இன்றின் கணங்கள்

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

ராமலக்ஷ்மி, பெங்களூர்.


வெளிச்சத்தில் காணநேரும்
ஒளிச் சிதறல்களோ
விளக்கு அலங்காரங்களோ
ஆச்சரியம் அளிப்பதில்லை.
அற்புத உணர்வைக்
கொடுப்பதுமில்லை.
இருளிலேதான் அவை
உயிர்ப்பாகி ஜொலிப்பாகி
உயர்வாகத் தெரிகின்றன.

வாழ்வின் வசந்தகாலத்தில்
வாசலில் விரிந்துமலர்ந்து
சிரிக்கின்ற
வண்ணக் கோலங்கள்
எண்ணத்தை நிறைப்பதில்லை
கண்ணுக்கும் விருந்தாவதில்லை.
பருவங்கள் மாறிமாறி
வரும் உலகநியதி
வாழ்வின்மீதான நம்
பார்வையையும் மாற்றிடத்தான்-
போன்ற
சிந்தனைகள் எழுவதில்லை,
சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.

இன்னல் எனும்ஒன்று
கோடை இடியாகச்
சாளரத்தில் இறங்குகையிலோ-
திறக்கின்ற சன்னலின்ஊடாகத்
திடுமெனப் புகுந்து
சிலீரெனத் தாக்கும்
வாடைக் காற்றாக
வாட்டுகையிலோதான்-
துடித்துத் துவளுகின்ற
கொடியாய் மனம்
பற்றிப் படர்ந்தெழும்
வழிதேடித் திகைத்து-
கவனிக்க மறந்த
இன்றின் சின்ன சின்ன
சந்தோஷக் கணங்களை
கவனமாய் உணர்ந்து-
சிலிர்த்துச் சிறகடித்துப்
பறக்கிறது வானிலே!
தவிர்க்க முடியாத
தவறும் இல்லாத
இயல்புதானே
இது வாழ்விலே!

*** *** ***

நன்றி: இலக்கியப்பீடம் மாத இதழ், அக்டோபர் 2009.

ராமலக்ஷ்மி, பெங்களூர்.
ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி