பதஞ்சலியின் சூத்திரங்கள்-(4)

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

ருத்ரா


(34) ப்ரச்சர்தன
விதாரணாப்யாம் வா ப்ராணஸ்ய.

உயிரை மூடியிருக்கிறது
மூச்சுக்காற்று
மூச்சுக்காற்றில்
மூழ்கியிருக்கிறது உயிர்.
இவ்விரண்டையும்
பஞ்சுமிட்டாய் போல
சுற்றியிருக்கிறது உடல்.
அதனால் தான்
வாழ்க்கை இனிப்பில் இந்த
ஈர்ப்பு.
ஈ மொய்க்கும் பண்டமே
இந்த வாழ்க்கை.
கொல்லம்பட்டறையில்
ஈக்கு என்ன வேலை?
பிரம்மத்தை தேடும் இந்த
வேட்டையில்
இந்த ஈக்களுக்கும்
ஈசல்களுக்கும்
என்ன வேலை?
பிரபஞ்ச நெருப்பை
ருசித்துப்பார்க்க
இயலுமா
ஆலவட்டம் போடும்
இந்த ஆசைச்சிறகுகளால்?
பாஷ்யங்களும் பிரம்ம
சூத்திரங்களும்
இந்த
“பிள்ளைப்பூச்சிகளின்”
குடைச்சல்களிலிருந்து
விடுபடவே
ஓங்காரம் வழியே
ஓரம்போ ஓரம்போ
என்று ஸ்லோகங்கள்

எழுப்பிக்கொண்டிருக்கின்றன.
பதஞ்சலி சொல்கிறார்.
உயிர்க்காற்றையே
ஒரு “ஊத்தாம்பையாக்கி”
உயிர்க்காற்றையே
அதில் ஊதி ஊதி
விரிந்து பரந்து
வீங்கு வீங்கு.
அப்புறம் அதையே
உணவாக்கி விழுங்கு.
உன் நரம்பு
முடிச்சுக்குள்
அந்த இதயச்சிமிழுக்குள்
கொஞ்சம்
சிறைப்பிடி.
பிடிபடும் வரை
பிடித்திடு.
உயிர்க்காற்றை உள்ளிழு.
அது மணிபூரகம்.
அதை உள்ளே இரூத்திவை
அது கும்பகம்.
அதை வெளியிடு
அது ரேசகம்.
” ய ஸ்டார்ம் இந்தெ டீ கப்”
இந்த தேனீக்கோபைக்குள்
ஒரு சூறாவளி.
கோடி கோடி கோடி….கோடி
உயிர்களின் குமிழிகள்
இவை.
ஒளி திரண்டு திரண்டு
இறுகி கெட்டியாய்
பிக் பேங்க் எனும்
பெருவெடிப்பாய்
பிரபஞ்சத்தின்
ஆனா ஆவன்னாவை
எழுதியது போல்
இந்த உயிர்க்காற்றுகள்
எல்லாம்
உருண்டு திரண்டு
ஒரு புதிய பிரபஞ்சத்தை
வெடித்துக்காட்டட்டும்.
இந்த பூமித்துளியைப்போல்
இன்னும் கோடி கோடியாய்
பிரபஞ்சத்தில்
நிரவிக்கிடக்கும்
அந்த உயிர்ப்பிழம்பின்
பெருவெடிப்பு நிகழட்டும்.
அப்போது
ஒளிவீச்சு கூட
உயிர்வீச்சு
ஆகிவிடும்.
ஹிரண்ய ரேதஸ் எனும்
பொற்சுடர் தெறிக்கும்
பிரம்ம விந்தணு
இந்த பிரபஞ்சத்திற்கு
மனித முகவரி யூட்டும்.
இது விஞ்ஞானிகள்
கனவுகாணும்
“ஆந்த்ரோப்பிக்
யுனிவெர்ஸ்”
(Anthropic Universe)
இதுவே தான்.

(35) விஷயவதீ வாப்ரவ்ருத்தி
ருத்பன்னா
மனஸ ஸ்திதி நிபந்தினி.

