பெரியபுராணம்- 132

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

பா. சத்தியமோகன்



69. முழுநீறு பூசிய முனிவர் புராணம்

4161.

அனைத்துக்கும் ஆதாரம் அவர்

எப்பொருளாகவும் ஆகி நின்ற அங்கணர்

மெய்ப்பொருளாகிய சிவபெருமானார்

கங்கை நீர் அணிந்த சடை உடையவர்

வெண்ணிறக் குழையை காதில் அணிந்தவர்

அவர் உரைத்து அருளிச் செய்தவற்றுள்

ஆகாது என உரைத்துள்ள

அகற்பம் எனும் வகை நீக்கி;

கற்பம், அநுகற்பம் உபகற்பம் என்கிற

மூவகைப்படும் காமங்களாகிய

குற்றங்கள் நீக்கும் திருநீற்றை

நம் இருவினைகள் தீர்வதற்காகச் சொல்வோம்.

4162.

உலகம் உய்யுமாறு திருவம்பலத்தில்

கூத்து இயற்றும் அண்ணல்

மகிழ்ந்து திருமஞ்சனம் செய்தருளும்

பால் முதலிய ஐந்தினையும் தரும் பசுக்கூட்டங்கள்

இவ்வுலகில் நோயில்லாதிருந்தபோது கன்றுகள் ஈன்றன ;

பசுஞ்சாணத்தை

சத்தியோசாத மந்திரத்தால் ஏற்று

தேவர்கள் வணங்கும்படியாக எழுகிற

சிவமந்திரங்களால் உண்டாக்கப்பட்ட சிவ அக்கினியில்

உணர்வுக்கு எட்டாத எம் சிவபெருமானின் கழல் நினைந்து

திருவடி நினைந்து இட்டு எடுத்து

தூய திருநீறாகிய பெறப்பட்டது

அதுவே “கற்பம்” என புகழப்படும்.

4163.

கச்சணிந்த கொங்கை உமைதேவியார் காண்பதற்கென

தில்லை அம்பலத்தில் கூத்து இயற்றும் மாணிக்கக்கூத்தர்

மாணிக்கம்போல் கூத்து இயற்றுகிறார்

எம்பெருமான் அருளிய

சிவ ஆகம விதிப்படி

காட்டில் உலர்ந்த பசும்சாணம் கொணர்ந்து

நுண்மையான பொடி ஆக்கி

பசுமையான

தூய கோசலத்தை விட்டுப் பிசைந்து

அத்திர மந்திரத்தால்

உருண்டையாகப் பிடித்து ஓமத்தீயில் இட்டு

சிறப்புற வெந்த பிறகு

கைகளினால் பெறப்படுவது

செல்வத்திருநீறு “அநுகற்பம்” எனப்படும்.

4164.

பசுக்கள் மேயும் காடுகள் –

அங்குள்ள

மரங்களின் உராய்வினால்

தீ உண்டாகி நீறாகி வெந்துபோனது ;

பசுக்கள் தங்கும் இடங்கள்

தீப்பற்றிக் கொள்வதால் கிடைக்கின்றது வெந்தநீறு;

இத்தகைய பல இடங்கள் தீப்பற்றியதால்

உண்டான வெந்தநீற்றையும்

செங்கற்களை சுட்ட தீயினால் உண்டான நீற்றையும்

தனித்தனியே

சிவ ஆகமங்களில் கூறிய மந்திரங்களினால்

பசுவின் கோமயத்தினால் பிசைந்து

உருண்டையாகச் செய்வர்;

திருமாடங்களில் விளங்கும் சிவ அக்கனியால்

விதித்தபடி நீறாக செய்யப்படுவது உபகற்பம் எனப்படும்.

4165.

இவ்விதமாக செய்யப்பட்ட திருநீற்றைக் கொண்டு

அகம் , புறம் எனும் இரு இடத்திலும்

சுத்தி வர வேண்டும் என பாவித்து

பிறகு

ஒரு சிறிய பகுதியை

நிருதி மூலை எனப்படும் தென்மேற்கில்

உயரிய மந்திரத்தால் தெறிப்பர் ; பிறகு

அழிவிலாத சிவன் சந்நிதி ;

தீ ;

ஆறு;

உண்மை நெறி உபதேசித்த குரு;

வழி நடை ;

நன்மை சாராத பூமி;

ஆகிய இடங்களின் முன்

எதிரில் நின்று அணியாமல் விதிப்படி அணியும்போது

உடல் முழுதும் பூசுதல்,

திரிபுண்டரம் ;

பிறைவடிவம்;

ஓங்கி எரியும் விளக்குச்சுடரின் முக்கோணம்

விளங்கும் வட்டம் எனும் வடிவிலே

சிவனடியார்கள் அணிவர் நன்மையால்.

4166.

சாதியின் ஒழுக்கத்தில்

தலைமை மிகு தருமசீலர்கள் ஆகி

தத்துவத்தின் நெறி உணர்ந்தவர்கள் ஆகி

தம் கொள்கையில்

நீதியைத் தவற விடாதோர் ஆகி

தொன்று தொட்டு வருகிற

மும்மலங்களையும் அறுத்த

வாய்மையுடைய அரிய முனிவர்

நியம் தவறாமல் செய்கிற நித்திய அக்கினியில் விளைந்து

அதில் எடுக்கப்பட்ட திருநீற்றை

புதிய பாத்திரத்தில் வைத்துக் கொண்டு

புலித்தோலை உடைய இறைவனைப் போற்றிய பிறகு

அத்திருநீற்றை

மேனி முழுதும் பூசுவார்

அவரே

முழுநீறு பூசிய முனிவர் எனப்படுவார்.

(முழுநீறு பூசிய முனிவர் புராணம் முற்றிற்று)

70. அப்பாலும் அடி சேர்ந்தார் புராணம்

“அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்”

(திருத்தொண்டத் தொகை- 10)

4167.

மூவேந்தர்களின் தமிழ் வழங்கும்

நாடுகளுக்கும் அப்பால் உள்ளவர்களும்

முதல்வனார் சிவபெருமானின்

பாதம் சார்ந்த முறைமை கொண்டிருந்தனர்;

தனி அடியாரின் காலத்திற்கு முன்னும் பின்னும்

மலர்கள் வேய்ந்த நீண்ட சடைமேல்

அரும்பு மலர்; தும்பை மலர்;கங்கை நதி மற்றும்

கொன்றை மலர் சூடிய சிவபெருமானின்

காளை பொறித்த கொடியினைச்சார்ந்தவர்கள்;

இவர்கள் –

நம்பி ஆரூரரின் தெய்வீக நாவில் பொருந்திய

திருத்தொண்டத் தொகையில் துதிக்கப்படும்தொண்டர்கள்

இவர்களே

“அப்பாலும் அடிச்சார்ந்தார்” என்பவர்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் துதி

4168.

பகைவரின் மூன்று புரங்களும் எரித்தவர்

செல்வம் மிகுந்த திருமுருகன் பூண்டி எனும் ஊர் வழியே

சுந்தரமூர்த்தி நாயனார் செல்லும்போது

சுற்றிலும் நிறைந்த வில்வேடர்களால்

பறிக்கப்பட்ட நிதியின் சுமைகளையெல்லாம்

என்றும் இளம் முலை கொண்ட உமையொரு பாகரின்

முதற்கணங்கள் பூதகணங்கள் சுமந்து கொண்டு வருமாறு

அருளப்பெற்றவர் சுந்தரமூர்த்தியார்;

அத்தகைய பேறுபெற்றவர் நம்பி ஆரூரர்;

அவரது திருவடிகள் துதிக்க

அடியேன் முன் பிறவியில் செய்த தவம் மிகப்பெரியது.

(அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் முற்றிற்று)

(பத்தராய்ப் பணிவார் சருக்கம் முற்றிற்று)

12. மன்னிய சீர்ச் சருக்கம்

71. பூசலார் நாயனார் புராணம்

(பூசல் -அன்பு / பூசலார் – அன்புடையவர்)

4169.

பகைவரின் திரிபுரங்கள் எரித்த சிவபெருமானுக்கு

ஆலயம் அமைக்க எண்ணினார் பூசலார்;

நிதி ஒரு சிறிதும் கிட்டாமல் போனது;

“உணர்வினால்

ஆலயம் அமைக்கும் தன்மையேநல்லது” என

தன் மனதினாலே ஆலயம் அமைத்த

திருநின்றவூரில் பிறந்த

பூசலாரின் நினைவினை உரைக்கின்றோம்.

4170.

இம் மண்ணுலகினில்

நல்லொழுக்கம் என்றும் உயர்ந்து விளங்கும்

பெருமையுடையது தொண்டை நாடு;

அங்கு –

நன்மை மிகு சிறப்பு கொண்டநான்கு மறைகளும்

விளங்கும் பழமை மிகுந்த ஊர் திருநின்றவூர்;

குலத்தின் அடிப்படையான

சீலம் எனப்படும் ஒழுக்கத்தினை

எந்நாளும் குறைவிலாது பெற்ற திருநின்றவூர் –

மறையோரின் கொள்கைச் செல்வம் மிகுந்த ஊர்.

4171.

அரிதான வேதமரபு வாழ

அப் பகுதியில் தோன்றினார் பூசலார்;

அவர் சித்தத்தில் வரும் உணர்வுகள் எல்லாம்

தம்பிரானாகிய சிவபெருமான் திருவடியே சேர்கின்ற

நெறியில் வாழ்ந்தார்

மாறாத –

அறுகாத அன்பு அவருக்குள் வளர்ந்தது வாழ்ந்தது

உண்மைப்பொருள் உணர உதவிபுரியும்

நீதிக்கலைகளை உணரும் அழகில்

பூசலார்சிறந்து விளங்கினார்.

4172.

“ தமது பணியெல்லாம் சிவபெருமானுக்கும்

சிவனடியார்க்குமே உரியது”என முடிவுசெய்தார்

அடியார்களுக்கு கொடுப்பதற்காக

ஏதேனும் ஒரு வகையால் தேடி முயன்று

பெற்றுக்கொள்ளச் செய்தார்;

“கோவில் அமைக்க

பெருந்திரளான செல்வம்

தம்மிடம் இல்லையே” என்று ஏங்கவில்லை

அப்படி எண்ணவே இல்லை!

“கங்கைநீர் தாங்கிய சடையுடைய இறைவர்

மகிழ்ந்து உறைவதற்கான கோயில் ஒன்றினை

எடுத்தே தீர்வது” என மனதில் கொண்டார் பூசலார்

4173.

“ கோவில் கட்ட வேண்டும்” என்று

மனதினால் கருதிய பிறகு

பெரும் செல்வத்தினை வருந்தி வருந்தித் தேடினார்

எவ்வகையிலும் பொருள் தேறவில்லை

“ என் செய்கேன்! ” என்று நைந்தது அவர் உள்ளம்

அப்போது –

நினைப்பினால் கோவில் எடுக்க முடிவு செய்தார்

அச்செயல் நிகழ

தினை அளவு முதற்கொண்டு அனைத்து செல்வமும்

சிந்தையால் சிந்தைக்குள் திரட்டிக்கொண்டார்

4174.

கோவிலைக் கட்டுதற்குரிய சாதனங்களோடு

தச்சர்களை மனதினாலேயே தேடினார்

நாதனாகிய சிவபெருமானுக்கு

ஆலயம் செய்வதற்கு

நலம் பெறும் நல்ல நாள் ஒன்றையும்

“வேளை எது ?” என்றும் மனதில் குறித்தார்

ஆகமத்தின்படி

அஸ்திவாரம் எனப்படும் அடிநிலை எடுத்தார்

அன்பு நிறைந்தது காதல் நிறைந்தது

இரவு பகல் உறங்காமல் எவர் கண்ணும் படாமல்

கோயில் எடுக்கத்தொடங்கினார்

4175.

