வேத வனம் விருட்சம் 88

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

எஸ்ஸார்சி


பெண்ணே நீ மரம் தழுவும்
கொடி போலே என்னை ஏற்றுக்கொள்
பறக்குங்கருடனின் சிறகு போலே
உன் மனத்தை ஒயாது தொடுகிறேன்
என் உடல் விரும்பு
எனது கண்ணொடு கால் விரும்பு
நின் கூந்தலும் கண்களும்
என்னை நாடிக் காமத்தால் சாயட்டும்
என் விருப்பம் போலே என் தோள் சேர் நீ
என் இதயத்தில் அணைந்துகொள்
நெய் தரும் பசு வொன்று தன் கன்று மீது காட்டும் அன்பு
கொண்டு என்னைச்சேர்
அரச மரம் ஆண் சமீ மரம் பெண்
ஆண் மகவின் தோற்றமவ்விடம்
அம்மகிமையைப் பெண்ணிடம் கொண்டு சேர்ப்போம்
ஆணில் தோன்றும் விதை
பெண்ணில் பொழியுறுக
பிரசாபதி யின் கூற்று இது
பிரசாபதி அநுமதி சினிவாலி எனும்
தேவதைகள் உருவமாக்குகிறார்கள் சிசுவை
பொறாமை கொணர் வலியும் அனலும்
அணைக்கப்படுக உடனே
யான் தூய்மை பெறவேண்டும்
தேவரால் மானிட அறிவால்
உலகப்பொருள்களால்
தூய்மை செய்வோன் என்னை த்தூய்மைசெய்யட்டும்
தனம் படைத்தோரே
துன்பந்தராது அளிப்பது விரும்பி அளியுங்கள்
வளர்வன யாவுமிவண் மண் மீது
நும்மால் மட்டுமே
புறாக்களை ரிக் ஒலித்து விரட்டுங்கள்
பசுக்கூட்டம் வரட்டும் இங்கு
புறா ஆந்தை வருகை தீயவை கொணராதிருக்கட்டும்
சமீ மரம் நூறு கிளைகொண்டு தழைத்திடுக
வேறுவெற்று மரங்கள் தூரம் போக
பெரிய இலை உடைய வளமான சமீ விருட்சமே
கேச சுகம் தருந்தாய் நீ
உற்றானுக்கும் மாற்றானுக்கும்
சினம் தவிர்ப்பதுவே தருப்பைப்புல்
கடலடியும் புவியடியும் செல்லும் மூலம் அப்புல்
மனம் மாசு அறட்டும்
பேசுவற்குறியனப் பேசுக மனம்
விழிப்பு தூக்கம் இருநிலையிலும்
யாம் தகாச்சொல் மொழிந்திருந்தால்
அக்குற்றம் இவண் நீங்குக
பொய் உரை பேசியிருந்தால் எம்மைக்காத்திடுக
தூக்கம் யமனுக்குத் தந்தை
முடிப்போன் தானே அவன்
வீசம் அரைக்கால் என க்கடன் திருப்பியளிப்பதுபோலே
தீயக்கனவுகள்
யாம் வெறுப்போனிடம் போய்ச் சேர்க
எமது தானியங்கள் காக்கப்படுக
எலி துளைசெய் பூச்சி யொடு வெட்டுக்கிளிகள்
சேதமுறுக முற்றாய்
பாம்புகள் எம் மக்களை கொல்லாதொழிக
திறந்தவாயை அவை மூடவேண்டாம்
மூடிய வாயை அவை திறக்கவும் வேண்டாம்
இசைவுடன் இணக்கமாகுங்கள்
தேவர்கள் காட்டிய பாதை அது
மந்திரம் சபை விரதம் இவை சமமாகி
சித்தம் ஒன்று சேரட்டும்
விழைவுகள் சமானமாகுக
இதயங்கள் சமானமாகட்டும்
மனங்கள் உத்தமமாகுக
கோபம் கீழ் கதி செல்க ஆயுதம் கீழே செல்க
கைகள் கீழே செல்க
அசுரர் பலம் அவ்விதமே ஒழிக
இந்திரனாலே யாம் வெற்றி பெறுவோம்
எதிரிகள் கைகளறட்டும்
சவிதா சவரக்கத்தியோடு வந்துள்ளான்
வெந்நீர் கொணர்க
சிர கேசம் நீக்கப்படுக
நீரால் நனைத்துத் தாடி நீக்குங்கள்
மதுவும் தசை செயல்பாடும் போல்
தாயக்கட்டையும் ஆட்டப்பலகையும் போல்
பலமுடையோன் மனம் பெண் மீது நிலையாவதுபோல்
நின் கருத்து நின் சிசுவில்
நிலைபெறுக பெண்ணே
ஆன்யானை பெண்யானை பாதம் அனுசரித்து
போவதுபோலே
பலவான் மனம் பெண்ணில் நிலை பெறுவதுபோலே
சிசுவொடு பந்தம் பெறு பெண்ணே
யான் பிராமணன் யான் புசித்த உணவு