உயிர் உடல்
இந்த இரண்டையும்
கட்டியிருக்கும் கயிறே
மூச்சுக்காற்று.
உடலுக்குள் இந்த காற்று
உலாவும் இடங்கள்
எல்லாம் “புண்ய
§க்ஷத்திரங்கள்”.
கடைசியில்
அந்த காற்றின் விசை
மூக்கிற்கும் மேல்
புருவங்களுக்கு
மத்தியில்
கூர்மையான புள்ளி ஆகிறது.
அதுவே “வாரநாசி”.
வெறும் கங்கையில்
லட்சக்கணக்கான
புற்றீசல்களாய்
காக்காய் முழுக்கு
போடுவதில்
அந்த பிரபஞ்சம்
கொஞ்சம் கூட
நனைவத்தில்லை.
கும்ப மேளாக்களில்
பூணூல்கள்
முதுகின் அழுக்கை
தேய்க்கின்றன.
ஞானத்தின் மின்னல்
கொண்டு
முறுக்கேற்றாத அந்த
நூல்கள் எனும்
நூலாம்படைகளைக்கொண்டா
உங்கள் :”யக்ஞோபவீதங்களை”
உருவேற்றுகிறீர்கள்.
அந்த காசிக்கரையில்
அப்புறமும்
மனம் நிரம்பிய
அழுக்குகளே
கரையேறுகின்றன.
“பிராணாயாமத்தின் வழியே”
பதஞ்சலியின் வரிகள்
மின்சாரம்
பாய்ச்சுகின்றன.
அந்த உயிர்க்காற்று
மனத்தில் வேரூன்றி
தியானத்தால்
செதுக்கப்பட்டு
ஞானத்தால் பிசையப்பட்டு
விஞ்ஞானத்தால்
இழைக்கப்பட்டு
அந்த புருவ மத்தியில்
புயல் மையம்
கொள்ளவேண்டும்
என்கிறார் பதஞ்சலி.

(36) விசோகாவா ஜ்யோதிஷ்மதீ.

துன்பங்கள் கரைந்து
போகவேண்டும்.
துயரங்கள்
தூசாகவேண்டும்.
இன்பத்தையும்
துன்பத்தையும்
அச்சடித்து அச்சடித்து
நம்மை
அச்சு ஒடிய செய்வது மனமே.
மனம் பூசும் வர்ணமே
இன்ப துன்பங்கள்.
இந்த சித்திரங்களின்
தூரிகையை
முறித்துப்போடுங்கள்.
மாண்டூக்யோபநிஷத்தில்
கௌடபாதர் சொல்லும்
“அஸ்பர்ஸ யோகமே”
சிறந்த வழி.
மனச்சல்லடைகள்
சலித்த
மாவுப்பணியாரங்கள் தான்
இன்ப துன்பங்கள்.
சல்லடையின் மேல்
தங்கியிருக்கும்
சக்கைகளே சாரங்கள்.
பிரம்ம ரசம் ஒழுக விடாத
அந்த அடைப்புகளை
அடைகாத்து
கொண்டிருப்பது
தியானம் அல்ல.
பிரம்மம் உன் மீது
உடைப்பெடுக்கும் வரை
உட்கார்ந்திருப்பதே
தியானம்.
உயிரைப்பிணைக்கும்
இந்த உடல்க் கயிற்றுக்
கட்டுகள்
அறுந்து போக
உங்கள் மனத்தால்
உங்கள் அறிவால்
உங்களை பொறி
வைத்துப்பிடிக்கும்
உங்கள் பொறிகளால்
அதை “தொடாதீர்கள்”
அதுவே அஸ்பர்ஸ யோகம்.
இதுவே
குண்டலினி தரும்
வெளிச்சம்.
இந்த அக்கினிப்பூவின்
ஆயிரம் ஆயிரம் இதழ்களில்
பிரம்மத்தின்
கண்ணொளி கதிர்வீசுகிறது.


ருத்ரா

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா

பதஞ்சலியின் சூத்திரங்கள் – 1

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

ருத்ரா


(1) சமாதி பாதம்
———————–

1. அத: யோகாநு சாஸனம்

ஒருமை அல்லது யோகம் என்றால்
ஒருப்படுதல் எனும் உருப்படுதல் தான்.

2. யோக: சித்த விருத்தி நிரோத:

எண்ணங்கள் கிளை பெருக்குவது
ஒருப்படுதலுக்கு எதிர்ப்படுதல் ஆகும்.

3. ததா த்ரஷ்டு; ஸ்வரூபே அவஸ்தானம்.

அக்கிளைகள் அகல்வதே
ஒருமையடைந்த உயிரம் எனும் புருஷன்.

(புருஷன் என்பது அப்பட்டமான உயிர் மட்டுமே
நிரம்பிருக்கும் பாண்டம். அதுவே இங்கு உயிரம்)

4. விருத்தி ஸாருப்ய மிதரத்ர

கிளைகள் பரப்பி பெருகி
பாண்டத்தில் நிறைந்ததையே தன் வடிவம் என்று
உயிரம் நினைத்துக்கொள்கிறது.