கோயிலின் அடிநிலைமுதல்

கோபுரத்தின் அடிக்கீழ் அமையும் சித்திரவரிவரை

அனைத்து ஓவிய வேலைப்பாடுகளையும்

மனதினால் முழுதாக அமைத்தார்

கோபுர விமானத்தின் முடிவில்

விரிக்கப்பட்ட அளவில் நிறைவு செய்தார்

நீண்ட நாட்கள் ஆகிவிட்டன

நினைவுகளாலேயே கோயில் நிறைவாகியது –

4176.

ஸ்தூபிகள் நடப்பட்டன

சுதை வேலைகள் நடந்தன

சுண்ணச்சாந்து பூசப்பட்டது

சிற்ப அலங்கார வகைகள் நடந்தன

தீர்த்தக்கிணறு அமைத்தாயிற்று

பக்கத்திலும்

கோயிலைச் சுற்றிலும் மதில் எடுக்கப்பட்டது

தடாகமும் தோண்டியாயிற்று

மற்றும் –

வேண்டுவன முழுதும் வகைப்பட செய்யப்பட்டன

இறைவன் நிலைபெறுமாறு பிரதிஷ்டை செய்ய

பொருத்தமான

ஒரு நாளினைக் குறித்துக்கொண்டார்

அந்நாள் நெருங்கியது –

4177.

காடவர் பெருமானாகிய பல்லவமன்னன்

காஞ்சி நகரில் கல்தளி எனும் கோயில் எடுத்தான்

எப்பக்கமும் சிவனுக்காக

பெரும் செல்வங்களைச் செலவு செய்தான்;

திருமாலும் தேட அரியவரான இறைவரை

பிரதிஷ்டை செய்ய

ஒரு நாளினை முடிவு செய்தான் .

அந்த நாளுக்கு முந்தைய நாளிலே

விரிகின்ற இதழ்கள் கொண்ட

கொன்றைமலர்கள் சூடிய இறைவர்

அம்மன்னனின் கனவில் தோன்றினார் –

4178.

“திருநின்றவூரில் “பூசல்” எனும் அன்பன்

நீண்ட நாட்கள் நினைத்து நினைத்து செய்திருக்கிற

நன்மையால் அடைந்த கோயிலில் நாம் புகுவோம்

நீ இங்கு –

கோயில் பிரதிஷ்டை செய்கையை

நாளை கழித்து வைத்துக்கொள்க”

என்று கூறிய பின் –

கொன்றை சூடிய நீண்ட சடையுடைய இறைவர்

தொண்டரின் கோயில் காணப் புகுந்தார்

4179.

தொண்டரான பூசலாரை

உலகிற்கு விளங்க வைப்பதற்காக

தூய சிவபெருமான் இவ்விதம் அருள்செய்தார்:-

திண்ணிய ஆற்றல் உடைய மன்னனின்

துயில் கலைந்தது

“அந்தத் திருப்பணி செய்தவரைக்கண்டு

நான் வணங்க வேண்டும்” என ஏங்கினான்

மேலும் மேலும் எழுகிற காதலோடு

பெரு விருப்பத்தோடு திருநின்றவூர் சேர்ந்தான்

4180.

அந்தத் தலம் சேர்ந்த பிறகு

“பூசலார் எனும் அன்பர்

இங்கு அமைத்துக் கட்டிய கோயில்

எங்குள்ளது?” என

அங்கு உள்ளவர்களைக்கேட்டான்

அவர்களோ –

“ நீங்கள் கூறிய பூசலார் அமைத்த

கோயில் எதுவும் இங்கில்லை” என்றனர்

அதைக்கேட்டு –

“மெய்நெறி நிற்கும் அந்தணர்கள்

எல்லோரும் இங்கு வருக” என்று

ஆ¨ணையிட்டான் மன்னன்

4181.

பல்லவ மன்னனைக்காண

அந்தத் தலத்தில் இருந்த அந்தணர்கள்

யாவரும் வந்தனர்

“குற்றமிலாத பூசலார் என்பவர் யார்” என வினவியதும்

மறையோர்களெல்லாம் –

“அவர் குற்றமற்ற வேதம் ஓதும் அந்தணர்

இவ்வூர்காரர்” என்றனர்

“பூசலாரை அழைத்து வருக” என்று அவர்களை ஏவவில்லை

ஈசன் மீது அன்பு மிக்க பூசலார் இருக்குமிடம் நோக்கி

கொடிய வேலுடைய மன்னன்

தானே நடந்தான்

4182.

தொண்டரை அடைந்தான் மன்னன்

தொழுதான்-

“ இவ்விடத்தில் தாங்கள்

எத்திசையில் உள்ளோரும் புகழுமாறு அமைத்த

ஆலயம்தான் எங்குள்ளது? !

அண்டர்நாயகரான சிவபெருமானை

ஸ்தாபித்து பிரதிஷ்டை செய்து அருளும் நாள் –

இன்றுதான் என தெரிந்து கொண்டேன்

கண்நுதல் பெருமானின் திருவருளால்

உங்களைக் கண்டு

திருவடி வணங்குவதற்கு வந்தோம் ! ” என்றான்.

4183.

இவ்வாறு

பல்லவ மன்னன் உரைத்ததைக் கேட்ட அன்பர்

மருண்டு போனார்;

அவரைப் பார்த்தார்

“என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு

எம்பெருமான் அருளிச் செய்திருக்கிறார் என்றால்

அது —

முன்நாளில்

நிதி கிடைக்காமல் போனதால்

உள்ளத்தினால் முயன்று

நினைந்து நினைந்து செய்த கோயிலால்தான்” என்றார்

அந்தக் கோயிலை நான் வெளியில் கட்டவில்லை

சிந்தையில் கட்டினேன்

இன்னது என சிந்தனையில்

சிந்தித்து செய்த கோயிலை எடுத்து விளக்கினார்.

