வேதவனம் -விருட்சம் 46

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

எஸ்ஸார்சி


வேதவனம் -விருட்சம் 46

சோமம் பிழி பட்டு
இந்திரன் அது பருகி
அதன் வசமாகட்டும்
தோத்திரங்கள் உடன் ஒதப்படுக

தெய்வம் வந்து இன்புறுக
அசுரர் வாழ் நகரங்கள்
கணவன் கைப்பட்ட தாரமாய்
இந்திரன் வசமாகுக

ஆயிரஞ் செல்வம்
மாரியெனப் பொழிந்திட
இந்திரன் உடனே இசைக ( ரிக் 7/26)

வெண்ணிற மேனியர்
வலக்குடிமிக்காரர்கள்
வசிஷ்டரின் மக்கள்
இன்பமே தருவோர்

அக்கினி வாயு சூரியன்
புவியில்
வானில்
விண்ணகத்தில்
விருத்திக்கு ஆதாரமாகிறார்கள்

வசு
உருத்திர
ஆதித்யர் மூவருமே
அம்மூவரின் பிரஜைகள்
உத்தமர்கள்

முதல்வன் சூரியன்
மூவருமே மொத்தமாய்
தாபம் விளைவிக்கிறார்கள்
உஷையின் பின்னே எப்போதும்
விரைகிறார்கள்

மித்திரா வருணர்கள்
வேள்வியில் பிறந்து
துதிக்கப்படுவோர்

ஊர்வசியை எண்ணிய
அம்மித்திரா வருணர்களின்
விருத்தி அம்சம்
வெளியாகி
எமன் நெய்திட்ட ஆடை பாவித்த
வசிட்டன் தோற்றமாயினான்

விருத்தி அம்சம்
கும்பத்தில் முழுமைவுற
கும்பத்தின் மையமாய்
அகத்தியனொடு
வசிட்டனும்
தோன்றி வெளி வந்தனன். ( ரிக்7/33 )

விண்ணுறை நீர்
புவி விழு நீர்
மண் ஊர் நீர்
ஒடிப் பாய்நீர்
கடல் ஒடு நீர்
தூய நீர்
தூயவாக்கும் நீர்
தெய்வங்கள் அவை
எம்மை பாலித்திடுக

சல அரசன் வருணன்
நடுநிலையாளன்
பொய் மெய்
தெரிந்தவன்
வான் வீழ் நீர் இனிது
தூயது தூயதாக்குவது
பாலித்திடுக எம்மை.

நீர் தெய்வங்களிடை
வருணன் சோமன்
எம் அவி பெறுவோர்
இன்புற்று இருக்க
அவர்களிடை வைசு வாநர
அக்கினி நுழைகிறான்
சல தேவிகளே நீவிர்
பாலித்திடுக எம்மை ( ரிக் 7/49)
—————————————————————————–

essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி