கரித்துண்டால் குறித்துவைத்த தோற்றம் மறைவின் குறிப்புகள்

This entry is part of 23 in the series 20081204_Issue

ஹெச்.ஜி.ரசூல்


தோற்றம் மறைவுக் குறிப்புகளிலிருந்து
அலைபுரளும் எழுத்துக்கள்
விடுபடா வரலாற்றின் சுவடுகளை
வரைந்து தீர்க்கின்றன.
ஆதித் தமிழனின்
உடல்மனம் சேர்ந்ததொரு கலவையில்
நூற்றாண்டுகள் தம்மைக் கரைத்து விட்டன.
ஆயுதம் தரித்த கடவுள்களாக
எங்கும் குழந்தைகள்
தொப்பூள்கொடி அறுபட்ட
பிறப்பில் ஒலித்த குரல்
அழுகையென கற்பிதம் செய்யப்பட்டது.
பிரபஞ்சத்தை
சின்னஞ்சிறு கண்களால்தரிசித்த
ஆனந்ததின் கூக்குரல் அது.
அதிகாரத்தைப் புறக்கணித்து
தனிமையைச் சூடிய பெருங்கனவொன்று
வவ்வாலாகி தலைகீழாய் தொங்குகிறது.
மரணத்திற்காகவே பிறப்பென்ற
குறுக்கப்பட்ட வாசகத்தை சுமந்து கொண்டு
எதிரே உட்கார்ந்திருந்தான் புத்தன்.
அவன் வீற்றிருந்த போதி மரத்தடி
பீரங்கியாய் உருமாறியிருந்தது.
அவன் விடும் மூச்சிலிருந்து
எறிகுண்டுகள்புறப்பட்டன.
யுத்தம்..மரணம்..கச்சாமி…


Series Navigation