மொட்டை மாடி இரவுகள்

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


சென்னை மாநகரில் வளர்ந்தவர்களுக்கு தஞ்சம் புக இரண்டு இடங்கள் உண்டு. ஒன்று மெரினா கடற்கரை, இன்னொன்று, வீட்டின் மொட்டை மாடி. நான் செளகார்பேட்டையில் வளர்ந்தவன். விசாலமான மொட்டை மாடிகள் கொண்ட வீடுகள். ஒவ்வொரு வீடும் அடுத்தொன்றோடு ஒட்டிக்கொண்டு இருக்கும். ஏதேனும் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஏறிவிட்டால், அப்படியே அடுத்தடுத்த வீடுகளின் மொட்டை மாடிகளில் தாண்டிப்போய்க்கொண்டே இருக்கலாம்.

மழையும் பனியும் இல்லாத பெரும்பாலான இரவுகளில் மொட்டைமாடியில்தான் படுக்கை. கூட்டுக் குடித்தன வாழ்க்கையில், வீட்டின் அறைகளுக்குள் படுக்க முடியாது. என்னதான் மின்விசிறி ஓடினாலும் புழுங்கித் தள்ளிவிடும். ஒரு கட்டத்தில் மின்விசிறி வெப்பத்தை அப்படியே அள்ளித் தெளிக்கும். தாங்கவே முடியாது. மொட்டை மாடியில் பெரிதாக காற்று அடித்துவிடாது. ஆனால், ஒருவித குளிர்ச்சி இருக்கும். காலை அகட்டி அண்ணாந்து பார்த்துப் படுக்க மொட்டை மாடியைப் போன்ற இடம் வேறொன்று இல்லை.

வெயில் காலங்களில் மாடியை படுக்க உகந்த இடமாக மாற்றுவது ஒரு கலை. மாலை மூன்று நான்கு மணியில் இருந்தே, படுக்கும் இடங்களில் தண்ணீரைக் கொட்ட வேண்டும். கொட்டிய ஒருசில நிமிடங்களிலேயே தண்ணீர் ஆவியாகிப் போய்விடும். தரையில் நிற்க முடியாது. வெப்பம் கால்களில் தெரியும். இது முதல் ரவுண்டு. ஐந்து மணி வாக்கில் இன்னொரு முறை தண்ணீரைக் கொட்ட வேண்டும். இப்போது தண்ணீர் அவ்வளவு சீக்கிரத்தில் ஆவியாகிவிடாது. ஆனால், சூடு இன்னும் இருக்கும். மீண்டும் ஒரு ஏழு, ஏழரை மணி வாக்கில் இன்னொரு முறை தண்ணீரைத் தெளிக்கவேண்டும். ராத்திரி பத்து மணி வாக்கில் பாயை விரித்துப் படுக்க போகும்போது, கொஞ்சம் இதமாக இருக்கும். பல இரவுகளில் கையில் விசிறியோடு படுத்துகொள்ள வேண்டும். விசிற விசிற மெல்லத் தூக்கம் கண்ணைச் சுழட்டும்.

சின்ன வயதில் பெற்றோரோடு மொட்டை மாடியில் படுத்துக்கொண்ட ஞாபகம் உண்டு. ஒரு வயதுக்கு மேல், பெற்றோர் சுவாரசியம் போய்விடும். இதுதான் சாக்கு என்று ஒரே ஆலோசனை மழை பொழிந்துவிடுவார்கள். அப்பாக்கள் பிள்ளைகளைக் குறைசொல்லும், கடிந்துகொள்ளும் இடமாகவும் மொட்டை மாடி மாறிவிடும். தாங்க முடியாது. நண்பர்கள் முக்கியமாகிவிடுவார்கள். கூட்டுக் குடித்தனத்தில் நண்பர்களுக்கு பஞ்சமே கிடையாது. செட் சேர்ந்துகொண்டு இரவெல்லாம் கதை பேச, நண்பர்கள்தான் சரியானவர்கள்.

