அ ழ கோ வி ய ம் (குறுங்காவியம், தொடர்-2.)

This entry is part of 31 in the series 20060929_Issue

கரு.திருவரசு


என்னால் உனக்கெதும் ஆகுவதோ!

எதற்கு வந்தனை? எனக்கேட்க

“முன்னிரா நேரம் என்வீட்டு

முன்றில் நிற்பீர், உணவளிப்பேன்!

என்னை நீவிர் மறந்திருப்பீர்

என்னால் மறக்க இயலவில்லை!

என்னைக் காத்து வாழ்வளிக்க

இறைஞ்சு கின்றேன்!” என்றனளே

பார்த்த நினைவு வருகிறது

பாவாய் உன்னைத் தெரிகிறது!

போர்த்த இருள்போல் உன்சொற்கள்

புரிந்திட வில்லை, தெளிவையினும்

சேர்த்துச் சொல்வாய், உன்னையான்

காத்த லென்னோ? எனத்துறவி

பார்த்தார் அவளைப் பரிவோடு

பாவை தொடர்ந்தாள் துணிவோடு

என்னழகு! என் ஆற்றல்!

– இன்னிசைக் கலிவெண்பா –

காளையரை வேலைவிட்டு மாலைவரை காக்கவைத்துச்

சாலையிலே நான்போகும் காட்சிக்கே ஏங்கவைத்து

வீரர்களைச் சோரவைத்து வேட்கையிலே ஊறவைத்து

சாரமிலாச் சக்கையெனத் தாமாக மாறவைத்து

ஆடவரை ஆடவைத்து ஆசையினால் வாடவைத்து

மாடுமனை விட்டென்றன் மஞ்சமொன்றே நாடவைத்து

மாய அரசோச்சும் மாண்பழகு என்னழகு!

பேயாட்டம் ஆடுகின்ற பேரழகு என்னழகு!

கண்ணிமையால் வாவென்று காட்டிவிட்டால் ஓர்சாடை

மண்ணை மறந்துவிட்டு மன்னவரே வந்துநிற்பார்!

புன்னகையை ஒவ்வொன்றாய் எண்ணிவைத்தே அத்தனைக்கும்

பொன்னகைகள் செய்துவந்து பூட்டிவிட முந்திநிற்பார்!

“வீணை எடுத்துவைத்து மானே இசைத்துவிட்டு

ஆணை எதுவுமிடு, அக்கணமே செய்வ”னென்பார்!

தட்டும் இசைத்தாளத் தொட்டி நடனமிட்டால்

கட்டிப்பொன் அள்ளிவந்து காலடியில் கொட்டிடுவார்!

“இட்ட அடிதொடர்ந்து வந்துவிடு!” என்றுசொன்னால்

கொட்டிப் பொருள்குவித்தே கோடிப்பேர் பின்வருவார்!

அத்தனை ஆற்றலுள்ள ஆரணங்கு இவ்வணங்கு!

இத்தனையும் பெற்றிருந்தும் என்னுள்ளத் தின்பமில்லை!

வருவதெல்லாம் வண்டு, வாழ்வெங்கே?

உள்ளத்தை நாடியென்றன் உள்ளுணர்வைத் தேடியரு

வள்ளல் வருவாரோ, வாழ்வோமா! என்றேங்கிக்

காத்துச் சலித்துவிட்டேன்! காலடியில் ஆண்களெல்லாம்

காத்துக் கிடந்தாலும் பார்த்தேன் ஒருவரிலர்!

தேடி வருவதெல்லாம் ஓடிவிடும் வண்டதனால்

நாடுமொரு நாயகனை நானே வரிப்பதல்லால்

வேறு வழியில்லை, வந்துவிட்டேன் வள்ளலேநீர்

கூறுவீர் என்முடிவில் குற்றம் உளதாமோ!

என்று மொழிந்துவிட்டு நின்றாள் இளைப்புக்கு

என்னால் இயன்றதெல்லாம்…

நன்று மொழிந்தனைநீ ஒன்றும் மறைக்காமல்!

வந்த வழியினிலும் குற்றமில்லை, நீவாழ்ந்த

முந்தைய வாழ்வினிலும் உன்குற்றம் ஏதுமில்லை!

உன்னை உணர்ந்துவிட்டாய், ஓர்வாழ்வை நாடுகின்றாய்!

என்னால் இயன்றதுவாய் ஏதும் உளதென்றால்

உன்னையும் பௌத்த உயர்சங்கம் சேர்த்துவிட்டு

நன்னெறியும் தூய நறுவாழ்வும் காண்பதற்குப்

பாதை வகுக்கும் பணியன்றே! நீவிரும்பின்

போது புலர்ந்ததும் போவோம், வருவாயா?

என்றார் உபகுப்தர், ஏந்திழையாள் எண்ணமென்ன?

அழைப்பும் மறுப்பும்

நன்றி அழைப்புக்கு, நல்லவரே! வள்ளலே!

மஞ்சள் உடையும் மழித்த தலையதுமாய்ப்

பிஞ்சில் காயப் பிறக்கவில்லை தாங்களென்பேன்!

காய்ந்த புழுதியிலே கையை அணைவைத்துச்

சாய்ந்திருக்கத் தக்க உடலல்ல தங்களுடல்!

பேரழகு நற்கலையின் பேர்விளங்கும் பான்மையிலே

சீருடனே சித்தரித்த செம்மை அறையினிலே

தூய மணங்கமழத் தோழியர்கள் யாழெடுத்து

மாய இசைபோல மெல்ல இசைத்திருக்கப்

பஞ்சுக்குப் பட்டுடுத்திப் பட்டில் மலர்பரப்பி

மஞ்சம் அமைத்துள்ளேன் மன்னவரே உங்களுக்காய்!

கொஞ்சம் எழுவீரிக் கோதையுடன் வந்தில்லில்

துஞ்சி நலம்பெறுவீர் தூயவரே! என்றழைத்தாள்!

தொண்டுச் சுவையன்றே கண்டார், அவளழைப்பைக்

கண்டே குறுநகை சிந்திக் கனிவுடனே

நன்றி மொழிகின்றேன், நங்காயிந் நள்ளிரவில்

வென்றோனை வாவென் றழைப்பதனால் நானுன்பால்

செய்துவிட்ட குற்றம் தெளிவாய்த் தெரிந்துகொன்டேன்!

உய்வுபெற நீதான் உதவினாய் என்றுன்னை

உள்ளத்தே வைத்திருப்பேன், உன்னழைப்பை ஏற்காமல்

தள்ளல் பொறுத்துநீ இல்லம் திரும்பென்றார்!

— ஓவியம் வளரும்.

thiru36@streamyx.com

Series Navigation