மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.

This entry is part of 42 in the series 20060324_Issue

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்


1.
என்னுள் நீ…

என்னுள் நீ ஆகிவிட்டாய்
உன்னுள் நான் ஆகுமுன்னே!

அழகில்லை நீ என்றார்கள்
அறிவும் உனக்கில்லை என்றார்கள்.
அடங்காப் பிடாரி நீ
ஆகாது குடும்பத்திற் கென்றார்கள்.

ஆனாலும் என்னுள் நீ
ஆகிவிட்டாய் அறியாப் பருவத்திலே!

கள்ளம் என்றனர் உன்னன்பு
கபடம் என்றனர் உன்காதல்.
வஞ்சகி என்றனர் உன்னை
வாழ்வுக்காகா நீ சூத்திரக்காரி என்றனர்.

ஆனாலும் என்னுள் நீ
ஆகிவிட்டாய் தெரியாப் பருவத்திலே!

என்னுள் நீயாக
உன்னுள் நானாக
என்மடியில் நீயாக
உன்மடியில் நானாக
நீ நானாக
நான் நீயாக…. ஜீரணிக்கமுடியாத
அந்தக் காதல் நிஜங்கள்
அற்றுப் போகவில்லை
இன்னும் என் மனதைவிட்டு.

ஆனாலும் என்னுள் நீ
ஆகிவிட்டாய் என்றோ!

நாளை நீ மணப்பெண்ணென்று
நாசுக்காய் கூறியபோது –
நான் நானாக இல்லாமை உணர்ந்தும்
நடைப் பிணமாகவில்லை.

அன்றும் நீ என்னுள்
ஆகிவிட்டவள் என்பதனால்!

நாட்கள் வாரங்களாகி
வாரங்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடங்களாகி
இருபது வருடங்கள் சென்றும்,

இன்றும் என்னுள் நீ
ஆகிவிட்டவள் தான்!

காரும் பங்களாவும்
காசும் பணமும்
கசந்து போய்
இத்தனை வருடங்களின்பின்
உன்னுள் என்னை
உள்வாங்க நினைக்கிறாயே!
இது என்ன விந்தை!!

உள்வாங்கல் என்பது
வெளித்தள்ளல் போல்
அவ்வளவு லேசுப்பட்டதல்ல –
காதலைப் பொறுத்தவரை.

நானும் இன்று ஓர் இதயத்தின்
உள்வாங்கல்தான் –
என் செல்வங்களின்
உயிர்நாடிதான்.

ஆனாலும் என்னுள் நீ ஆகிவிட்டவள்
என்பதனால் உன்னில் ஒரு பரிதாபம்.

என்னுள் ஆகிவிட்ட
உன்காதலின் வெளித்தள்ளல்கள்
என் மரணத்தின்பின்
உன்னுள் உள்வாங்கப்படும்!

அப்போது நான்
ஆகியிருப்பேன் உன்னுள்!!

2.
வேண்டாம் யுத்தம்…

வேகத்தைக் குறைத்து
வீதித்தடை தாண்டி
வலதுபக்கம் திரும்பிப்பார்க்கிறேன்
வெறிச்சோடிக் கிடக்கிறது ~செக்பொயின்ட்|.

செக்குமாடுகள் போல்
சுற்றிச் சுற்றிவந்த
ஒருவரையும் காணவில்லை – அந்த
ஒரு கருப்பு நாயையும்தான்.

நான் தினமும் வேலைக்குச்செல்லும்
நன்கு பரிச்சயமான பாதைதான்.
பலமுறை வானை நிறுத்திவிட்டு
பல்லிழித்து அடையாளம் காட்டி,

அனுமதி கிடைத்ததும்
அடிதடுமாறி தப்பிப்பிழைத்தோ மென
மீண்டும் வாகனத்தில் ஏறி
மறைந்ததும் இங்குதான்.

தாய் தந்தை தாரம்
தம்பி தங்கை அண்ணா
மாமன் மாமி மச்சான்
மதினி மக்கள் உறவுகளெல்லாம்,
நலிந்து நடைப்பிணமாகி
நாறிவிட்ட நிலையில்

நடை பயின்று
நல்லபல பண்புகளுடன்
மீண் டெழுவதைக்
காணும் போது,

வேண்டாம் வேண்டாம்
மீண்டுமொரு யுத்தம்
எம் ஈழத்திருநாட்டில்
இனி மேலும்!

3.
நிலவு அவள்.

அங்கேபார் முழுமதியை
அதைப்பிடித்து நான்தருவேன்
அன்பேயழகே நீ
அமுதுண்ணு ஆரமுதே!
அன்னையின் அரவணைப்பில்
அமுதுண்ணும் பிஞ்சும்
அண்ணார்ந்து பார்ப்பது
அந்த நிலவைத்தான்.

பள்ளி நாட்களையும்
பாட வேளையையும்
விளையாட்டாய்ப் போக்கிவிட்டு
விதிதான் இதுவென்று
அங்கலாய்த்து ஆர்ப்பரித்து
ஆரவாரப்படும் மாணவனும்
கடற்கரை மண்ணிலே
கலங்குவது அந்நிலவிடம்தான்.