4184.

பூசலார் கூறியதைக் கேட்டு

அதிசயம் அடைந்தான் மன்னன்

“குற்றமிலாத சிந்தை உடைய அன்பரின்

பெருமையே பெருமை”

என்று அவரைப் போற்றினான்

மணம் வீசும் மாலை கீழே தாழ

நிலமிசை அவரை வீழ்ந்து தொழுதான்

முரசு ஒலிக்கும் படைகளுடன் திரும்பி

தன் பழைய ஊர் சேர்ந்தான்.

4185.

அன்பரான பூசலாரும்

தம் உள்ளத்தில் அமைத்த ஆலயத்தில்

சிவபெருமானை

நல்ல பெரும் பொழுதில் சேருமாறு

ஸ்தாபித்து பிரதிஷ்டை செய்தார்

பின்பு

நன்மையோடு பூசனைகளெல்லாம்

பலநாட்கள் விரும்பிச் செய்து வாழ்ந்தார்

பொன்னால் ஆன அம்பலத்தில் ஆடும்

பொன்னடி நிழலில் புகுந்தார்.

4186.

நீண்ட செஞ்சடை கொண்ட சிவபெருமானுக்கு

நினைப்பினால் கோயில் படைத்து

அன்பு கொண்டு

இடையறாத அன்பு செய்த

பூசலாரின் பொன்னடிகள் துதிக்கிறேன்

ஆண்மை மிக்க சோழர் பெருமான்

உலகம் உய்வதற்காக அளித்த

செல்வமிகு

பாண்டிமாதேவியாரான மங்கையர்க்கரசியின்

பாதங்கள் துதிக்கத் தொடங்குகிறேன்.

(பூசலார் நாயனார் புராணம் முற்றிற்று)

72.மங்கையர்கரசி அம்மையார் புராணம்

“மன்னியசீர் மறைநாவனின்றவூர் பூசல்

வரிவளையார் மானிக்கு (நேசனுக்கும்) அடியேன்”

(திருத்தொண்டத் தொகை- 11)

4187.

மங்கையர்க்கு எல்லாம் ஒப்பிலா அரசி;

எங்கள் தெய்வம்;

சோழர் குலக்கொழுந்து

வளைக்கை கொண்ட தனிப்பெருமை கொண்டவள்;

செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமி போன்றவள்;

பாண்டிய நாட்டை ஆளும் குலத்திற்கு

உண்டான பழிபோக்கிய தெய்வப்பாவை;

பெரும் தமிழ்நாட்டுக்கு வந்த இடரை நீக்கி

பொங்கும் ஒளி தரும் திருநீற்றைப் பரவச் செய்தவரை

போற்றுகிறவரின் திருவடி

எம்மால் போற்றப் பெறுவதாகும்.

4188.

சிவஞானம் அருந்தியதால்

ஞான ஒளிப்பாடல் பொழிகிற சீகாழி வேந்தர்

அந்தணர் தலைவர் ஞானசம்பந்தரால்

பாராட்டப் பெறும் அளவு

உயரிய தவமுடைய அம்மையாரின் பெருமையை

யாம் என்னவென அறிந்து எப்படிப் போற்றுவோம்!

பாண்டிய மன்னரான

குற்றம் நீங்கிய புகழுடைய நெடுமாறனுக்கு

சைவ வழித் துணையாக நெடுங்காலம் வாழ்ந்தார்

பின்னர்

குற்றமற்ற சிவநெறியில் அவரோடு

இறைவரது திருவடி நிழலின் கீழ் அமர்ந்திருக்க

அருள் பெற்றவர் மங்கையர்கரசியார்

4189.

என்றும் பொய்க்காமல் நீர் பெருக்குகிற

தெய்வத்தன்மை மிகுந்த பொன்னியாறு

சோழர் குலத்தின் வளம் பெருக்குகிறது

அது போலவே –

பாண்டியரின் நாட்டையும் புகழுடன் விளங்கச் செய்த

மங்கையர்க்கரசியாரின் கழலடிகள் போற்றுகிறோம்

ஒருநாளும் தன் செயலில் தவறாமல்

சிவன் அடியவர்களுக்கு

உடையும் ,கீளும், கோவணமும் நெய்து கொடுக்கும்

பெரும்புகழ் மிகுந்த சாலியர் குலத்தில் தோன்றிய

பெருந்தகையாரான நேச நாயனாரின் இயல்பினைப்

பேசத் தொடங்குகிறோம் இனி.

(மங்கையர்க்கரசி அம்மையார் புராணம் முற்றிற்று)

73. நேச நாயனார் புராணம்

“ மன்னியசீர் மறைநாவனின்றவூர்ப் பூசல்

வரிவளையாள்மானிக்கு நேசனுக்கும் அடியேன்”

( திருத்தொண்டத்தொகை – 11 )

4190.

பெருமை வளரும் தன்மையுடன்

சிறப்புமிகு முறைமையுடன்

குன்றாத அன்புமிகு சிந்தையுடன்

வாய்மையும் நன்றியும் மிக்கவர்கள்

நிலை பெற்று வாழ இடமான உலகில்

புகழும் பழைமையும் மிகுந்த தலம் “காம்பீலி”

பிறைச்சந்திரன் தோயும் அளவு —

உயரமிகு மாடங்களும் கொண்டது “காம்பீலி”

( காம்பீலி என்பது பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஊர் )

4191.

அந்நகரில்

அறுவையர் எனும் சாலியர் குலத்தினர் வாழ்ந்தனர்

நிலைபெற்ற தொழிலில்

தங்கள் மரபில் மேன்மை பெற்றிருந்தனர்

பாம்பினை ஆபரணமாய் அணிந்த

சிவபெருமானின் அடியார்களைப்பணிவதே

தம் கடமையாகக் கொண்டனர்

அடியார்களின் திருவடிகளைத் தலையில்சூடினர்

பணிந்துபோற்றினர்

அத்தகைய இயல்புடையவர் “நேசர்” .