5. விருத்தய பஞ்சதய்ய: க்லிஷ்டா (அ) க்லிஷ்டா

ஐந்தாய் கிளை விட்டு முக்குணத்துள் இருக்கும்.
முக்குணங்களில் கூட நல்லவை தீயவை உண்டு.

(சத் என்பது உண்மை.
ரஜோ என்பது ஒளிர்மை
தமோ என்பது இருள்மை)

6. ப்ரமாண விபர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய

மெய்யறிவு பொய்யறிவு கற்பனை உறக்கம் நினைவு
இவையே ஐந்து கிளைகள்.

7. ப்ரத்யக்ஷானு மானாகமா ப்ரமாணானி

கண்டது அறிந்து உள்ளிருப்பதை ஊகம் செய்து
அறிந்தவர் அறிந்ததையும் அதனுடன் இழைத்து
முற்றாய் அறிவதே ப்ரமாணம் எனும் மெய் அறிவு.

8. விபர்யயோ மித்யாக்ஞானமதத் ரூபப்ரதிஷ்டம்

அறியாமையே வெறியாகி ஒரு உருவம் தரித்தபின்
அதையே நிறுவி அழகு பார்ப்பது
விபர்யா என்னும் பொய் அறிவு.

9. சப்தக்ஞானானுபாதீ வஸ்து சூன்யோ விகல்ப

ஒலிக்குறியை மட்டுமே சுவைத்து
உட்பொருள் புரியாமல் எண்ணங்களை குவிப்பது
விகல்பம் எனும் கற்பனை வடிவம்.

10. அபாவ ப்ரத்யயாலம்பனா விருத்தி நித்ரா

உணர்வு தொடாமலும் கிளை விடாமலும்
மூடுதிரைக்குள் முடங்குவதே
நித்ரா எனும் உறக்கம்.

11. அனாபூதவிஷயா (அ) ஸம்ப்ரமோஷ: ஸ்மிருதி

வெளிப்பட்ட பொருள் அறிவாகி
அழியாது தேக்கிய அணையே நினைவு.
அது ஸ்மிருதி

12. அப்யாஸ வைராக்யாப்யாம் தன்னிரோத:

முளைக்கும் கிளைகளை வெட்டியெறிய
முனைந்த கோடரியே பயிற்சி.
அது அப்யாஸம்.

13. தத்ர ஸ்திதௌ யத்னோப்யாஸ:

இடைவிடாத நிலையே
பயிற்சியின் ஆணிவேர்.

14. ஸது தீர்க்ககால-நைரந்தர்ய-ஸத்காரா
ஸேவிதாத்ரூட பூமி:

எப்போதும்
எவ்விடத்தும்
நன்மையாற்றுவதே
சிறந்த
உறுதியான் பயிற்சி.

15. த்ரஷ்டானுச்ரவிக விஷயவித்ருஷ்ணஸ்ய வசீகார
ஸம்ஞா வைராக்யம்.

அறி பொருள் அறிஞனை ஆள்வதில்லை.
அறிஞனும் அறி பொருளை ஆள்வதில்லை.
புலன் நுகர்ச்சிகளால் ஈர்க்கப்படாதவனே
உரம் பாய்ந்தவன்.
இதுவே வைராக்கியம்.

16. தத்பரம் புருஷக்யாதேர் குணவைத்ருஷ்ண்யம்.

பாண்டம் தன்னை நிறைத்திருக்கும்
நுண்மை பருமை இயற்கைகளை
கொட்டிக்கவிழ்த்தால் தான்
தான் பாண்டம் அல்லது உயிர்
என்பதை உணரும்.
இந்த உரம் நிறைந்த வெளியுணர்வே
பர வைராக்யம்.
(புருஷம் என்பதை பாண்டம் என்றே அழைப்போம்)

17. விதர்க்க விசாராநந்தா ஸ்மிதா ரூபானு
கமாத் ஸம்ப்ரஞ்ஞாத:

கேள்விகளால் துளைத்து
அதையே நினைந்து நினைந்து
அதன் தெளிவில்
எல்லையற்ற மகிழ்ச்சியுற்று
அந்த அறிபடும் பொருளே
தான் ஆகிப்போனதாய்
ஓர் ஒன்றியம் அடைவதே ஸமாதி.
“நான்” கழன்று போன
உடல் அற்ற நுண்ணுடல் இது.
இதுவே “அறி பொருளொடு ஒன்றியம்”
அதாவது ஸம்ப்ரஞ்ஞாத சமாதி.