கடன்தொல்லை தாங்காது
கடற்பரப்பில் குப்புறப்படுத்து
பெருமூச்சுவிடும்
பெருந் தகைக்கும்
நிமிர்ந்து பார்க்கும்போது
நிலவுதான் தஞ்சம்.

புத்தக நடுப்பக்கத்தில்
புதைத்து வைத்த
புத்தம்புதிய சிகரட்டை
பற்றவைத்து பரவசப்பட்டு
புகையினை உள்ளிழுத்து
பூமிக்கு எதிர்த்திசையில்
பூக்களாய் ஊதும்போதும்
புன்னகைப்பது அந்நிலவுதான்.

அதோபார் முழுமதியென
அவளை நிமிரவைத்து
அதிர்ச்சி முத்தமொன்று
அதிரடியாய் காதலுக்களித்து
ஆனந்தப்படும் காதலனுக்கும்
அன்புச்சாட்சி அந்நிலவுதான்.

காதலிலே தோல்வியுற்று
கதி கலங்கி
நீலவானின் நிலாவொளியில்
நீள் போத்தலொன்றை

இடுப்பிலிருந்து இதமாக
இழுத்தெடுத்து போதையின்பங்காணும்
இளைஞனையும் இனிவேண்டாமென
எச்சரிக்கை செய்வதும்
எம் நிலவுப்பெண்தான்.
நீதிமன்று நீவந்து
நீதானவள் காதலென்று
நீள்விரல் காட்டி
நீதி பகர்ந்துவிட
நிலத்திற்கு அழைப்பதும்
நிலா உனைத்தான்.

நீண்ட பயணத்தின்
நிழல்களாக வந்துநிற்கும்
நிம்மதி இல்லா
நித்திரையற்ற இரவுகளை
தவிர்த்துவிட எண்ணி
தள்ளாடும் வயதினிலும்
தரையமரும் தாத்தாக்களுக்கும்
தஞ்சம் அந்நிலவுதான்.

பூரண கண்விழிக்கும்போது
பூமி விழித்துக்கொள்வதுபோல்
கண்ணிமை பதிக்கும்போது
காதலர்கள் விழித்துக்கொள்வதேன் ?
காதலர்களுக்கும் உன்மேல்
கட்டுக்கடங்கா காதல்போல்.

4.
மழை

மழையின் முதற்துளி
மண்ணில் விழுமுன்
முதற்சென்று நிற்பாளென்
மூத்த மகள்.

காலில் செருப்பிருக்காது
கையில் குடையிருக்காது
தலையில் தொப்பியிருக்காது
தரையில் காலுமிருக்காது.

மழைதான் அவளுக்கு நண்பன்
மழைதான் அவளுக்கு உணவு
மழைதான் அவளுக்கு உறக்கம்
மழைதான் அவளுக்கு எல்லாம்.

தொப்பாகி நிற்பாள்
தோணிவிட தொடர்மழையில்
மிஞ்சாது அந்நாளில்
மின்சாரப் பட்டியலும்
தொலைந்து விடும்
தொலைபேசிப் பட்டியலும்.

புத்தகத்தின் நடுப்பக்க மெல்லாம்
புதிய மழைக்குச் சொந்தம்
கதிகலங்கி நிற்பாள் என்மனைவி
கட்டுப்பாடு பெண்ணுக்கு வேண்டுமென்று.

என் பிள்ளைப்பருவம் எண்ணிப்பார்ப்பேன்
பின் நானும் நின்றுரசிப்பேன்
பிள்ளை வளர்க்கத் தெரியாதென்பாள்
பின் அவளும் வந்துரசிப்பாள்.

எண்ணிப் பார்த்தது
நான் மட்டுமல்ல
என் மனைவியும் தான்.

5.
நவீன ஆசான்கள்

வகுப்பிலொரு ஆசான்
வரும் பதவியுயர்ப்
பரீட்சைக்காய் விழுந்தடித்துப்
படிக்கின்றார் பாலகர்முன்.

இன்னுமொரு ஆசான்
இன்சிரியூட் பாடங்களை
இதமாய்த் திருத்துகிறார்
இதுவும் வகுப்பறையில்தான்.

சொந்த வேலையென்று
சோலிகளைக் கவனிக்க
சென்றிடுவார் இன்னொருவர்
சோக்குக்கட்டிகளை எறிந்துவிட்டு.

செல்போனைக் கையிலெடுத்து
சேதி அறிந்திடுவார்
~வருகிறேன் இதோ| என்று
பைக்கை முறுக்கிடுவார் வேறொருவர்.

அதிபரும் பிள்ளைகளும்
அமைதியாய் இருப்பதுகண்டு
ஆச்சரியப்படுவர் மற்றைய
ஆசான்கள் ஆத்திரத்துடன்.

ஆத்திரப்படும் ஆசான்கள்
அல்லா ஹ்வுக்குப் பயந்தவர்களாம்
அப்படியும் ஒருகதை
அங்கு உலவுகிறது.

