Critical Reaction] வெடிப்பது ! அடுத்து கதிரியக்கப் பிளவுத் துணுக்குகளும், [Fission Fragments] திரவக் கழிவுகளும், வாயுக் கழிவுகளும் கோட்டை அரணிலிருந்து [Containment Structure] எப்படியோ கசிந்து சூழ்வெளியில் பரவிக் கதிரியக்கத்தை மக்கள் மீதும், தளங்கள் மீதும் பொழிவது.

இதுவரையில் கோர விளைவுகளை இரண்டு அணுமின் உலைகள் நிகழ்த்தி இருக்கின்றன. முதலில் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்து (1979). அடுத்தது சோவித் ரஷ்யாவின் செர்நோபில் அணுமின் நிலைய விபத்து (1986). அமெரிக்க அணுமின் உலையில் வெப்பத் தணிப்பு நீரிழப்பு விபத்து [Loss of Coolant Accident (LOCA)] நேர்ந்து அணு உலை எரிக்கோல்கள் உருகின. ஆனால் கதிரியக்கத் துணுக்குகளும், திரவ, வாயுக் கழிவுகளும் கோட்டை அரணில் சேமிப்பாகி வெளியே கசியவில்லை. ஆனால் செர்நோபில் அணு உலையில் வெப்ப ஆற்றல் மிகையாகி இருமுறை வெடிப்புக்கள் விளைந்து கோட்டை அரண் இல்லாததால் கதிரியக்கத் துணுக்குகள், திரவ, வாயுக் கசிவுகள் சூழ்வெளியில் பரவின. உலகெங்கும் பல நாடுகளில் மனிதத் தவறாலோ, யந்திரப் பழுதாலோ அணு உலைகளில் சிறிய, சிறிய விபத்துக்களும் நேர்ந்துள்ளன.

கடந்த 50 ஆண்டுகளாக 32 நாடுகளில் இயங்கி வரும் 435 அணுமின் நிலையங்களைப் பாதுகாப்பாக பராமரித்து வந்த அனுபவங்களை 12,700 அணு-உலை-ஆண்டுகள் [Reactor-years] என்னும் எண்ணிக்கையில் IAEA காட்டுகிறது. யந்திரப் புரட்சி (தொழிற் புரட்சி) ஏற்பட்ட பிறகு எந்த ஒரு தொழிற் துறையும் அணுவியல் துறை உலைகள் போல் உலகெங்கும் தொடர்ந்து கண்காணிக்கப் படவில்லை. அந்த சிறந்த கண்காணிப்பை 1957 இல் முதலில் துவங்கியது அகில நாட்டு அணுசக்திப் பேரவை எனப்படும் IAEA. அடுத்து அணுமின் நிலைய இயக்கங்கள், இயக்கத் திறன்கள், பராமரிப்புகள், திறனாய்வுகள், குழு ஆய்வுகள், அபாய விளைவுகள் போன்றவற்றை அடிக்கடி அணு உலை இயக்க உலகக் கூட்டுறவு [World Association of Nuclear Operations (WANO)] நிறுவகம் மேற்பார்வை செய்கிறது.

மூர்க்கர்கள் தாக்காதபடி மேலை நாடுகளில் அணுமின் உலைப் பாதுகாப்பு அமைப்புகள் மிகுதியாக உள்ளன. அப்படிச் சிலர் தாக்கினாலும் விளையும் அபாயங்கள் சிறிதளவுதான் என்று அறியப்படுகிறது. இயற்கை நிகழ்ச்சியில் பேரளவு ஆற்றல் கொண்ட பூகம்பத்தின் போது அணுமின் உலைக் கட்டுமானங்கள், சாதனங்கள் நிலநடுக்க ஆட்டத்தைத் தாங்கிக் கொள்ளும் உறுதி படைத்தவையாக அமைக்கப் படுகின்றன.

அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் கண்காணிப்பு

1957 இல் ஆஸ்டிரியா வியன்னாவில் தோன்றிய அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் சில விதி முறைகள்,

அணுக்கருவியல் பாதுக்காப்பின் கீழ் அணுக்கருப் பண்டப் பயன்பாடு, அணு ஆயுத எருக் கண்காணிப்பு ஆகிய இரண்டும் சேர்க்கப் பட்டுள்ளன.

