நகரத்துப் புறாவும், நானும்!

This entry is part [part not set] of 27 in the series 20091113_Issue

வ.ந.கிரிதரன்


நள்ளிரவுப் பொழுதொன்றில்
‘மான்ரியால்’ பயணிப்பதற்காய்
நிற்கிறேன் நான் நகரத்துப் பேரூந்து
நிலையத்தே.
நள்ளிரவில் படுத்துறங்கும் புள்ளொன்று
என் முன்னே விரிந்திருந்த நகரத்துக்
காங்ரீட் பரப்பொன்றின்மீது வந்தமர்ந்தது:
மாடத்துப் புறா.
ஊர் தூங்குமிரவில், நள்ளிரவில்
சயனிக்கும் இந்தப் புள்ளும்
சஞ்சரிக்கும் மண்ணுக்கொப்ப
மாறிற்று போலும்.
நடப்பதும், பறப்பதும், கொத்துவதும்
மீண்டும் பறப்பதும், நடப்பதும்,
கொத்துவதுமென
நகருமதனிருப்பும்
வழக்கம்போல்
படைப்பின்
நேர்த்தியிலெனையிழந்த
என் நெஞ்சினைத் தாக்கின.
அண்ணாந்து பார்த்தேன்.
தொலைவில்
மதியும் சுடருமென இருளில்
விரிந்திருந்தது என்னைச் சுற்றிப்
படர்ந்திருந்த பெருவெளி.
உள்ளும்
விரிந்திருந்த அவ்வெளியின்
விரிவுற்குள்
நடனமாடிடும் அடிப்படைத்
துகள்களின்
ஆட்டமுமெனை மயக்கிட
நினைத்தேன் நான்
இருப்பினைத் தக்க வைப்பதற்காய்
இங்குளைவது
அந்தப் புள் மட்டுந்தானா?
அச்சமயம்
இயங்கும் வெளியுமதன் விரிவும்
இருப்பினாட்டத்தில்
விளையும் பொருளும் கண்டு
அதிசயித்தேன்..
இங்கு விரிவதும், அசைவதும்,
உதிப்பதும் , மறைவதும், பயனாய்
விளைவதும், உளைவதனைத்துமே
உணர்வினுள்ளதொன்றா? அன்றி
அப்பாலுமுள்ளதுண்மையா?
நள்ளிரவில், நகரத்துப் பேரூந்து
நிலையமொன்றின்
நடைபாதையில்,
நகரத்துப் புறாவொன்றின்
நகர்வென் சிந்தையிலேற்றிய
பொறியுடன் தொடர்ந்தேன்
என் பயணத்தை.

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்