சந்திப்புக்கு அடுத்து பிரிவு
பா.அ.சிவம்

ஒரு துணிக்கடையில்
ஒரு சந்தையில்
ஓர் எண்ணெய் நிலையத்தில்
ஓர் உணவகத்தில்
ஒரு சமிக்ஞை நிறுத்தத்தில்…
மீண்டும்
சந்திக்க நேர்கிறது
பிரிந்த நண்பர்களை….
நலம் விசாரிப்பைத் தாண்டி
பேசுவதற்கும்
பழகுவதற்கும்
சிரிப்பதற்கும்
ஒன்றும் இருப்பதில்லை…
புதிதாய்
சந்தித்துக் கொள்ளும்
மனிதர்களின் உறவைப் போல்
ஆனால் …
மிகுந்த விழிப்பு நிலையில்
மீண்டும்
நேர்கிறது
பிரிவு…
தெரிந்தவர்களையும்
தெரியாதவர்களாய்
நடிக்கப்
பழகிக் கொள்ள வேண்டும்
அடுத்த சந்திப்புக்குள் …
sivam_balan@yahoo.com