பெரியபுராணம்-124 திருமூல நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

பா.சத்தியமோகன்



3571.

அந்நிலையில் இருந்த அந்த இடத்தை விட்டு

அகலவே இல்லை

அப்போது

உள்ளத்தில் மூண்டு எழுந்தது ஒரு குறிப்பு

அன்பு பொருந்த

அந்த இடத்தை விட்டு

அகலத்தொடங்கினார் யோகியார்

அங்கு

ஓட்டப்பட்டு வருகின்ற பசுக்கூட்டங்கள்

காவிரி நதியின் கரையோரத்தில்

புலம்புவதை நேரில் கண்டார்.

3572.

அந்தணர்கள் வாழும் சாத்தனூரில் உள்ள

பசுக்களை மேய்ப்பவர் குடியில் தொன்றி

தனது முன்னோரின் மரபில்

பசுக்கூட்டம் மேய்த்து வரும்

மூலன் எனும் பெயர் கொண்டவன்

ஊரிலிருந்து கிளம்பி

குறும்காட்டினில்

பசுக்களைத் தனியாக மேய்த்து வந்தான்

பாம்பு ஒன்றினால் கடிபட்டான்

அவனது வினை முடிந்தது

அவனது வாழ்நாளை –

விஷம் உண்டு விட்டது.

உயிர் நீங்கப்பெற்று நிலத்தில் வீழ்ந்தான்.

3573.

அச்சமயத்தில்

பசுக்கூட்டங்கள் அவனது

நல் உடலை சூழ்ந்து வந்தன

சுற்றின கதறின சுழண்டன

முகந்து முகந்து பார்த்தன.

நல் தவமுடைய அந்த யோகியார்

அதனைக்கேட்டு –

இறைவனின் திருவருளால்

“இப்பசுக்கள் உற்ற துயரை நான் ஒழிப்பேன்”

எனும் உணர்வு கொண்டார்.

3574.

“இந்த இடையன் உயிர்பெற்றால் தவிர

பசுக்கள் துன்பம் நீங்காது” என நினைத்தார்

மூலன் எனும் அந்த இடையனின் உடலில்

தமது உயிரை அடைத்து அருள் புரிவதற்காக

அந்தத் தவமுனிவர்

தமது தவ உடலைப் பாதுகாத்து வைத்தார்

பிறகு –

உயிர்க்காற்றை அடக்கும் வழிமூலமாக

அவன் உடலில்

தம் உயிரைப் புகச்செய்தார்

கூடுவிட்டு கூடு பாய்ந்தார்

3575.

அவ்வாறு உயிரைப் பாய்ச்சிய பிறகு

மூலனாகக் கிடந்த உடல் இப்போது

திருமூலராகி உயிர் பெற்று எழுந்தது

நாவில் தழும்பு ஏறும்படி

மூலனின் உடலை நக்கியும் முகர்ந்தும் களைத்தும்

வருந்திய பசுக்கள் இப்போது

பெருமகிழ்ச்சியுடன்

வால்களை மேலே தூக்கி துயரம் நீங்கின

பிறகு

வரிசையாய்ச் சென்று மேய ஆரம்பித்தன.

3576.

பசுக்கூட்டங்கள் மகிழ்ந்ததும்

கருணை கொண்டு

அருள் மிகுந்தவராகி

பசுக்கள் மேய்கின்ற இடங்களிலெல்லாம்

அவற்றின் பின்னே சென்றார் திருமூலர்;

காவிரி ஆற்றின் முன்பாக இருக்கும் நீர்த்துறையில்

பசுக்கள் நீர் அருந்தின

கரையேறிய பசுக்களை

குளிர்ந்து மலர்ந்த நிழல் உள்ள இடத்தில்

இனிதாய்ப் பசுக்களைத் தங்க வைத்தார்

பாதுகாத்தார்.