பிள்ளைகளின் பள்ளிவிட்ட
பின் படிப்பும் (ரியூஷன் கல்வி)
அதிபரின் ~சைட்| வருமானமும்
அந்த ஆசான்களின் கையில்தானாம்.

6.
வேண்டும் சுனாமி!

மூத்த மச்சான்
முகம் தவிர்க்க
முக்காடை இழுத்திழுத்து
முந்தானை முடிச்சாச்சு.

மூன்று குமர் காப்பாற்ற
முழுசாகக் கொட்டில் வேண்டும் – இல்லையெனில்
மாண்டுவிட மீண்டு மொரு
மா சுனாமி வரவேண்டும்.

யயயய

முதல்வீட்டு மூலையெல்லாம்
மூட்டைகளைக் காணவில்லை!
ஓட்டைவீடு ஒடிசலென
ஒப்பாரி வைக்கின்றார்.

சேவகரின் கவலையெல்லாம்
சேர்த்துவைக்க இடமில்லை.

அடுத்துஒரு சுனாமிவந்தால்
அனைத்தையுமே அமுக்கிடலாம்
அனுபவமும் உள்ளதனால்
அமர்க்களமாய்ச் செய்திடுவார்.

யயயய

மூத்த பிள்ளை பிரச்சனைகள்
முழுசாக முடிந்தது போல்
அடுத்த வளுக்கும் நகரத்தில்
அடுக்குமாடி வாங்கிடலாம்.

அழகான சுனாமி யொன்று
அவசரமாய் வந்து விட்டால்
அதிகாரி கவலை யெல்லாம்
அடியோடு பறந்துவிடும்.

மொத்தத்தில் எங்களுக்கு
மீண்டுமொரு சுனாமி
மிகவிரைவில் வரவேண்டும்
மிச்சசொச்சம் நிரப்பிடவே.

7.
மண் மணம்

கல்லும் மண்ணும்
மறுபிறவி யெடுத்து
சுயவடிவம் பெற்றதுபோல்
ஓரமாய் ஒதுங்கிக்கிடக்கிறது.

எங்கள் வீடுகளெல்லாம்
வீதிக்கு வந்து
மாதங்கள் பலவாகிவிட்டன
வீதியாய்மாறிவிட்ட பல
வீடுகளும் உண்டு.

தரை கரையெல்லாம் வெறிச்சோடிக்
கவனிப் பாரற்றுக் கிடக்கிறது
அலைகள் மட்டும்
மீண்டும் மீண்டும்
சீண்டிப் பார்க்கிறது
கரையை நக்கி நக்கி.

ஆயிரம் ஆயிரம் உயிர்களை
அப்படியே ஏப்பமிட்டும்
அமைதியாய் அடங்கிக் கிடப்பது
அந்த ஆழி மட்டும்தான்.

மெல்ல மெல்ல அடியெடுத்து
மணற்பரப்பை நோக்கி நகர்கிறேன்.

வாசனை – மண்ணின் வாசனை
வாரி நெஞ்சில் தடவிக்கொள்கிறேன்
இன்னும் மாறவில்லை
இந்த மண்ணின் வாசனை மட்டும்.

8.
கனவுகளும் சுனாமியாய்!

இந்தோ அவுஸ்திரேலிய
இயூரேஷியத் தகடுகள்
திடாரென விலகித்
திறந்து கொள்கின்றன.

கடல் பிளந்து
காங்கை வெளிப்பட்டு
சரேலென மேலெழுகிறது
சுமுத்திராவுக்குத் தெற்கே!
பிடாங் மற்றும் பெங்ரே
பிடாி முறிந்து கிடக்கிறது.

பூனைபோல் பதுங்கி வந்து
புலிபோல் பாய்கிறது புதியதோர் சுனாமி.
பாயுடன் தூக்கியெறியப்பட்டு
பள்ளத்தில் கிடக்கிறேன்.
இறக்குமுன் பார்க்கிறேன்
பிறந்தமேனியை ஒருமுறை.

எங்கும் நீர் எங்கும் நிலம்
எங்கும் நிசப்தம் எங்கும் பிரளயம்
என்வீடு என்மனைவி என்மக்கள்
எல்லாம் கடலிற் கலக்கின்றன.

கடிகாரஒலி டிக்டிக் எனக்கேட்கிறது
கனவுகள் மீண்டும் கலைகின்றன!
கலண்டரைக் கவனித்துப் பார்க்கிறேன்
காலம் டிசம்பர் இருபத்தாறைக் காட்டுகிறது.

வருடம் ஒன்றாகியும்
இருட்டுக் கொட்டிலுக்குள்
கனவுகளாய் மிரட்டி
நினைவூட்ட அவ்வப்போது
வந்துபோவ தெலாம்
அந்தச் சுனாமிதான்.

– மருதமுனை எஸ்.ஏ.ஹப்பார்.
இலங்கை.

23-03-2006.
abdulgaffar9@yahoo.com

Series Navigation