சலனமற்றுக் கரையும் துயரங்கள்

This entry is part of 43 in the series 20110117_Issue

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீஅன்றே அதிகாலை வேளை
காலிழந்ததைப் போன்றதொரு துயரச்செய்தி
அன்றும் அவனையடையத் தவற வில்லை
இது போன்றதொரு இகழ்வுச் செய்திகளை
கனவுகளைச் சேமிக்கும் கண்களைப் போன்றே
உடலெங்கும் அடைத்து நிரப்பியுள்ளான்
சுற்றெங்கும் தடுப்புகளற்ற ஒரு பள்ளத்தினுள்
இடைப்பட்ட ஒரு கரம் பற்றி
எதிர் மீண்டெழுந்து
பின்னரும் இடைப்பட்ட துயரத்தில் மீண்டும் ஆழ்ந்து மாய்வதாய்
துயரங்களை உருவகப்படுத்தித் தேர்ந்து விட்டான் அவன்
கொடும் முட்களேற்ற துயரங்களும்
பிசாசுகளின் பதாதைகளேந்திய
வகைப்படுத்தவியலா சில துயரங்களும்
நாளிதழின் மூன்றாம் பக்க பெட்டிச் செய்தியாய்
அசைபோட்டு விடுகிறான் அவன்
காலிடறிய கற்களைப் போன்றும்
பாதை நடுவிலான ஓர் சிட்டுக்குருவியின்
துர்; மரணத்தைப் போன்றும்
சலனமற்றுக் கரைந்து விடுகின்றன
அவனுள் துயரங்கள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

Series Navigation