நான், நீ, அவன்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

கே ஆர் மணி


நானும் நீயும்
புரண்டு தளர்ந்த
நிமடங்களில் நம்மிலிருந்து
குதித்து நமக்கு நடுவில்
அவன் படுத்துக்கொண்டான்.

நீயும் நானும் நினைத்துகொண்டோம்
விரட்ட வேண்டுமென
நினைத்துக்கொண்டேயிருந்ததில்
மறந்துபோயிற்று.

யாரை நினைத்தாய் நீ என்றும்
எவளை நினைத்தான் நான் என்றும்
விளையாட்டுபோல கேட்டுக்கொண்டாலும்
கேள்வியின் இறுதியில் இப்போதெல்லாம்
அவனின் நீளம் அதிகமாவதால்
நாமிருவரும் அச்சமுறுவதை
அப்பட்டமாகவே அறிகிறோம்.

கொஞ்சநாளில் அந்தக்கேள்வி
மறைந்தே போகும்.

அவனின் ஊமைச்சிரிப்பு சத்தம்.

எல்லாயிடங்களிலும்
உனக்கும் எனக்குமான இடைவெளிகளை
அவன் நிரப்பிக்கொண்டேயிருந்தான்.

நம்மோடு
சாப்பாட்டு மேஜைகளில்
தொலைக்காட்சி பெட்டிமுன்
காலை நடைபயிற்சியில்
அவன் நிரம்பிக்கொண்டேயிருந்தான்.

வார்த்தைகளை தொலைத்து,
வாதங்களை தவிர்த்து,
விவாதமோ, இணையவோ தேவையின்றி
நிரம்பிக்கொண்டேயிருந்தான்
சூன்யக் கனமாய்.

காலண்டர் தாள்களின்
எண்ணிக்கை குறைய குறைய
அவனின் அடர்த்தி அதிகமாகிறது.

எதற்காகவது சண்டையிடலாம்
புது உள்ளாடையால் ஊக்குவிக்கலாம்.
ஆறுதல் மொழிகளால் ஆயாசம் தவிர்க்கலாம்.
எனக்கு பிடித்த இலக்கியத்திலிருந்து
ஏதாவது கேட்கலாம்.
நல்ல உணவாய் வயிற்றிலிறங்கி
இதயத்தில் ஏறிவிடலாம்.
என்ன செய்து
நமக்கிடையே படுத்திருக்கும்
ஆதிஸேசனை விரட்டலாம் என
நீ யோசிக்கிறாய்.

நானும் கண்மூடி அதையே
யோசிக்கிறேன்.
யோசித்துகொண்டேயிருப்பதால்
மறந்தும், மரத்தும் போய்விடுகிறோம்.

அதற்குள்
அவன் பருத்து விடைத்துகொண்டேயிருக்கிறான்.
எப்போது வெடிப்பான் என்று
நாம் வேடிக்கைப்பார்த்துகொண்டேயிருக்கிறோம்
அவனையே, அவன் மொழியாலே..

நான் நான்
நீ நீ
அவன் மெளனம்.


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி