இறகுப்பந்துவிடு தூது!

This entry is part of 45 in the series 20090731_Issue

அகரம் அமுதா


காற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து

மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய்

ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என்

ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு!

ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்!

வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்*

இழைபோல் இளைத்த இவன்னிலையைச் சொல்லி

அழைப்பாய் அவளைச்சென் றாங்கு! (ஆகம் -உடல்)

ஆங்கவளைக் கண்டார்த் தருங்கதைகள் பேசிப்பின்

தேங்குவளைக் கண்ணாட்குச் சேவைசெய்! –பாங்காய்ப்பின்

என்னிலையைச் சொல்க! எழுங்காதல் மிக்குடையாள்

தன்னிலையைச் சொல்வாள் தளர்ந்து!

தளர்ந்து தனித்துத் தவிக்கின்றேன் நீபோய்

வளர்ந்தமுலை மாதை வரச்சொல்! –குளம்வாழ்

மரைமுகத் தாளும் மறுப்பாள் எனிலோ

இறப்பான் இவனென் றியம்பு!

இயம்புங்கால் அன்னவளின் இன்முகத்தை நோக்கு!

மயங்கும் விழிகள்; மருள்வாள்; -தயங்காதே!

நண்டோடு நீர்த்துறையில் நானுள்ளேன்; என்னுயிரோ

ஒண்டோடித் தன்சொல்லில் உண்டு!

உண்டா எனக்கேள் உறுகாதல் என்மீதிற்

பெண்டாள் இலையென்னாள்; பின்பென்ன? –பண்டென்

உளங்கல வாடி உவந்தாள்தன் மேனி

வளங்கல வாடுகிறேன் வந்து!

வந்தாறக் கட்டி வளஞ்சேர்க்கச் சொல்தன்னைத்

தந்தாலே என்னுயிர் தங்குமெனும் –அந்தப்பேர்

உண்மையினைச் சொல்லி உளமறிந்து வா!இந்த

நன்மையினைச் செய்க நயந்து!

நயந்தேன்; அவளின் நறுந்தேன் உடலை

வியந்தேன்; இதனை விளம்பத் –தியங்குமென்

ஆவியுண் கண்ணாள் அருகிருந்தென் னையணைக்கத்

தூவிறகுப் பந்தே!போ தூது! (தியங்குதல் –கலங்குதல்)

தூதாக உன்னையத் தோகை இடஞ்செல்லத்

தோதாவாய் என்பதினால் சொல்லிவைத்தேன் –போதாயோ?

மெல்லபோ கின்ற மிறல்*பந்தே! பெண்நெஞ்சை

வெல்லப்போ கொஞ்சம் விரைந்து! (மிறல் -பெருமை)

agramamutha08@gmail.com

Series Navigation