ஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் சமயம்

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


“There is no Master but the Master and QT-1 is his prophet”

[ஐசாக் அஸிமாவ்வின் ‘Reason ‘ எனும் சிறுகதையிலிருந்து]

‘அஸிமாவ்வின் எழுத்துக்களில் சமயம் ‘ என்ற தலைப்பில் அண்மையில் இணையதள பக்கம் ஒன்றைக் கண்டதன் விளைவே இக்கட்டுரை. இக்கட்டுரையை எழுதத் தூண்டிய அந்த இணையதள பக்கத்தை இம்முகவரியில் காணலாம். www.angelfire.com/wi/mikebru/Alps.html

1992 இல் ஐசாக் அஸிமாவ் இறந்தார். அவருக்கு நடந்த ஒரு அறுவை சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட இரத்தத்தில் ஹைச்.ஐ.வி வைரஸ் இருந்தமையால் எய்ட்ஸ் ஏற்பட்டு இறந்தார். அவருக்கு அது தெரியும். தமது இறுதி விருப்பமாக தனது மரணம் எய்ட்ஸ் நோயால் நிகழ்ந்தது என்பது தெரியப்படுத்தப்பட வேண்டுமென்று அவர் விரும்பினார். அவர் இறை நம்பிக்கை உடையவரல்ல.

ரஷிய யூத குடும்பமான அஸிமாவ்கள் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த பின் ஐசாக் அஸிமாவ் தமது மாணவர் மற்றும் இளமைப்பருவங்களில் முறையே அமெரிக்காவின் பெரும் பொருளாதாரச் சிக்கலான Great Depressionஐயும், இரண்டாம் உலகப்போரையும் சந்தித்தவர். 1930களின் இறுதி வருடங்களிலிருந்து 1940கள் ஊடான காலகட்டம் அறிவியல் புனைவுகளின் பொற்காலம் எனக்கருதப்படும். இதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் ஜான் காம்பெல். அவரது 1938 ஆவது வருடக் ‘கண்டுபிடிப்புதான் ‘ 18 வயது அஸிமாவ். பின்னர் அஸிமாவ்வின் முத்திரைகள் அறிவியல் புனைவுகளில் பல புதியப்போக்குகளை உருவாக்கின. குறிப்பாக – ரோபோட்டிக்ஸ்.

அஸிமாவ்வின் தனி முத்திரையான இந்த ரோபாட்டிக்ஸிலேயே மேற்கத்திய மதத்தின் அடிப்படைகளுடனான ஒரு மோதல் கரு உள்ளோடுகிறது. செயற்கை அறிவு இயந்திரங்கள் ஆன்மாவற்ற அறிவினைக் கொண்டவை ஏனெனில் ஆன்மா என்பது ஆண்டவனால் மட்டுமே படைக்கப்பட முடிந்தது என்கிற கருத்தாக்கமே கட்டுப்பாடிழந்து மானுடர்களைக் கொல்லும் ப்ராங்கன்ஸ்டைனின் செயற்கை மனிதன் முதல் ஹாலிவுட்டின் கில்-பாட்டுக்கள் வரை வெளிப்படுகிறது. இந்நிலையில் மானுடச்சூழலில் செயற்கை அறிவு இயந்திரங்களை இயந்திரங்களாகவே படுசுவாரசியமாக நடமாடவிட்டு அவற்றின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் அடிப்படை மதிப்பீடுகள் சார்ந்த விதிகளையும் அமைத்தவர் அஸிமாவ். அஸிமாவ்வின் விதிகள் எனும் இப்புகழ்பெற்ற விதிகளின் அடிப்படையில் இயங்கும் ஒரு இயந்திரத்தையும் ஒரு நல்ல மனிதனையும் வேறுபாடு காண்பது அரிதாகிறது (உதாரணமாக, Evidence). மானுடம் என்பது எதில் உள்ளது எனும் கேள்விக்கான பதிலை தன்னை மீண்டும் மீண்டும் மீள்வடிவமைத்து மானுடத்தின் இறுதிக்கட்டமான மரணத்தை – இயந்திரங்களுக்கு விலக்கப்பட்ட மரணத்தை ஏற்கும்- இயந்திரத்திலிருந்து மானுடத்தை நோக்கி நகர்ந்தடைந்த இயந்திர மனிதனின் கதை இன்று பிரபல திரைப்படமாகவே ஆகியுள்ளது. பரிணாமத்தால் வடிவமைக்கப்பட்ட கார்பன் அமைவுகள் சார்ந்த மின்னணு இயக்கங்களால் எழும் உணர்ச்சிகள், மதிப்பீடுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்ட இயந்திரங்களின் மின்னணு (சரியாகச் சொன்னால் பாஸிட்ரானிக்) இயக்கங்கள் எழுப்பும் சக-தன்மை கொண்ட மனமண்டல உருவாக்கங்கள் மோதுவதால் ஏற்படும் கதை நிகழ்வுகளே அஸிமாவ்வின் ஏறக்குறைய அனைத்து ரோபாட்கள் சிறுகதைகளிலும் நாவல்லாக்களிலும் கூறப்படுகின்றன. இதில் ரோபாட்களை வடிவமைக்கும் தொழில்நுட்பத்தின் பகுப்பாய்வு திறனுக்கு அப்பாலாக ரோபாட்களின் பாஸிட்ரானிய மூளைகளில் முகிழ்த்தெழும் பண்புகளை அஸிமாவ் பன்முறை வலியுறுத்துகிறார் (உதாரணமாக :The Bicentennial Man மற்றும் Cal) Chaos மற்றும் Emergence ஆகியவற்றின் பிரபலத்திற்கு முன்னதாகவே அவற்றின் பிம்பங்கள் அஸிமாவ்வின் ரோபாட்களின் பரிணாமத்தில் வந்துவிட்டன என்றுதான் கூறவேண்டும். இவற்றிற்கும் சமயத்திற்கும் என்ன தொடர்பு ? இக்கதைகளூடாக அவர் மைய அல்லது விளிம்பு நிலை வில்லன்களாக சித்தரிப்பது சமய வேர்களிலிருந்து பெறப்பட்ட ‘மானுடத்தின் தனித்தன்மை ‘ எனும் புனைவைத்தான். மானுடப்பரிமாணத்தின் ஓர் இன்றியமையா நிலையாக இயந்திரங்களை ஏற்க மறுப்பவர்கள் மானுடத்தை அதன் விலங்கின வேர்களில் இருந்து அறுத்து ஒரு பரமண்டல கர்த்தரின் சாயலாக காணமுனைபவர்கள்தாம். தன் குழந்தையை ரோபோ தோழனிடமிருந்து பிரிக்க விரும்பும் அன்னையாகட்டும்(Robbie), உலகம் ரோபோக்களின் கைகளில் சென்று அதனால் மானுடம் விடுதலை இழக்கும் எனக் கருதும் Society of Humanity ஆகட்டும் (Evitable conflict) மேற்கூறிய மதிப்பீடுகளிலிருந்து உருவானவை. வெளிப்படையாகக் கூறப்படாத இம்மதிப்பீட்டு மோதலினை அஸிமாவ் செயற்கை அறிவு இயந்திரங்கள் குறித்த ஒரு அறிவியல் புனைவுகளின் தொகுதிக்கான தமது முகவுரையில் கூறுகிறார் .(Asimov ‘s preface to ‘The Machines that can think ‘).

அஸிமாவ்வின் சமயம் குறித்த வெளிப்பாடுகளில் சிறுகதையிலிருந்து நாவலான ‘இரவின் வருகை ‘(Nightfall)வில் அது வெளிப்படும் விதம் சுவாரசியமானது. ஒரு புதைந்து போன பழம் கொடு நிகழ்ச்சியின் நினைவின் மீது தொன்மங்கள் படிந்து சமயமாக உயிர்வாழ்கிறது. ஒரு நாகரிக இனத்தின் வீழ்ழ்சியிலிருந்து மீண்டும் அறிவு சார்ந்த நாகரிகம் உயிர்த்தெழ சமயம் ஓர் அமைப்பாக விளங்குகிறது. இச்சமயத்தின் கால நோக்கானது சுழற்தன்மை கொண்டதாக இருக்கிறது. அறிவியலின் சமன்பாடுகள் கண்டறியும் உண்மை ஒரு சமயத்தின் ஆதார நம்பிக்கையாக இருக்கிறது. அந்த நம்பிக்கை தவிர்க்கமுடியாதவாறு காலச்சக்கரத்தில் மீண்டும் வரும் ஒரு நிகழ்வினுக்கு உளவியல் ரீதியாக சமுதாயத்தை வலுப்படுத்தும் கருவியாக விளங்குகிறது.

அஸிமாவ்வின் புகழ்பெற்ற பவுண்டேஷன் நாவல்கள், இரண்டாம் உலகப்போர் மற்றும் எட்வர் கிப்ஸனின் ‘ரோம சாம்ராஜ்ஜியத்தின் தாழ்மையும் வீழ்ச்சியும் ‘ ஆகிய இரண்டின் கலவையில் பிறந்த எதிர்கால கற்பனை. இதில் வெப்ப-இயங்கியலின் சில அடிப்படை விதிகளுக்கொப்ப உருவாக்கப்பட்ட விதிகளால் பல நூறாயிரம் கோடியாக பல்கிப்பெருகி பல்லாயிரம் விண்மீன்கள் கூட்டங்களில் பரவிக்கிடக்கும் மானுட சமுதாயத்தின் போக்குகளின் நிகழ்தகவுகளைக் கணிதச் சமன்பாடுகளால் கணக்கிடும் ஒரு அறிவியலை அஸிமாவ் கற்பனை செய்கிறார். மனோவியல்-வரலாறு (Psycho-history) எனப்படும் இந்த அறிவியலின் மேதையான ஹாரி செல்டான் தாராமண்டல சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியையும், அவ்விடத்தில் பண்பாடற்ற சக்திகள் எழும்புவதையும் அறிகிறான். இந்நிலையில் மானுடத்தின் அறிவினைக் காத்து மீண்டும் அதனை முன்னகர்த்தி ஒரு தாராமண்டல சாம்ராஜ்ஜியத்தினை எழுப்பிட இரு பவுண்டேஷன்களை உருவக்குகிறான். முதல் பவுண்டேஷன் பெளதீக அறிவியல் முன்னேற்றத்தின் மூலம் அதனைச்சார்ந்த அமைப்புகள் மூலம் விண்மீன் மண்டலங்களை தம் அதிகாரத்தில் கொணர்கிறது. அதில் நிறுவனச் சமயமும் ஒரு கருவியாக பயன்படுகிறது. அறிவியலை, தொழில்நுட்பத்தை சமயச்சாயல் பூசி அறிவியலை மறந்து விட்ட சமுதாயங்களுக்கு அளிக்கின்றனர் பவுண்டேஷன் அரசினர். இங்கு சமயம் அதன் மிகக்குறுகிய பரிமாணங்களுடன் வெளிப்படுகிறது. அதன் அடிப்படை சடங்குகள் மூலம் சமய உணர்ச்சிகள் மற்றும் எளிய நம்பிக்கைகள் மூலம் ஒரு அதிகார பீடத்திற்குட்பட்ட மக்கட்சமுதாயத்தை உருவாக்குதல். அதே நேரத்தில் இரண்டாம் பவுண்டேஷன் மனரீதியிலான ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துகின்றனர். இவர்களே செல்டானின் திட்டத்திலிருந்து முதல் பவுண்டேஷன் நழுவுகையில் மிக நுண்ணிய மனச்சீரமைப்புகள் மூலம் செல்டானின் திட்டத்தை நடத்துகின்றனர். ஒன்றாம் பவுண்டேஷனுக்கு இரண்டாம் பவுண்டேஷனிடம் பெரும் பகை அதே நேரத்தில் இரண்டாம் பவுண்டேஷன் எங்கு உள்ளனர் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால் தாங்கள் வேறெவருடையவோ கையாட்களாக உள்ளோமோ என்னும் அச்சமும் சந்தேகமும். இந்நிலையில் இரண்டாம் பவுண்டேஷனிடமும் அதே அச்சம் தலைத்தூக்குகிறது. தங்களினைக்காட்டிலும் அபரிமிதமானதோர் ஆற்றலுடைய ஏதோ ஒருவரது கைப்பொம்மைகளாகத் தாம் உள்ளோமோ எனும் அச்சத்திற்கேற்றவாறு சில ஆய்வுகள் அமைகின்றன. இரண்டாம் பவுண்டேஷனும் அதனைத் தேடும் முதல் பவுண்டேஷனும் தம் தேடலில் வெளிப்படுத்துவது ஒரு கிரகம் முழுமையையும் இணைக்கும் மனம் – Gaia. இந்நாவல்கள் மூன்று ஆற்றல் புள்ளிகளைக் காட்டுகிறது; ஒன்று: புற இயற்கை சார்ந்தது; இரண்டு: அக இயற்கை சார்ந்தது மூன்றாவது இணைக்கும் தன்னுணர்வு கொண்ட அதிமனம். இந்த அதிமனமும் அடிப்படையில் அறிவியலுக்கு புறம்பானதல்ல மாறாக அறிவியல் முன்னகர்வால் எழுந்த சாத்தியக்கூறுதான்.

தீர்க்கதரிசன சமயத்தின் (Propphetic religion) அடிமடியில் கைவைக்கிற ஒரு சிறுகதையையும் அஸிமாவ் எழுதியுள்ளார். Reason எனும் அச்சிறுகதையில் ஒரு QT-1 எனும் ரோபாட் விசித்திரமாக நடக்கிறது. விண்வெளியிலேயே தனது வாழ்நாளைக் கழிக்க வேண்டிய அந்த ரோபாட் பூமி என்று ஒன்று இருப்பதையோ மானுடர்கள் தம்மை உருவாக்கினார்கள் என்பதையோ மறுக்கிறது. மாறாக, ஒரு சிருஷ்டிகர்த்தர் கீழான உயிரினங்களான மானுடர்களை மேலான படைப்புகளான தம்மை படைத்ததாக கருதுகிறது. இதெல்லாம் அதன் பாஸிட்ரானிக் மூளை சர்க்யூட்களில் ‘இறங்கிய ‘ திருமறையாகும். இதன்படி ‘“There is no Master but the Master and QT-1 is his prophet” மிகத்தெளிவாக நமக்கு ரோபாட்டின் ‘தர்க்கத்தின் ‘ அபத்தம் புரிகிறது ஆனால் அதன் அடிப்படைகளிலிருந்து அதன் அபத்தம் தர்க்கபூர்வமாக உள்ளது. தவறான அடிப்படைகளின் மேல் எழுப்பப்படும் அபத்தமான சிருஷ்டிக்கோட்பாட்டின் அனைத்து வாதத்திறமைகளுடனான ஒரு தர்க்கத்தை எதிர்கொள்கையில் நேர்கிற இயலாமையை அஸிமாவ் காட்டுகிறார். ஆனால் அதே நேரத்தில் ரோபாட்டின் விண்வெளி பணிக்கு இந்த அபத்த பார்வை பயனளிப்பதையும் காட்டுகிறார். கோமெனியின் பத்வா பார்வைக்கு தப்பிவந்த ஒரு கதை. நல்ல காலம் கோமெனியும், அலிமியானும், ஒசாமாக்களும், நம்மூர் counterpartகளும் அறிவியல் புனைவுகளைப் படிப்பதில்லை.

சமயத்தைப் புறக்கணித்து அறிவியல் புனைவுகளை எழுதுவது கடினம் என்பது அஸிமாவ்வின் கருத்து. சிருஷ்டிவாதிகளுக்கு எதிராக அவர் கடுமையாக எழுதியவர். அவர்கள் உண்மை சமயத்தை அசிங்கப்படுத்துவதாக அவர் கருதினார். யுதேய-கிறிஸ்தவ சூழலில் வளர்ந்தவர் அவர். அச்சூழலின் குறைகளை உணர்ந்தது போலவே அக்கலாச்சார பங்களிப்பின் மகோன்னதத்தையும் முழுமையாக அஸிமாவ் உணர்ந்தவர். அவரது விவிலிய விளக்க கைநூல் ஆகட்டும் அல்லது இறுதி வெளியீடுகளில் ஒன்றான Fantasy தொகுப்பில் வெளியான நல்ல சாமாரியன் கதைக்கு அவர் கொடுக்கும் அழகிய விளக்கமானாலும் சரி (ஏசுவின் நற்செய்தி அதை நல்ல சமாரியன் கதை என தலைப்பிடவில்லை. அஸிமாவ் அக்கதையை விளக்கும் அழகை எந்த சமயப்பிரச்சாரகரது உரையிலும் காணமுடியாது.) அதில் இந்த நம்பிக்கையற்ற நாஸ்திகர் எந்த அளவு தமது கலாச்சார சூழலின் ஆக்கபூர்வ பரிமாணங்களுக்கு உணர்வுடையவராக இருந்தார் என்பதும் விளங்கும். ஒரு உண்மையான சமயத்தன்மை கொண்ட முழுமையான நாஸ்திகர்.

? Robbie, The Evitable Conflict, The Bicentennial Man, Reason – ஆகியவை ஐசாக் அஸிமாவ்வின் The Complete Robot (Voyager, 1995) தொகுப்பில் உள்ளன.

? Cal சிறுகதையும், அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் சமயம் குறித்த கட்டுரையும் Gold (Harperprism 1995) எனும் தொகுப்பில் உள்ளன.

? பவுண்டேஷன் நாவல்கள், Bantham இல் கிடைக்கும். அவை: Foundation, Foundation and Empire, Second Foundation, Foundation ‘s Edge, பின்னர் Prelude to Foundation மற்றும் Forward the Foundation.

? Nightfall – அஸிமாவ்வின் புகழ்பெற்ற இச்சிறுகதையை பின்னர் அஸிமாவ்வும் ராபர்ட் ஸில்வர்பர்க்கும் இணைந்து நாவலாக்கினர். (Bantam 1991)

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்