பெற்ற பொன் குதிரை பசு ஆடு வகையத்தனையும்
அவியாகுக அக்கினியே நினக்கு
பிதுருக்கள் அளித்து
மானிட அனுமதியோடு
என் மனம் மகிழ்பவையே நல் அவியாகின்றன
கொடுக்கவோ கொடுக்காமல் வைத்திருக்கவோ
வாக்களித்து அநீதியாய் உண்டவை
வைசுவாநரனால் இனிதாகுக
பிறப்புறுப்புக்கள் இசைந்துப்பொறுந்துக
பெரிதாகுகி ஒங்குக
யானை கழுதை விரையும் குதிரையது
எனப்பெரிதாய் எம்அங்கம் வளரட்டும்
இவண் நிகழ்த்தும் அவியால் அவனும் அவளும்
வலிமையுறுக
ஆயிரஞ்சக்திகள் பெறுகட்டும்
துவஷ்டா எனும் கருவளர்ப்போன்
இவ்விருவரையும் பிணைக்கின்றான்
ஆயிரமாண்டு வாழ்ந்து மக்கட்செல்வம் பெறுக
சீரகம் தரு தாவரம் நோய்கள் விரட்டுவது
தேவர்கள் கொடையது
இருமலே மனோவேகத்தில் பறந்திடு நீ
எம்மை விட்டுப்போ
அரசமர விதையே ரணத்துக்கு அவுடதமே
சீவனுக்குப்போதுமானது
கேட்டை நட்சத்திரத்திலே வீரன்
பிறந்துள்ளான் இங்கு
புலியின் தினம் இது
சூரன் அவனே
தந்தையைக்கொல்லானவன்
தாயை இம்சிக்காதவனவன்
தெரிந்தோ தெரியாமலோ
யாம் செய்த பாவத்தினின்றும் எம்மை
விடுதலையாக்குங்கள் விசுவதேவர்களே
தாய் தந்தை சகோதரன் மகன் எம் சித்தத்துக்
கொணர் பாவம் போக்கி
மங்களமேயாகுக எமக்கு
யான் வாங்கிய கடன் யான்வாங்கித் தின்றகடன்
என்னை விட்டு அகலுக
யான் எவனிடம் கடன் பட்டுள்ளேனோ
எவனது மனைவியை அணுகுகிறேனோ
எவனிடம் யாசிக்கிறேனோ
அவர்கள் என்னிடம் ஏதும் பேசாதிருக்கட்டும்
காய் ஆடாமல் கடன் பட்டாலும்
திருப்பித்தராது வாக்குறுதி மட்டுமே தந்தாலும்
வைசுவாநரன் எம்மை நல் வழிப்படுத்துக
தூய்மையான மாசற்றப் புனிதமான பெண்ணை
பிராமணன் கைகளில் ஒப்படைக்கிறேன் யான்
மருத்துக்கள் இந்திரன் ஆற்றுப்படுத்துக உம்மை
மரத்தினின்று வீழ்வது கனி
வானின்று வீழ்வது வளி
அசுத்தம் எம்மீது இருப்பின்
நீர் எம்மைத்தூய்மைப்படுத்துக
சிபுத்துரு எனும் சிவப்பு ப்பலாசமே நின்னால்
செவி கண் இதயம் நோய்கள் தொலைக்கின்றன
விண்மீன்கள் சகதூமன் என்னும்
பிராமணனை அரசனாக்கின
அவனே காலை மாலை நண்பகல்
மங்களம் தருகிறான் எமக்கு
சம்சபமரம் எம்மோடு வாழ்ந்து செல்வம் வழங்குகிறது
துன்பங்கள் எமக்குத்தூரமாகின்றன
இடுப்பில் இருக்கும் கச்சையே
நீ முனிகளின் ஆயுதம்
தவத்தால் கிடைப்பவள்
அறிவொடு ஞானம் தருக நீ
இந்திர வலு கொடுப்பாய் கச்சையே
நிதத்னி ச்செடியே
மயிர் வேர்க்கால்களை வலுவாக்கு
கருங்கேசங்கள் வளர்க எமக்கு
காதலின் தாபத்தால் வாய் உலரட்டும்
பின் ஒன்று சேர்க காதலர்கள்
பாம்பைத்துண்டமாக்கிபிணைக்கும் கீரிபோலே
காமம் பிரிந்தவர் இணைக
குழவி பெறு இரு முதற் பற்கள்
மங்களம் தருவிக்கட்டும்
தாய் தந்தயரை இம்சிக்காதீர்கள் பாற்பற்களே
சிவப்புக்கத்திகொண்டு பாலகற்குக் காது துளையிடுக
அசுவினிகள் சின்னம் ஆங்கே எழுந்து பெறுகட்டும்
ஆயிரம் செழுமைகள் தழைக்க
பார்லிச்செடியே உயரமெழு
தானியப் பாண்டங்கள் நிறையட்டும்
கடல் போல் வளரட்டும் தானியச்செடிகள்
தானியம் அளிப்போர் வளர்க
தானியம் புசிப்போர் வளர்க ( அதர்வ வேதம் காண்டம் 6)
——————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி