காலப் பிரவாகம்

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

யாழினி அத்தன்



பரிமாணமில்லாத
இருட்டுப்
பிரதேசத்துக்குள்
வீர நடைபோடும்
கொலம்பஸ்களாக
கடிகாரங்கள்…
பிறப்புக்கும், இறப்புக்கும்
உள்ள இடைவெளியில்
இரயில்வண்டியாக
நம்மையும்
ஏற்றிச்செல்லும்…!

ஏ.சி. பெட்டியில்
இருந்தாலும்,
ஓசி பெட்டியில்
இருந்தாலும்
ஊசிமுனை அளவுகூட
வித்தியாசமில்லை…
சக பயணியர்க்கு
கண்ணீர் மல்க
கையசத்து விட்டு
ஏதோ ஒரு
நிறுத்தத்தில்
இறங்கும் போது
எல்லாருமே
ஒன்றுதான்…!

சைவமாயிருந்தாலும்
அசைவமாயிருந்தாலும்
மென்று அதை
விழுங்கிச் செல்லும்
எல்லோருமே
அசைவப்
பிரியர்கள்தான்…
விழுங்கினாலும்
இல்லை
தூர நின்று
புழுங்கினாலும்
ஒரு மலைப்பாம்பு
போல
நம்மை விழுங்காமல்
விடுவதில்லை…!

வெட்டியானும்
விஞ்ஞானியும்
ஏழையும்
பணக்காரனும்
அரசியல்வாதியும்
முனிவனும்
மற்றவரோடு
ஒரே கூண்டில்
நின்று
ஏக்கத்துடன்
கம்பி வழியே
பார்க்கும்
சமத்துவபுரச்
சிறையாக
உலகம்…!

இருட்டுக்களைத் தின்று
வெளிச்சங்களும்
கோடைகளைத் தின்று
குளிர்களும்
ஒன்றைத் தின்று
இன்னொன்றாக
ஒரு ஃசிப்ட்
தொழிலாளி போல
மாறி மாறி
பணி புரியும்…!

ஒரு நீரோடையாக
நிற்காமல் ஊர்ந்து
சென்றாலும்
ஒரு கூழாங்கல்லாய்
அங்கேயேதான்
அமர்ந்திருக்கும்…
காற்றைப் போல
புலப்படாமல்
இருந்தாலும்
உரசலின்
சலசலப்பில்தான்
இருப்புகளைத்
தெரியப்படுத்தும்…!

விடியற்காலை
ரசம் பூசிய
கண்ணாடிகள்
மௌனமாய்
வினவி நிற்கும்
முகச்
சுருக்கங்களின்
கதைகளை…!
சாயம் பூசிய
தலைமுடிகள்
கோடி பொய்கள்
சொன்னாலும்
வழித்த தாடையில்
துளிர்விடும்
ஒரிரு வெள்ளி
தண்டுகள் காட்டிக்
கொடுத்துவிடும்…!

கல்யாணப் பந்தியில்
கைநக்கி,
விரல்கள் சூப்பி
வயிறு முட்ட
சாப்பிட்டுவிட்டு
வீசியெறிந்த எச்சில்
இலைகளாக
வரலாறுகள்…
குப்பைமேட்டுப்
பிராணிகளின்
மீத இலைப்
போராட்டத்தில்
உணரப்படும்
வரலாறுகளின்
மகிமை…!


p.d.ramesh@gmail.com

Series Navigation

யாழினி அத்தன்

யாழினி அத்தன்