குறத்தியின் முத்தம்

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஓயாமல் தன்னை அலங்கரித்துக் கொண்ட
கற்சிலையொன்று
தொலைந்துபோன தன் சிற்ப மொழிக்காய்
அழுதது.
தன் உடலின் பேரெழிலை
நிர்வாணப்படுத்தி காண்பித்த
சிற்பியின் நிர்வாணத்தை அம்பலப்படுத்தி
மனதுக்குள் செதுக்கிப்பார்த்த தருணங்களில்
தன் தலைமீது உட்கார்ந்து எச்சமிட்ட
காகத்தின் பாடலை
தொலைதூரத்தில் விசிறியடித்தது.
தனிமையின் நோவில் தளர்ந்தும்
பெருகிவந்த வேட்கையின் அதிர்வால்
தன் இருப்பிடம் விட்டகர்ந்த கற்சிலை
குறத்தின் உடல்நோக்கி
இரவொன்றில் நடந்துவந்தது.
குறத்தி கற்சிலையாக
கற்சிலை குறத்தியானது.
மலையடிவாரங்களில்
பசுமையைப் போர்த்திக் கொண்டு
தாவரங்கள் இசையொலித்தன
இசையொலியாய் உருமாறிய கற்சிலை
குறத்திக்கு தந்தாள் மீண்டும் முத்தம்

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்