3577

வெம்மைக் கதிர்களையுடைய கதிரவனும்

மேற்குத் திசை அடைந்தான்

தம் கன்றுகளை எண்ணிக்கொண்டு –

பசுக்கூட்டங்கள் செல்லத் தொடங்கின

சைவநெறியின் உண்மை உணர்ந்த

யோகியான திருமூலர்

உலகில் புகழ் பெற்று விளங்கும் சாத்தனூரில்

அப்பசுக்கூட்டத்தின் பின்

தாமும் சென்றார்.

3578.

அவ்விதம்

பசுக்களின் பின்பு சென்ற அவர்

பசுக்கள் யாவும் தத்தமது வீடுகளில் புகுந்த பின்

வெளியில் நின்றார்

பெருமையுடைய இடையனின் மனைவி

“பகல்பொழுது போனபின் உடனே வராமல்

தன் கணவர் தாமதமாக வந்திருக்கிறாரே” என பயந்து

அவர் நின்ற நிலையைப் பார்த்தாள்

“இவருக்கு ஏதோ தீங்கு நேர்ந்துள்ளது” என எண்ணி

அவர் மெய்யைத் தீண்டினாள்

அவர் அதற்கு உடன்படாமல் விலகினார்.

3579.

அங்கு

அவளுக்கு சுற்றமும் இல்லை

குழந்தைகளும் இல்லை

ஆதலால் அவள் அஞ்சினாள் மயங்கினாள்

“என்ன காரியம் செய்தீர்” என தளர்ந்தே போனாள்

“இங்கு உனக்கு என்னுடன் தொடர்பு ஏதுமில்லை” என

மறுத்துப் பேசினார் திருமூலர்

மேலும் மேலும் தவமுடைய அவர்

அங்கேயிருந்த பொதுமடம் ஒன்றில் புகுந்தார்.

3580.

இல்லாளன் ஆகிய கணவனின் இயல்பு

மாறிவிட்டதைக் கண்டு

இரவெல்லாம் அவள் உறங்கவில்லை

பேசவில்லை

அவரைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை

அந்த இடைக்குலப்பெண்

பலர் முன் சென்று

அவரது தன்மையைக் கூறினாள்

அதைக் கேட்ட நல்லவர்கள்

திருமூலரது தன்மை அறிந்து அன்புடன் கூறியதாவது –

3581.

“ இது –

பித்தம் கொண்டதால் வரும் மயக்கமல்ல

இவருக்கு பிறிதொரு சார்பு உள்ளது

சித்த விகல்பமாகிய மன வேறுபாடு கடந்த இவர்

தெளிந்த சிவயோகத்தில் கருத்து வைத்தவர்

வரம்பில்லாத பெருமை உடையவர்

இத்தன்மை

யாராலும் அளவிடமுடியாத ஒன்று” என உரைத்தனர்

3582.

“ இவர் பற்று அறுத்தவர்

ஞான உபதேசம் பெற்று

சீவன் முக்தர்களைப்போல

முக்காலமும் உணர்ந்தவர்

முன்புபோல –

உங்கள் சுற்றத்துடன் தொடர்புகொள்ளும் தன்மைக்கு

வரமாட்டார்” என்று உரைத்ததும்

பெரும் துயர் அடைந்தாள்

பக்கத்தில் இருந்தவர்கள்

அவளை அழைத்துக்கொண்டு சென்றனர்

3583.

சாத்தனூர் பொதுமடத்தில்

இந்த நிலைமையில் இருந்த திருமூலர் எழுந்திருந்தார்

பசுக்கூட்டங்கள் வந்த வழியே சென்றார்

தன் பழைய உடலினைத் தேடிச் சென்று பார்த்தார்

அங்கு –

பாதுகாப்பாய் வைத்திருந்த

தனது முந்தைய உடல்சுமையை காணவில்லை!

