ராஜ முக்தி

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

தாஜ்



முதுகுத் தண்டின்
கர்ணகால அழுக்கால்
அசூசை கூடிய அறிவழகன்
தேய்த்து தலை முழுகினான்.

வெள்ளாடையில் மினுக்க
பரிசுத்த யேசுதாசாகி
கால நடைக்கிடை இடற
வேண்டி விரும்பி
முழுகியெழ
முல்லாவானான்.
நிறை தாடியில் முகிழ்ந்த
மாட்சியும் பிசகறிய
நாத கமலம் மலர
புத்த சரணம் முழங்கியும்
முழுகல் முழுகலென
முதிர்ந்தான்.

நித்தம் மலையேறி
மேலே போனவன்
நீச்சமான வெற்று
வானத்தைக் காட்டி
நிஜங்களை தரிசித்து
ஓய்ந்த பாதங்களில்
தைத்த முட்களைப் பற்றி
உரத்த குரல் எழுப்ப
கீழே எதிரும்
புதிருமாக நின்ற
வளர்ப்பு மரங்களின்
அசையா காட்சி காண
ஊனக் கண்களிருந்தும்
மறைந்தான்.

இதழ்ச் சுழிப்பில்
அர்த்தச் சிரிப்பினூடே
என்றாவது சிலர்
பாவமென அவனை
நினைவாய்
மீட்டெடுப்பதுண்டு.

************
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்