4192.

அந்நிலையில் –

அவர் தம் மனதில்

தனது தொழிலை

சிவபெருமானின் திருக்கமலத்துகென்றே ஆக்கினார்

மேலும் மேலும் ஓங்கிய வார்த்தையின் தொழிலை

ஐந்தெழுத்தாகவே ஆக்கினார்

மேற்கொண்ட தொழிலும் செயலும்

தம் இறைவரின் அடியார்க்கே என ஆக்கினார்

நல்ல தன்மை கொண்ட உடை,

கீள், பழுதிலாத கோவணம் ஆகியன செய்தார்.

4193.

உடை மட்டுமல்ல –

கீள் ,ஒப்பிலாத கோவணம் ஆகியன நெய்து

காளையூர்தி உடைய அடியார்கள்

வேண்டியவிதத்தில் இடையறாது தருவார்;

ஒவ்வொரு நாளும்

அவர்களது திருவடி இறைஞ்சுவார் துதிப்பார்

அதன் பயனாக

சிவபெருமான் திருவடி நிழலைச் சேர்ந்தார்.

4194.

கற்றைச்சடை உடைய

கங்கை அணிந்த

சிவபெருமான் திருவடி சேர்வதற்காக

முன்பு

தன்னைச் சேர்ந்திருந்த வினைச்சார்புகளை அறுத்த

நேச நாயனாரின் திருவடிகளை வணங்குகிறோம்

முதிர்வு பெற்ற தனது சிறப்பால்

தன் முன்பிறப்பை உணர்ந்து

அதே உணர்ச்சியுடன்

காளைக்கொடி உயர்த்திய சிவபெருமானுக்கு

ஆலயங்கள் பல அமைத்து செயல்பட்டு

மண்ணுலகத்தில் ஆட்சி செய்த

வெற்றி வேந்தர் கோச்செங்கட்சோழர் பெருமையை

சொல்லத் தொடங்குவோம் இனி.

(நேச நாயனார் புராணம் முற்றிற்று)

74. கோச்செங்கட் சோழநாயனார் புராணம்

“தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கு அடியேன்”

திருத்தொண்டத் தொகை- 14)

(செங்கணான் என்பது

அவர் தாயார் செல்லமாக அழைத்த பெயராகும்)

4195.

துலாக்கோலின் தட்டில் புறாவை வைத்து

அதன் எடைக்குச் சமமாக

தன் உடலின் தசையை அறுத்து அளித்த

சிபிச்சக்கரவர்த்தி மரபில் வந்த சோழர்களின் நாட்டில்

பாய்கிறது காவிரி ஆறு;

அலைகளால் முத்துகளைச் கொண்டு வந்தது

அகிலுடன் சந்தனம் தந்து கொழித்தது

அழகிய நீருடைய காவிரி

ஆற்றின் மணிகளை கரையில் ஒதுக்கியது

இதில்தான் சந்திரன் தனது நோயைத் தீர்க்க

தீர்த்தமாகக் கொண்டான் என்பதால்

சந்திர தீர்த்தம் என ஆயிற்று

இதன் அருகில் குளிர்ச்சோலையுடன்

நிலையாக வளரும் மரங்கள் நெருங்கியிருக்கும்

நீண்ட

குளிர்ந்த

கானகம் ஒன்று உள்ளது.

4196.

பூக்கள் மிகுந்த அந்த கானகத்தில்

வெண் நாவல் மரத்தின் கீழ்

முன்காலத்தில்

திருமால் தேடிய உண்மை வடிவான

மலர் போன்ற திருவடி உடைய இறைவர்

சிவலிங்கமாக வெளிப்பட்டு அருளினார்

மிக்க தவமுடைய ஒரு வெள்ளை யானை

அழகிய நீரை முகர்ந்தது

மணமுடைய மலர்க்கொத்துகளை

இறைவரின் திருமேனியில் அது அணிவித்தது

கரிய குவளை மலர் போன்ற கழுத்துடைய இறைவரை

அந்த யானை

நாள்தோறும் வழிபட்டு வந்தது .

4197.

முன் சொன்ன

அத்தகைய செயலால்

அந்தத் தலத்திற்கு “திருவானைக்கா” எனும் பெயர் வழங்கியது

ஞானமுடைய ஒரு சிலந்தி

இறைவரின் செம்பொன் போன்ற திருமுடி மேல்

கதிரவன் வெம்மை தாக்காதவாறு

சருகுகள் விழாதவாறு

தகுந்த

வாய் நூலால் ஒரு வலையினை

முடி மேல் கட்டியது

நல்ல கட்டிபோல விரிவு செய்து வைத்தது.

4198.

இறைவனாகிய நாதனின் திருவடியை

வணங்கச் சென்ற யானை

நன்றாகக் கட்டிய சிலந்தியின் வலைப்பரப்பை

“இது சிறந்ததல்ல” என அதனைச் சிதைத்தது

“இன்று யானையின் கரம்பட்டு வலை அழிந்தது” என

மீளவும் அந்த வலைப்பரப்பைச் செய்தது சிலந்தி

வலிமையுடைய யானையோ

மறுநாள் வந்து திரும்பவும் அழித்தது.

4199.

“எம்பெருமான் மேனிமேல் சருகுகள் விழாமலிருக்க

வருந்தி நான் உழைத்து

மேலே கட்டிய நூல் வலையை

இந்த யானை அழிப்பதா?” எனச் வெம்பியது சிலந்தி

சினமுற்ற சிலந்தி

யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது

அதன் குடைச்சலினால்

வலி தாளாத யானை

துதிக்கையை தரையில் அடித்து மோதியது

குலைந்து போனது யானை

வீழ்ந்து இறந்து போனது.

4200.

அந்த யானை

தன் கையை நிலத்தில் மோதியதால்

சிலந்தியும் உயிர் நீங்கியது

வேதங்களின் பொருளான சிவபெருமானின் அருளால்

மதம் கொண்ட யானைக்கும் தக்க வரம் கிட்டியது

அந்தச் சிலந்தியை –

சோழர்குலத்தில் வந்து உதிக்கச் செய்தார்

உலகை காவல் செய்து அரசாட்சி புரியுமாறு

இறைவர் அருள் செய்தார்.

4201.

தொன்மை மிகு சோழர் குல மன்னர் சுபதேவன்

தன் மனைவி பெருந்தேவி கமலாவதியுடன் சேர்ந்து

நிலைத்த புகழ் உள்ள

தில்லை அம்பலத்தில் திருக்கூத்து இயற்றும்

தாமரை மலர் போன்ற திருவடிகளை

தலையால் வணங்கித் துதித்து

வழிபட்டு வருகின்ற நாட்களில் —

4202.

அவர்களுக்கு

மக்கட்பேறு இல்லை ஆதலால்

அரசமாதேவி வரம் வேண்டினாள்

செவ்வானம் போன்ற நீண்ட சடையுடைய

சிவபெருமானாகிய கூத்தர் மனமிரங்கினார்

திருவுள்ளம் செய்தார்

அதனால்

திருப்பணியை மிகுதியாகச் செய்து வந்த அந்தச்சிலந்தி

குலவேந்தனை மகிழ்விக்கும்

கமலவதியின் திருவயிற்றில்

அழகிய மகவாய்

அழகிய குழந்தையாய் வந்து அடைந்தது

4203.

மூங்கில் போன்ற தோள் உடைய கமலவதிக்கு

கர்ப்பம் முற்றும்நாள் நிரம்பியது;

குழந்தை பிறக்கும் நாள் வந்தது;

அக்குழந்தையைப் பெறும் நேரத்தில்

காலநிலை அறிந்த சோதிடர்கள் –

“ஒரு நாழிகை கழித்து இக்குழந்தை பிறந்தால்

மூவுலகங்களையும் ஆட்சி செய்யும்” என்று கூறியதும் –

ஒளி விளங்கும் அணி அணிந்த அரசமாதேவி

ஒரு முடிவு செய்தாள்

4204.

“இப்போது பிறக்காமல் ஒரு நாழிகை கழித்து

என் பிள்ளை பிறக்கும்படி

என் கால்களைப் பொருந்தக் கட்டுக

உயரத்தில் தூக்குக” எனக் கூறினாள்.

அப்படியே செய்தனர்

அறவாணர்களாகிய சோதிடர் சொல்லிய

கால எல்லை முடிந்தபின்

அவளை அவிழ்த்தனர் விடுவித்தனர்

அரிய மணி போன்ற குழந்தையைப் பெற்று எடுத்து

“இவன் என் செல்ல கோச்செங்கண்ணோ! “என்று

மாதேவி பாராட்டிக் கொஞ்சினாள்

வலியோடு பிறகு இறந்து போனாள்.

4205.

தன் மனைவி கமலவதி தேவி

மகனைப் பெற்று எடுத்ததும் இறந்துவிட

செங்கோல் சோழன் சுபதேவன்

தன் உயிர் போன்ற அரும்புதல்வனை

தானே வளர்த்தான்

உரிய வயதில் மணிமகுடம் சூட்டினான்

தான் விரும்பும் தவநெறியில் சென்று

சிவலோகம் சார்ந்தான்.

4206.

கழுத்தினில் மாலை அணிந்து

கையினில் வேல் கொண்ட

கோச்செங்கண் சோழனுக்கு

இம்மண்ணுலகில் பிறந்தாலும்

ஆதிநாயகரான சிவபெருமான் அருளால்

தன் முந்தைய பிறவிநிலை

முந்தைய சிலந்தி நிலை மறக்கவில்லை

அதை உணர்ந்தபடியே பிறந்தான்

அரசாட்சியும் செய்து வந்தான் அதனால்

இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும்

பெரிய

குளிர்ந்த கோவில்கள் பலவற்றிலும்

பெரு விருப்பத்துடன்

திருத்தொண்டு புரிகின்ற கடமை ஆற்றி வந்தான்.

4207.

திருவானைக்காவில்

முன்பிறப்பில்

தாம்

அருள் பெற்ற அவ்வரலாறை அறிந்து

அங்கு

மானை ஏந்திய கைகளை உடைய

திருக்கரமுடைய இறைவர்

மகிழும் கோயிலை நிறுவினார் ஆக்கினார்

மெய்ஞானச் சார்புடைய வெண்நாவல் மரத்துடன்

நீலமலர் போன்ற கழுத்தினை உடைய

தம் இறைவர் வீற்றிருக்கும்

கோவில் பணி செய்தார்

நன்மை சிறக்க அமைத்தார்.

4208.

கொடை வள்ளலான அநபாயச் சக்கரவர்த்தியின்

முன்னோராக வருகிற

குலமுதல்வரான

முதன்மையுடைய கோச்செங்கண்ணனார்

உரிய அமைச்சர்களை ஏவி அனுப்பினார்

சிறப்புடைய சோழநாட்டின்

அகன்ற தலங்கள் தோறும்

சந்திரசேகரர் ஆன சிவபெருமான்

விரும்பி அமரும்

அழகு நிறைந்த மாடக்கோயில்கள்

பலவும் கட்டினார்.

4209.

அக் கோயில்கள் தோறும்

இறைவரின் திருஅமுதுக்குரிய மிகுந்த செல்வங்களை

தம் விருப்பத்தினால் மிகவும் அமைத்தார்

எல்லாத் திக்குகளிலும்

ஒப்பிலாத

தம் செங்கோல் ஆட்சி முறையைச் செலுத்தினார்

தேர்ப்படையை உடைய செங்கண்ணார்

முக்கண் உடைய இறைவர்

திருக்கூத்து இயற்றுகின்ற

முதன்மையுடைய திருத்தில்லை அடைந்தார்.

4210.

சைவ மெய்த்திரு மிகுந்த

செம்பொன் அம்பலத்தில்

திருநடனம் புரியும் பெருமானின் திருவடி வணங்கி

பேரன்பு ஓங்க உள்ளம் உருகி

அங்கு தங்கியிருந்தார்

அந்நாளில்

வாய்மை வாழ் அந்தணர்களுக்கு உறைவிடமான

திருமாளிகைகள் பலவும் கட்டி அமைத்தார்.

4211.

தேவர்களின் தலைவரான சிவபெருமானின்

திருத்தொண்டினால்

கோச்செங்கண்சோழராகத்தோன்றிய

செம்பியர்களின் அரசன்

“உலகம் பொதுவானது” என்பதைமாற்றி

“தமக்கே உரியது” எனும்படி ஆட்சிசெய்தார்

இவ்வுலகில்

சிவபெருமான் அருளால்

சிவத்தொண்டுகள் செய்தார்

தேவர்களும் வணங்கும்படி

தில்லைக்கூத்தரின் திருவடி நிழல் சேர்ந்தார்

4212.

கரிய நீல மலரைப்போன்ற கழுத்தினை உடைய

சிவபெருமானின் திருவடி நிழல்சேர்ந்த

இயல்புடைய

கோச்செங்கண் சோழரின்

மலர்போன்ற திருவடிகளை வாழ்த்துகிறேன்

நீர்மையுடைய இசைபொருந்திய

யாழின்தலைவராக உலகம் போற்றுகிற

திரு நீலகண்ட யாழ்ப்பாணரின் திறத்தை

இனி

சொல்லத்தொடங்குகிறேன்

( கோச்செங்கண் சோழநாயனார் புராணம் முற்றிற்று )

75. திருநீலகண்ட யாழ்ப்பாணநாயனார் புராணம்

“திருநீலகண்டப் பாணணார்க்கு அடியேன்”

( — திருத்தொண்டத்தொகை – 11 )

4213.

திருநீலகண்ட யாழ்ப்பாணர்

திருஎருக்கத்தம்புலியூரில் நிலைபெற்று வாழ்பவர்

இறைவரின் பெருமைகளை

சிறப்புடைய

தக்க யாழினில் அமைத்துப் போற்றுவார்

செழிப்புடைய சோழநாட்டில் உள்ள

தலங்கள் யாவும் பணிந்து

பிறகு –

திருநான்மாடக்கூடல் எனப்படும்

மதுரை சென்றார்

மலை எனும் வில் ஏந்திய சிவபெருமான் வீற்றிருக்கும்

“திருஆலவாய்” எனப்படும் மதுரை சென்றார்

4214.

திருஆலவாய் அமர்ந்த இறைவரின் கோயில் அடைந்து

அங்கு நின்று –

பாலையாய் நின்ற பதினான்கு வகையான பண்களை

யாழின் நரம்புகளை முறுக்கி அமைத்தார்

அக்காலம் ஆதரிக்கும்

பண்ணின் அமைதியை பலமுறை ஆராய்ந்து அமைத்தார்

மணம் கமழும் நீண்ட கூந்தல்கொண்ட உமையை

ஒருபாகத்தில் பெற்ற

ஏலவார் குழலாள் பாகர் சிவபெருமானின்

இசைப்பாடல்களை யாழில் இட்டு இசைத்தார்

4215.

பாணரின் யாழிசைப் பாடல்களை

திருஆலவாய் மன்னர் சிவபிரான்

தன் திரு உள்ளத்தில் கொண்டார்.

அதே நாளில்

தன் தொண்டர்களுக்கும்

கனவில் தோன்றி ஏவினார்

இறைவரின் ஏவல் வந்தபின்

அந்த அடியார்கள் அந்த அரும் பெரும் பாணரை

திரிபுரங்களை எரித்த இறைவரின்

திரு உருவம் முன்பு அழைத்துச்சென்றனர்

கோயிலுள்புகத் தகாத சாதியென்பது

இதனால் மாறியது.

4216.

அன்பர்கள்

யாழ்ப்பாணரை அழைத்துக் கொண்டு

கோவிலுள் புகுந்த போது

“இது அரிவை பாகனின் பெரும் பணியாம்”

என்று அவருக்குள் உண்மை உணர்தல் தோன்றியது

நிலை பெற்ற பாணராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர்

சோமசுந்தரப் பெருமானின் திருமுன்பு நின்றார்

யாழ் கொண்டு இசைத்தார்

நான்மாடக்கூடல் முதல்வரைப் பாடுகின்றார்

4217.

மூன்று புரங்கள் எரித்த பண்பையும் ;

அதற்காக –

தேரின் மீது நின்ற தன்மையும்;

யானையை உரித்த வரலாற்றையும்;

காமனைக் காய்ந்த தன்மையையும்;

திருமாலுக்கும் நான்முகனுக்கும்

அரியவரான வரலாறையும்;

அடியவர்க்கு எளியவரான தன்மையும்;

அன்பினால் யாழ்ப்பாணர் பாட

அருளினார் பரமனார்.

4218.

அப்போது –

அந்தரத்தில் ஒரு ஓசை எழுந்தது ;-

“அன்புடன் பாணர் பாடும் சந்தமுடைய யாழ்

தரையில் உள்ள குளிர்ச்சி தாக்கினால்

நரம்புகளின் இறுக்கம் சிதைந்துவிடுமே;

ஆதலால் –

அழகிய பலகையை முன்னால் இடுக”

அதனை உணர்ந்த அடியார்கள்

அதன்படியே பலகை இட்டனர்.

செந்தமிழ்ப்பாணரும் திருவருள் பெற்று

அப்பலகையில் அமர்ந்து கொண்டார்.

4219.

பொற்ப்பலகை மீது ஏறி யாழ் இசைத்தார்

உமையொரு பாகனின் வள்ளல் தன்மையை

உலகமெல்லாம் அறியும்படி போற்றினார்

தேவர்களும் போற்றுமாறு விடைபெற்று

அளவிலாத மற்ற தலங்களுக்குச் சென்றார்

தேவர்களின் உலகை ஆளாமல்

திருவாரூர் ஆட்சி புரியும்

தியாகப் பெருமான் வீற்றிருக்கும்

திருவாரூர் சேர்ந்தார்.

4220.

இயமனை உதைத்து உருட்டிய பெரும் உண்மையை

தாயினும் இனிய நல்பெரும் கருணையை

அடியவர்களுக்கு அளிக்கும்

குளிர்ந்த பேரரருள் திறத்தை

கோவிலின் வாசல் முன் நின்று

பொருந்திய யாழிலே அமைத்தார்

பொருத்திப் பாடினார்

இறைவர் அதைக் கேட்டருளினார்

அங்கு வடக்குத் திசையில்

பாணருக்கென வேறு வாசலை வகுத்து அருளினார்

அதன் வழியே உள்ளே புகுந்தார்

4221.

மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருந்த

முதல்வன்தனை வணங்கினார்

மிகுந்த காலம் அங்கிருந்தார்

பிறகு –

தம்பிரானாகிய சிவபெருமான் திருஅருளால்

சீலத்தார்கள் ஆகிய சிவனடியார்கள் வாழும்

திருவாரூரிலிருந்து நீங்கினார்

ஆலம் எனும் நஞ்சுஅணிந்த கழுத்துடைய

இறைவர் வீற்றிருக்கும்

பல தலங்களும் வணங்கிச் சென்றார்.

4222.

கடல் சூழ்ந்த திருத்தோணிபுரம் எனும் சீகாழிக்கு

விரும்பி அமர்ந்த எம்பெருமான் திருவருளால்

யாழை விடவும் இனிய மொழியினாளாகிய உமையம்மை

ஞானப்பால் ஊட்டிட உண்டருளிய

கவுணியர் தலைவராகிய ஆளுடைய பிள்ளையாகிய

ஞானசம்பந்தரின் புகலி எனும் சீகாழிக்கு

வந்தார் சந்தமுடைய யாழ்ப்பாணர்.

4223.

இசைப்பாணர் வந்ததை

ஞானம் உண்டவராகிய ஞானசம்பந்தர் கேட்டார்;

நல்லிசையுடைய யாழ்ப்பாணருக்கு ஏற்றபடி

சிறப்பு செய்தார்

அங்கு தங்கியிருந்தபோது சம்பந்தர் பாடுகின்ற

மேன்மை கொண்ட பதிகத்து இசையை

யாழில் இடும் பேறுபெற்றார்

அவருடனே தங்கிய பிறகு

நீலமலர் போன்ற கழுத்தினை உடைய இறைவரின்

திருநல்லூர்ப் பெருமணத்தில் அவருடன் இருந்து

பரமர் திருவடி அடைந்தார்.

4224.

திருநீலகண்ட யாழ்ப்பாணரின்

மலர் போன்ற திருவடிகள் வணங்குகிறோம்

நெல்லும் கரும்பும் மிகுந்த வயல்கள் உடைய

திருநாவலூரில் தோன்றிய சடையனார்

சிவ ஆகம நியதி கொண்டவர்;

அழகிய பிறையும் பாம்பும் சூடிய சிவபெருமானின்

திருவருளைப் பெற்றவர்;

அவர் பெருமையை

இனி சொல்லத் தொடங்குகிறோம்.

(திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார் புராணம் முற்றிற்று)

76. சடைய நாயனார் புராணம்

“என்னவனாம் அரன் அடியே அடைந்திட்ட சடையன்

இசைஞானி காதலன் திருநாவலூர்க்கோன்

(திருத்தொண்டத் தொகை – 11)

4225.

தனது பிரானாகிய தம்பிரானையே

தனது தலைவரான இறைவரையே

தனக்குத் தோழராகக் கொண்டார்;

பெரிய –

தமது தோள்களைத் தழுவும்

பூங்கொம்பு போன்ற பரவை அம்மையாரிடம்

தனது இறைவனையே தூதாக அனுப்பிய சுந்தரரை

என் பெருமானாகிய சுந்தரரை

சேரமான் பெருமான் நாயனாரின் ஒப்பற்ற துணைவரை

நம்பி ஆரூரரை –

உலகின் எல்லா உயிர்களும் வாழ்வதற்காக

சடையனார் –

மகனாகப் பெற்றார்.

(சடைய நாயனார் புராணம் முற்றிற்று)

77. இசைஞானி அம்மையார் புராணம்

“ என்னவனாம் அரன் அடியே அடைந்திட சடையன்

இசைஞானி காதலன் திருவாரூர்க்கோன்”

( திருத்தொண்டத்தொகை –
11 )

4226.

குறைவற்ற பெருமை உடைய

சடைய நாயனாரின்

செல்வம் பொருந்திய மனைவியார்

இசைஞானி அம்மையார்;

அழிக்கவே முடியாத முப்புரங்களை அழித்த

சிவபெருமான் ஆண்டுகொண்ட நம்பிஆருரரைப்

பெற்றடுத்தவர் இசைஞானிப்பிராட்டியார்;

இழிவேதுமற்ற

உயர்ந்த சிவவேதியர்குலத்தில்

தோன்றிய இசைஞானிப் பிராட்டியாரை

எனது சிறு புன்மொழி

எனது புல்லிய சொற்கள்

புகழத்தகுதியுடையவைதானா?

புகழத்தான் இயலுமோ? புகழ முடியாது

எவராலும் முடியாது ! ஏனெனில் –

எவராலும் இயலாது என்பதே காரணம்.

( இசைஞானி அம்மையார் புராணம் முற்றிற்று )

மன்னிய சீர் சருக்கம் முற்றிற்று

–இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்