அணுக்கருவியல் பாதுகாப்பு [Nuclear Safety]: அனுமதி பெற்ற அணு உலைக் கூடங்களிலிருந்து மனிதர் தூண்டாத விபத்துகளால் விளையும் கதிரியக்க வெளியேற்றத்தையும், அதன் தீங்குகளையும் பற்றியது.

அணுக்கருப் பண்டப் பயன்பாடு [Nuclear Materials Security]: அணுவியல் எரு மற்றும் ஏனைய கதிர்வீசும் பண்டங்களைப் பயன்படுத்துதல் பற்றியது. அன்னியர் அல்லது புறத்தே உள்ளவர் அணுவியல் பொருட்களை களவு செய்வதைக் கண்காணித்தல் பற்றியது.

அணு ஆயுத எருக் கண்காணிப்பு [Nuclear Safeguards]: உலக நாடுகளில் அணு ஆயுத ஆக்கத்தையும் பெருக்கத்தையும் தடுப்பது பற்றியது.

அகில நாட்டு அணுசக்திப் பேரவை உலக நாடுகளில் அணுக்கருப் பண்டங்கள் சேமிப்பு, பாதுகாப்பு, பயன்பாடு, தீய்ந்த எருக்கள் கைவச இருப்பு [Spent Fuel Storage], புதைப்பு பற்றிய வினைகளில் தணிக்கை ஆற்றல் உரிமை [Auditor of World Nuclear Safety] பெற்றது. ஒவ்வொரு நாட்டுக்கும் கண்காணிப்பு செய்ய அகில நாட்டு அணுசக்திப் பேரவைப் பிரதிநிதி ஒருவர் அமைக்கப் படுவார்.

ஜப்பானுக்கு அகில நாட்டு அணுசக்திப் பேரவை அனுப்பிய உளவு உரைகள்

2007 ஆகஸ்டு 17 ஆம் தேதி அகில நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) அனுப்பிய உளவு உரைகளும், செம்மைப்பாடுகளும் கீழே உள்ளன :

2007 ஜூலை 16 ஆம் தேதி நேர்ந்த நிலநடுக்கம் டிசைன் அளவை மீறி விட்டாலும் அணுமின் நிலையக் கட்டமைப்பு முறியாமல் பாதுகாப்பாக நிலைத்து நின்றது.
குறிப்பாக முழு ஆற்றலில் இயங்கிக் கொண்டிருந்த யூனிட்டு: 3, 4, & 7 அணு உலைகள் சுயமாய் நிறுத்தம் அடைந்தன. துவக்க நிலையில் இருந்த யூனிட்: 2 தானாக நிறுத்த மானது.
அணு உலைப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கட்டமைப்பு, சாதனங்கள், வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் நிலநடுக்கத்தால் சீர்கேடாக வில்லை.
ஆயினும் பாதுகாப்பு ஏற்பாட்டுக் கட்டமைப்பில் இல்லாத மற்ற மின்சாரச் சாதனங்கள் (மின்சார அழுத்த மாற்றிகள் -Transformers) பாதகங்கள் அடைந்தன.
நிலநடுக்க எல்லைகள் புதுப்பிக்கப் பட்டுச் சாதனங்கள் கட்டமைப்புகள் செம்மைப் படுத்த வேண்டும்.

