ஏழு கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

பாவண்ணன்



1. சுயசரிதை

நெருங்கி இருந்த நாற்காலியில்
குளிரும் பனியும் தழுவும்
இரவின் தனிமையில்
தன் நெடுங்கதையைச் சொல்கிறது
தோட்டத்து மரம்


தன் இளமையின் எழுச்சியை
அழிந்துபோன சகமரங்களின் சரித்திரத்தை
ஒற்றை இடையிலிருந்து புடைத்து
திசையெங்கும் பிரிந்த கிளைகளை
ஆரத்தழுவ ஓடிவரும்
காற்றின் மீதூறும் மயக்கத்தை
மழையின் ரகசிய மொழியை
இலைகளை உரசி உருவாக்கும் இசையை
பறவைகளிடம் பகிர்ந்துகொண்ட துக்கங்களை
சூரியனும் நிலவும் பொழியும்
அமுதத்தின் ருசியை
பூமியின் ஈரத்தை உள்வாங்கி அனுப்ப
உடலெங்கும் பிரிந்து நீளும்
தண்ணீர்த்தடங்களை

வேதனையைக் கரைக்கும் வேகத்தில்
தொடர்ந்து விவரிக்கிறது
மனங்கவர் இளைஞனின் தழுவலால்
இளம்பெண்ணிடம் பொங்கிய ஆனந்தத்தையும்
தூக்கிட்டு உயிர்துறந்த
அவள் துடிப்பையும்


2. பிறவி

அதிகாலையொன்றில்
காக்கைக்கூட்டில் விழித்தெழுந்தேன்
என் வருகையை
அருகிலிருந்த நட்புக்காக்கைகள்
கரைந்து கொண்டாடின
ஏதோ ஒரு திசையிலிருந்து
ஒவ்வொன்றாய் இறங்கிவந்து
நலம் விசாரித்தன
பித்ருக்காக்கைகள்
அதுவரை கேள்விப்பட்டிராத
ஆயிரமாயிரம் சங்கதிகளைப் பகிர்ந்துகொண்டன
அவற்றின் நினைவாற்றலும் அன்பும்
நெகிழ்ச்சியடைய வைத்தன
இரையெடுக்கப் புறப்படும்போது
தோழைமையோடு இணைத்துக்கொண்டன
ஏதாவது கூரையில் படையல் சோறு
எங்கோ மெத்தையில் உலரும் தானியம்
உப்புக் கருவாடு
எல்லாமே பழகிவிட்டது
செத்த எலியின் நிணத்தில்
கொத்துவது முதலில் அருவருப்பாயிருந்தது
பழகப்பழக சரியானது அதுவும்



3. பாரா முகம்

சில மாதங்களுக்குப் பிறகு
மருத்துவமனைக்குச் செல்லும் சூழல்
மீண்டும் உருவானது

இயக்கம் பழகிய சர்க்கஸ்காரர்கள்போல
துல்லியமாய் இயங்கினர்
பழைய பணியாளர்கள் அனைவரும்
புதிய சீருடையை அணிய
உதவத் தயாராக நின்றான் வளாக ஊழியன்
தொழில், குடும்பம், நிறுவனம் என
ஆர்வத்துடன் பேசியவண்ணம்
சில்லறைச் சோதனைகளைச் செய்தார் மருத்துவர்

போனமுறை படுத்திருந்த அதே அறை
அதே கட்டில்
அதே ஜன்னலோரம்
அதே மருத்துவர், தாதி

ஆனால் யாருடைய முகத்திலும்
என்னை அறிந்த சுவடே இல்லை
வாய்திறந்து கேட்க கூச்சமாக இருந்தது
சிறிது நேரம்
பக்கத்தில் இருந்த
பழைய குறிப்பேட்டில்
பார்வையை ஓட்டினார் மருத்துவர்

அதன் பிறகும் அவர் கேட்கவில்லை
நானும் சொல்லவில்லை


4. ஒருத்தி

எங்கெங்கோ தோட்டங்களிலிருந்து
வாங்கிவந்து தொடுத்த
மல்லிகைச் சரங்கள் சிரிக்கின்றன
என் கூடையில்

ஒரு கோயிலும்
பேருந்து நிலையமும் உள்ள வீதி என்பதால்
மக்கள் நடமாட்டத்துக்குக் குறைவில்லை
முழம்போட்டு வாங்குபவர்களும் உண்டு
பந்தாக வாங்குபவர்களும் உண்டு

எல்லாரும் வாடிக்கையாளர்களே
தோள்பைகளுடன் அரக்கப்பரக்க
அலுவலகம் புறப்படுகிறவர்கள்
சிரித்துப் பேசியபடி
தம்பதியராய் வருகிறவர்கள்
ஒரு கையில் காய்கறிப்பையும்
மறுகையில் வாழை இலையுமாக
கடையிலிருந்து திரும்பும் பெண்கள்
தட்சிணாமூர்த்தி சேவைக்கு
தாமதமாக வந்து சேருபவர்கள்

கதவு திறக்காத கார் ஜன்னலிலிருந்து
கையைமட்டும் நீட்டி
பூப்பொட்டலத்தைக் கேட்பார்கள்
சில பெண்கள்

வெகுநாட்களுக்குப் பிறகுதான் கவனித்தேன்-
தினந்தோறும்
ஏறத்தாழ ஐந்தரைமணிக்கு
கடையைக் கடந்து செல்கிறாள்
ஒருமுறைகூட பூ வாங்காத ஒருத்தி