18. விராம ப்ரத்யயாப்யா ஸபூர்வ: ஸம்ஸ்கார
சேஷோன்ய:

அறியும் செயல் அற்று
அதனால் கிளைபரப்பும்
எண்ணப்படலங்கள் கரைந்து
இதற்கு முன் இருந்த
வெறுமையில் மிஞ்சி இருப்பவை
உண்டல் உடுத்தல் உறைதல் தான்.
அறிவு ஏற்படுத்தும் நிழலே
அறி பொருள்.
இப்போது நிழல் இல்லை.
அதன் நிஜம் இல்லை.
மூளியான வெற்றுப்பாண்டம்
எனும் நிலையடு “ஒன்றுதல்”
அஸம்ப்ரஞ்ஞான ஸமாதி.

19. பவப்ரத்யயோ விதேஹப்ரகிருதிலயாநாம்

அறிவு அறிபொருள் ஆகிய இரண்டுமே
கட்டு அறுந்து வீழ்ந்த
உடல் அற்ற இயற்கைநிலையில்
உறைந்து போனவர்கள்
ஒரு உயரம் தாண்டி விட்டார்கள்.

20. ச்ரத்தா வீர்ய-ஸ்மிருதி-ஸமாதி ப்ரக்ஞாபூர்வக
இதரேஷாம்

மற்றவர்களும் ஒன்றியம் அடைகிறார்கள்.
எப்படி?
அதில் ஒரு ஈடுபாடு
அதில் ஒரு உறுதி
அதில் அதனுள் அதே நினைவு
“ஒன்றியம்” பற்றியே பற்றிக்கொள்ளும்
உணர்வின் நெருப்பு
இவற்றின் வழியே தான்!

21. இதரேஷாம் தீவ்ர சம்வேகானா மாஸன்ன

இன்னும் மற்றவர்கள்
தீவிரமாய் வேக வேகமாய்
யோகாசனப் பயிற்சிகள் எனும்
உடல் பிழிந்து
எலும்பு நரம்பு முறுக்கி
சதையையும் பஞ்சாக்கி
அந்த பாண்டமே
குழைந்து சமைந்து உருக்
குலைந்து..
“நான்” தொலைந்த
நயமான நன்னிலையில்
ஒன்றியம் அடைகிறார்கள்.

22. ம்ருது மத்யாதி மாத்ராத்வா த்ததோபி விசேஷ:

மெதுவான தீவிரம்.
நடுவான தீவிரம்.
தீவிரமான தீவிரம்
என்று மூன்று வழிகளிலும்
ஒன்றியம்
நோக்கிப்பயணிக்கலாம்.
அதற்கேற்றவாறு
கனிச்சோலை காத்திருக்கும்.
இந்த பாதையின் மைல்கற்களே
இவர்கள் உருட்டும் ஜப மாலைகள்.

23. ஈஸ்வரப்ரணி தானாத்வா

இவற்றில் எல்லாம் எளிய வழி.
வளைந்து
குழைந்து
நெளிந்து
இழைந்து
வணங்கி விடுவது.
யாரை? அல்லது எதை?
பிடிபடாத
அந்த புதிர்ப்பொருளை.
கணித அறிஞர்கள்
ஒரு சூத்திர நிரூபணத்தை தொடங்கும் முன்
“லெட் எக்ஸ் இஸ் ஈக்குவல் டு ஒய்”
இப்படியும் தொடங்கலாம்.
let yes = why
இறைவன்
ஏன் எதற்கு எப்படி
நிரூபணங்கள் நீண்டு கொண்டிருக்கட்ட்டும்.
கவலையில்லாமல்
வணங்கு.
கவலையே இல்லாமல் போக
வணங்கு,
அது கல்லா பூவா
அது கணிதமா விஞ்ஞானமா
அது குவார்க்கா குளுவானா
(quarks or gluons?)
வணங்கிப்பார்.
விளங்கலாம்.
விளங்காமல் போகலாம்.
சிவக்குளியலில்
நித்திய நீராடல் செய்யும்
யோகியின் எளிய சூத்திரம் இதுவே.
“உன் சிறு கோவணத்துணியை
அடித்து துவைத்து
அலசி அங்கே காயப்போடு.
அது பிரபஞ்சம்.”
சக்கர நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டு
ஸ்டீ·பன் ஹாகிங் என்ற மேதை
அந்த கந்தைத்துணியின்
கருந்துளைகளில் (black holes)
அனல் வீசும்
கனல் புள்ளிகளை
கணக்கீடு செய்கிறார்.
ஸமாதியில் அமர்ந்த யோகிக்கு
தெரிவதோ
அது சிவனின் புலித்தோல்.

(பதஞ்சலியின் சூத்திரங்கள் தொடரும்)

=======================================================
ருத்ரா
epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா