பயணம்….

This entry is part of 44 in the series 20090813_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


யாரோ நட்டு எப்படியோ நீர்பெற்று
தானாய் வளர்ந்த மரம்தான்
எங்களுக்கு வீடு; உறவு.

வெயிலை விரட்டி
அரவணைக்கும்
மரத்துக்கு எத்துணைப்
பெரியமனசு!

திட்டங்களில் நாங்களில்லை
தேர்தலிலும் கவனிக்கவில்லை

தலைவர்களின்
பிறந்தநாள் இறந்தநாள்
நிகழ்வுகளிலும்
எங்கள் மீதான நினைவுகளில்லை

எப்படி நாங்கள்
கணக்கில் வராத வரவுகளானோம்?
தீர்க்கப்படாத கடன்களானோம்?

தனியாய் நின்று
துணையாய் நிற்கும்
மரங்களுக்குத்தான்
ஈரமும் கனிவும்
இயற்கையாய்.

மரத்தோடு முடிவதே
மூச்சு.

உலகு தொழவேண்டியது
உன்னையா? இறைவனையா?

நீயின்றித் தெய்வம்
உண்டா? தேவையா?

ஐயமில்லை

அய்யன் சொன்னதையே
நானும் சொல்கிறேன்…
“நீதான்….நீதான்
நீர்தான்…நீர்தான்”
pichinikkaduelango52@gmail.com

Series Navigation