கொத்தணிக் குண்டுகள்-Cluster bombs

This entry is part [part not set] of 23 in the series 20081204_Issue

வசீகரன்


உலகம் எங்கும்
தடைசெய்யபட்ட எமக்கு
29.11.2008
இன்று விடுதலைநாள்!

பறந்து பறந்து வெடிக்கும்
எமக்கு பிடித்த நகரம்
தமிழீழத்தில் கிளிநொச்சி!

எம்மைக் கட்டுப்படுத்த
முடியாது.
எம்மைக் கொச்சைப்படுத்த
முடியாது.

சோவியத் சிறைகளில்
அடைபட்டுக் கிடந்தோம்
சிறிலங்கா வந்து மீட்டெடுத்து
தமிழர்களின் தலைவாசலில்
கட்டிவைத்து விளையாடுகிறது.

ஈழத் தமிழருக்காக
உலகத் தமிழர்கள் மட்டுமில்லை
நாங்களும்தான்
கொத்துக் கொத்தாய்
கண்ணீர் வடிக்கிறோம்!

நாம் என்ன செய்வது?
எம்மை உருவாக்கியவனும்
பயங்கரமானவன்
நாமோ அவனைவிடப்
பயங்கரமானவர்கள்

எம்மை இலகுவில்
அழித்துவிட முடியாது
ஒருமுறையல்ல
இருமுறையல்ல
மூன்று முறைக்குமேல்
இடைவிட்டு வெடிப்போம்
பேரழிவு உண்டாகும்

இரும்புப் பெட்டிகளில்
அடைத்து எம்மை
எங்கும் வீசினாலும்
இறுதியில்
கல்லறைப் பெட்டிகளில்
மனிதர்களை அடைப்போம்!

மனிதர்கள் மிருகங்கள்
என்று பாகுபாடு பார்த்து
வெடிக்கத் தெரியாது எமக்கு
ஏவுகிறவர்களுக்கு எதிரே
வெடிக்கவும் தெரியும்
எதிராக வெடிக்கவும் தெரியும்

கல்லாறு நாதன் குடியிருப்பும்
ராணி மைந்தன் குடியிருப்பும்
எமக்கு ஒன்றுதான்!
எம்மை வீசியவர்கள் மீது
சாபமிடுங்கள்!
எம்மீது சாபமிடாதீர்கள்!

அணுகுண்டுகள்
எமக்கு
அண்ணாக்களாக இருந்தாலும்
ஈழத்தமிழர் மீதான
இனஅழிப்புப் போரில்
நாங்கள் வெறும் அம்புகள்

ஏவியவர்களின் கைகளை
உடைத்து வந்து
எங்கள் காலடியில் போடுங்கள்
உருவாக்கியவர்களின் விழிகளை
திறந்து எங்களை
கூண்டோடு அழியுங்கள்!

எம் பிறப்பே
எமக்குப் பிடிக்காத போது
ஒன்றுதிரண்ட உலகநாடுகள்
அயர்லாந்திலும்
நோர்வேயிலும்
உடன்படிக்கை போடுவது
உங்களுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும் மகிழ்ச்சியே!


வசீகரன்
-நோர்வே
vaseeharankavithai@gmail.com

Series Navigation

வசீகரன்

வசீகரன்