உயிரின் துடிப்பு

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

கு.முனியசாமி


சுருள்மிகு கூந்தல்
சிலவெண் இழைகள்
பிறையிணை நெற்றி
வில்லென புருவம்

சிறுசிறு விழிகள்
உயிரின் வெளிச்சம்
வளைந்த இதழ்கள்
தேனின் எச்சம்

சங்கென கழுத்து
சாய்ந்திட இரண்டு
மாங்கனி மிஞ்சும்
மன்மதக் கலசம்

கண்ணம் உரசும்
கவிதை பிறக்கும்
கைகள் தழுவும்
அமிழ்தம் சுரக்கும்

இடையின் ஏழ்மை
கொடியின் மேன்மை
தடைகள் கடந்து
தழுவும் ஆண்மை

எல்லாம் அழகு
இறைவன் லீலை
கவிஞர் பாடும்
காதற் சோலை

சொர்க்கம் என்பதை
சொல்லி அழைக்கும்
சுவைகள் ஆயிரம்
சொல்லாமல் சொல்லும்

காவி மனதிலும்
காதல் உயிர்க்கும்
மன்மத வேள்விகள்
மனதை உருக்கும்

உயிர்கள் மயங்கும்
உலகம் சிலிர்க்கும்
உறங்கும் உயிரும்
உருகி விழிக்கும்

மனதின் ஆசை
நினைவே இனிக்கும்
உயிரின் தேடல்
உறவில் உயிர்க்கும்

நடக்கும் நடக்கும்
நல்லது நடக்கும்
நாளை என்பது
நமக்காய் பிறக்கும் …

gmunis@rediffmail.com

Series Navigation

கு முனியசாமி

கு முனியசாமி