தன் ஆவியை ஊற்றி வைத்த மரம்

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

ஹெச்.ஜி.ரசூல்


பகலெல்லாம் குளத்தில் நீந்தும் விண்மீன்கள்

இரவில் எப்படி

வானத்தில் ஒட்டிக் கொள்கின்றன்

அந்த தூபா மரக்கிளையின்

இலையின் மீது உட்கார்ந்தால்

மிதக்கும் சிறகுகளில் சுமந்து செல்வேன்

கண்கள் கூசும்

பேரெழிலின் வண்ணங்கள்

ஓராயிரம் கண்களோடு பார்த்து ரசித்த

பேரமைதி அதற்கு இருந்தது

சொற்களில் நட்டு வைத்து

தன் ஆவியை ஊற்றி வைத்த மரம்

கிளைகளை விரித்துப் பேசியது

உனதுடம்பில் எதுவுமில்லை

அதிசய மாறுதல்கள் எப்போதும்

வெட்கிக் தலை குனி

இந்திரியத்துளியை கருப்பையில் சுமந்து

காற்றும் உணவும் கொடுத்து

உருமாறும் என்னுடம்பின் வண்ணங்கள்

மாய ஜாலம் காட்டுகிறது

உயிருக்குள் இன்னொரு உயிர்

உடலுக்குள் இன்னொரு உடல்

பிரபஞ்சத்திற்குள் இன்னொரு பிரபஞ்சம்

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்