மெய்ஞ்ஞானம் பொருந்திய அவர் உள்ளத்தில்

“இச்செயல் எப்படி நிகழ்ந்திருக்கும்” என

ஆராய்ந்து தெளிந்தார்

3584.

“குளிர்ந்த நிலவு அணிந்த சடையுடைய

சிவபெருமான் தந்த சிவ ஆகமங்களின் பொருளை

பூமி மீது

திருமூலர் வாக்கினால்

தமிழில் எழுப்புவதற்காக

திருவருள் விரும்பியதால்

அந்த உடல் மறைந்துவிட்டது” என்பதை

எண்ணம் நிறைந்த உணர்வுடைய

ஈசர் அருளால் உணர்ந்துகொண்டார்

3585.

அவரைச்சுற்றிச் சுற்றிப்

பின்தொடர்ந்த இடையர்குலத்தவர்களுக்கு

அவர்களிடம் –

“ தமக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை” என்பதை

முழுதுமாக மொழிந்தார் ; கூறி அருளினார்

அவர்கள் சென்ற பிறகு

காளைக்கொடி உயர்த்திய இறைவரின்

திருவடியைச் சிந்தித்தார்

ஆர்வம் மற்றும் சினம் முதலியனவற்றை

வேரில்லாமல் தோண்டியெடுத்துப் போக்கிய திருமூலர்

திருவாவடுதுறை சென்று சேர்ந்தார்

3586.

திருவாவடுதுறை சேர்ந்தபின்

அங்கு –

அரும்பொருளாகிய சிவபெருமானைப்

பொருத்தமாய் வணங்கினார்

கோயிலின் மேற்புரம் உள்ள

மிகவும் உயர்ந்த

அரச மரத்தின் கீழ்

“தேவாசனம்” எனப்படுகிற

உயர்ந்த ஆசனமுறையில் அமர்ந்து

தமது அறிவினை

சிவபெருமானிடத்தில் ஒன்றுபடுத்தும்

சிவயோகத்தில் ஈடுபட்டார்

3587.

ஊனுடம்பு பொருந்திய

இப்பிறவி எனும் விஷத்தொடர்பை நீங்கி

உலகத்தினர் உய்வதற்காக

சரியை – கிரியை – யோகம் -ஞானம் ஆகிய

நான்கு நெறிகளும் விரிந்துள்ள

“திருமந்திரம்” எனும் அழகிய சொல்மாலையை

பரம்பொருள்வகுத்த விதிப்படி

ஆண்டுக்கு ஒரு மந்திரப்பாடலாக

“பரம்பொருளே-

பன்றிக்கொம்பு அணிந்த சிவபெருமானே”

எனத்தொடங்கினார்

3588.

நிலைத்த பொருளுடைய

திருமந்திரமாலை எனும்

மூவாயிரம் மந்திரங்கள் பாடினார்

மூவாயிரம் ஆண்டுகளும் நிலைத்து

இந்த பூமிமேல் மகிழ்ந்து இருந்தார்

திருமுடியில் ஞானச்சந்திரன் அணிந்து

சிவபெருமான் திருவருளாலே

திருக்கயிலை சேர்ந்தார்

திருவடி நிழலைப்பிரியாத வாழ்வடைந்தார்

3589.

நன்மை அளிப்பதில் சிறந்து விளங்கும்

ஞானம் , யோகம், கிரியை, சரியை எனும்

நான்கு நெறிகளும் மலருமாறு

திருமந்திரம் மொழிந்த திருமூலநாயனாரின்

தாமரைபோன்ற திருவடி வணங்கி

எத்திசைகளிலும் புகழ் உடைய திருவாரூரில்

சமணர்களே கலக்கம் கொண்டு நடுங்கிய

வண்மை உடைய

தண்டி அடிகளின் அடிமைத்திறம்

எடுத்துக்கூறுகிறோம்

( திருமூல நாயனார் புராணம் முற்றியது )

— இறையருளால் தொடரும்

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்