5. காகம்

மரத்தடியிலிருந்து
புல்வெளியைப் பார்க்கிறது பசிகொண்ட காகம்
சற்றே தலையை உயர்த்தி
வேப்பங்கிளையில் பார்வையைப் பதிக்கிறது
அருகிலிருந்த பாறையின்மீது
பறந்து சென்று அமர்கிறது
வேலி விளிம்பில் பூத்திருக்கும்
பூக்களையெல்லாம் வெறிக்கிறது
கல்லும் முள்ளும் நிறைந்த பள்ளத்தில்
அசட்டையுடன் அலகால் கொத்துகிறது
விர்ரென்று வானிலெழுந்து
வட்டமடித்துவிட்டு
மீண்டும் வந்து அமர்கிறது
இறக்கைகளை விரித்து
சடசடவென்று அடித்துக்கொள்கிறது
ஏழெட்டு முறைகள்
விடாமல் ஓசையுடன் கரைகிறது
அருகிலேயே பழமொன்று கிடப்பதறியாமல்
தலையைத் திருப்பி எங்கெங்கோ பார்க்கிறது



6. மழைப்பறவை

விடியத் தொடங்கும் நேரத்தில்
காற்றிலேயே நெளிந்து தாவுகிறது
காணக் கிட்டாத கம்பிமழைப் பறவை
அதன் சிறகுகள் மின்னுகின்றன
அவற்றின் அசைவும் தெரிகிறது
ஈரம் வருடுகிறது கன்னத்தை
நுரைப்புள்ளிகள் ஒதுங்குகின்றன கூந்தலில்
கோலமிட வந்த நங்கை
மனமும் உடலும் சிலிர்க்க நிற்கிறாள்
அதன் ரகசிய வருகையால்
நந்தியாவட்டைப் பூவின் இதழ்கள்
அகன்ற குரோட்டன் இலைகள்
எங்கெங்கும் நிறைந்திருக்கிறது ஈரம்
தரையில் மட்டுமில்லை தடம்


7. இளமை

ஏற்கனவே தாமதமாகிவிட்டதென்றும்
உடனே புறப்படவேண்டுமென்றும்
கேட்டுக்கொண்டது இளமை

எந்த அதிகாரமும் அதனிடம் இல்லை
மென்மையான குரலில்
ஒரு தாயைப்போல அறிவித்தது

தடுக்கமுடியாத தருணமென்பதால்
ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தேன்
நாள் நேரம் இடம்
எல்லாவற்றையும் பேசி முடித்தோம்
முழுச் சம்மதத்தோடு
தலையசைத்ததுச் சிரித்தது இளமை

நாற்பதைக் கடந்து நீளும்
அக்கணத்தில் நின்றபடி
இளமையின் நினைவுகளை
அசைபோடத் தொடங்கியது மனம்

இளமை
மீண்டும் ஏறமுடியாத மலைச்சிகரம்
நீர்மட்டம் குறைந்து வற்றும் ஆறு
அதன் கொத்துகளிலிருந்து
ஒவ்வொரு மலராக உதிர்ந்துவிழுகின்றன

வீடெங்கும் நிறைந்திருக்கின்றன
கடந்துபோன இளமையின்
காலடிச் சுவடுகள்

நாவில் விழுந்த தேன்துளியென
ஊறிப்பெருகும் சுவைபோன்றது
மறைந்த இளமையின் கனவு

கரைந்துபோன இளமைதான்
காதலாகக் கனிந்து நிற்கிறது

இளமையின் மதுவை அருந்தியவையே
இக்கவிதைகள்

இன்றும் பொசுங்கிவிடாமல்
நான் பொத்திப்பொத்திக் காப்பாற்றும் சிறகுகள்
இளமையால் அன்பளிப்பாகத் தரப்பட்டவை

குறித்த நாள் முன்னிரவில்
எங்கள் தோட்டத்தில்
அந்த விருந்தை நிகழ்த்தினோம்
எதிரும்புதிருமாக அமர்ந்து
பழங்கதைகள் ஆயிரம் பேசினோம்
காரணமின்றியே கைகுலுக்கி
கள்ளப்பார்வை பார்த்துக்கொண்டோம்
ஒருமிடறு மதுவை அருந்தியதுமே
ஆனந்தம் தலைக்கேற
இனிய பாடலொன்றப் பாடியது அது
உற்சாகத்தில் நானும் பாடினேன்

இவ்வளவு காலமும்
சிரிக்கச்சிரிக்க வாழ அனுமதித்த
நன்றி தெரிவித்தபடி
போய் வருக என்று
ஒரு முத்தமிட்டு வழியனுப்பிவைத்தேன்

இறுதியாக ஆரத்தழுவிய இளமை
என் கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தது
என்னைவிட்டு விலகுவதில்
அதற்கும் துக்கம் அதிகம்
தெருமுனை திரும்பும்வரை
திரும்பித்திரும்பிப் பார்த்துச் சென்றது

குழந்தைமை உதிர்ந்ததுபோல
பால்யம் விலகியதைப்போல
இளமையும் நெகிழ்ந்து உதிர்ந்தது
ஒரு சகஜமான செயலைப்போல

நான் இளமையை இழந்தால் என்ன
எனக்குள் இன்னும் இனிக்கிறது
இளமையின் முத்தம்


paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்