அணு உலை இயக்கங்களால் நேர்ந்த சில விபத்துகள், மரணங்கள்

செர்நோபில் கோர உயிரிழப்பு, மற்றும் அதன் கதிரியக்கப் பொழிவால் விளைந்த நோய், மரண விபத்தைத் தவிர உலக நாடுகளில் இயங்கும் வேறு எந்த அணுமின் நிலையங் களில் கதிரியக்கத்தால் மனிதர் யாரும் இறக்க வில்லை. அணு ஆராய்ச்சி உலைகளில் பணி புரியும் விஞ்ஞானிகள் தவறுதலாக யுரேனிய அல்லது புளுடோனிய எருக்களைக் கையாண்டதால் கதிரியக்கம் பெற்று ஒரு சிலர் சில தினங்களில் உயிரிழந்த தகவல் கிடைத்துள்ளது. ஜப்பானில் யுரேனியச் செறிவுச் சாலை ஒன்றில் ஏற்பட்ட கதிரியக்க விபத்தில் இருவர் மாண்டனர். மேலும் இரண்டு அணுமின் நிலையங்களில் [ஜெர்மனியில் குன்றிமிங்கன் அணுமின் உலை, ஜப்பானில் மிஹாமா அணுமின் உலை] பராமரிப்பு செய்யும் போது கதிரியக்கம் இல்லாத நீராவி பேரளவில் கசிந்து நான்கு பேர் மரித்தார் என்பது அறியப் படுகிறது.

முடிவுரை:

ஜப்பான் நிலநடுக்கத்தினாலும், சுனாமியாலும் நாடு, மக்கள், செல்வ வளம் பன்முறை பாதிக்கப் பட்டுள்ளன. ஆயினும் மின்சக்தி பேரளவில் உற்பத்தி செய்து நாட்டு யந்திரங்களை இயக்கிப் பலருக்கு வேலை, ஊதியம் அளித்து வரும் அணுமின் நிலையங்கள் செம்மையாக்கப் பட்டு இன்னும் பல்லாண்டுகள் இயக்கப்படப் போகின்றன. நேர்ந்திடும் அணு உலை விபத்துக்களால் ஜப்பானிய அணுமின்சக்தி ஆதரவு நிபுணர் பாடங்கள் கற்று அவற்றை மேம்படுத்தித் தொடர்ந்து இயக்கி வருவார் என்பது என் கருத்து. வேறு முறையில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யும் வழியின்றித் திடீரென்று அணுமின் உலைகளை எல்லாம் நிறுத்தி விட்டு ஜப்பானை இருட்டடித்து, யந்திர யுகத்தை முடக்கி, ஊழிய மில்லாத் திண்டாட்டத்தை எதிர்நோக்கப் போகிறார் என்று யாரும் தற்போது முடிவு கட்ட முடியாது !

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits: Internet Website

1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)

2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire

3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)

4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo

5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill

6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)

7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)

8. Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)

9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.

10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants

11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

13. IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant (August 17, 2007)

14. Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant (Jan 29, 2009)

15. Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station (Nov 14, 2009)

16. Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan (March 11, 2011)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 21, 2007

http://www.jayabarathan.wordpress.com/

Posted in அணுசக்தி, விஞ்ஞானம் | Leave a Comment »
2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2
April 22, 2011

(ஜூலை 17, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமா நகரை நரகமாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
மட்ட மாக்கப் பட்டது !
திட்ட மின்றி
மூட நிபுணர்கள் அணு உலையைச்
சூடாக்கிச்
சோதனையில் வெடித்து
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார்,
மேலும் மரிப்பார், மரிப்பார் !
நாடு, நகரம்,
வீடு, வீதி, வயல்கள் எல்லாம்
மூடின கதிர் வீச்சுகள் !
கட்டாயமாய்ப் பல்லாயிரம் பேர்,
கைப்பையுடன்
புலம்கடத்தப் பட்டார் !
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
மனிதத் தவறு !
மாபெரும் தவறு !
மன்னிக்க முடியாத தவறு !
ரஷ்ய நிபுணர் முதன்முதல்
அரங்கேற்றிய அணுயுகப்
பிரளயம் !

(செர்நோபில் விபத்தின் 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவாக எழுதப்பட்டது)

++++++

“காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் ஒரு தீவிர நில அதிர்ச்சி தளத்தட்டின் மீது அமர்ந்திருப்பதை முதலில் கண்டுபிடிக்காமல் போனது எங்களுக்கு ஓர் இழப்புதான். ஆயினும் அந்த தவறு எந்த விதத்திலும் ஓர் அபாயப் பேரிழப்பாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை.”

டோஷியாகி ஸகாயி [Head Engineering Group Tokyo Electric’s Nuclear Plants]

“காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் நிலநடுக்கத்தின் போது பாதுகாப்பாக நிறுத்தமாகி, யந்திரச் சாதனங்களும், கட்டடங்களும் பெருத்த சிதைவுகள் அடையாது அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டன. ஆனால் அதன் கீழ் வெகு ஆழத்தில் ஒரு தீவிர நில அதிர்ச்சித் தட்டிருந்தது எப்படி நிபுணர்களுக்குத் தெரியாமல் போனது ?”

மிஸியோ இஷிகாவா [President Japan Nuclear Technology Institute]

“நிலநடுக்க விளைவுகளை IAEA குழுவினர் உளவ ஜப்பானிய அணுவியற்துறை அதிகாரிகள் வெளிப்படையாக, முழு ஒத்துழைப்பளிப்பதை வரவேற்கிறேன். ஜப்பானிய நிபுணர்களின் நிலநடுக்க விளைவு ஆய்வுகளும் IAEA குழுவினர் புரியும் தனிப்பட்ட உளவுகளும் விபத்தால் நேர்ந்த நேர்முறை, எதிர்முறை விளைவுப் பாடங்களைக் [Positive & Negative Lessons] கற்றுக் கொள்ள உதவும். அந்த பாடங்கள் மற்ற உலக நாட்டு அணுமின் நிலையங்களின் இயக்கக் கட்டுப்பாடுகளுக்கும் பராமரிப்புக்கும் ஏற்றதாகும்.”

மொகமது எல்பராடி [Mohamed ElBaradei, IAEA Director General]

முன்னுரை: ஜப்பானிலும் மற்ற உலக நாடுகளிலும் உள்ள அணு உலைகள் நிலநடுக்க அதிர்ச்சி ஆட்டங்களைத் தாங்கி நடுக்கம் மீறினால் அணு உலைகள் தானாகவே நிறுத்தம் அடையுமாறு டிசைன் செய்யப்படுகின்றன. நிலநடுக்கம் எப்போது வருமோ என்று அஞ்சிய நிலையில் விழிப்பாக இருக்கும் ஜப்பானில் 55 அணுமின் நிலையங்கள் இப்போது இயங்கி வருகின்றன. 1995 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரும் (7.3 ரிக்டர்) கோப்-ஒஸாகா நிலநடுக்கத்தில் கூட [Kobe-Osaka Earthquake] அருகில் இருந்த அணுமின் நிலையங்களுக்குப் பாதிப்புகள் நேரவில்லை. 2004, 2005, 2007 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் “தளத்துடிப்பு வேக வீதம்” [Ground Acceleration] மிகையாக இருந்ததால், அணு உலைகள் தாமாக நிறுத்தம் அடைந்தன ! 1999 இல் டெய்வான் நிலநடுக்கத்தில் அருகிலிருந்த மூன்று அணுமின் உலைகள் தாமாக நிறுத்தம் அடைந்தன. 2007 ஜூலை 17 ஆம் தேதி வடமேற்கு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நிலையம் பாதுகாப்பாக நிறுத்தமாகிப் பெரிய பாதிப்புகள் நேரா விட்டாலும், உலகப் பெரும் காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் ஒரு தீவிர நில அதிர்ச்சித் தளத்தட்டின் (Active Seismic Fault) மீது அமர்ந்துள்ளது என்று முதன்முதல் நிபுணர்கள் கண்டுபிடித்தது குறிப்பிடத் தக்க ஓர் அதிசயமாகும் !

ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜூலை 16 ஆம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்கமைய மாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது. அதன் விளைவால் இதுவரை 11 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங்களில் தங்கினார் என்றும் அறியப்படுகிறது. 150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோவின் மாட மாளிகைகள் கூட ஆடினவாம் ! நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது !

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது. வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஒரு இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது. அவரது முக்கியக் கண்டுபிடிப்பு: காஷிவாஸாகி அணுமின்சக்தி யூனிட்டுகள் செய்யப்பட்ட டிசைன் வரை அளவு (6.5 ரிக்டர்) விபத்து அளவைவிடக் (6.8 ரிக்டர்) குறைவானது. ஆயுனும் தீவிரப் பழுதுகள், பிளவுகள் ஏற்படாததற்குக் காரணம், எல்லா டிசைன் வரைமுறைகளும் 10% மிகையாக வைக்கப்பட்டுள்ளன. அதாவது மெய்யான டிசைன் நிலநடுக்க வரை அளவு: (6.3 +6.3 X 10/100 = 6.3+0.63 =6.93). ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்.

