அந்த ஏழுகுண்டுகள்…..(1)

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

ருத்ரா



“போர் வேண்டாம்” என்ற‌
புண்ணியர் பிறந்த இடம்
“போர்”பந்தர்!
அரபிக்கடலின் அலைகள் வருடும்
அந்த ஆனைகளின் நாட்டிலிருந்து
(குஜராத் என்றால் அது தானே அர்த்தம்)
நோஞ்சானாய் ஒரு உருவம்!
இந்த பூனையா
வெள்ளை மிருகங்களை
விரட்டியடிக்கப்போகிறது?
அண்ணல் காந்தியடிகள்
சுதந்திர போராட்ட இயக்கத்தை
துவக்கியபோது
புருவம் சுழித்தவர்கள் பலர்.
புறக்கணிப்புகளை
பூ வென ஊதிவிட்டு
பாரத தேசத்து மண்ணின்
அடிவயிற்றுக்குரல்களையும்
அதன் துன்ப துயரங்களின்
கண்ணீர் துடைக்க‌
விடுதலை ஒன்றே வழி என்று
விறு விறு என்று
பயணத்தை துவக்கினார்
அவருடன் தோழனாக‌
ஒரு புயலும் சென்றது.
சுதந்திர உணர்வின் பெரும்புயலும்
உட‌ன் சென்ற‌து
இந்திய நாட்டிலே
அது உலா வந்தது.
சுந்திரம் அற்ற பாலைவனமாம்
பாரதத்தில்
சுதந்திரத்தின் ஒளி பாய்ச்சியது.
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள்
பாரதத்திருநாடு என்று
எங்கள் மகாகவிஞனை பாடவைத்தது.
ஒரு அந்தி சிவ‌ப்பில்
“ஹே!ராம்” என்று
பூமியில் சாய்ந்த‌
அந்த புனிதன் மார்பில்
பாய்ந்த‌து ஏழு குண்டுக‌ள்.
துப்பாக்கியின்
அந்த”ச‌ப்த”ஸ்வ‌ர‌ங்க‌ள் எழுப்பிய‌
ச‌த்த‌ங்க‌ள்
இன்னும் அட‌ங்க‌வே இல்லை.
அந்த‌ ஏழு குண்டுகளில்
எழுத‌ப்ப‌ட்ட‌து
அந்த‌ ம‌க‌த்தான‌ மனித‌னின்
வ‌ர‌லாறு.
ஒரு வ‌ட்ட‌மேசை மாநாட்டுக்கு
போயிருந்த‌ காந்திய‌டிகளை
கிழக்கு நாடுகளின்
எச்சில்களை பொறுக்கி ஆளும்
சர்ச்சில் எனும் வாய் வ‌ழியாக‌
வெள்ளைய‌ர் ஏகாதிப‌த்திய‌ம்
இப்ப‌டி வ‌ர்ணித்த‌து
“அரை நிர்வாண‌ப் ப‌க்கிரி” என்று.
அந்த அரைநிர்வாணத்தில்
நம் வறுமை எனும்
முழுநிர்வாணத்தின்
வ‌ர‌லாறு அல்ல‌வா
பொதிந்து கிட‌க்கிற‌து.
காந்தியடிகள்
மதுரை வந்த போது
நம் இந்திய‌ ம‌க்க‌ளில்
முக்கால் வாசிப்பேர்
நாலு முழத்துண்டில்
சுருண்டு கிடக்கிறார்கள்
என்ற‌ “ச‌த்திய‌ம்”
அந்த நாதுராம் கோட்சேயையும்
முந்திக்கொண்டு
சுட்டுவிட்டதே அவ‌ரை!.
அவர் மார்பில் துளைத்த‌
ஏழு குண்டுகளில்
அதுவே முத‌ல் குண்டு.
அதனால்
உடுத்திய வேட்டியை விடக்கூட
அதிக நீளமான
முண்டாசையும் மேல்துணியையும்
அன்றே வீசியெறிந்தார்.
உடுத்த உடையின்றி
வாடும் இந்த‌
ஏழைகளின் தேசத்தில்
மூன்று பேர் உடையையா
இத்தனை நாளும்
நான் அணிந்திருக்கின்றேன்
என்ற உணர்வே
அவரை அம்மணமாக்கியது போல்
உள்ளம் கூசவைத்தது.
வெள்ளைக்கார சர்ச்சிலுக்கு
மனம் கருப்பாயிருந்தது.
கருப்பாயிருந்த காந்தியடிகளின்
களங்கமற்ற வெள்ளைமனதை
புரிந்து கொள்ள மறுத்த‌
வெள்ளைக்காரகளுக்கோ
ஒரு இளக்காரம்.
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை”
என்ற சுடர் ஏந்தி புறப்பட்டவர்
தனது ஆசான்
கோபாலகிருஷ்ண கோகலேயின்
அறவழியில்
நம் தேசத்தில்
அங்குலம் அங்குலமாய்
நடைப்பயணம் புறப்பட்டார்.
ந‌ம் சுத‌ந்திர‌த்திற்காக‌
யாராவ‌து ஒரு க‌ட‌வுள்
அவ‌தார‌ம் எடுத்தால் தான் உண்டு.
ஆம்.
வெறும் க‌ம்பு ஊன்றி ந‌ட‌க்கும்
அதிச‌ய‌ விஷ்ணுவின்
ப‌தினொன்றாவ‌து அவ‌தார‌மா அது?
ஆனால்
சுத‌ந்திர‌த்தின் சிலுவையையும்
அவ‌ர் சும‌ந்து கொண்டு தான்
ந‌ட‌ந்தார்.
மிக‌ப்பெரிய‌ இறைவ‌ன் அல்லாவின்
அருளொளியும்
அவ‌ருக்கு வெளிச்ச‌ம் காட்டிய‌து.
ம‌த‌ ச‌ங்க‌ம‌மே
சுத‌ந்திர‌ப்போரின் முத‌ற்ப‌டியாய் இருந்தது.
ம‌த‌ அடையாள‌ங்க‌ளை
வீசியெறிந்து
நாம் யாவ‌ரும் சுத‌ந்திர‌க்காற்றை
சுவாசிக்க‌ கிள‌ம்பிய‌
இந்நாட்டின் புத்திர‌ர்க‌ள் என்ற‌ ஒரே
ம‌ன‌ அடையாள‌ம் ம‌ட்டுமே
எங்கும் அலைவிரித்த‌து.

Series Navigation

ருத்ரா

ருத்ரா