பிறந்த மண்ணும் பெற்ற மகனும்

This entry is part of 32 in the series 20100711_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்பிறந்த மண்ணும்
பெற்ற மகனுமே
சுவாசமாய் வாழ்ந்தார் அப்பா

உயிர் மகன் சிங்கை செல்ல
உடன் சென்றார் அப்பா
பிறந்த மண்ணைப் பிரிந்தார்
பெற்ற பிள்ளைக்காக

ஒரு நாள்
‘அய்யோ வலி’ என்று
நெஞ்சைப் பிடித்தார்
நின்று போனார்

பெற்ற மகன் கண்ணிலும்
பிறந்த மண்ணிலும் பேய் மழை

பிள்ளையைக் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டினர்
துக்கம் விசாரித்தோர்

இறுதிச் சடங்கிற்கு
இன்னும் இரண்டே மணிகள்

கடைசி ஆசையென்று
அப்பாவுக்கு ஏதாவது . . .
பொறிகளை ஏதோ கிள்ள
அப்பாவின் அலமாரியை
ஆராய்ந்தார் மகன்

ஒரு மஞ்சள் டப்பா
‘மகனே’ என்றழைத்தது
திறந்தார்.
உள்ளே துடித்தது ஒரு கடிதம்
பிரித்தார். படித்தார்.

‘மகனே
இந்த டப்பாவில் இருப்பது
நாம் பிறந்த ஊரின் மண்
மரணம் இங்கே நிகழுமானால்
இதை என் மார்பில் தூவிவிடு’

தூவினார் மகன்
மண்ணின் மைந்தருக்காக
மனிதர்களோடும் மகனோடும் சேர்ந்து
மண்ணும் அழுதது

Series Navigation