அகில நாட்டு அணுசக்திப் பேரவைக் குழுவினர் செய்த உளவுகள்

அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பேரதிபர் மொகமது எல்பராடி ஜப்பானிய அணுவியற் துறை அதிகாரிகளின் வெளிப்படையான ஒத்துழைப்பை வரவேற்று, “ஜப்பானியரின் உளவு ஆய்வுகளும் IAEA குழுவின் தனிப்பட்ட உளவுகளும் நேர்முறை, எதிர்முறை விளைவுப் பாடங்களைக் கற்றுக் கொள்ள உதவும். அந்த பாடங்கள் மற்ற உலக நாட்டு அணுமின் நிலையங்களுக்கும் உகந்ததாகும், என்று எடுத்துக் கூறினார்.

பேரவைக் குழுவினர் மூன்று நாட்கள் தங்கி ஏழு அணுமின் நிலையங்களின் சிக்கலான கட்டட அமைப்புகளையும், ஏதுவான அணு உலைச் சாதனங்களையும் சோதித்துப் பிளவுகள், பழுதுகள் ஏற்பட்டுள்ளனவா என்று உளவு செய்தார்கள். விபத்து நேர்ந்த நாளன்று அணுமின் உலை ஆட்சி அறை அரங்கில் [Control Room Panels] பதிவான அனைத்து பதிவுக் கருவிகளின் பதிவுகளையும், அணுமின் உலைச் சாதனங்கள் இயக்கங்களையும் ஆழ்ந்து நோக்கினார். அவரது முதல் உளவு முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நிலநடுக்கக் கட்டடச் சோதனை அமைப்பு

1. அணுமின் நிலையக் கருவிகள், சாதனங்கள் நிலநடுக்கத்தின் போது, டிசைன் வரையறையை மீறாமல் திட்டமிட்டபடிப் பாதுகாப்பாய் இயங்கியுள்ளன.

2. ஜப்பானிய நிலைய இயக்குநர் கைப் பதிவுகளின் அறிக்கைப்படி சிறிதளவுக் கதிரியக்க நீரே கசிந்து கடலில் கலந்தது என்பதற்குப் பேரவைக் குழுவினர் ஒப்புதல் அளித்துள்ளார். அச்சிறிய அளவுக் கசிவுக் கதிரியக்கத் திரவக் கழிவு பொதுநலச் சூழ்வெளிப் பாதுகாப்பு எல்லையைத் [Limits for Public Health & Environmental Safety] தாண்ட வில்லை என்பது உறுதியாக்கப் பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தால் உண்டான கட்டடப் பிளவுகள் எதுவும் அணு உலைப் பாதுக்காப்புக்கு அரணுக்கோ அல்லது சாதன ஏற்பாடுகளுக்கோ நேரவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

3. நிலநடுக்க சமயத்தில் நிறுத்தமான அணுமின் நிலையச் சாதனங்கள், பம்ப்புகள், கொதிகலன்கள் சிலவற்றில் பழுதுகள், பிளவுகள் ஏற்பட்டுள்ளனவா என்று கதிரியக்கத் தளங்களில் உடனே சோதிக்கப்பட முடியாது. திட்டமிட்டுப் பணிபுரியும் அணுமின் நிலையப் பராமரிப்புத் தருணங்களில்தான் அவற்றை உளவு செய்ய முடியும். பேரவைக் குழுவினர் கூற்றுப்படி இன்னும் அணு உலைச் சாதனங்கள், அழுத்தக் கலன்கள், எரிக்கோல்கள் அடுத்த உலை நிறுத்த வேளைகளில்தான் உளவு செய்யப்பட வேண்டும்.

4. நிலநடுக்க அதிர்ச்சியால் உண்டான உலைக்கலச் சாதன அழுத்தங்கள் [Physical Stresses of Pressure Vessel & other Components] சில நிலையங்களின் பாதுகாப்பான இயக்க ஆயுட் காலத்தைக் குறைக்கலாம். அதாவது அவ்வித அழுத்தமான சாதனங்கள், எதிர்பார்த்த காலத்துக்கு முன்பே மாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.