சினிமா, படிப்பு, ஊர்க்கதை, வம்பு என்று தொடரும் கதைகளுக்கு அளவே இல்லை. எவ்வளவு பேசினாலும் இன்னும் இன்னும் என்று விஷயங்கள் இருந்துகொண்டே இருக்கும். அக்கம்பக்கத்து வீட்டு பையன்களும் சேர்ந்துகொண்டால், ஏதேனும் ஒரு மாடியில் கூடுவது இன்னும் சுவாரசியம் மிகுந்தது. பல வீட்டு பையன்கள் இப்படித்தான் நண்பர்கள் ஆவார்கள். விடுமுறைக் காலங்களில் வரும் பையன்களும் இதில் சேர்ந்துகொள்வார்கள். இதில் வயது வித்தியாசம் பெரிதாகத் தெரியாது. ரொம்ப சின்ன பையன் என்று யாரையும் ஒதுக்கவும் மாட்டார்கள். காதல் கதைகள் தான் ஒருவருக்கு ஒருவர் நெருக்கத்தை அதிகப்படுத்தும்.

அதுவும் பெரிய பையன்கள் பேசும் காதல் அனுபவங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. ஈர்ப்பு மிகுந்தவை. தூக்கமே வராது. பதினோரு மணி குல்பி ஐஸ் வண்டிக்காரன் போவான். அப்புறம் பனிரெண்டு மணி குல்பி ஐஸும் போகும். பக்கத்தில் இருந்த கிருஷ்ணா தியேட்டர், செலக்ட் தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு செல்பவர்கள், சத்தமாகப் பேசிகொண்டு போவார்கள். வழக்கம்போல் பெரும்பாலான காதல்கள் துக்கத்தில் போய் முடியும். தோல்வியில் போய் முடியும். அல்லது தோல்வி மாதிரியான ஏதோ ஒரு முட்டுக்கட்டையில் போய் முடியும். கைக்கிளை கதைகள் இன்னொரு தனி ரகம். தனி சுவை. எதுவுமே முடிவுறாது. ஒரு காதல் முடிந்து இன்னொரு காதலுக்குப் பையன்கள் தயாராவார்கள். அதுவும் முறிந்துபோனால், அடுத்தொரு காதல். ஒரு காதல் முறிந்துபோக, காரணமா இல்லை? புரிந்தும் புரியாத வயதில், பயமே அதிகமாக இர�!
��க்
கும்.

இன்னொரு பெரிய விஷயம், படிப்பு, வேலை. யாரையும் பயங்கர படிப்பாளி என்று சொல்லிவிட முடியாது. எல்லோரும் ஆவரேஜ் மாணவர்கள். குடும்பப் பின்னணிகளும் எளிமையானவை. செளகார்பேட்டை முழுவதும் ஒண்டுக்குடுத்தனவாசிகள் நிறைந்த இடம். பெரும்பாலும் அப்பாக்களும் அம்மாக்களும் அரசு உத்தியோகம், டீச்சர் உத்யோகம், ஏதேனும் தனியார் நிறுவனங்களில் உத்யோகம் என்று மாதச் சம்பளக்காரர்களாக இருப்பார்கள். பல வீட்டு வாசல்களில் பால்காரன், அரிசிகாரன், நெய்காரன் கணக்கெழுதி வைத்துவிட்டுப் போவான். மாதமானால், முதல் வாரத்தில் ஒவ்வொருவரும் வந்து நின்றுவிடுவார்கள். பல குடும்பங்கள், வரவுக்கும் செலவுக்கும் ஈடுசெய்ய முடியாமல் திண்டாடிப் போய்விடும்.

நாங்கள் இருந்த போர்ஷனுக்கு அப்போது 90 ரூபாய் வாடகை. அதை வீட்டுக்காரம்மாள், ரூ.125 ஆக்கியபோது, எங்களால் அதைக் கட்ட முடியவில்லை. வேறு வீடு பார்த்துக்கொள்ள ஆயத்தமாகும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலைதான் பெரும்பாலோருக்கு. இதிலிருந்தெல்லாம் மீள, படிப்பும் வேலையும் தான் ஒரே வழி. ஆனால், என்ன சுட்டுப்போட்டாலும் 70 சதவிகிதத்துக்கு மேல் மார்க் வராது. பெரும்பாலான பையன்களுக்கு இதுதான் பிரச்னை. ஒவ்வொரு முறையும் அப்பாக்கள் திட்டித் தீர்த்துவிடுவார்கள். எதிர்காலம் என்ற இருட்டை அவ்வப்போது இன்னும் பூதாகாரமாக்கிக் காட்டுவார்கள். வளர வளர இன்னும் பயம் அதிகமாகும்.

