கம்பனுக்(கு) ஈடில்லை என்றே இயம்பு

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

வரதராஜன். அ. கி.


உவமை கவிஞருக்கும் உற்சாகம் ஊட்டும்
இவந்தன் கவித்திறத்தால் என்றும் – அவனியிலே
பீடுநடை போடும் பெரும்புலவன் கம்பனுக்(கு)
ஈடில்லை என்றே இயம்பு. (1)

விருத்தம் வடிப்பதில் விற்பன்னன் ; வார்த்தை
பொருத்தமாய் வைப்பான் பொதிந்து – கருத்துமிகும்
பாடல்கள் யாத்தலில் பார்மீது கம்பனுக்(கு)
ஈடில்லை என்றே இயம்பு. (2)

வடமொழிக் காப்பியத்தில் வண்ணம் பலவும்
புடமிட்டுச் சேர்த்திட்டான் பொன்னாய் – கடைந்திங்குத்
தேடினும் யாருள்ளார் தேனொத்த கம்பனுக்(கு)
ஈடில்லை என்றே இயம்பு. (3)

கதியென்பார் கம்பனைக் கன்னித் தமிழின்;
சதிராடச் செய்திடுவான் சந்தம் – துதிசெய்தே
ஆடிக் களிப்பாய் அகிலத்தில் கம்பனுக்(கு)
ஈடில்லை என்றே இயம்பு. (4)

பாக்கியம் செய்ததம்மா பாரும் இவன்நன்றாய்
ஆக்கி அளித்திட்ட அற்புதத்தால் – நோக்கிடின்
கோடிக் கவிவரினும் கம்பனுக்குப் பூவுலகில்
ஈடில்லை என்றே இயம்பு. (5)

மடைதிறந்த வெள்ளம் மனமொப்பிச் சொன்னான்
சடையப்ப வள்ளல் சிறப்பு – கொடையதனை
நாடிப் புகழ்ந்த நமதருமைக் கம்பனுக்(கு)
ஈடில்லை என்றே இயம்பு. (6)

தாய்மொழி செய்த தவப்பயனே கம்பன்தன்
வாய்மொழி மூலம் வழங்கியவை – ஆய்ந்திடின்
வீடொத்த இன்பம் விளைவிக்கும் கம்பனுக்(கு)
ஈடில்லை என்றே இயம்பு. (7)

ஆயிரமாய்ச் செய்யுட்கள் அற்புதமாய் ஆக்கிட்டான்
பாயிரமாய்ப் போற்றுமிதைப் பாரென்றும் – மாய்ந்திடா
மாடுகவி* தந்திட்டான் மன்பதையில் கம்பனுக்(கு)
ஈடில்லை என்றே இயம்பு. (8)

பாடல் இவன்தந்தான் பன்னிரண்(டு) ஆயிரமாய்த்
தேடியும் காணாத் திரவியமாம் – நாடிடின்
கூடும் கவிஇன்பம் கோடியன்றோ ! கம்பனுக்(கு)
ஈடில்லை என்றே இயம்பு. (9)

பொன்செய் மணிமகுடம் போற்றிடும் நல்வைரம்
மன்னுலகில் எம்மன்னை மாண்போடு தன்தலையில்
சூடக் கொடுத்திட்டான் சொல்வேந்தன் கம்பனுக்(கு)
ஈடில்லை என்றே இயம்பு. (10)

**(மாடு=செல்வம்) இங்கு “கவிச் செல்வம்”


girijaraju@hotmail.com

Series Navigation

வரதராஜன். அ. கி.

வரதராஜன். அ. கி.