அழுத்த நீர் அணுமின் நிலைய அமைப்பு

5. குறிப்பிடத் தக்க ஒரு கண்டுபிடிப்பு என்ன வென்றால் 2007 ஜூலை 17 ஆம் தேதி நேர்ந்த நிலநடுக்கம் (6.8 ரிக்டர்) பாதுகாப்புக்காக எஞ்சினியர்கள் முதலில் செய்த அணுமின் நிலைய டிசைன் அளவை விட (6.3 ரிக்டர்) 0.5 ரிக்டர் மிஞ்சி விட்டது ! ஆயினும் பெரும்பான்மையான அணுமின் உலைகளின் பாதுகாப்பு டிசைன் வரையறை எப்போதும் 10% மிகையாக வைத்துக் கட்டப்படுவதால் (6.3 + 0.63 = 6.93), நிலையத்தில் பேரளவுச் சிதைவுகளோ, பிளவுகளோ உண்டாக வில்லை என்று முடிவு செய்யப் பட்டிருக்கிறது.

6. அணுமின் நிலையச் சொந்த நிறுவனமான டோக்கியோ மின்சார வாரியம் அதற்குச் சில மாதங்களுக்கு முன்பே “நிலநடுக்கத் தீங்கு மீளாய்வு” (Seismic Hazard Re-evaluation) செய்து 2006 செப்டம்பரில் அதன் அறிக்கையை ஜப்பான் அணுத்துறைப் பாதுகாப்பு தலையகத்துக்கு [Japan Nuclear Safety Commission (JNSC)] அனுப்பியுள்ளது. 2007 ஜூலையில் நேர்ந்த நிலநடுக்கத்தின் விளைவுகளும் எடுத்தாளப்பட்டு இப்போது டிசைன் மேம்பாடு செய்யப்படும்.

7. ஜப்பான் நிலநடுக்க விளைவுகள் IAEA மூலமாக அனைத்துலக உறுப்பின நாடுகளுக்கும் பரப்பப் படுகின்றன. அதுபோல் மற்ற நாடுகளின் அணு உலை விபத்துகள், இயக்க விபரங்களை ஜப்பான் அணுத்துறை நிறுவனங்களுக்கு IAEA அனுப்பி வருகிறது.

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits:

1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)
4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo
5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
8. Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants.

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 22, 2007

Posted in அணுசக்தி, விஞ்ஞானம் | Leave a Comment »
2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1
April 15, 2011

(ஜூலை 16, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அருகாது அகலாது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு.

முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டுகள் வீழ்ச்சிக்குப் பிறகு அடுத்த இடத்தைப் பெறுவது, போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலின் கோர விளைவுகளே! நிகழ்ச்சிகளில் மூன்றவது நிலையைப் பெறுவது, சோவியத் ரஷ்யாவின் செர்நோபிள் அணு உலை வெடிப்பு! அணு யுதங்கள் வெடித்து, ஜப்பானில் இறந்தவர் எண்ணிக்கை 300,000 பேரைத் தாண்டி விட்டது! அங்கு காயம் உற்றோர், கதிரடி பெற்றோர், சந்ததி ஊனமுற்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா! செர்நோபிள் விபத்தில் உடனே இறந்தவர் 31 நபராயினும், மிகையானக் கதிரடியில் பாதிக்கப் பட்டவர் 600,000 மேல் என்றும் பின்னால் அவர்களில் மரணம் அடைந்தவர் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் ஏறிக் கொண்டு போவதாயும் அறியப் படுகிறது! அண்டை ஊர்களில் பொழிந்த கதிர்த் தீண்டலால், சுமார் 135,000 மக்கள் வேறு ஊர்களில் குடியேற ராணுவப் பஸ்களில் தூக்கிச் செல்லப் பட்டனர்! பல வருடங்கள் கழித்துக் கதிர் ஐயோடினில் [Radioiodine] பாதிக்கப்பட்ட 1800 குழந்தைகள் தைராய்டு புற்றுநோயில் தாக்கப் பட்டதாகவும், அந்தக் குழுவில் பத்துக் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் இப்போது அறியப் படுகிறது!