வேலையில்லாத அண்ணாக்கள் ஒன்றிரண்டு பேர்கள் இருப்பார்கள். அவர்களும் இரவில் மொட்டை மாடியில்தான் படுத்துக்கொள்வார்கள். ஒரு அண்ணா அற்புதமாக வண்ண ஓவியம் வரைவார். பல மத்தியானங்களில் அவரோடு நான் பொழுதைக் கழித்திருக்கிறேன். அவருக்கு வேலையில்லை, அதனால்தான் இதெல்லாம் செய்துகொண்டிருந்தார் இப்போது தோன்றுகிறது. அப்போது ஒன்றும் தெரியாது. ஆனால், அண்ணாவின் வீட்டில் எப்போதும் ஒருவித முரட்டுத்தனம் இருக்கும். அவருடைய அம்மா, என்னை எப்போதும் ஒருவித சிடுசிடுப்புடனேயே எதிர்கொள்வார்.

இன்னொரு அண்ணா, பாடி பில்டர். மொட்டை மாடியில் எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டே இருப்பார். உடம்பு விண்ணென்று இருக்கும். எங்களுடைய காற்றாடி சண்டைகளுக்கு எல்லாம் அவர்தான் மத்தியஸ்தம். நீதிபதி. இரவில் அவரும் மொட்டை மாடியில் படுத்துக்கொள்ள வருவார். பேச்சு மீண்டும் மீண்டும் வேலையைச் சுற்றிச் சுற்றியே வரும். வேலை கிடைப்பது அவ்வளவு கஷ்டம் என்பது மனத்தில் ஆழப் பதிந்தது அப்போதுதான். அதைவிட, வேலை கிடைக்காததன் வேதனை, பெற்றோரின் ஏச்சு, மற்றவர்களின் ஏளனம் எல்லாம் இன்னும் வலி தரும். ஒரு கட்டத்தில் அண்ணாக்களும் அப்பாக்களை மாதிரியே ‘நிறைய படிடா, நிறைய மார்க் வாங்குடா’ என்று அட்வைஸ் மழையில் இறங்கிவிடுவார்கள்.

கண்ணை மூடும்போது, மனமெங்கும் துக்கமும் எரிச்சலும் மிஞ்சியிருக்கும். எச்சிலில் ஒருவித துவர்ப்பு. மற்றவர்களின் வலியும் வேதனையும் தாக்கியிருக்கும். ஏதோ நானே இதையெல்லாம் செய்துபார்த்து, தோற்றவன் போன்ற ரணம் ஏற்பட்டுவிடும். ஏதோ ஒரு கணத்தில் கனவும் கற்பனையும் கலந்து தூக்கம் இழுத்துக்கொண்டு போகும். கண்கள் தானாகவே மூடிக்கொள்ளும்.

திடீரென்று விடிகாலையில் விழிப்பு வரும். எல்லோரும் ஒவ்வொரு பக்கம் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். வானம் வெளிர்நீலத்தில். ஆங்காங்கே நட்சத்திரங்கள் தெளித்த வண்ணக் கோலம். தூரத்தில் ஏதேனும் ஒரு வாகனம் அவசரமாகப் போய்கொண்டு இருக்கும். வெண்மை பூத்த கொக்குகள் முக்கோண வடிவில் ராணுவ ஒழுங்கோடு பறந்து போகும். சாலை விளக்குகள் மொட்டை மாடி வரை பரவி லேசான வெளிச்சத்தை பரப்பியிருக்கும். ரொம்ப உயரத்தில் ஒரு விமானம் வீடு திரும்பும்.

நல்ல விழிப்பு நிலை. தூக்கம் முற்றிலும் போயிருக்கும். உடல் சோர்வு அற்று, பயங்கர உற்சாகமாக இருக்கும். எல்லாம் புதிதாகத் தெரியும். அன்றைய நாள் நல்லபடியாக விடியும் என்று உள்மனக் குரல் சொல்லும். அன்றைக்குச் செய்யவேண்டிவற்றை மனம் பட்டியலிடும். பாயை உதறி, பெட்ஷீட்டை மடித்து, தலையணையோடு கீழே இறங்கும்போது, ஏதேனும் ஒரு வீட்டு குக்கர் விசில் அடிக்கும். கார்ப்பரேஷன் தண்ணீர் குழாயில் தண்ணீர் கொட்டி அடித்துப் பார்ப்பார்கள். புழுக்கம் வரவேற்கும். இறுக்கம் வரவேற்கும்.

மீண்டும் ஒரு நீண்ட நாள், வலி நிறைந்த நாள் காத்திருக்கும்.

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்