மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ?

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான்


மாம்பழ சீசனில், மல்கோவா, நீலம், ஜெஹாங்கீர், ருமானி, அல்போன்சா, பங்கனப்பள்ளி, பேங்களுரா என வகைவகையான பழங்கள், விதவிதமான வாசனையுடன் எங்கு பார்த்தாலும் கொட்டிக் கிடக்கும். பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறும்.

நாமும் மார்க்கெட்டில், கடைகடையாக ஏறி, கடைசியில் நல்ல கமகம வாசனையில், கண்ணைப் பறிக்கும் பளபள நிறத்தில் இருக்கும் பழங்களாகத் தேடித்தேடி வாங்கி வருவோம். எந்த விகல்பமும் இல்லாமல் இருக்கும் பழத்தை வெட்டினால்…. உள்ளே வண்டு!

அது சரி, மாம்பழத்தில் துளையே இல்லை…. ஆனால் உள்ளே வண்டு! அது எப்படி ?

இந்த மாம்பழ வண்டுகள், கூன்வண்டுகள் (Weevils) என்ற வகையைச் சேர்ந்தவை. கூன்வண்டுகள் என்றால் கூன் இருக்கும்போல என்று அபத்தமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. மேலே உள்ள படத்திலிருக்கும் பூச்சியைப் பாருங்கள். ஏதோ, யானைக்குத் துதிக்கை இருப்பதைப் போல இருக்கிறதா ? ஒன்றுமில்லை ! அவற்றின் வாய் அமைப்புதான் அப்படி உருமாறி இருக்கி றது. எனவே, ‘கூன்வண்டுகள் ‘ (என்ன மொழிபெயர்ப்போ, யாமறியோம் ?) எனப்படும்.

பொதுவாக மாம்பழ சீசன் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே என்பதால், இந்த மாம்பழ கூன்வண்டுகளும், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வந்து போகும். மற்ற சமயங்களில், இந்த மாம்பழ கூன்வண்டுகள் மாமரப்பட்டைக்குள் தங்கிவிடும். அப்போது ஊன், உறக்கம் எதுவுமில்லை !

மார்ச் ஏப்ரல் மாதங்களில், மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடும். அப்புறம் துணையைக் கண்டுபிிடித்து கலவியில் இணைந்துவிடும். கலவியை முடித்தபின் பெண்கூன்வண்டுகள் முட்டை வைக்க ஆரம்பிக்கும். அதற்காக பட்டாணி அளவிலான மாங்காய்களைத் தொிவு செய்வார்கள். மாங்காய்த் தோலை சிறிது பெயர்த்து, முட்டை வைக்கும். முட்டை வைத்த பிறகு, மாங்காய்களின் மேலே சுரக்கும் சுரப்பு, முட்டை வைத்த சுவடையே மறைத்து விடும். சுமார் 7 நாட்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். பிறகு இந்த புழுக்கள் ‘ஹாயாக ‘ சதையைத் துளைத்துகொண்டே கொட்டைக்கு சென்று விடும். அப்போது, கொட்டை மென்மையாகத்தான் இருக்கும். மிக மிக சிறியதாக இருக்கும்போதே, புழுக்கள் உள்ளே சென்றுவிடுவதால், காய் வளர வளர, காய்க்குள் புழுக்கள் துளைத்த துளைகளும் மறைந்துவிடும். பிிறகு, புழு கொட்டைக்குள்ளேயே கூட்டுப்புழுவாகிவிடும். குறிப்பிட்ட காலக்கெடுவின் முடிவில், முழு கூன்வண்டாக மாறும். ஆனால் நாம் பழத்தை வெட்டும் வரை உள்ளேயே இருக்கும். பழத்தை வெட்டும்போது, வெளியில் வந்து, அடுத்த மாமரத்தைத் தேடி சென்றுவிடும்.

அது சரி, பூச்சிகள் ஊன், உறக்கமின்றி பல மாதங்கள்இருக்குமே ! அதுமட்டுமல்ல, பல்லாயிரம் மைல்கள் பறந்தும் செல்லுமே !…. அதைப்பற்றி…. அடுத்த வாரம்!!

—-

amrasca@yahoo.com

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்