உலக வரலாற்றில் ஜப்பானிலிட்ட அணு ஆயுத வீச்சுகளுக்கு அடுத்தபடியாக, ஆனால் அவற்றை விட 400 மடங்கு பேரழிவு மிகையாக விளைவிக்கும் ஒரு கோர கதிரியக்கத் தீங்கு நிகழ்ச்சியாக, செர்நோபில் அணு உலை விபத்து கருதப் படுகிறது! செர்நோபில் நிலையத்தில் சிதைந்து முறிந்த கட்டடங்களைத் தாண்டிக் கதிரியக்கத் துணுக்குகளும், தூசுகளும், மாசுகளும் காற்றில் பரவி கிழக்கே ஜப்பானிலும், மேற்கே கனடா வரையிலும் பயணம் செய்து கருவிகள் மூலம் பதிவாகின! செர்நோபில் அணு உலை வெடிப்பால் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர் என்று அறிய வருகிறது! கதிர்த் தீண்டலாகி 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த பிரிபயாட் நகர மக்கள் [45,000 பேர்] உள்பட மற்ற அண்டை ஊர்களிலும் வசித்த 116,000 நபர்கள் கட்டாயமாகப் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டனர். ஆனால் வெடித்துச் சிதறிய கதிர்வீச்சுத் துணுக்குகள் பல மைல் சுற்றளவில் பரவிப் படிந்துள்ளதால், அடுத்துச் சுமார் 9000 பேர் பல்லாண்டுகளில் மரணம் அடைவார் என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்புப் பேரவை [UNESCO-IAEA] கணித்துள்ளது!

ஆனால் சமீபத்தில் 2007 ஜூலை 16 ஆம் தேதி நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அதனால் தூண்டப்பட்ட காஷிவாஸாகி-கரிவா அணுமின்சக்தி நிலையத் [Kashiwazaki- Kariwa Nuclear Power Plant] தீவிபத்தும், கதிரியக்கக் கழிவுநீர்க் கசிந்து கடலில் சேர்ந்ததும், மற்ற விபத்துக் களோடு ஓப்பு நோக்கினால் மிகச் சிறிய விளைவு என்றுதான் அகில உலக அணுசக்திப் பேரவை (IAEA) முடிவு செய்கிறது !

ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜலை 16 ம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவி லிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்க மையமாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது. அதன் விளைவால் இதுவரை 9 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங் களில் தங்கினார் என்றும் அறியப் படுகிறது. 150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோ வின் மாட மாளிகைகள் கூட ஆடினவாம் ! நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது !

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது. வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஓர் இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது. அவரது ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். அந்த அறிக்கை அகில வலைகளில் வெளியானதும் நான் எனது தொடர்க் கட்டுரையில் எழுதுகிறேன்.

நிலநடுக்கங்கள் அடிக்கடி குலுக்கும் ஜப்பான் தேசம்

உலக நாடுகளிலே ஜப்பான் தேசம் ஒன்றுதான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையற்ற கடற்தளம் மீது ஒட்டியும் ஒட்டாத தீவுகளாய்ப் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து வருகிறது. ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எழும் நிலநடுக்க நாட்டில் ஜப்பானியர் மிக விரைவாய்ச் செல்லும் இரயிலில் அனுதினம் பயணம் செய்து கொண்டு, நிலநடுக்கச் சிதைவுகளைச் சகித்திக் கொண்டு வாழ்கிறார். புல்லெட் டிரெயின் எனப்படும் வேக வாகனங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் தானே நின்று விடுகின்றன. ஜப்பானில் 30% பங்கு மின்சார ற்றல் பரிமாறிவரும் 55 அணுமின் நிலையங்கள் நில நடுக்கத்தால் பேரழிவுகள் நேராதவாறு பாதுகாப்பாக நிறுத்தமாகி, நிலைமை சரியான பிறகு இயங்கின்றன. அதே நைகாடா பகுதியில் 2004 ஆம் ஆண்டு அக்டோபரில் உண்டான 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 65 பேர் மரித்தனர். இதுவரை நிகழ்ந்த நிலநடுக்கத்திலே மிகப் பெரும் நடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் 1995 ண்டில் கோப் நகரப் பகுதியில் [Kobe City] நேர்ந்தது. அந்தக் கோர நடுக்கத்தில் 6400 பேர் உயிரிழந்தனர் !

