மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.

This entry is part of 25 in the series 20061130_Issue

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்


23. சீதனம் கேட்காத மாப்பிள்ளை

சீதனம் வேண்டாம் எனக்கு
சீர்வரிசையும் வேண்டாம் எனக்கு
சின்னத் தங்கை மணப்பதற்கு
சில இலட்சங்கள் தந்தால்போதும்.

காரொன்றும் தந்திடுங்கள் மாமாவின்
கௌரவத்தைக் கட்டிக் காப்பதற்கு
மாடிமனை கொடுத்திடுங்கள் மாமா
மகளை மற்றவர்கள் மதிப்பதற்கு.

உப்பு டையில் ஊறவைத்த
உவப்பான வண்ணவண்ண சாரங்கள்
உலகை எல்லாம் வலம்வந்த
காலத்தில் சேர்த்த பணம்
பத்திரமாய் கூட்டு வட்டியுடன்
பத்திரத்தில் காத்துக் கிடப்பதையும்,

தங்கச் சுனாமி யொன்று
தரை வழியே வந்தபோது
தந்திரமாய் ஓடிச் சென்று
தட்டிக் கொண்ட சொர்ணங்கள்
பத்திரமாய் பணப் பெட்டியிலே
பாளங்களாய் பதுங்கிக் கிடப்பதையும்,

கண்டு கண்டு கண்பூத்து
கடைசியிலே கண்ணான மாமனிடம்
பெண் கேட்டு வந்துவிட்டேன்
சத்தியமாய் சதமேனும் சீதனமாய்
பத்திரத்தில் எழுத வேண்டாம்
அத்தனையும் கொடுத்திடுங்கள் அருமைமகளுக்கு!

பளார் என்றென் கன்னத்தில்
பாவி மனச்சாட்சி அறைந்ததுவோ!
பக்கென விழித் தெழுந்தேன்
பகலிலும் சீதனக் கனவுதானோ!
சீதனமே இனி வேண்டாம்
சீர் திருந்தி வாழப்போறேன்.

24. எமது தேசம்

ஏழைகளின் இல்லங்கள்
எரியும் நெருப்பில் – அதில்
ஏனோ குளிர்காய்கிறது
எமது இத்தேசம்.

குழந்தைகளின் கூக்குரலும்
குமர்களின் கூப்பாடும்
முதியோரின் முனகல்களும்
மூப்படைந்த நோவினையும்
கண்டும் கலங்காதது
எமது இத்தேசம்.

இரட்டைக் குழலின்
இடி ஓசையையும்
இரவைப் பகலாக்கும்
இடைவிடா ஷசெல்|வீச்சையும்
பார்த்தும் கேட்டும்
பயப்படவில்லையே இத்தேசம்.

அகப்பட்ட அங்கங்களின்
அவதிப் படுகையும்
பிசிரிக்கிடக்கும் உடலின்
பிண வாடையும்
பழகிப்போன தொன்றாயிற்று
பாழாய்ப்போன இத்தேசத்திற்கு.

இனத்தையினம் சுத்திகரிக்கும்
இழிநிலையும் இங்குதான்
இருப்பிடம் இழந்து
இடம்பெயர்வதும் இங்குதான்.

தவறிப் படுகுழிக்குள்
தாழப் போவதற்குள்
எச்சரிக்கை செய்வது
ஏகனின் கடமையல்லவா?
சுனாமியின் எச்சரிக்கையாவது
சுரணையை ஏற்படுத்தவில்லையே!

இன்றோ நாளையோ
ஆழிக்குள் அடங்கிவிடும்
இத்தேசம் – தேசம்மட்டுமல்ல
இங்கிருக்கும் நாமும்தான்.

25. தனிமை

பூக்களின் மலர்ச்சி
உன் சிரிப்பையும்
தென்றலின் தொடுகை
உன் ஸ்பரிசத்தையும்
மழையின் வருகை
உன் குளிர்ச்சியையும்
வெய்யிலின் தாக்கம்
உன் கோபத்தையும்,

புயற்காற்றின் வேகம்
உன் ஆர்ப்பாட்டத்தையும்
அடிக்கடி ஞாபகப்படுத்துகிறதே!
அப்போதெல்லாம் உன்னை
கோபித்துக்கொள்வேன் பின்
உன் கையாலாகாத்
தன்மையை எண்ணியும்
சற்று ஆறுதலடைவேன்.

நான் ஒன்றும்
தனிமைப்படுத்தப் பட்டவனல்ல
நீ என்னைத்
தனிமைப் படுத்தினாலும்!

என்னுயிர் இவ்வுலகில்
இருக்கும் வரை
இயற்கையும் எனக்குத்
துணையாய் இருக்கும்.

இருட்டுக்குள் நான் இருந்தாலும்
இன்றும் என்னிதயம் உன்
வெளிச்சத்தைத் தான் தேடுகிறது
வெளிச்சத்துள் இருக்கும் நீயோ
இருட்டடிப்புக் காரியாய் இன்னமும்
என் வெளிச்சத்தைப் போக்குகிறாயே!

மருதமுனை எஸ்.ஏ.ஹப்பார்.
இலங்கை.

14-10-2006.

Series Navigation