அருவருப்பின் முகம்

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

கோகுலன்


அடங்காத பசியுடன் இன்றும் வந்திருக்கிறாள்
சாத்தான்கள் கூடித் திளைக்கும் துர்வனத்தினூடாக
அலறித்திரியும் கூகையின் பார்வைகளுடன்
நிலாமுற்றத்து ரோஜாப் பூக்களின்
இதழ்கிழித்து மகிழ்கிறாள்
காலம் அவளுருவில் ஊற்றிச்சென்ற சோகம்
விசும்பலாய்ச் கசியும் வேளை
ஓலமிட்டுச் சிரிக்கிறது வன்மம்
அவள் போர்த்திய துரோகத்தின் கருமை
நிலவினை மூடி மறைக்கிறது
அவளது வேஷங்களின் வலி துடைத்து
நான் தூக்கியெறிந்த கைக்குட்டை
சூரியனை அமிழ்த்தி அணைக்கிறது
எனதுலகம் முற்றுமாய் இருண்ட பிற்பாடும்
பஞ்சாரத்தினோரம் எதிர்ப்புகள் ஏதுமற்றிருக்கும்
கோழிக்குஞ்சினையொத்த இதயத்தை
ருசிக்கும் அவளது துர்நா எச்சில் கசிக்கிறது
பலியிட்ட கிடா முண்டத்தில்
பீறிட்டுப்பாயும் செங்குருதியாய்
வழிதப்பியோடும் இவ்வாழ்க்கையை
கோரப்புன்னகையுடன் ரசிக்கிறாள்
இன்று முற்றிலும் அருவருப்பான
முகத்தினையுடையவள்


gokulankannan@gmail.com

Series Navigation

கோகுலன்

கோகுலன்