காஷிவாஸாகி அணுமின் நிலையத்தில் நேர்ந்த விளைவுகள்:

டோகியோ மின்சார வாரியம் [Tokyo Electric Power Company (TEPCO)] மேற்பார்வை செய்து நடத்தி வரும் காஷிவாஸாகி அணுமின் நிலையம் ஏழு தனி உலைகளைக் கொண்ட உலகத்திலே மிகப் பெரிய நிலையம் அது ! அது ஜப்பானின் வடமேற்குப் பகுதியில் நைகாடா நகருக்கு அருகில் 4.2 சதுர கி.மீடர் பரப்பில் அமைக்கப் பட்டுள்ளது. அந்த ஏழு அணுமின் யூனிட்டுகளும் கொதிநீர் அணு உலைகள் [Boiling Water Reactors] ஆகும். அவை அனைத்தும் இயங்கினால் மொத்தம் 8212 MWe மின்சார ஆற்றல் பரிமாறத் தகுதியுள்ளது. அந்த தளத்தில் ஏழு அணு உலைகள் உள்ளதோடு ஓர் அணுவியல் பயிற்சிக் கூடம், பொதுநபர் அணுசக்தித் தகவல் கூடம் மற்றும் தணிவு நிலை கதிரியக்கக் கழிவுச் சேமிப்புக் கிடங்கு [Low Level Radioactive Waste Storage Facility] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் சிறப்பாக கொதிநீர் உலை இயக்குநர் பயிற்சிக்காக இரண்டு போலி அணுமின் உலை அரங்குகள் [Simulators in BWR Operator Training Centre] அங்கே நிறுவகமாகி யுள்ளன.

நிலநடுக்கமான அன்றைய தினத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் உலைகள் யாவும் சுய இயக்கு நிலநடுக்க உணர்வுக் கருவிகள் மூலம் [Seismic Sensors] நுகரப்பட்டு உடனே நிறுத்தம் ஆயின. அதாவது அந்த நிலையத்திலிருந்து வெளியாகும் மின்சாரப் பரிமாற்றம் துண்டிக்கப்பட்டு நிலையங்கள் யாவும் பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உலோக உராய்வால் ஒரு மின்னழுத்த மாற்றியில் [Electric Transformer] தீப்பற்றியது. அதன் மூலம் மின்சாரப் பரிமாற்றம் முன்பே நிறுத்தமானதால் தீங்குகள் எதுவும் நிகழாமல் புகை மட்டும் மூண்டு பரபரப்பான டெலிவிஷன் காட்சியாக உலகைக் கவர்ந்தது. ஜப்பான் தீயணைப்புப் படையினர் உடனே தீயை அணைத்துப் பரவாமல் தடுத்தனர்.

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்ப சுனாமித் தீவுகளில் தற்போது 50 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 40,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங் களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.

1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.

அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன. ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன. இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 3% இயங்கி வருபவை 20 அணுமின் நிலையங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

அணுமின்சக்தி தேவையான தீங்கு என்று உலக நாடுகள் தெரிந்தே பயன்படுத்தி வருகின்றன. அதன் பயன்பாட்டை இப்போது முழுவதும் நீக்க முடியாத, மீள இயலாத நிலைக்கு நாம் வந்து விட்டோம். அணு உலை விபத்துக்களில் கற்கும் பாடங்களைக் கையாண்டு அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்பது என் கருத்து. வேறு மின்சக்தி உற்பத்திச் சாதனங்கள் எதிர்காலத்தில் வரும்வரைப் பேரளவு பயன்தரும் அணுமின் சக்தி நிலையங்கள் உலகில் பாதுகாப்பாய் இயங்கிவரும்.

(தொடரும்)
***********************
தகவல்:

Picture Credits:

1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)
4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo
5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 16, 2007

Series Navigationகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம் >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா