சுழற்றி போட்ட சோழிகள்

This entry is part of 41 in the series 20091009_Issue

கவிதா நோர்வேதினம் தினம்
முகம் மளித்தாலும்
முகம் விரைக்க
தாடியும் மீசையும்
தானாய் வந்து ஒட்டிவிடுகிறது
பல வருடம் கழிந்தும்
பழக்கப்படாத ஊசிக் குளிரில்

சுற்றி போட்ட
சோழியாக
சுழன்று கொண்டிருக்கும்
வாழ்க்கைத் தட்டில்
சனி ஞாயிறு வந்தால்
தமிழ்ப்பிரியர்களின்
தமிழ் பாடசாலையும்
பிறந்தநாள் கொண்டாட்டமும்
முழுநேர வேலைபோல் இங்கு

தமிழாக்களை சந்திக்கவென்று
கூடிவிடும் தமிழ் உறவுகள்
அங்கங்கே பிரிந்து கூடுதல்
சுகம் தானெமக்கு

ஆனால்…
ஆறு வயதுதான் என்றாலும்
“அ”னா “ஆ”வன்னா
படிக்கக் குந்தினால்
ஆயிரம் கதை சொல்லுவான்
என் மகன்

அவனக்கு
லண்டன் அக்காள் மகளைக்
கட்டச்சொல்லி
நச்சரிக்கும் என் அம்மாக்கு
பிரச்சனை சொத்தும் சாதியும்

ஒண்டவிட்ட அக்காக்கொரு
மகள் பிறந்து ஊரில்
இப்பதான் மூன்று மாசம்
அங்கயாவது கட்டிவைக்கச்சொல்லி
இடக்கிட சொல்லும் போது
ஊர்காணி நாசமாய் போகுதென்ற
என் அப்பாவின் கவலை
எனக்குப் புரியும்

“ர” “ழ” பிரச்சனையில்
தமிழ் வெறுக்கும்
என் மகனுக்குச்
சோறு விருப்பம் என்பதால்
குறைந்த பட்ச்சம்
தமிழ் பெட்டையைப் பார்ப்பான்
என்று சொல்லிக்கொண்டு
நானும் திரியிறேன்.
நம்பிக்கையோடு

kavithai1@hotmail.com

Series Navigation