வேத வனம் விருட்சம்- 57

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

எஸ்ஸார்சி


சோமனே நீ
இந்திரனால் பருகப்டுகிறாய்
விண்ணிலும் மண்ணிலும்
நீயே வளமை தருவோன்

நாங்கள் கொல்லப்படலாம்
ஆயின் யாராலும்
வெல்லப்படாது உய்தல் எம் விழைவு

சோமனே மநுவுக்கு
உணவு தந்தாய்
எம் பகைவர்களை ஒடுக்கினாய்
எங்களை வளப்படுத்துக நீ ( ரிக் 9/96 )

சோமனே எங்கள்
செல்வங்கள் பல்வகைப்பட்டன
செய்யும் தொழில் அனேகம்
தச்சன் மரத்தை
மருத்துவன் நோயை
அறிஞன் சோமம் பிழிந்து
வழிபடுவோனை
என அவரவர்கள் நோக்குகிறார்கள்
இந்துவே நீ இந்திரனுக்காய்ப்பெருகிடு

காய்ந்த செடிகளொடு
பறவையின் சிறகுகள்
அம்புகளாகின்றன
பொற்கொல்லன் தங்கம் உடையானை நோக்குகிறான்
இந்துவே நீ இந்திரனுக்காய்ப்பெருகிடு

யான் புலவன்
என் பிதா மருத்துவன்
என் தாய் திரிகை
அருகு அமர்ந்து தான்யம் அரைக்கிராள்
செய்யும் தொழில்கள்
விதம்விதமாய்
யாம் தொழுவத்துப்பசுக்கள் போலே
யாம் மிகுசெல்வம் விரும்ப
இந்துவே நீ இந்திரனுக்காய்ப்பெருகிடு

குதிரை சுகம்தரும் தேரை விழைய
விருந்தினர்களோ ஆனந்தம் விரும்புகின்றனர்
தவளைத் தண்ணீர் தேடுகிறது
ஆடவனோ இள நங்கைக்கு அவாவ
இந்துவே நீ இந்திரனுக்காய்ப் பெருகிடு ( ரிக் 9/112)

அக்கினி
வானுக்கும்
பூமிக்கும் கரு
காளை அவன்
காந்தமும் அவனே
வலிமைக்குப்புதல்வன்
வலிமைக்குச்சரி மையம்
மாமழையாய் வருவோன் அவன்

சுகம் தரு நீரே
இன்பம் துய்க்கச்
சக்தி தாரும் எமக்கு
அன்பின் உருவே
நீங்கள் அன்னையர்கள்
நோய் நீக்கும் நீவிர்
தாரும் மக்கட் செல்வம்

கதிரவனை யாம் நெடுநாட்கள் கண்டுய்ய
அவுஷதமாய் மாறும்
யாம் செய்த பிழை
இழைத்த துரோகம்
பேசிய பழிச்சொல்
பகன்ற பொய் களைந்திடுக இத்தனையும்

யானே நீருக்குள் நுழைகிறேன்
நீருக்குள் வாழும்
ஏ அக்கினியே
எம்மை வலுப்படுத்துக நீயே ( ரிக் 10/9 )
———————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி